தமிழில் பெயர்ப்பலகை: கண்டுகொள்ளாத தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை 

‘பெருந்துறை மார்க்கெட்’ என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம்

ஈரோடு மாவட்டம், பெருந்துறைப் பகுதியில் இயங்கிவரும் 17-ம் எண் கொண்ட அரசுப் பேருந்து ஒன்றின் பெயர்ப்பலகையில், ‘பெருந்துறை மார்க்கெட்’ என்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

தமிழகப் பேருந்தில் இந்தியில் பெயர்ப் பலகை வைப்பதா?’ என பலரும் அதைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு தங்களுடைய கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலருகில் வட மாநில வியாபாரி கடை பெயர்ப் பலகையில் தமிழில் பெயர் வைக்காததை குறிப்பிட்டு, தீரன் என்ற வழக்குரைஞர் நேரிடையாக வலியுறுத்தியது சமூக வலைத் தளங்களில் பரவியதைப் பார்த்தோம்.

வணிக நிலையங்களின் பெயர்கள் கட்டாயம் தமிழிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தமிழ் வடிவங்களையே பயன்படுத்த வேண்டும். பேக்கரி என்று பெயர்ப்பலகை யாரும் போட முடியாது. அதை வெதுப்பகம் என்ற சொல் மூலமே வெளிப்படுத்த வேண்டும். 

இதைப்போலவே கடைகளில் ஜூவல்லரி, டெக்ஸ்டைல்ஸ், ஜெராக்ஸ், ரெஸ்டோரண்ட், கூல் பார், ஐஸ் கிரீம் பார், டீ ஸ்டால், மெடிகல் ஸ்டோர், டிபார்ட்மெண்டல் ஸ்டோர், ஹோட்டல், ஏஜென்சி, ட்ரேட் மார்ட், பப்ளிக் ஸ்கூல், செர்வீஸ் சென்டர் இது தான் தமிழ் வளர்க்கும் இலட்சணம்.

தமிழகத்தில் சென்னை உட்பட, கடைகள் தொழிற்சாலைகள் உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகையிலான வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகளில் நிறுவனத்தின் பெயர் கட்டாயமாக முதலில் தமிழிலும் அதற்கடுத்து தேவைப்பட்டால் ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளிலும் இடம் பெறுமாறு அமைத்திடுதல் வேண்டும். மேலும் எழுத்துக்களின் அளவு தமிழ் ஆங்கிலம் பிறமொழி ஆகியவை முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டும் பயன்படுத்தும் நேர்வில் முறையே 5:3 என்ற விகிதத்தில் அமைதல் வேண்டும். மேற்குறிப்பிட்டவாறு பெயர்ப்பலகைகளை அமைத்திடுவதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அரசாணை (நிலை) எண்.1541 நாள் :29.07.1982-இன்படி தமிழ்நாடு அரசும் அவ் அரசாணையினை செயல்படுத்திடுவதற்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையும் ஆணையிட்டுள்ளது. 

தமிழ்நாடு அரசு நீதிமன்ற ஆணைகளின்படி வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகளை அமைத்திடுவதற்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள கடைகள், தொழிற்சாலைகள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து வகை வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பெயர்ப்பலகைகள் உரிய முறையில் உள்ளனவா? என தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள். விதிமுறைப்படி பெயர்ப்பலகை அமைத்திடாத நிறுவனங்களுக்கு தண்டத்தொகை விதிக்கப்படும். எனவே தமிழ் வளர்ச்சிக்கு அரசின் பங்களிப்பு மட்டுமின்றி வணிகர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும் விதமாக உடனடியாக பெயர்ப்பலகைகளை தமிழில் அமைத்திடுவற்கு அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வணிக நிறுவனங்களும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினாலும் கடைபிடித்தல் இல்லயெனச் சொல்லலாம். 

சட்டம் சொல்வதென்ன…?
கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் 1947 விதி 15 மற்றும் 1958ம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின் விதி 42 பி ஆகியவற்றின் படி நிறுவனத்தின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும்.

அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் 
தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத் துறை அரசாணை (நிலை) எண். 349 நாள் : 14.10.87   மற்றும் ஆட்சிமொழிக் குழுச் செயலாளரின் 19.9.67 ஆம் நாள் சுற்றறிக்கை எண்.5131/67 இல், அரசு அலுவலகங்களில் அவற்றின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் நல்ல தமிழிலும் அதனடியில் ஆங்கிலத்திலும் எழுதிப் பொருத்தப்பெற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது

வணிக நிறுவனங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் 
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் 29.7.82ஆம் நாளிட்ட அரசாணை எண்.1541 இல் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இருக்க வெண்டுமெனவும், இதர மொழிகளையும் பெயர்ப் பலகைகளில் பயன்படுத்தப்பட வேண்டியிருந்தால் முதலில் தமிழிலும் அதன் கீழ் இரண்டாவதாக ஆங்கிலத்திலும் அதனைத் தொடர்ந்து இதர மொழி களிலும் முறையே 5:3:2 என்ற விகிதத்தில் அமையலாமெனவும் ஆணையிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் பெயர்ப்பலகைகள் அமைத்தல் 
மத்திய ஆட்சி மொழி விதிகள், (Official Language Rules, 1976: G.S.R 1052 ), 1976 பிரிவு. 1 (ii)-இன் படி தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு உள்ளதால், இந்த தமிழக அரசின் ஆணை மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகளுக்கும் இது பொருந்தும்.

பெயர்ப் பலகைகளில் சரியான தமிழ்ச் சொல்
தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத் துறை அரசாணை (நிலை) எண். 291 நாள் : 19.12.1990 இன் படி சரியான தமிழ்ச் சொல்லையே பயன் படுத்த வேண்டும். உதாரணத்திற்கு ”ஜெயம் சில்க் ஹவுஸ்” என்றிருக்குமாயின் அதற்கு சரியான, இணையான தமிழ் சொல்லாட்சி “ஜெயம் பட்டு மாளிகை’ என அரசாணையில் சொல்லப்பட்டுள்ளது.

இதைப் பின் பற்றி தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை , மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள துறைகளின் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com