தமிழர் விளையாட்டுகள்: இவை வெறும் விளையாட்டுகள் அல்ல அதற்கும் மேல!

மனிதன் என்று தோன்றினானோ அன்றே விளையாட்டும் தொடங்கிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான்.
தமிழர் விளையாட்டுகள்: இவை வெறும் விளையாட்டுகள் அல்ல அதற்கும் மேல!


மனிதன் என்று தோன்றினானோ அன்றே விளையாட்டும் தொடங்கிவிட்டது என்று கூறலாம். வாழ்க்கையே ஒரு விளையாட்டுத்தான். வாழ்க்கைப் பயணத்தில் விளையாடாத மனிதர்களும் இல்லை; விளையாட்டுக் காட்டாத மனிதர்களும் இல்லை. அதனால்தான் மனிதன் பிறந்தது முதல் இறக்கும் நிலைவரை வயதிற்கு ஏற்றாற்போல் ஏதாவதொரு விளையாட்டை ஆடும் வகையில் விளையாட்டுகளை உருவாக்கி வைத்திருக்கின்றான்.

செல்வம் புலனே புணர்வு விளையாட்டென்று
அல்லல் நீத்த உவகை நான்கே

(தொல்காப்பியம், நூற்பா, எண்.1205)

என்ற நூற்பாவின் வழி விளையாட்டு உவகை தரக்கூடியது என்கிறார் தொல்காப்பியர். விளையாட்டாவது விரும்பி ஆடும் ஆட்டம் என்கிறார் தேவநேயப் பாவாணர். பொழுது போக்கிற்குரிய மகிழ்ச்சியான செயல் என்று தமிழ்ப்பேரகராதி பொருள் தருகின்றது. விரும்புகின்ற ஆட்டம், இன்பம் விளைவிக்கும் ஆட்டம், விதிகளை வகுத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் என்றும் பல்வேறு விளக்கங்கள் எடுத்துரைக்கப் படுகின்றன. விளையாட்டு அனுபவித்து மகிழக் கூடியது. விளையாடுவோர் மட்டுமின்றிக் காண்போரையும் களிப்படையச் செய்து இன்பமூட்டுவது.  இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர்களின் விளையாட்டுகளை விளக்கமாகக் காண்போம்!

விளையாட்டினைத் தொடங்கும் முறை
இரு கட்சியினராகப் பிரிந்த நிலையில் எந்தக் கட்சி முதலில் விளையாடத் தொடங்குவது என்பதை முடிவு செய்வதற்குச் சில தேர்வு முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. இதனையே தற்பொழுது டாஸ் போடுதல் என்று கூறுகிறோம். உடைந்த ஓட்டில் எச்சில் தடவி உயரே போட்டுப் பார்த்தல், நாணயத்தைச் சுண்டிவிட்டுப் 'பூவா? தலையா?' பார்த்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. நவீன விளையாட்டுகளிலும் இம்முறை பின்பற்றப்பட்டு வருவதைக் காணலாம்.

விளையாட்டினை இடையில் நிறுத்துதல்
விளையாட்டு நிகழும் போது இடையில் நிறுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தூவாச்சி, பாஸ் என்று கூறிச் சிறிது இடைவெளி விட்டுப் பின் மீண்டும் ஆட்டத்தைத் தொடருவதுண்டு. நவீன விளையாட்டுகளில் Time Pass கேட்கும் முறை இருப்பதைக் காணலாம்.

தோற்றவரின் நிலை
விளையாட்டின் இறுதியில் யாராவது தோற்க நேர்ந்தால்
தோத்தான் தொம்பான்
சோறு போட்டாத் திம்பான்
.. என்று கேலி செய்து பாடுவதுண்டு. 

சில விளையாட்டுகளில் தோற்றவர் மேல் குதிரை ஏறுதல், தலையில் குட்டுதல், கோலிக் குண்டைக் கை முட்டியால் தரை மீது தேக்கச் செய்தல், பாடிக் கொண்டே குறிப்பிட்ட தூரம் வரை ஓடித் திரும்பச் செய்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்படுவது உண்டு. இத்தகைய தண்டனைகள் இழிவாகக் கருதப்படுவது இல்லை. தண்டனைகளே தனி விளையாட்டுப்போல் அமைவதும் உண்டு.

நேர்மை, மதிப்பு, விதிமுறை
மேற்கூறியவை தவிர விளையாட்டில் பங்கு பெறுவோர் நேர்மையாக நடத்தல், உடன் ஆடுவோர், எதிர்த்து ஆடுவோர், நடுவர், பார்வையாளர் ஆகியோரை மதித்தல், விளையாட்டு விதிமுறைகளுக்குக் கட்டுப்படுதல் போன்றவையும் விளையாட்டில் கடைப்பிடிக்கத் தக்கவையாகும். விளையாட்டில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா என்று கேட்கத் தோன்றுகின்றதா? விளையாட்டு வேடிக்கையானது மட்டுமல்ல; விவேகமானதும் கூட. இனி, விளையாட்டுகளைப் பார்ப்போம்.

விளையாட்டுகள் - வகைப்பாடு
நாட்டுப்புற விளையாட்டுகளை வகைப்படுத்தி விளக்குவது விளையாட்டுகளின் தன்மையை உணர்ந்து கொள்வதற்குத் துணை செய்யும். உடல் திறனையும் அறிவுத் திறனையும் ஒருசேர ஆக்கமுறச் செய்யும் ஊக்க சக்தி உடையவைகளாக விளையாட்டுகள் விளங்குகின்றன. இவை காலம், களம், பங்கு பெறுவோர், பால், வயது, பாடல், தன்மை, போட்டி, வரைபடம் என்று பல்வேறு அடிப்படைகளில் வகைப்படுத்தும் அளவிற்கு விரிந்த பரப்பைக் கொண்டவையாக உள்ளன.

விளையாட்டுகள் கீழ்க்காணும் அடிப்படைகளில் வகைப்படுத்தப்படுகின்றன.


வேனிற் கால விளையாட்டுகள்:
புளியங் கொட்டை விளையாட்டுகள், கிட்டிப் புள், பச்சைக் குதிரை, பந்து, கபடி, காற்றாடி, கள்ளன்-போலீஸ், கண்ணாமூச்சி, எலியும் பூனையும், பூசணிக்காய் விளையாட்டு, பல்லாங்குழி, தாயம், பம்பரம், கும்மி, கோலாட்டம்.

மழைக் கால விளையாட்டுகள்:
பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, கொழுக்கட்டை.

ஆடுகளம்

  • பல்லாங்குழி, தாயம், தட்டா மாலை, ஒத்தையா? ரெட்டையா?, கரகர வண்டி, ஆடுபுலி ஆட்டம், கொழுக்கட்டை ஆகியவை அக விளையாட்டுகள்.
  • பம்பரம், கிட்டிப் புள், கபடி, சில்லுக் கோடு, பந்து, காற்றாடி, கள்ளன்-போலீஸ், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் ஆகியவை புற விளையாட்டுகள்.
  • பம்பரம், பந்து, பட்டம், காற்றாடி, சில்லுக் கோடு, ஒத்தையா? ரெட்டையா?, தட்டா மாலை போன்றவை  ஒரு கருவி விளையாட்டுகள்
  • கிட்டிப் புள், பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம், உறியடி, தாயம், நொண்டி கோலாட்டம் போன்றவை பல கருவி விளையாட்டுகள்

சீதைப் பாண்டி, பட்டம், காற்றாடி, கரகர வண்டி. தனிநபர் விளையாட்டுகள். பல்லாங்குழி, தாயம், பிஸ்ஸாலே, சில்லுக் கோடு, ஆடுபுலி ஆட்டம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், ஒத்தையா? ரெட்டையா?, கொழுக்கட்டை 
இருவர் விளையாடுபவை. பச்சைக் குதிரை, பம்பரம், கபடி, கண்ணாமூச்சி, பூசணிக்காய், எலியும் பூனையும், ஒருகுடம் தண்ணி ஊத்தி, குலைகுலையா முந்திரிக்காய், கள்ளன்-போலீஸ், எறிபந்து, கும்மி, கோலாட்டம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம் போன்றவை குழு விளையாட்டுகள்

ஆடுபுலி ஆட்டம், கபடி, சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு மரம், சிலம்பாட்டம், வண்டிப் பந்தயம் ஆண்கள் விளையாட்டுகள்.  

பல்லாங்குழி, தாயம், சில்லுக் கோடு, தட்டா மாலை, கும்மி, கோலாட்டம், பாண்டி போன்றவை பெண்கள் விளையாட்டுகள். கால்தூக்கிக் கணக்குப் பிள்ளை, பந்து, பச்சைக் குதிரை, பம்பரம், புளியங் கொட்டை, கபடி, கள்ளன் போலீஸ் சிறுவர் விளையாட்டுகள்.  

கண்ணா மூச்சி, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், எலியும் பூனையும், ஒரு குடம் தண்ணி ஊத்தி இருபாலர் சேர்ந்து விளையாடும் விளையாட்டுகள்.

கரகர வண்டி, சில்லுக் கோடு, பூப்பறிக்க வருகிறோம், கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், பல்லாங்குழி, கொழுக்கட்டை, நொண்டி சிறுமியர் விளையாட்டுகளாம்.

ஒரு குடம் தண்ணி ஊத்தி, பூப்பறிக்க வருகிறோம், குலைகுலையா முந்திரிக்காய், பிஸ்ஸாலே, கண்ணா மூச்சி, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம், கபடி, கொழுக்கட்டை, கும்மி, கோலாட்டம் பாடல் உள்ளவை. பல்லாங்குழி, தாயம், ஒத்தையா? ரெட்டையா?, ஆடுபுலி ஆட்டம், சல்லிக்கட்டு, உறியடி, வழுக்கு மரம் பாடல் இல்லாதவை.

கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம், இளவட்டக் கல், பச்சைக் குதிரை, கும்மி, கோலாட்டம் உடல் திறன் விளையாட்டு, குழி, தாயம், ஆடுபுலி ஆட்டம் அறிவுத்திறன் விளையாட்டு, சல்லிக் கட்டு வீர விளையாட்டாகும்

  
பந்து, கிட்டிப்புள், கள்ளன்-போலீஸ் ஓடுதல் விளையாட்டு,  கள்ளன்-போலீஸ், எலியும் பூனையும், நொண்டி, கபடி பிடித்தல் விளையாட்டு,  கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ், கபடி, நொண்டி தொடுதல்,  கள்ளன்-போலீஸ், கண்ணா மூச்சி ஒளிதல்,   கள்ளன்-போலீஸ், எறிபந்து, கிச்சுக் கிச்சுத் தாம்பாளம் தேடுதல்  கண்ணா மூச்சி, கள்ளன்-போலீஸ் கண்டுபிடித்தல் விளையாட்டு.


தாயம், ஆடுபுலி ஆட்டம், சில்லுக் கோடு, நொண்டி, கபடி வரைபடம் உள்ளவை, பூசணிக்காய், குலைகுலையா முந்திரிக்காய், கண்ணா மூச்சி, பச்சைக் குதிரை, சல்லிக் கட்டு, உறியடி.வரைபடம் இல்லாத விளையாட்டுகள்.

மேற்கூறிய வகைப்பாடுகள் அன்றி நேரம், நடுவர், பார்வையாளர், உடல் உறுப்பு என்ற முறையிலும் பலவாறு வகைப்படுத்தலாம். தமிழர் விளையாட்டுகளை எவ்வாறு வகைப்படுத்தினாலும் விளையாட்டின் முக்கியக் கூறுகளான உடல் திறனும் அறிவுத் திறனும் அனைத்து விளையாட்டுகளிலும் இடம்பெற்று இருப்பதைக் காணலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com