Enable Javscript for better performance
புவிதம்: தமிழகத்தில் இப்படி ஒரு பள்ளியா? பிரம்மித்துப் போவீர்கள்!- Dinamani

சுடச்சுட

  

  புவிதம்: தமிழகத்தில் இப்படி ஒரு பள்ளியா? பிரமித்துப் போவீர்கள்!

  By C.P.சரவணன், வழக்குரைஞர்  |   Published on : 10th October 2019 12:33 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  puvitham_school_2

  தருமபுரி அருகே நாகர்கூடல் பகுதியில் உள்ள புவிதம் பள்ளி.


  தருமபுரி அருகே நாகர்கூடல் என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது புவிதம் என்ற கல்வி மையம். நாம் இன்று மாற்று கல்வி முறை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம்! ஆனால் 15 வருடத்திற்கு முன்னரே அதனை ஆரம்பித்து இன்றுவரை வெற்றிகரமாக செயல்படுத்தி வரும் மீனாட்சி அம்மாவிற்கு முதலில் மிகப்பெரிய நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ள வேண்டும். 

  புவிதம் – காட்டுப் பள்ளி

  புவிதம், இது அந்த பள்ளியின் பெயர். ஏன் புவிதம்…? அதை பின்பு காண்போம். நான் ஏன் அதை காட்டுப் பள்ளி என்கிறேன்…? நிச்சயம் அது காடுகள் சூழ இருப்பதால் மட்டும் அல்ல. காடுகளில் எப்படி மரங்கள் அதன் இயல்பில் வளருமோ, அது போல்தான் இங்கும் குழந்தைகள் அதன் இயல்பில் வளர்கிறார்கள். குழந்தைகள் மீது எந்த ரசாயனங்களும் தெளிக்கப்படுவதில்லை (ரசாயனங்கள் என்று நான் குறிப்பிடுவது, நம் விருப்பங்கள், பணம் சார்ந்து நமக்குள் இருக்கும் மதிப்பீடுகள், சக மனிதனை போட்டியாளராக கருத வைக்கும் நம் கருத்துகள்). இவை எதுவும் அங்கு மாணவர்கள் மீது திணிக்கப்படுவதில்லை. அதனால்தான் அதை காட்டு பள்ளி என்கிறேன்.

  உத்தரப் பிரதேசப் பெண் புவிதம் மீனாட்சி 

  புவிதம் மீனாட்சி


  மீனாட்சி,  உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர். புனேவில் கட்டடக்கலை படித்தவர். உலகம் கொண்டாடும் கட்டட கலை கலைஞரான லாரி பேக்கரின் நேரடி மாணவர். புனேவில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளால் மனம் வாடி, அமைதியை தேடி 1992-ம் ஆண்டு தமிழகம் வந்தவர். தான் விரும்பும் அமைதியான இயற்கையுடன் இயைந்த வாழ்க்கை, கிராமங்களில்தான் இருக்கிறது என்று உணர்ந்து தருமபுரி மாவட்டம், நாகர் கூடல் பகுதியில் கணவர் உமேசுடன் குடியேறியவர்.

  மீனாட்சியின் தன் பள்ளி குறித்த கனவு.

  தான் படிக்கும் பள்ளி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்ற கனவு அது. வகுப்பறைகள் இருக்க கூடாது, விசாலமான நூலகம் இருக்க வேண்டும். விளையாட்டுத் திடல் இருக்க வேண்டும். பறவைகள் தமது வகுப்புத் தோழனாக இருக்க வேண்டும் என்ற கனவு அது. ஆனால், அந்த கனவு அந்த வயதில் வெறும் கனவாகவே கடந்தது. முப்பது ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கனவை நனவாக்கி இருக்கிறார் மீனாட்சி.

  LKG பிள்ளைகளுக்கே ஆண்டுக்கு 5 முறை தேர்வு நடத்தும் அறிவார்ந்த பள்ளிகள் இருக்கும் இந்த காலகட்டத்தில், இந்த பள்ளியில் 5ம் வகுப்பு வரை தேர்வுகளே வைக்கப் படுவதில்லை என்பது அனைவரையும் வியக்க வைத்தது. இங்கு மதிப்பெண்களால் குழந்தைகள் பிரிக்கபடுவதில்லை. சிறுவயதிலேயே அவர்களின் விருப்பத்தை அறிந்து கல்வி கற்கப்படுகிறது. பெரும்பாலும் செயல் வழி கல்வி முறையே இங்கு கற்பிக்கப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக மாலை வேளையில் குழந்தைகளுக்கு வேளாண்மை கற்பிக்கப்படுகிறது. வேளாண்மையின் முழு பருவமும் அவர்களுக்கு சொல்லி தருவதோடு அல்லாமல், அவர்களையே அதில் ஈடுபடுத்தி வருகின்றனர்.

  சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தையும், நீரின்றி அமையாது உலகு என்பதனை இளம்வயதிலேயே சொல்வடிவதோடு, செயல்வடிவமாகவும் கற்பிக்கின்றனர்.

  புவிதம் பள்ளி வகுப்பறை

  தாங்கள் கற்கும் போதே தனக்கான உணவையும் உற்பத்தி செய்ய கற்றுகொடுக்கும் முறை, எந்த பல்கழைகழகங்களிலும் சொல்லிதரபடாதது. மேலும் தையற்கலை, கைவினை பொருட்கள் உள்ளிட்ட சுயதொழில்களும் கற்றுத்தரப்படுகிறது. இவை அந்தந்த மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப சொல்லித் தரப்படுகிறது. மெக்காலே கல்வி முறையால் ஒன்றும் பயனில்லை. தங்களின் விருப்பத்திற்கு ஏற்ற அனுபவ கல்வியே தற்போதைய சூழ்நிலைக்கு மிக அவசியமானது என்பதை அவர்களிடம் அறியமுடிந்தது.

  பள்ளி வடிவமைப்பு முறை மிகவும் நுண்ணியமாக, சுற்றுசூழலுக்கு உகந்த முறையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது. குழந்தைகள் அனைவரையும் தினமும் விருப்பத்தோடு பள்ளிக்கு வர செய்வதே, ஒரு பள்ளியின் முதல் வெற்றி. அங்கு வந்த குழந்தைகளிடம் அதற்கான புன்னகையை பார்க்க முடிந்தது! இங்கு படிக்கும் குழந்தைகள் யாரும் ஆசிரியரை சார் என கூப்பிடுவதில்லை. அண்ணன், அக்கா என்றே ஆசிரியரை அழைக்கின்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்குமான தொடர்பு சக மனித உறவாகவே பிணைக்கப்பட்டுள்ளது.

  8ம் வகுப்பிற்கு பிறகு அருகே உள்ள அரசாங்க பள்ளிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கபடுவதால், அங்குள்ள தேர்வு Puvidham School 4 முறைக்கு பயிற்றுவிக்கும் விதமாக, இங்கு 6ம் வகுப்பில் இருந்து அரசாங்க பாடதிட்டமே சொல்லித்தரப்படுகிறது. இருப்பினும் பள்ளியை விட்டு செல்லும் குழந்தைகள் அனைவரும், தனித்து இயங்கக் கூடிய சுயசார்பு தன்மையையும், மேலும் மதிப்பெண்களால் தங்கள் வாழ்வு ஒருபோதும் நிர்ணயிக்கப்படாது என்பதையும் உணர்ந்தே செல்கின்றனர். அங்கு கல்வி மட்டும் போதிக்கப்படுவதில்லை. ஒரு மனிதனுக்கு தேவையான முழுமையான வாழ்வியல் முறையும் சேர்ந்தே கற்பிக்கபடுகிறது. ஒவ்வொரு பயணமும் இது போன்ற மானுடம் போற்றும் மகத்தான மனிதர்களை, இடங்களை எனக்கு அறிமுகப்படுத்துகிறது

  ஏன் தருமபுரியை தேர்ந்தெடுத்தீர்கள் என்ற நம் கேள்விக்கு, "கையில் குறைந்த அளவு பணமே இருந்தது. அந்த பணத்திற்கு இங்கு ஒரு வறண்ட பூமிதான் கிடைத்தது" என்கிறார்.

  புவிதத்தின் கதை

  அந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் படிக்காமல், வேலைக்காக வேற ஊருக்கு செல்வதும், முக்கியமாக பெண் குழந்தைகள் இளம்வயதிலேயே திருமணம் செய்து கொள்வதையும் அறிந்து அவர்களுக்கு கல்வி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, வேளாண்மைக்காக வாங்கிய நிலத்தில் , பள்ளியை தொடங்கி உள்ளார். மேலும் அங்கு படிக்கும் மாணவர்களுக்கு விடுதி வசதியும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகளிலும், விடுதிகளிலும் பெரும்பாலும் சிறுதானிய உணவுகளே அளிக்கப்படுகிறது.

  அந்த வறண்ட பூமியில் முதலில் இயற்கை விவசாயம் செய்யத் தொடங்கி இருக்கிறார். பின், இயற்கை விவசாயம் குறித்தும், கிராம மேம்பாடு குறித்து பிரசாரம் செய்ய தொடங்கி இருக்கிறார். அந்த சமயத்தில் மீண்டும் அவரது சிறு வயது கனவுக்கு சிறகு முளைத்திருக்கிறது. அவர், "ஏன் நமது சிறு வயது கனவை இங்கு நிஜமாக்கக் கூடாது... அந்த கனவுக்கு ஏன் ஒரு வடிவம் கொடுக்கக் கூடாது என்று யோசித்தேன்? அந்தக் கனவுதான் புவிதம் பள்ளியாக உருவெடுத்திருக்கிறது" என்கிறார். புவிதம் எனும் இலவச பள்ளியை தொடங்கிய இவர், தமது சிறு வயதில் ஒரு பள்ளி எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று நினைத்தாரோ? அதுபோலவே வடிவமைத்திருக்கிறார்.

  "புவி + இதம் = புவிதம். வழக்கமான பாடத்திட்டத்துடன் புவிக்கு இதமான வாழ்க்கை குறித்து நாங்கள் கற்பிக்கிறோம். புவி வெப்பமயமாதல் உச்சத்தை தொட்டிருக்கும் இந்த சூழலில் நுகர்வு குறைப்பு, இயற்கையுடம் இயைந்து வாழ்தல் இது குறித்த புரிதல்தான் அத்தியாவசியமானதாக இருக்கிறது. அது குறித்து மாணவர்களுடன் உரையாடுகிறோம்" என்கிறார்.

  இந்தப் பள்ளிக்கான விதையை, வானம் பார்த்த பூமியைப் பசுமைக் காடாக மாற்றியபடி சேர்த்தே அவர் ஊன்றினார். எட்டாண்டு உழைப்புக்குப் பிறகு 2000-ம் ஆண்டில் ‘புவிதம்’ பள்ளி தொடங்கப்பட்டது. தருமபுரி மாவட்டத்தில் நல்லம்பள்ளிக்கு அருகில் நாகர்கூடலில் உள்ளது ‘புவிதம்’. இப்பள்ளியில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட கிராமக் குழந்தைகள் படித்திருக்கிறார்கள்.
  இங்கே கற்ற கல்வியின் வழியாக பொறியாளர், மரபு மருத்துவர், ஆசிரியர், கைத்தொழில் கலைஞர் என அரசு, தனியார் துறைகளில் பணியும் பெற்றிருக்கிறார்கள். குறிப்பாக, இப்பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் உத்வேகத்துடன் வேளாண்மை, வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

  “கிராமக் குழந்தைகளின் வாழ்க்கை மேம்பட வேண்டும். அதற்கான கல்வி இவர்களுக்குத் தேவை. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களில் பெரும்பாலோர் உழவர்கள். ஆனால், அவர்கள் செய்துவந்தது பாசனம் சார்ந்த வேளாண்மை அல்ல. வறண்ட பூமியில் வாழும் இவர்களுக்கு தண்ணீர் சேகரிப்பு, தண்ணீர்ப் பாதுகாப்பு, வறண்ட நிலத் தாவரங்களைப் பயிரிடும் முறை, மரத்தை நட்டுப் பாதுகாத்து வளர்க்கும் திட்டம் ஆகியவற்றைக் கற்பிப்பதே அவசியம் என்று தோன்றியது. இந்தப் பின்னணியுடன் பல நாடுகளின் புத்தகங்களை வாங்கிப் பல மாற்றுக் கல்வி முயற்சிகளை அறிந்த பிறகே எங்கள் கல்வித்திட்டத்தைத் திட்டமிட்டோம்” என்கிறார் மீனாட்சி

  புதுமை பாடத்திட்டம்

  அவர் வாங்கிப் படித்த வெளிநாட்டுப் புத்தகங்களுக்கும் நமது பாடப் புத்தகங்களுக்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. அதைவிடவும் நம் பாடத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையிலேயே பெரும் இடைவெளி நிலவுவதைக் கண்கூடாகப் புரிந்துகொண்டார். இந்தப் பின்னணியில் புவிதம் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் கற்பித்தல் முறைகள்:

  கலை வடிவங்கள்: கதைகள், பாடல்கள், நாடகங்கள் வழியாகக் கற்றல்

  மாற்று அறிவியல்: ‘கழிவுப்பொருட்களில் இருந்து அறிவியல்’ என்ற அரவிந்த் குப்தாவின் முறையைப் பயன்படுத்துவது. 

  சமூகத்தை உள்ளடக்கிய முறை: வீட்டிலிருந்து விதையைக் கொண்டுவந்து பள்ளியில் விதைத்து, முளைக்கவைத்து வீட்டுக்குச் செடியைக் கொண்டு சென்று வளர்ப்பது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்துவது.

  பயணம்: வெறும் சுற்றுலா பயணமாக அல்லாமல், ஒரு புதிய இடத்தில் சில வாரங்கள் தங்கி அங்கு வாழக் கற்றுக்கொள்வது. 

  தனித்தன்மையை வளர்த்தெடுப்பது: விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தவும், பாசாங்கின்றித் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கவும் அனுமதித்தல்.

  இயல்பான முகிழ்வு

  “மண்டையை உடைத்துப் பாடத்தைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முடியாமல் போன காலத்தைக் கடந்துவிட்டோம். திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு திறந்த மனதோடு மாணவர்களுடன் உரையாடி, சேர்ந்து செயலில் ஈடுபட்டு, சேர்ந்து கற்றுக்கொண்டு மகிழ்ச்சியாக இயங்கும் நிலைக்கு மாறியுள்ளோம்” என்கிறார் பள்ளித் தலைமை ஆசிரியர் மாதவன்.

  தங்களுடைய பள்ளியின் முதல், இரண்டாம் வகுப்பு மாணவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனை முயற்சி ஒன்றையும் அவர் விவரித்தார்:

  “குழந்தைகள் வீட்டிலிருந்து விதை எடுத்துக்கொண்டுவந்து பயிரிடும் முயற்சி அது. ஆசிரியரும் மாணவர்களும் முதலில் நிலத்தைத் தேர்ந்தெடுத்துச் செப்பனிட்டோம். ஒவ்வொருவரும் கடுகு, மொச்சை என்று விதவிதமான விதைகளைக் கொண்டு வந்திருந்தார்கள். அவற்றை மூன்று குழுக்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம்.

  தண்ணீர் ஊற்றிய பிறகு அது பின்னாடியே சில நாட்கள் சுற்றிச் சுற்றி வந்தனர். உற்று உற்றுப் பார்த்தனர். முளை விடும்போது சிலவற்றில் இரண்டு இலைகள் தெரிகின்றன, சிலவற்றில் ஒன்று மட்டும் தெரிகிறதே என்ற கேள்வியோடு வந்தனர். அப்போது எங்களுக்கு இடையில் மலர்ந்த உரையாடலில் தாவரவியல் இயல்பாக முகிழ்ந்தது” என்கிறார் மாதவன்.

  புத்தகத்தைத் தாண்டி யோசிக்க நாம் மறந்துவிட்டோம். ஆனால், துளிர் பருவத்தினர் யோசிக்க முடிவது மட்டுமில்லாமல் ஒவ்வொன்றையும் வாழ்க்கையோடு இணைத்தும் புரிந்துகொள்கின்றனர்.

  பொறுப்பு கூடிவரும்

  எது கடினமான விஷயம் என்று நினைக்கிறோமோ, அதைப் பற்றி மாணவர்களுடன் உட்கார்ந்து உரையாடும்போது எளிமையாகப் புரிதல் நிகழ்ந்துவிடுகிறது என்பதுதான் தனக்குக் கிடைத்த அனுபவப் பாடம் என்கிறார் மீனாட்சி. ஆறு, ஏழாம் வகுப்பு மாணவர்களுடன் அவர் தொடர்ந்து செய்துவரும் முயற்சிகளை விவரித்தார்.

  “ஆறு, ஏழாம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இடையில் ‘ஆண் பலசாலியா பெண் பலசாலியா’ என்ற போட்டி உரையாடல் அடிக்கடி நடப்பதைக் கவனித்தபோது, ஒரு திட்டம் போட்டோம். அந்த வகுப்பு மாணவ, மாணவிகளைப் பிரித்து இரு தரப்பினருக்கும் விதை கொடுத்து மூன்று மாத காலம் இருவரும் வேலை செய்யுங்கள், முடிவு என்னவென்று பார்ப்போம் என்றோம்.

  அந்த முறை மாணவிகள் விதைத்தவைதான் சிறப்பாக வளர்ந்திருந்தன. மீண்டும் அவர்களுடன் உட்கார்ந்து போட்டி போடுவதா புரிந்துகொண்டு இணைந்து செயல்படுவதா என்ற உரையாடலையும் செயல்பாட்டையும் முன்வைத்தோம். இதற்கான பலன் வேறொரு சூழலில் எங்களுக்குக் கிடைத்தது.

  அதே மாணவர்களை ஒரு பெரிய பள்ளிக்கு ஒரு நாள் அழைத்துச் சென்றோம். அங்கே ஆண், பெண் குழந்தைகள் தனித்தனியாக அமர்ந்திருந்தனர். எங்கள் குழந்தைகள் இயல்பாகச் சேர்ந்து அமர்ந்துகொண்டார்கள். இதைப் பார்த்து அப்பள்ளி ஆசிரியர்கள், ‘இது எப்படிச் சாத்தியம்?’ என்று கேட்டனர். நாம் தடையாக இல்லாதபோது மாணவர்கள் தங்களுடைய பொறுப்பை உணர்ந்துகொள்வார்கள் என்று பதிலளித்தேன்” என்கிறார் மீனாட்சி.

  இந்த பூமியின் மீதும், எதிர்கால மனிதத்தின் மீதும், எல்லா உயிர்கள் மீதும் அக்கறைகொண்டவர்கள் என்ன செய்வார்களோ, அதை முழு நேரமும் செய்துவரும் பள்ளிகளில் ஒன்று ‘புவிதம்’.

  தொடர்புக்கு

  மீனாட்சி உமேஷ்
  புவிதம் கற்றல் மையம்
  நாகர்கூடல் கிராமம் மற்றும் அஞ்சல்
  இண்டூர், தர்மபுரி
  தமிழ்நாடு
  இந்தியா
  மின்னஞ்சல்: puvidham@gmail.com

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai