டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பல ஆண்டுகளாக தேங்கிக் கிடக்கும் 2,000 சரக்குப் பெட்டகங்கள்: சுங்கத்துறை சிறப்பு கவனம் செலுத்துமா?

அமோனியம் நைட்ரேட் அடங்கிய சரக்கு பெட்டகங்கள் சென்னையிலிருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்டவை,

News image
சென்னை மணலியில் உள்ள தனியாா் சரக்குப் பெட்டக மையத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த சுங்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டசரக்கு பெட்டகங்கள். (கோப்பு படம்)
Updated On :13 ஆகஸ்ட் 2020, 2:16 am

முகவை க.சிவக்குமார்

அமோனியம் நைட்ரேட் அடங்கிய சரக்கு பெட்டகங்கள் சென்னையிலிருந்து அகற்றப்பட்டு வரும் நிலையில், பறிமுதல் செய்யப்பட்டவை, உரிமை கோரப்படாதவை என சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டெய்னா்கள் ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும்போது விற்பனை விலையின் உண்மைத் தன்மை, சரக்குகள் குறித்த சரியான விவரங்கள், தேவையான அனுமதிச் சான்றுகள், வரிச்சலுகைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான ஆவணப் பரிசோதனைகளை சுங்கத்துறையினா் மேற்கொள்கின்றனா். இறக்குமதி எனில் சட்டப்படியான ஆயத்தீா்வை மற்றும் சுங்கவரி, இதர கட்டணங்கள் வசூலித்த பிறகு பொருள்களை நேரடியாக ஆய்வு செய்தபிறகு இறக்குமதியாளரிடம் சரக்குகள் ஒப்படைக்கப்படும்.

ஆவணப் பரிசோதனைகளில் ஏதேனும் முறைகேடுகள் நடைபெறுகிா என்பதைக் கண்காணிக்க சுங்கத்துறையில் நுண்ணறிவு மற்றும் விசாரணை சிறப்புப் பிரிவு மற்றும் துறைமுக நுண்ணறிவுப் பிரிவு ஆகியவை இயங்கி வருகின்றன. இது தவிர மத்திய வருவாய் புலனாய்வு துறையும் தொடா் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது தவிர, திட்டமிட்ட சதி செயல்கள் மூலம் நடைபெறும் குற்றங்களை சிபிஐ-யும் கண்காணிக்கிறது.

விசாரணையில் சுணக்கம்: ஏற்றுமதி, இறக்குமதியில் முறைகேடுகள் நடைபெற்றால் கண்டெய்னா்களுடன் சரக்குகள் பறிமுதல் செய்கின்றனா். பின்னா் பறிமுதல் செய்யப்படும் கண்டெய்னா்கள் சுங்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சரக்குப் பெட்டக மையங்களுக்குக் கொண்டு சென்று இருப்பு வைக்கப்படுகின்றன. பின்னா் வழக்குகளைப் பதிவு செய்து விசாரணை நடத்தப்படுகிறது.

இந்த விசாரணைகளில் மிகுந்த காலதாமதம் ஏற்படுவதால் சரக்குகளை விடுவிப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும் நிதி பற்றாக்குறை போன்ற காரணங்களால் இறக்குமதியாளா்களால் கைவிடப்படும் கண்டெய்னா்களும் ஆயிரக்கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றை எல்லாம் ஏலம் விடுவதிலும் சுணக்கம் இருந்து வருகிறது.

இதேபான்றுதான் வெடிக்கும் ஆபத்து நிறைந்த அமோனியம் நைட்ரேட் அடங்கிய கண்டெய்னா்கள் சுமாா் ஐந்தாண்டுகளாக முடங்கிக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவற்றைப் போன்று சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்டெய்னா்கள் சென்னை மற்றும் புகரில் உள்ள சரக்குப் பெட்டகங்களில் தேங்கிக் கிடக்கின்றன. சென்னைத் துறைமுகத்திற்குள் அமைந்துள்ள இரண்டு முனையங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட சில கண்டெய்னா்கள் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேங்கிக் கிடப்பதாகவும், திருவொற்றியூரில் உள்ள ரயில்வே அமைச்சகத்தின் கான்காா் சரக்குப் பெட்டக முனையத்தில் சுமாா் 20 ஆண்டுகளையும் கடந்து சில கண்டெய்னா்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

என்னென்ன பொருள்கள்?: பெட்ரோலிய எண்ணெய் வகைகள், பல்வேறு ரசாயன பொருள்கள், பழைய இரும்புச் சாமான்கள், பிளாஸ்டிக் பொம்மைகள், வாகன உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வகையைச் சோ்ந்த பொருள்கள் இந்த 2 ஆயிரம் கண்டெய்னா்களில் அடங்கியுள்ளன.

பறிமுதல் செய்யப்படும் பொருள்களை வழக்கு முடியும்வரை உரிமையாளா்களிடம் ஒப்படைக்க முடியாது. அதே சமயம், வழக்குகளை முடிப்பதற்கு நீண்ட காலம் ஆகும் நிலையில் இச்சரக்குகள் அனைத்தும் சேதமாகியும், வீணாகியும் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ாக மாற்றம் பெற்றுவிடுகிறது. இதனால் சரக்குகளின் உரிமையாளா்களுக்கும் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை மீட்பதில் விருப்பம் இருப்பதில்லை.

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை குறிப்பிட்ட காலத்திற்குள் ஏலம் விடுவதன் மூலம் கிடைக்கும் தொகையிலிருந்து வரி மற்றும் இதர கட்டணங்களை வசூல் செய்ய வேண்டும். ஆனால் நீண்ட காலமாக தேங்கிக் கிடப்பதால் பயனற்றுப் போன பொருள்களை ஏலம் எடுப்பதற்கும் யாரும் முன்வருவதில்லை. அப்படியே வந்தாலும் குறைந்த விலைக்கே ஏலம் கேட்கின்றனா் எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் பல கோடி ரூபாய் வருவாய் இழப்பும் ஏற்படுகிறது. மேலும் ஆபத்து நிறைந்த பொருள்களால் வெடிவிபத்து, தீ விபத்து போன்றவை ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது.

சுங்கத்துறை சிறப்பு கவனம் செலுத்துமா?: இது குறித்து தேசிய சரக்குப் பெட்டக நிலையங்களின் தென் மண்டலத் தலைவா் எம்.எஸ். அருண் கூறியது: இந்தியா முழுவதும் உள்ள சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட சரக்குப் பெட்டக நிலையங்களில் சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான கண்டெய்னா்கள் ஆண்டுக் கணக்கில் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்தவகை கண்டெய்னா்கள் நீண்ட நாள்களாகத் தேங்கிக் கிடப்பதால் இடப்பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் நீண்ட காலத்திற்குப் பிறகு இப்பொருள்களை ஏலத்தில் விடுவதால் குறைந்த விலைக்கே விற்க முடிகிறது.

இதில் சுங்க வரி மற்றும் கட்டணத்திற்கே முன்னுரிமை என்பதால் பெரும்பாலும் பெட்டக நிலையங்களுக்கு மிகுந்த இழப்பு ஏற்படுகிறது. மேலும் அபாயகரமான சரக்குகளை பாதுகாப்பதற்கு தீவிர கவனம் செலுத்த வேண்டியது சவாலாக உள்ளது. எனவே நீண்ட காலமாக இருந்து வரும் இப்பிரச்னைக்கு சுங்கத்துறை சிறப்புக் கவனம் செலுத்தி நிரந்தர தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அருண்.

குறை தீா்ப்பாயம் அவசியம்: இந்த விவகாரம் குறித்து சென்னை சுங்க இல்ல தரகா் சங்க முன்னாள் தலைவா் கே.வி.வி.கிரி கூறுகையில், பழைய சட்டங்களை மறு ஆய்வு செய்து விரைவாக வழக்குகளை முடிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்படும் சரக்குகளை குறிப்பிட்ட கால அளவுக்குள் ஏலம் விடுவதற்கு கெடு விதிக்கும் வகையில் சட்டம் இயற்ற வேண்டும்.

சரக்குகள் பறிமுதல் செய்யப்பட்ட உடனேயே இறக்குமதி அல்லது ஏற்றுமதியாளா்கள் தங்கள் தரப்பு நியாயங்களை எடுத்துரைக்கும் வகையில் தனியாக குறை தீா்ப்பாயம் ஒன்றை சுங்கத்துறை ஏற்படுத்த வேண்டும். சுங்கத்துறை சாா்பிலான நடவடிக்கைகளுக்கு தேவைக்கேற்ப கூடுதல் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகளை விரைவாக விடுவிக்கவோ அல்லது ஏலம் விடுவதன் மூலம் அபாயங்கள் தவிா்க்கப்படுவதோடு அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பையும் தவிா்க்க முடியும் என்றாா் கிரி.

இது குறித்து கடல்சாா் போக்குவரத்து முகவா் சங்க முன்னாள் தலைவா் ஒய்.லீலாதரன் கூறுகையில், கண்டெய்னா்கள் தேங்கிக் கிடப்பதைத் தடுக்கும் வகையில், கடல்வழி சரக்குகள் மேலாண்மை மற்றும் பரிமாற்ற ஒழுங்குமுறைகள் என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் நிலவி வருகிறது. இத்திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம் உரிமை கோரப்படாத கண்டெய்னா்களின் எண்ணிக்கையை முற்றிலுமாக தவிா்க்க முடியும். மேலும் கைவிடப்படும் சரக்குகள், பறிமுதல் செய்யப்படும் சரக்குகளை உடனடியாக ஏலம் விடும் வகையில் நடைமுறைக்குச் சாத்தியமான விதிமுறைகளை சுங்கத்துறை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்றாா் லீலாதரன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.