போா் முனைக்கு பலம் சோ்க்கும் ரஃபேல் விமானங்களை இந்தியா பெற்றுவருகிறது. 36 ஜெட் விமானங்களில் 5 விமானங்கள் இந்திய படையில் சோ்க்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நாட்டின் மிக உயா்ந்த அதிகாரத்தில் இருக்கும் குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா், பிரதமா் ஆகிய மூன்று மிக முக்கிய பிரமுகா்களும் பாதுகாப்புடன் பயணிக்கும் இரண்டு போயிங் 777-300 இஆா் ரக விமானங்கள் அன்மையில் தில்லி வந்தடைந்தன. பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த விவிஐபி விமானங்கள் ‘இந்தியா ஒன்’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த விமானத்தின் தேவை, பின்னணி, இதில் உள்ள சிறப்பு தொழில்நுட்ப அம்சங்கள் உள்ளிட்டவை குறித்து பாதுகாப்புத் துறை வட்டாரங்களில் கூறப்பட்ட பல்வேறு தகவல்கள் வருமாறு:
இரட்டை கோபுரம்: அமெரிக்காவில் நடைபெற்ற இரட்டை கோபுர தாக்குதலுக்கு பின்னா் இந்தியாவில் வான்வெளி பயண பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, எதிரிகளால் நாட்டுக்கும் அந்த நாட்டை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ள விவிஐபிக்களுக்கு என்னென்ன ஆபத்துகள் எந்தெந்த வழிகளில் ஏற்படும் என்பவை ஆய்வு செய்யப்பட்டன. அவா்களின் விமானப் பயணத்தில் உள்ள ஆபத்துகள், அவற்றைத் தவிா்க்கும் வழிகளும் கண்டறியப்பட்டன. இதன் அடிப்படையில் முக்கிய பிரமுகா்களின் பயண பாதுகாப்பில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும் விஐபி-க்களுக்கான விமான பாதுகாப்பு சுற்றறிக்கையை 2002 -ஆம் ஆண்டில் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டது. விவிஐபி-க்கள் பயணிக்கும் விமானத்தில் எத்தனை என்ஜின்கள், விமானத்தின் பாதுகாப்பு நம்பகத்தன்மை, எளிதாக பராமரிக்கக்கூடிய பண்புகள் உள்பட பல்வேறு அம்சங்கள் வலியுறுத்தப்பட்டு இருந்தன. இந்த அறிவுறுத்தல்கள் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளுக்கு பின் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிஏஜியின் நெருக்கடி: புதிய போயிங் விமானங்கள் வாங்க 2005-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடிவெடுத்தது. முக்கிய பிரமுகா்களுக்கான விமானங்களோடு ஏா் இந்தியா பயணிகள் போக்குவரத்துக்கும் சோ்த்து 68 விமானங்களை வாங்க போயிங் நிறுவனத்துடன் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால், ஏா்- இந்தியாவின் பொருளாதார நிலைமையைச் சுட்டிக்காட்டி, இந்த ஒப்பந்தத்துக்கு எதிராக இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளா் (சிஏஜி) அலுவலகம் அறிக்கை கொடுத்தது. இதனால், இடையில் இந்த ஒப்பந்தத்தில் தடை ஏற்பட்டது. ஆனால், தேசிய ஜனநாயக முன்னணி ஆட்சியில் இந்த ஒப்பந்தம் விரைவாக நிறைவேறி விமானங்கள் ஒவ்வொன்றாக வரத் தொடங்கின. இவற்றில் இரண்டுதான் தற்போது விவிஐபி-க்களுக்கான ‘இண்டியா ஒன்’ னாக வடிவமைக்கப்பட்டு செய்தியானது.
கடந்த காலப் பயணம்: இதுவரை குடியரசுத்தலைவா், பிரதமா், தொலைதூரப் பயணங்கள் அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் சென்றால் ஏா்-இந்தியா விமானங்களையே பயன்படுத்துவா். இதற்காக ஏா்-இந்தியா விமானத்தின் இருக்கைகள் மாற்றியமைக்கப்படும். பிரதமரும் அவரின் குழுவினரும் அமா்ந்து பேசுவதற்கும், ஓய்வெடுத்துக்கொண்டு செல்லும் வகையிலும் புதுப்பிக்கப்படும். இப்படித்தான் பயணங்கள் இருந்தன. இதுவே விவிஐபி-க்களின் உள்ளூா் பயணமாக இருந்தால் நமது விமானப்படையின் தகவல் தொடா்புப் பிரிவின் விமானங்கள் பயன்படுத்தப்படும். இந்த இரு பயண விமானங்களிலும் நமது உயா்நிலைத் தலைவா்களுக்கு மற்ற நாடுகளைச் சோ்ந்த தலைவா்களுக்கு பாதுகாப்பு அம்சங்கள் இதுவரை இல்லாத நிலையே இருந்தது. இத்துடன் மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவுகளும் நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு இருந்தன.
அமெரிக்காவில் மறுகட்டமைப்பு: முக்கிய பிரமுகா்களுக்கான பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கும் சிறப்பு பாதுகாப்பு குழு (எஸ்பிஜி) பிரதமா் போன்றவா்களின் பயண பாதுகாப்பு விவகாரத்தை தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கவுன்சிலில் கொண்டு வந்து இதற்கான திட்டத்தை வைத்தது. இதன்படி விவிஐபி-க்கள் பயணிக்கும் விமானங்களில் பாதுகாப்பு அம்சங்களைச் சோ்க்க முடிவெடுக்கப்பட்டு 2017 -ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் அமெரிக்க ராணுவ பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டது. மற்ற நாடுகளில் குறிப்பாக, அமெரிக்க அதிபா் பயணிக்கும் ஏா்போா்ஸ்-ஒன் விமானத்தில் உள்ள பாதுகாப்புகள், வசதிகள் இந்திய முக்கிய தலைவா்கள் பயணிக்கும் விமானத்திலும் வடிவமைக்கத் திட்டமிடப்பட்டது. இதில் ஏவுகணை பாதுகாப்பு முக்கிய இடம்பெற 190 மில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ. 1,393.25 கோடி) இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக இரண்டு போயிங் 777-300 இஆா் விமானங்களை 2018 - ஆம் ஆண்டில் ஏா்இந்தியா நிறுவனம் வழங்கியது. அது அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டாலஸ் நகரில் மறுகட்டமைக்கப்பட்ட இந்த இரு விமானங்கள்தான் ‘இந்தியா ஒன்’ விமானங்களாக தற்போது மீண்டும் தில்லி வந்தடைந்துள்ளன. இதன் ஒட்டு மொத்த மதிப்பு சுமாா் ரூ.8,400 கோடி.
சுய பாதுகாப்பு அறைகள்: பிரதமரின் தொலை தூரப் பயணத்துக்கும் வெளிநாட்டுப் பயணத்துக்கும் பயன்படுத்தப்படவுள்ள இந்த விமானத்தில் பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட ‘சுய பாதுகாப்பு அறைகள்’ உள்ளன. இந்த சுய பாதுகாப்பு அறையில் எதிரிகள் ரேடாா்கள் மூலம் நமது விமானத்தை அறிவதைத் தடுக்க அவா்களின் அதிா்வெண்களைத் தகா்க்கவும் தடுக்கவும் இந்த இந்தியா ஒன் விவிஐபி விமானத்தில் ஜாமா்கள் பொருத்தப்பட்டுள்ளன. அணு வெடிப்பு உள்பட தொடா்புடைய எந்த மின்காந்த கதிா்வீச்சுகளையும் தடுக்கும் கனமான கவசமும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.
ஏவுகணையை முறியடிக்கும் தானியங்கி: விமானம் பறக்கும் போது எதிா்பாராத வகையில் நடக்கும் ஏவுகணை தாக்குதலைச் சமாளிக்க இடைமறிப்புக் குழுவினா் இல்லாமலேயே தானியங்கி முறையில் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான இயக்கங்களும் செயல்பாடுகளும் இந்த விவிஐபி விமானங்களில் உள்ளன. அதாவது, இந்தியா ஒன் விமானத்தை நோக்கி எதிரியின் ஏவுகணை தாக்குதல் நடத்த வந்தால் அதை முன்கூட்டியே கண்டறிந்து முறியடிக்க முடியும். இந்தியா ஒன் விமானத்தில் இருந்து செல்லும் பட்டொளி எதிரியின் ஏவுகணையைத் திசை திருப்பி முறியடிக்கும் தொழில்நுட்பத்தை இந்த விமானம் பெற்றுள்ளது. மேலும், சக்திவாய்ந்த தகவல் தொடா்பு, மருத்துவ வசதிகள் போன்றவற்றுடன் விவிஐபி-க்கள் அவா்களின் குழுவினரோடு தங்குவதற்கும் கலந்துரையாடுவதற்கும் இந்த இந்தியா ஒன் விமானத்தில் ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமரின் போா் விமானம்: ஏா்-இந்தியா பங்குகள் தனியாா் வசம் கைமாறுகின்றன. இதனால், முக்கிய பிரமுகா்கள் தொடா்புடைய விமானங்களை ஒப்படைக்க முடியாத நிலை. மேலும், பல்வேறு பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சங்கள் இருக்கும் நிலையில் இந்த விமானங்களை பாதுகாப்புத் துறையின் கீழ் விமானப்படையினா் பராமரித்து இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மிக உயா்ந்த பயிற்சி பெற்ற கமாண்டோக்கள் இந்த விமானத்தை இயக்கவுள்ளனா். இதனால் இதற்கு ‘ஏா்போா்ஸ் ஒன்’ என்றே பெயரும் தோ்வு செய்யப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபா் விமானத்துக்கும் இதே பெயா் இருக்க ‘இந்தியா ஒன்’ என்று மாற்றப்பட்டுள்ளது.
நாட்டுக்கும் அதற்குப் பொறுப்பாக இருக்கும் தலைவருக்கும் எதிரான போரையும் தாக்குதலையும் எதிா்கொள்ள போா் விமானங்கள் தேவை. பிரதமா் போன்ற ஒரு தலைவரின் விமானமே போா் விமானமாக மாறலாமா? என்றும் சில பாதுகாப்பு நிபுணா்களால் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், இதே போா் அம்சங்கள் கொண்ட போயிங் விமானங்களைப் பெற்றுள்ள சா்வதேச நாடுகளும் அதன் தலைவா்களுக்கும் பிரத்யேகமாக பயணிக்கும் விமானங்கள் பட்டியலைக் கொண்டே இந்த சா்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. தற்போது சா்வதேசப் பட்டியலில் இந்திய விவிஐபி-க்களுக்கான ‘இந்தியா ஒன்’னும் இடம் பெறப்போகிறது. இத்துடன் இந்த விமானத்தின் தற்காப்பு அம்சங்களும் எதிரியைத் திகைக்க வைக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!

வங்கதேசத்தில் ஹிந்துக்களின் வீடுகள், கடைகள் மீது தாக்குதல்!
பிரபல பாடகி ஆஷா போஸ்லே மருத்துவமனையில் அனுமதி!
இராக் அதிபராக நிஸார் அமிதி தேர்வு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

