'புற்றுநோயைவிட அறியாமைதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது'

புற்றுநோயைவிட அறியாமைதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

பெண்கள் கூச்சப்படாமல் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்கிறார் மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்மணி.

புற்றுநோய் பாதிப்பில் குணமடைந்த விழுப்புரத்தைச் சேர்ந்த இந்த 50  வயது பெண்மணி கூறுகையில், சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவள், திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். திடீரென கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மார்பக வலி ஏற்பட்டதால், சந்தேகத்தின் பேரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகினேன். அவர்கள் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவர்கள் பரிசோதித்ததில் மார்பகப் புற்றுநோய் உள்ளதை உறுதி செய்தனர்.

உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர், அறுவை சிகிச்சை செய்து,  ஒரு மாதம் மாத்திரை மருந்துகள் வழங்கி வீட்டுக்கு அனுப்பினர். 6 மாதங்களுக்கு நேரில் வரவழைத்து கீமோதெரபி, ரேடியோதெரபி சிகிச்சைகளை அளித்தனர். ஓராண்டில் குணமடைந்துவிட்டேன்.  இருப்பினும், தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு மாத்திரை சாப்பிடவும், பரிசோதனை செய்துகொள்ளவும் அறிவுறுத்தினர். இரண்டு ஆண்டுகள் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளேன்.

தற்போது பரிசோதனை மற்றும் மாத்திரை வாங்கச் செல்லும்போது, புற்றுநோய் பாதிப்பில் வரும் பெண்கள் பலர் மனமுடைந்து இருப்பதை பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி சிகிச்சை அனுபவத்தையும் விளக்கினேன்.
இந்நோய் அறிகுறி தெரிந்து ஆரம்பத்திலேயே நாம் மருத்துவமனைக்குச் சென்றால் குணப்படுத்திவிடலாம். ஆனால், பலர் விவரம் அறியாமல் வலிக்கு மருந்து சாப்பிட்டு, நோய் முற்றிய பிறகே வருவதால் உயிரிழப்பது வேதனையளிக்கிறது. இந்நோய்க்கான அனைத்து சிகிச்சையும்,  காப்பீடு திட்டத்தில் இலவச அறுவை சிகிச்சை, மருந்துகளும் அரசு சார்பில் வழங்கப்படுவதால் அச்சமில்லை" என்றார்.

அறியாமையே நம்மை பாதிக்கிறது

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் ராஜிவ்குமார், விவேக் ஆகியோர் கூறியதாவது:

"விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கதிரியக்க  புற்றுநோய் பிரிவு கடந்த 2012லிருந்து செயல்பட்டு வருகிறது. புற்றுநோய் பிரிவில், வயிறு மற்றும் குடல் அறுவைத் துறை, சிறுநீரகவியல் அறுவை,  பிளாஸ்டிக் அறுவை, மூளை நரம்பு அறுவை, பொது அறுவை, காது மூக்கு தொண்டை அறுவை,  பெண்களுக்கான புற்றுநோய் அறுவைப் பிரிவுகள், புற்றுநோய் கண்டறியும் வசதிகள், நவீன ஸ்கேன்கள்,  மார்பகப் புற்றுநோய் கண்டறியும் மேமோகிராம், எண்டோஸ்கோபி, திசு நுண்ணோக்கி போன்ற சாதனங்கள் உள்ளன.

மேலும், அடுத்த 4 மாதங்களில் கதிரியக்க சிகிச்சை ரேடியோதெரபி வசதி அமைய உள்ளது.  ரூ. 8 கோடி மதிப்பில் சென்னைக்கு அடுத்ததாக இந்த வசதிக்கான கட்டுமானப் பணி நடந்து வருகிறது. இதனால், புதுவை ஜிப்மரில் புற்றுநோய் சிகிச்சைக்குக் காத்திருப்போர் எண்ணிக்கை குறையும். இதுவரை  1,800-க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆண்டுக்கு 400 பேர் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த மருத்துவமனை இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்துடன் (ஐசிஎம்ஆர்ஒருங்கிணைந்து புற்றுநோய்  பதிவேட்டினை பராமரிக்கிறது. இப்பதிவேடு  தமிழகத்தின் 7 நகரங்களில் மட்டுமே உள்ளது. ஆரம்ப நிலையிலேயே அறிகுறியைக் கண்டறிந்தால் புற்றுநோயை மிக எளிதாக குணப்படுத்த முடியும். தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் மூலம் அனைத்து புற்றுநோய்களுக்கும் இலவசமாக சிகிச்சையளிக்கப்படுகிறது.

பெண்கள் அதிகளவில் புற்றுநோய் பாதிப்புக்கு உட்படுவதால், பொதுவாக  30  வயது கடந்த ஒவ்வொரு பெண்ணும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் அல்லது அரசு மருத்துவக் கல்லூரியில் இலவச மார்பக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அரசு மருத்துவமனைகளில் உள்ள தொற்றா நோய்ப் பிரிவிலும், மாதம் ஒருமுறை வீட்டிலேயேயும், சுய மார்பக பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இதனால், ஆரம்ப நிலையில் நோய் கண்டறியப்பட்டு,  சிகிச்சையளித்து நோய்த்தொற்று பரவாமல் ஆரம்ப நிலையிலேயே குணமடையச் செய்ய முடியும். சற்று முற்றிய நிலையில் அவர்கள் மருத்துவமனையை அணுகும்போது, சிகிச்சைக்குப் பின் ஏற்படும்  முன்னேற்றத்தில்  தொய்வு ஏற்படும். 

மார்பகப் புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் 100 சதவீதம் குணப்படுத்தலாம். மார்பகப் புற்றுநோய்க்கு, செலவின்றி அருகே உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கண்டறிந்து முழு சிகிச்சை பெறலாம். புற்றுநோயைவிட அறியாமைதான் பாதிப்பை ஏற்படுத்துகிறது" என்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com