தற்சார்பு கிராமங்களே தீர்வு: காந்தி - குமரப்பா வழியில்

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிழைப்புத் தேடிப்போன உழைப்பாளிகள் அனைவரும் கூடு திரும்பும் மாலைப் பறவைகள் போல மீண்டும் தமது பழைய கிராமங்களே சொர்க்கம் என உணர்ந்து திரும்பிக் கொண்டுள்ளனர்.
மகாத்மா காந்தி | ஜெ.சி.குமரப்பா
மகாத்மா காந்தி | ஜெ.சி.குமரப்பா

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பிழைப்புத் தேடிப்போன உழைப்பாளிகள் அனைவரும் கூடு திரும்பும் மாலைப் பறவைகள் போல மீண்டும் தமது பழைய கிராமங்களே சொர்க்கம் என உணர்ந்து திரும்பிக் கொண்டுள்ளனர்.

படித்த மேல்தட்டு இந்தியர்கள், வெளிநாடுகளுக்குச் சென்று, பச்சை அட்டை கிடைத்தவுடன் அதுவே தங்கள் நாடு என வாழப் பழகிவிட்டிருந்தனர். ஏதோ சில ஆண்டுகள் குடும்பத்தைவிட்டு உழைத்து விட்டால் திரும்பி வந்து வசதியுடன் வாழ்ந்து விடலாம் என்கிற நம்பிக்கையில் வாழ்ந்த உழைப்பாளிகளின் வாழ்வில் கரோனாவும் அதைத் தொடர்ந்த தனிமைப்படுத்தலும், ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆலைகள் மூடலும் வேலையிழப்பும் பேரிடியாகத் தாக்கியுள்ளது. தங்கமும் டாலர்களும் பசி போக்காது, தாகம் தீர்க்காது, மகிழ்ச்சி தராது என்பது அவர்களுக்குப் புரிந்துள்ளது.    

     செய்த வேலை இல்லாமல் போனது, போக்குவரத்துகள் நின்று போயின, கையில் காசில்லை, திரும்ப வழியில்லையேன செய்வதறியாது திகைத்து நின்றனர். அநாதைகளாக நின்ற அவர்களை அழைத்து வரச் செலவு செய்வது சுமையென சொந்த அரசும் கைவிட்டது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு  அவர்கள் தாய்மண் தேடி நடக்கத் தொடங்கினர்.

    வாழ்வு தேடிப் புலம் பெயரும், நீண்ட நடைப் பயணம்,  மனித குலத்தின் துவக்கக் காலம் முதலே நிகழ்ந்துவரும் ஒன்றுதான். பல லட்சம் ஆண்டுகள் முன் ஆப்பிரிக்க மூதாதையரின் ஒரு பிரிவு இந்தியா வந்ததென்றும், அவ்விதமே உலகின் பல பாகங்களுக்கும் மனித இனம் புலம் பெயர்ந்தன என்றும் மானுடவியலாளர்கள் கூறுகின்றனர்.

    வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது எனும் பரப்புரை எத்தனை கற்பனையானது என்பதை, வட மாநிலங்களிலிருந்து தென்னகம் நோக்கி வாழ்வு தேடி ஓடி வந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் கதை கூறுகிறது.

கங்கையும் யமுனையும் பிரம்மபுத்திராவும் மகாநதியும் நர்மதையும் பாயும் வளமான மண், தோண்டிய இடமெல்லாம் கிடைக்கும் அரிய கனிமவளம், அடர்ந்த வளமான காடுகள் என இயற்கையின் வரம் பெற்றது வட மாநிலங்கள்.. இந்தியாவை நெடுங்காலம் ஆண்ட பாரம்பரியம் யாவும் கொண்ட பகுதி இத்தனை இருந்தும் வட இந்தியா வறுமையிலும், அறியாமையிலும் மூழ்கிக் கிடப்பது ஏன் என்பது புரியாத புதிராகவே உள்ளது.

    தென்னக முதலாளிகளுக்கான மலிவுக் கூலிகளாக காலை முதல் இரவு வரை ஓயாது மாடு போல் உழைக்கும் ஏழைத் தொழிலாளிகளைக் கங்காணிகள் ஓட்டிவந்தனர். லாபம் வருமென்றால் ஜாதி, மொழி, இனம் பார்க்காத முதலாளிவர்க்கம், தனது சொந்த மாநில மக்களை ஒதுக்கப் பட்டினி போட்டு அவர்களை ஆலையடிக் கரும்பாகக் கசக்கிப் பிழிந்தது. தம் மக்கள் வஞ்சிக்கப்படுவதையும், போராடிப் பெற்ற எட்டு மணி நேர வேலை எனும் உரிமை மறுக்கப்படுவதையும், குறைவான கூலிக்கு நெடுநேரம் உழைக்கும் சுரண்டலைத் தடுக்கவும் போராடாமல் முதலாளிகளின் கொடுமைகள்  தொடர தொழிற்சங்கங்கள் அனுமதித்தன.

கருணையற்ற முதலாளிகளைப் போலவே வலிமை பெற்ற தொழிற்சங்கங்கள் அவர்களுக்கான அநீதிகளை, முறையற்ற பணி நீக்கத்தை, ஆதரவற்று நடுத்தெருவில் நிற்கச் செய்ததை பல ஆயிரம் காதம் தலையில் சுமையுடனும், மனதில் வேதனையுடனும், ரத்தம் கசிய நடப்பதை தடுத்து நிறுத்த ஏன் முயலவில்லை? அல்லது ஒவ்வொரு ஊரிலும் அவர்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் ஏன் நடக்கவில்லை?.

    எப்படியோ அப்பாவி வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களுடைய பாதுகாப்பான கூடுகளான சொந்த ஊர்களைச் சென்றடைந்துவிட்டனர். இந்த கரோனா கால அனுபவம் அவர்களுக்கும் பல கசப்பான பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது.

    பசுமையெனத் தோன்றிய அக்கரை, ஏமாற்றம் - கானல் நீரே என்பதை உணர்த்தியுள்ளது.

    வட நாடோ, தென்னாடோ முதலாளிகள் குறைந்த கூலிக்கு அதிக வேலை பெற்று லாபம் குவிப்போரே, வேலை தருகிறோம் எனும் கருணை வார்த்தைகள் வைக்கோல் கன்றைக் காட்டி பால் சுரக்கச் செய்யும் ஏமாற்றே. தொழிலாளர் உரிமை காக்கும் தொழிற்சங்கங்கள் எதுவும் அவர்களின் உரிமைகளைக் காக்க வரவேயில்லை.

இனி செய்ய வேண்டியது என்ன ?

    கெட்டபின் ஞானம், நடந்தனவெல்லாம் நஷ்டமல்ல புத்திக் கொள்முதல் என்பார்கள். நகரங்கள் வறுமை போக்கும், வாழ்வு தரும், பேதங்கள் அழிக்கும் என்பதும், கிராமங்கள் பிற்போக்கான ஜாதி, பணவெறி ஆதிக்கத்தின் பிறப்பிடம் என்ற நம்பிக்கைகள் பொய்யானது.

தொழில்நுட்பம், அறிவு, உழைப்பு இவற்றின் கூட்டாகத் தன்னிறைவு கிராமங்களை உருவாக்கும் காந்தி - குமரப்பாவின் புதிய 21 ஆம் நூற்றாண்டின் கிராம சுயராஜ்யத்தை அமைப்பது தவிர தற்போது நமக்கு வேறு வழியில்லை.  அதுவே லெனின் கனவு கண்ட கம்யூனிசம். விழிப்புணர்வு பெற்ற மனிதர்கள், புதிய தொழில்நுட்பம், உழைப்பு, கூட்டுத் தொழில், லாபப் பகிர்வு, சமூக முன்னேற்றம் கொண்ட புதிய கிராமங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

காந்தியும் குமரப்பாவும் தன்னிறைவு பெற்ற கிராமங்களை உருவாக்கும் கனவு கண்டனர். நகர்மயமாதல், பெரிய கட்டுமானங்கள், ராட்சத இயந்திரங்கள், கனரகத் தொழில்கள் எனும் மேற்கத்திய வளர்ச்சியை நம்பிய நேருவே தமது இறுதிக் காலத்தில் அவை எதிர்பார்த்த சமத்துவ வளர்ச்சியைத் தரவில்லை என்பதை உணர்ந்து வருந்தினார்.

    நகரங்கள் முரண்பாடுகளின் மையமாகின. ஏற்றத்தாழ்வுகள், மலையும், மடுவுமாக வளர்ந்தன. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களானார்கள். ஏழைகள் மேலும் ஏழைகளாயினர். வான் முட்டும் கோபுரங்களின் அடியில் ஏழைகளின் சேரிகள் பெருகின. பணப் பேராசையின் கழிவுகளால் ஆறுகள் மாசுபட்டன. காடுகளையும், மலைகளையும் தின்ற சிலரே வளர்ந்தனர். ஒவ்வொரு முறை இயற்கையை வென்றோம் என்று பெருமைப்படும்போதும் பல பத்து முறை அழிக்க இயற்கை காத்திருக்கிறது என்ற ஏங்கல்சின் வாக்கை உணர மறந்தார்கள். எதையிழந்தும் வளர்ச்சி என்றார்கள். ஆயுதங்களே வலிமையென அணுகுண்டுகளை அடுக்கி வல்லரசு கனவு கண்டார்கள். வாழும் பூமியில் கழிப்பிடம் கட்டித் தர முடியாதவர்கள் நிலவில் வீடுகட்டக் கனவு கண்டார்கள்.

    இவர்களின் வலிமை வாய்ந்த ஆயுதங்கள் உலகைப் பல நூறு முறை அழிக்கவல்ல அணுகுண்டுக் குவியல்கள் யாவும் காகிதப்புலிகளே என்று கண்ணுக்குத் தெரியாத கோவிட்-19 வைரஸ் சிரிக்கிறது. எவையெல்லாம் வலிமை வாய்ந்த, பணக்கார நகரங்கள் என்று பெருமைப்பட்டார்களோ அவையே இன்று வைரஸ் தாக்குதலுக்கு அஞ்சிப் பதுங்கி ஊரடங்கிக் கிடக்கின்றன. பிற்போக்கானவை, அசிங்கமானவை என்று ஒதுக்கப்பட்ட கிராமங்கள், சுதந்திரமாக வாழ்பவர்களே மனிதர்கள், நிம்மதியாக வாழ்வதற்கான இடங்கள் தங்களது இருப்பிடமே என்று கூறுகின்றன.

    எனவே இந்தக் கிராமங்களை மேம்படுத்தி மக்கள் வாழ்வும், வசதியும், வளமும் பெற்ற இந்தியாவின் இதயங்களாக மாற்றுவது இனி நமது கடமையாக வேண்டும். மகாத்மாவும் அவருக்கே பொருளியலில் புதிய பாதைகளை அறிமுகப்படுத்திய அவர் வழித்தோன்றலான குமரப்பாவும் இதற்கான செயல்முறைப் பரிசோதனைகளையும் வழிகாட்டல்களையும் தந்து சென்றுள்ளனர்.

இவர்களுக்குப் பின் ஆடம்பர அரண்மனையான குடியரசுத் தலைவர் மாளிகையிலும் ஓர் எளிய குடிமகனாக வாழ்ந்த அறிவியலாளர் அப்துல் கலாமின் நினைவுக் கிராமத்தை மேலும் நவீனப்படுத்தி “புறா”வாக்கிக் காட்டினார். இவற்றின் அடிப்படையில் கிராமங்களைக் குட்டிக் குடியரசுகளாக, தன்னிறைவு பெற்ற கிராம சுயராஜ்யமாக மாற்ற முயல்வோம்.   

     இதற்கான அடிப்படை ஆற்றல் பெற்ற அறிஞர்களும், அறிவியலாளர்களும், உழைப்பாளிகளும் கிராமங்களை நோக்கி வந்து குவிந்துள்ளனர். உழைப்பாளிகளை திறமையற்ற கூலிகள் என்றனர். ஆனால், அவர்களே நகரங்களின் வானுயர மாளிகைகளைக் கட்டியவர்கள். அவர்கள் பறக்கும் நாற்சக்கரச் சாலைகளை, பளபளக்கும் விமான நிலையங்களை, உலக நாடுகள் ஏற்றுமதிக்கான ஆடைகளை உருவாக்கினர். அவர்களால் இந்த பிற்படுத்தப்பட்ட கிராமங்களை,  வசதி மிக்க வீடுகள், சாலைகள், சிறுசிறு தொழிற்சாலைகள், தற்சார்பு கொண்ட கல்வி, குட்டி ஸ்மார்ட் கிராமங்களை உருவாக்கி விட முடியும்.

     சோவியத் வீழ்ச்சிக்குப் பின் தன்னம்பிக்கைமிக்க உழைப்பால், நான்கு புறமும் முற்றுகையிடப்பட்டு முடக்கிய தமது குட்டித்தீவை உலகுக்கே உதவும் சேவை மையமாக மாற்றிக் கொண்ட கியூபாவின் அனுபவத்தை ஏற்று நமது கிராமத்தின் குட்டி காஸ்ட்ரோக்களாகச் செயல்பட்டால், கிராமங்களை காந்தியும், குமரப்பாவும், கலாமும் கனவு கண்ட இந்தியாவின் இதயங்களாக்கி விட முடியும். ஏழையென்றும், அடிமையென்றும், திறமையற்றோர் என்றும் சுரண்டிய நகரங்களை இனி மிதிக்க மாட்டோம் எனும் முடிவுடன் தம் கிராமங்களை முன்னேற்ற முடிவு செய்து விட்டால் புதிய இந்தியா எளிதில் பிறந்து விடும்.

     நகரங்கள் ஒருபுறம் அவர்களைச் சுரண்டியபோதும். திறமைமிக்க படைப்பாளிகளாக மாற்றியுள்ளன என்பதை மறந்துவிடக் கூடாது.

இனி செய்ய வேண்டியது என்ன ?

     கிராமத்தின் தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பயிரிட்டுக்  கூட்டு விவசாயம் செய்யத் தரப்பட வேண்டும்.

    கிராமத்தின் நீர் நிலைகளை காண்டிராக்ட் விடாமல், மக்கள் உழைப்பால் குளங்களாக்கி, கிராமத்தின் ஒவ்வொரு சொட்டு மழை நீரையும் சேமித்து புரதச் சத்து மிக்க மீன்களை வளர்த்து மக்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்ப்பதுடன் உணவுத் தன்னிறைவு கொண்ட பல் பயிரின விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும்.

     நகர்ப்புறம் பணக்காரர்களின் கார்களுக்காக சாலைகளை அமைத்த உழைப்பாளிகள் கிராமத்தின் உள்ளூம், சுற்றியுமுள்ள கிராமங்களையும், நகரங்களை விரைந்து இணைக்கும் நிழல் மிகுந்த சாலைகளை உருவாக்கிட வேண்டும்.

    லாரிபேக்கர் - வாழும் மனிதருக்கெல்லாம் வாழ வீடு வேண்டுமென்னும் முடிவுடன் சுற்றிலும் கிடைக்கும் எளிய பொருள்களைக் கொண்டே கட்டும் மலிவு வீடுகளை உருவாக்கினார். இதனைப் பின்பற்றி நகர்ப்புற மாளிகைகளைக் கட்டிய திறன்மிக்க தொழிலாளர்கள் கிராமங்களில் அனைவருக்கும் மலிவு வீடுகளைக் கட்டித்தர வேண்டும்.

     தொழில்நுட்பம், நிர்வாகம் செய்து திறமை பெற்றவர்கள் கூடி தொழிற்சாலைகளில் பணிபுரிந்து பயிற்சி பெற்ற தொழிலாளிகளைப் பயன்படுத்தி நகரங்களுக்கு அருகிலுள்ள பெரிய தொழிற்சாலைகளுக்கான சிறிய உதிரிபாகங்களைச் செய்யும் தொழிற்கூடங்களைக் கிராமங்களில் உருவாக்கிட வேண்டும்.

சீனா இவ்விதமாகத் தனது கிராமங்களை சிறுதொழில் மையங்களாக மாற்றி அவற்றின் தர மேம்பாட்டுக்கு உதவியதை 1952ல் நேரில் கண்டு பதிவு செய்துள்ளார் காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா.

நமது கோயம்புத்தூர் மாநகரில் இதையே செய்தபோதும் கிராமங்களை நோக்கி சிறு தொழில் உற்பத்தியை விரிவாக்கவில்லை என்பதால் நகரம்  நெரிசல் மிக்கதாகவும், ஆரோக்கியமிழந்தாகவும் மாறியுள்ளதைக் காண்கிறோம்.

நகரங்களின் புற்றுநோய் வளர்ச்சிக்கு மாற்றாக ஆரோக்கியமான நவீன தொழில் வளர்ச்சியை பஞ்சாயத்துகள் ஊக்குவிக்க வேண்டும், இதனால் கிராமம் பொருளாதார வளர்ச்சியுடன், ஆரோக்கிய வாழ்வும் பெறும். மாநில அரசும் வங்கிகளும் இதற்கு உதவிட வேண்டும். இதனால் வேலை தேடி நகரங்களை நோக்கி மக்கள் புலம்பெயரும் அவலம் முற்றாக நின்றுபோகக் கூடும்.

கல்வி

    நமது கல்வி முறை நகரங்களை மனதில் கொண்டும், அரசு மற்றும் தனியார் அலுவலர்களின் தேவைக்கான பணியாளர்களை உருவாக்கவும், உருவாக்கப்பட்ட மெக்காலே கல்வி முறையின் தொடர்ச்சியாகவே உள்ளது. ஆனால் மகாத்மா காந்தி அக்கல்வி முறைக்கு மாற்றாகத் தன்னிறைவுக்கான தொழில் பயிற்சி, திறன் வளர்ப்புடன் கூடிய நயிதாலிம் கல்வி முறையை 1930லேயே உருவாக்கினார். தச்சு, உழவு, நெசவு, மண்பாண்டம் செய்தல், சிறு எந்திரங்களை செய்தல் ஆகியவற்றைக் கொண்ட பாடத்திட்டங்களாக அது அமைந்திருந்தது. இந்தப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இயற்கை வளங்கள் பதிவு, பாதுகாப்பு

     கிராமங்களின் இயற்கை வளங்கள், பறவைகள் குறித்த பதிவுகள் செய்யப்பட்டு அவற்றை அழியாமல் பாதுகாக்கவும் மேம்படுத்தவுமான பொறுப்புணர்வு வளர்க்கப்பட வேண்டும்.

பஞ்சாயத்து

     பஞ்சாயத்து என்பது மத்திய, மாநில அரசுகளுக்கு இணையாக சுயசார்பு உரிமைகள் கொண்ட, எனும் பஞ்சாயத் ராஜ் சட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டு கிராமம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற தனியரசாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.

மருத்துவத் தொழிற்கல்வி

     சிறந்த சேவை மனப்பக்குவம் பெற்ற கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவம், மருத்துவ உதவியாளர்கள், தொழிற்பயிற்சி ஆகியவற்றில் சிறப்பு இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும். அவர்கள் குறிப்பிட்ட காலம் கிராமங்களில் பணிபுரியும் ஒப்பந்தத்துடன் கல்வி பெறச் செய்வது கிராமத்தின் நலவாழ்வுக்குப் பெரிதும் உதவும்.

பனைப் பொருளாதாரம்

     சலவை செய்த வெள்ளைச் சர்க்கரையே, சத்தேதும் இல்லாத ரசாயனச் சிரிப்பு. பதனீர், பனை வெல்லம், வைட்டமின்கள், கனிமங்கள் என பல கொண்ட சத்தின் சிரிப்பு. பதனீர், கள், பனை வெல்லம், கருப்பட்டி, சர்க்கரை, பனம்பழம், பனங்கிழங்கு, ஓலை ஏடு, வீட்டு விட்டம் என அங்கமெல்லாம் தங்கமான மரம் பனை. நீர் பாய்ச்சத் தேவையில்லை. வறட்சியிலும் செழித்து வளர்ந்து நீடித்த பயனைத் தரும். பனைப் பொருளாதாரம் பராமரிக்கப்பட வேண்டும்.

மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம்

     கிராமப்புற ஏழை உழைப்பாளிகளுக்குக் குறைந்தபட்ச வாழ்வு தரும் இந்த சோசலிசத் திட்டம், ஆண்டு முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும், அனைத்து வளர்ச்சிப் பணிகளிலும் வழங்கப்படுவதன் மூலம் கிராமங்கள் விரைவான வளர்ச்சி பெறும்.

தொழிற்பயிற்சிப் பள்ளிகள்

     விவசாயம், நெசவு, தச்சு, மண்பாண்டம், இயந்திரங்கள், வாகனங்கள் பழுது பார்ப்பு, உதிரிபாகங்கள் செய்வது, மின்னியல், கணினி, தகவல் தொடர்பு என அனைத்து அடிப்படை வாழ்வுத் தேவைகளுக்குமான கல்வி தரும் பயிற்சி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும், பயிற்சி பெற்றோர் சுயதொழில் வாய்ப்பு பெற ஊக்குவிக்கப்படுவர். கிராமங்கள் நகரின் பெருந்தொழில்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி மையங்களாக்கப்பட வேண்டும்.

மருத்துவமனைகள்

     10 ஆயிரம் பேர் கொண்ட கிராமக் குழுவுக்கு ஒரு மருத்துவமனை உருவாக்கப்படும். நவீன அலோபதி மட்டுமல்ல சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதி, அக்குபங்சர், பிசியோதெரபி என அனைத்திலும் தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் அடிப்படை மருத்துவத் தேவைகளை எதிர்கொண்டு உதவுவர். சிறப்பு மருத்துவம் தேவைப்படுவோர் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவர்.

     கிராமத்து மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பெறவும், கிராமங்களில் பணியாற்றவும் முன்னுரிமை தரப்பட வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைகளிலும் முதியோர், இறுதிநிலை நோயாளிகளுக்கான சிறப்புப் பிரிவு இலவசமாக நடத்தப்படும்.

மருத்துவமனையில் இலவசப் பகுதி, கட்டணப்பகுதி என இரு வகையாக இயங்கும். மருந்துகள் மலிவு விலையில் வழங்கப்படும். சிறப்புப் பிரிவினருக்கு இலவசமாக வழங்கப்படும் முதலுதவி, நோயாளிகளைப் பேணுதல் ஆகியவற்றிற்கான பயிற்சி இளையோர்க்கும் வழங்கப்படும்.

குமரப்பா, காந்தியின் தற்சார்பு கிராமமே தீர்வு

     மையக் குவிப்பு, நகரமயமாதலின் கேடுகளை நமக்கு நன்கு உணர்த்தியுள்ளது கரோனா. இவற்றின் அடிப்படையில் புதிய பாடங்களைக் கற்று நவீன கிராமக் குடியரசுகளை உருவாக்குவதே இந்தியா போன்ற மக்கள்தொகை பெருகிய நாடுகளுக்கான சிறந்த நிரந்தரத் தீர்வு.

      லாபவெறி கொண்ட முதலாளித்துவ வளர்ச்சி மீண்டும் ஆசை வலை வீசி ஏழைக் கிராம உழைப்பாளிகளை நகரங்களை நோக்கி ஈர்க்கும். ஆனால் மீண்டும் விட்டில் பூச்சிகளாக அவர்கள் ஆவதைத் தடுப்பது, படித்த தேசபக்தி மிக்க ஒவ்வொருவரின் கடமை.

[கட்டுரையாளர் - தலைவர்,

தமிழக பசுமை இயக்கம், ஈரோடு]

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com