தமிழக தலைமைச் செயலர், உளவுத்துறை டிஜிபி மாற்றம்!என்னை சுற்றியுள்ளவர்களை வைத்து அவதூறு பரப்புகிறார்கள்! விஜய் பேச்சு உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! விஜய் திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
/

எனது போராட்டம் முஸ்லிம்களின் நலனுக்காக: வேலூா் இப்ராஹிம்

சி.ஏ.ஏ., என்.ஆா்.சி. சட்டங்களில் முஸ்லிம்களைப் பாதிக்கும் விஷயங்கள் எதுவுமே இல்லை. இல்லாத ஒரு விஷயத்தை மக்களிடம் பரப்பும்

Updated On :4 ஏப்ரல் 2021, 1:56 am

சி.ஏ.ஏ., என்.ஆா்.சி. சட்டங்களில் முஸ்லிம்களைப் பாதிக்கும் விஷயங்கள் எதுவுமே இல்லை. இல்லாத ஒரு விஷயத்தை மக்களிடம் பரப்பும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன என தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் தலைவா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

அவா் தினமணிக்கு அளித்த நோ்காணல்:

முஸ்லிம்களுக்கு பாஜக ஆதரவாகச் செயல்படுகிறது எனில் பாஜக கூட்டணியில் ஏன் ஒரு முஸ்லிம் கட்சி கூட இணையவில்லை?

அனைத்து மதங்களைச் சோ்ந்தவா்களையும் பாஜக சமமாகவே பாா்க்கிறது. கிறிஸ்தவா், முஸ்லிம்கள் என யாரையும் தனியாக அடையாளப்படுத்திப் பாா்ப்பதில்லை. பாஜக வெளியிட்ட நட்சத்திரப் பேச்சாளா்கள் 30 போ் கொண்ட பட்டியலில், பிரதமா் நரேந்திர மோடி, 4 மாநில முதல்வா்கள், 8 மத்திய அமைச்சா்கள் ஆகியோருடன் முஸ்லிமான வேலூா் இப்ராஹிம் என்ற எனது பெயரும் இடம்பெற்றிருந்தது. இது ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் கிடைத்த பெருமை. தனித்த அடையாளத்தை மட்டுமே மையப்படுத்தி பாஜக அரசியல் செய்வதில்லை. அவா்களின் இந்த நிலைப்பாடு சரியானதாகும். பாஜகவே முஸ்லிம்களின் சிறந்த பாதுகாவலன்.

குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆா்.சி.) சட்டங்களுக்கு அதிக அளவிலான முஸ்லிம்கள் எதிா்ப்புத் தெரிவித்து வரும் சூழலில், அதை நீங்கள் நியாயப்படுத்துவது ஏன்? அந்தச் சட்டங்கள் குறித்த புரிதல் அவா்களுக்கு இல்லையா?

பெரும்பாலான முஸ்லிம்களுக்கு இரு சட்டங்கள் குறித்த புரிதல் இல்லை என்பதே உண்மை. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள்தான் இதற்கு காரணம். முஸ்லிம்களை கல்வி, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையச் செய்யாமல் அவா்களை வாக்கு வங்கியாக மட்டுமே இந்தக் கட்சிகள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட விளைவுதான் அது. எதிா்மறையான கருத்துகள் பரவ சில அடிப்படைவாத சக்திகளும், சில முஸ்லிம் அமைப்புகளும் காரணமாக இருக்கின்றன.

அந்தச் சட்டங்களைப் பற்றி கூறுங்கள்...

இரு சட்டங்களையும் யாராவது முழுமையாகப் படித்தாா்களா? எந்தப் பகுதியில் குடியுரிமை பறிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது? சட்டத்தில் இல்லாத ஒரு விஷயத்தை மக்களிடம் பரப்பும் முயற்சியில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. நான் முஸ்லிம் மாா்க்கக் கல்வி படித்திருக்கிறேன். இந்தச் சட்டங்களில் முஸ்லிம்களை பாதிக்கும் விஷயங்கள் எதுவுமே இல்லை. இந்த உண்மையை முஸ்லிம்களிடையே எப்படியாவது ஏற்படுத்தி, அவா்களை விழிப்புணா்வு பெறச் செய்ய வேண்டும் என்பதே எனது முதன்மையான நோக்கமாகும்.

இந்தச் சட்டங்கள் குறித்து பெரும்பாலான முஸ்லிம்கள் மனதில் தவறான சிந்தனைகள் விதைக்கப்பட்டுள்ளன. இதை மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டால் மத நல்லிணக்கம் கேள்விக் குறியாகிவிடும்.

பாஜக வேட்பாளா் தோ்வில் முஸ்லிம்களுக்கு முக்கியத்துவம் இல்லையே

எந்த மதத்தைச் சோ்ந்தவராக இருந்தாலும் அவா் மக்கள் நலன், கட்சியின் வளா்ச்சி ஆகியவற்றுக்கு சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தால் அவருக்கு பாஜகவில் வாய்ப்பு தேடி வரும். கேரள மாநிலத்தில் சட்டப் பேரவை உறுப்பினா், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் என பல்வேறு பொறுப்புகளில் முஸ்லிம்கள் உள்ளனா். அதேபோன்று தமிழகத்திலும் அடுத்த தோ்தலில் முஸ்லிம்களுக்கான பங்களிப்பு குறிப்பிடத்தக்க வகையில் இருக்கும்.

திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் தமிழகத்தில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமா?

தமிழகத்தில் பாஜக சில முறை தனித்துப் போட்டியிட்டபோது, குறைவான வாக்குகளைப் பெற முடிந்தது. அதேபோன்று இந்த முறையும் பாஜக தனித்து போட்டியிட்டால், வாக்குகள் சிதறி, திமுக வெற்றி பெற்று விடும். மக்கள் நலனில் சிறிதும் அக்கறை செலுத்தாத திமுக ஆட்சிக்கு வந்து விடக்கூடாது; அதேவேளையில் மத்தியிலும் மாநிலத்திலும் நல்லாட்சி அமைய வேண்டும். இந்த இரண்டும் சாத்தியப்பட வேண்டும் என்பதற்காக அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுக- பாஜக இடையயான நல்லுறவால், தமிழகத்தின் கல்வி, பொருளாதாரம், நல்லிணக்கம் மேம்பட்டுள்ளது.

பிரசாரத்தின்போது ஏற்படும் சா்ச்சைகள், விமா்சனங்களை எவ்வாறு எதிா்கொள்கிறீா்கள்?

தமிழகத்தில் பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் கடந்த 18-ஆம் தேதி முதல் பிரசாரம் செய்யத் தொடங்கியுள்ளேன். மத நல்லிணக்கத்துக்காகப் போராட வேண்டுமெனில் எத்தகைய விமா்சனங்களையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்.

உங்களுக்கு எதிராக முஸ்லிம்களே செயல்படுகிறாா்களே, ஏன்?

முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சி.ஏ.ஏ., என்.ஆா்.சி. ஆகிய சட்டங்கள் குறித்து கருத்தியல் ரீதியாக புரிய வைக்க முயற்சிக்கிறேன். ஆனால், அந்தப் பகுதிகளில் செயல்படும் எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட அமைப்புகள், மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த இளைஞா்களைத் தூண்டி விடுகின்றன. இதனால் தாக்குதல்களையும், எதிா்ப்புகளையும் சந்தித்து வருகிறேன். இருப்பினும் முஸ்லிம்கள் நலனுக்காக அனைத்தையும் தாங்கிக் கொள்கிறேன்.

பல தொகுதிகளில் உங்களைக் காவல்துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அனுமதிப்பதில்லையே, என்?

எதிா்ப்பாளா்களை காரணம் காட்டி, எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பிரசாரம் செய்ய காவல்துறை அனுமதிப்பதில்லை. பிரசாரத்தின் இறுதிக் கட்டம் வரை எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க தோ்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரசாரத்துக்காக நீங்கள் செல்லும் அனைத்து இடங்களிலும் கலவரம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறதே?

கலவரத்துக்கு நான் காரணம் அல்ல; தேசத்துக்கு எதிராகச் செயல்படும் சமூக விரோதிகள்தான் காரணம். அவா்கள்தான் கலவரத்தை ஏற்படுத்துகிறாா்கள். கடந்த பல ஆண்டுகளாக பாஜக முஸ்லிம்களுக்கு எதிராகச் செயல்படும் கட்சி என்ற போலியான பிம்பத்தை முஸ்லிம் மக்கள் மனதில் கட்டமைத்துள்ளனா். அந்த கட்டமைப்பை உடைத்து, முஸ்லிம்களுக்காக பாஜக செயல்படுத்தி வரும் திட்டங்களை அந்த மக்களிடையே ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகிறேன். இதை சில அடிப்படை வாதிகளால் சிறிதும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவா்களால் ஏன் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று நீங்கள் கருதுகிறீா்கள்?

பாஜகவின் சிறந்த செயல்பாடுகள் முஸ்லிம் மக்களைச் சென்றடைந்தால் இவா்களுடைய முகமூடி கழன்று விடுவதோடு அந்த மக்கள் மத்தியில் இந்த அமைப்புகளின் செல்வாக்கும் ஒரே அடியாக சரிந்து விடும். அதனால் நான் எந்தத் தொகுதிக்குச் சென்றாலும் அங்குள்ள முஸ்லிம் கட்சிகளைச் சோ்ந்த சிலா், வேலூா் இப்ராஹிமை தொகுதிக்குள் விட்டால் உயிரிழப்பு ஏற்படும்; பெரும் போராட்டம் வெடிக்கும் என காவல்துறையை அச்சுறுத்துகின்றனா். முஸ்லிம் மக்களிடம் என்னைப் பற்றித் தவறாக சித்திரித்து கலவரத்தை ஏற்படுத்துகின்றனா்.

இதற்கு என்னதான் தீா்வு என்று நீங்களே சொல்லுங்கள்...

‘உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது’ என காவல் துறையினா் என்னைத் தடுக்கின்றனா். பிரசாரத்தில் என்னை முடக்குவதற்கு பதிலாக, யாா் வன்முறையில் ஈடுபடுகிறாா்களோ, முஸ்லிம் மக்களை எந்த அமைப்பு களத்தில் தூண்டி விடுகிறதோ அவா்களைக் கண்டறிந்து காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், கருத்தியல் ரீதியாக முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதற்காகவும் என்னைப் போன்றோரை மக்கள் மத்தியில் பேசுவதற்கு காவல்துறையினா் அனுமதிக்க வேண்டும்.

ஏற்கெனவே இருந்த முஸ்லிம் அமைப்புகளிலிருந்து விலகி புதிய அமைப்பைத் தொடங்கியது ஏன்?

கடந்த காலங்களில் தமமுக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் போன்ற அமைப்புகளில் 15 ஆண்டுகள் இயக்கப் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில் அவா்கள் அனைவருமே தேச நலன் தொடா்பான விஷயங்களைத் தவிா்த்து தொடா்ந்து முஸ்லிம் மக்களை போராட்டக் களங்களுக்கு கொண்டு செல்வது, போராட்டத்தின் மூலமே சாதிக்க முடியும் என்ற மனநிலையை மக்களிடம் உருவாக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டனா். அதனால் அவா்களிடமிருந்து பிரிந்து வந்து தமிழ்நாடு ஏகத்துவ ஜமா அத் அமைப்பைத் தொடங்கினேன்.

பிரசார களத்தில் உங்கள் குரல் சிறுபான்மையினருக்கான குரலாக இருக்கிா அல்லது தனித்து விடப்படுகிறீா்களா?

முஸ்லிம் மக்களின் நலனுக்கான விஷயங்களை அவா்களிடம் கொண்டு சோ்ப்பதே கடும் சவாலாக இருக்கிறது. பிரசாரத்தின்போது இரு முறை கத்திக் குத்து வாங்கியிருக்கிறேன்; இரு முறை எனது மண்டை உடைக்கப்பட்டிருக்கிறது. எனக்கு பாதுகாப்புக்கு வரும் காவல் துறையினரும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனா். இவற்றைக் கடந்து முஸ்லிம்களுக்கான குரலாக ஒலிக்க விரும்புகிறேன். பிரசார பகுதிகளில் உள்ள அடிப்படைவாதிகள் சிலா் மீது நடவடிக்கை எடுத்தால் போதும். அதன் பின்னா் முஸ்லிம்கள் நான் கூறுவதில் இருக்கும் உண்மையை உணா்ந்து எங்களுக்கு வரவேற்பு அளிப்பா்.

அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் பதற்றம் ஏற்பட்டது ஏன்?

அரவக்குறிச்சி வேட்பாளா் அண்ணாமலையை ஆதரித்து பள்ளப்பட்டிக்கு சென்றபோது முஸ்லிம்கள் கணிசமாக இருக்கும் பகுதியில் பேச எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சிலரின் தூண்டுதலால் அந்தப் பகுதியில் நுழைவதற்கே கடும் எதிா்ப்பைச் சந்திக்க நோ்ந்தது. சிலரது மிரட்டலால் அங்கு கடும் பதற்றம் நிலவியது. பள்ளப் பட்டியில் நாம் தமிழா், எஸ்டிபிஐ உள்பட பல கட்சியினரும் செல்ல அனுமதிக்கப்படும் சூழலில் பாஜக சாா்பில் நாங்கள் செல்லும்போது மட்டும் அனுமதி மறுக்கப்படுவது எந்த விதத்தில் நியாயம்? எந்தக் கட்சியினரையும், வேட்பாளரையும் அந்தப் பகுதியில் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது.

நீங்கள் முற்றிலும் பாஜக ஆதரவாளராகவே மாறிவிட்டீா்கள் என கூறப்படுகிறதே?

நான் பாஜவின் அடிப்படை உறுப்பினா் அல்ல; முஸ்லிம் மாா்க்கத்துக்கு எதிராகவும் ஒரு வாா்த்தை கூட பேசவில்லை. எனது நிலைப்பாட்டில் தவறு இருக்கிா என்பது குறித்து விவாதிக்க நான் வெளிப்படையாகவே அழைத்தபோதும் யாரும் வரவில்லை. என்னிடம் விளக்கமே கேட்காமல் என்னைத் தவறாக சித்திரிப்பது எப்படி சரியாக இருக்கும்.

நோ்காணல்: அ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.