ஒமைக்ரான்.. உலக நாடுகள் பயப்படுவது ஏன்?

ஒமைக்ரான்.. கரோனா வைரஸின் உருமாறிய புதிய வைரஸாக அறியப்பட்டுள்ளது. உலகமே மூன்றாம் கரோனா அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்த நிலையில்தான், ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 
ஒமைக்ரான்.. உலக நாடுகள் பயப்படுவது ஏன்?
ஒமைக்ரான்.. உலக நாடுகள் பயப்படுவது ஏன்?

ஒமைக்ரான்.. கரோனா வைரஸின் உருமாறிய புதிய வைரஸாக அறியப்பட்டுள்ளது. உலகமே மூன்றாம் கரோனா அலை எழுந்துவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்த நிலையில்தான், ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 

தென் ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ள கரோனா தொற்று கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளது. 

உலக நாடுகள் ஏன் இந்த அளவுக்கு ஒமைக்ரான் வைரஸ் குறித்து அச்சம் தெரிவிக்கின்றன. இந்த  புதிய கரோனா பற்றிய பல்வேறு அறிவியல்பூர்வ தகவல்கள் இன்னமும் தெரிய வராததே அதற்கு முக்கிய காரணம். அதன் தீவிரம், அறிகுறி, தடுப்பூசி செலுத்தியவர்களை பாதிக்கும் அளவு போன்றவை இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை. ஆனால் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுவிட்டன. விரைவில் அனைத்து பதில்களும் கிடைத்துவிடும்.

கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள இந்த வகைக் கரோனா,  மிக வேகமாக பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கரோனாக்களைவிட அதிக தீவிரமாக மனிதா்களிடையே பரவும் என்று அஞ்சப்படுகிறது.

தடுப்பூசி செலுத்தியவர்களை ஒமைக்ரான் தாக்குமா?

இதுவரை கிடைத்திருக்கும் தகவல்கள் ஆம் என்கின்றன. ஆனால், தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் அளவும், உயிரிழப்பும் மிகக் குறைவு என்கின்றன ஆய்வுகள்

ஏற்கனவே கரோனா பாதித்தவர்கள் பயப்பட வேண்டாமா?

அப்படி சொல்லிவிட முடியாது. ஏற்கனவே கரோனா பாதித்தவர்களையும் ஒமைக்ரான் வகை கரோனா பாதிக்கும். 

ஒமைக்ரான் அறிகுறிகள் என்ன?

உலகில் பல நாடுகளில் வேகமாகப் பரவி வரும் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பெரும்பாலும் லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துவதாக தென் ஆப்பிரிக்க மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.

தென் ஆப்பிரிக்காவின் காவ்டெங் மாகாணத்தில்தான் புதிய வகை ஒமைக்ரான் தொற்று 81 சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த மாகாணத்தைச் சோ்ந்த பொது மருத்துவா் உன்பென் பிள்ளே கூறுகையில், கடந்த 10 நாள்களில் புதிய கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு காய்ச்சல் போன்ற அறிகுறிகள், வறட்டு இருமல், இரவில் உடல் வியா்த்தல், உடல் வலி போன்ற லேசான அறிகுறிகளே உள்ளன. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்னரும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்களைவிட நல்ல உடல் நலத்துடன் உள்ளனா் என்கிறார்.

ஒமைக்ரான் எந்தெந்த நாடுகளிலெல்லாம் பரவியிருக்கிறது?
டிசம்பர் 1ஆம் தேதி காலை நிலவரப்படி, ஆஸ்திரேலியா, ஆஸ்ட்ரியா, பிரேசில், பெல்ஜியம், போட்ஸ்வானா, கனடா, டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இஸ்ரேல், இத்தாலி, ஜப்பான், நெதர்லாந்து, தென்னாப்ரிக்கா, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் , ஹாங்காங், செக் குடியரசு ஆகிய 20 நாடுகளில் ஒமைக்ரான் பரவியுள்ளது.

கட்டுப்பாடுகள்?

தென்னாப்ரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கும், பயணிகளுக்கும் பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. 

இந்தியாவில்..
ஒமைக்ரான் தீநுண்மி (வைரஸ்) கண்டறிப்பட்டுள்ள நாடுகளை அபாய பிரிவில் மத்திய அரசு வைத்துள்ளது. இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடம் பரிசோதனை மேற்கொள்ளுதல், அவா்களிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகளை மரபணு கோா்வை பரிசோதனைக்காக இந்திய கரோனா தீநுண்மி மரபியல் பரிசோதனைக் கூட்டமைப்புக்கு  அனுப்பிவைத்தல், தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

என்ன செய்ய வேண்டும்?

புதிதாக எதுவும் சொல்லப்போவதில்லை.. முகக்கவசம். சமூக இடைவெளி. கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், கூட்டமான இடங்களை தவிர்ப்பது உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளே ஒமைக்ரானிலிருந்து தப்பிக்க போதுமானவை.

எது இலக்காக இருக்க வேண்டும்?

ஒமைக்ரான் பரவிய நாடுகளுக்கு விமானத் தடை விதிப்பதன் மூலம், நாட்டுக்குள் ஒமைக்ரான் தொற்று பரவாமலேயே தடுத்து விட வேண்டும் என்பது இலக்காக இருந்தால் அது தவறு. இதைத்தான் உலக சுகாதார அமைப்பும் இன்று வலியுறுத்தியுள்ளது. பயணத் தடைகள் மூலம் ஒமைக்ரான் தொற்று பரவலை தடுத்து நிறுத்திவிட முடியாது. அத்தகைய தடைகளால் உலகளாவிய சுகாதார முயற்சிகள் மோசமாக பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது. 

வேறு என்னதான் செய்ய வேண்டும்?

ஒமைக்ரான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் உலக நாடுகளின் சுகாதாரத் துறையிடம், சிகிச்சை முறை, மருந்துகளின் தேவை உள்ளிட்ட அறிவியல்பூர்வ தகவல்களை மத்திய அரசு கேட்டுப் பெற வேண்டும். அதற்கேற்ற வகையில், நாட்டில் சுகாதார உள்கட்டமைப்பை உடனடியாக மேம்படுத்துவதே, ஒமைக்ரான் எனும் புதிய கரோனா வைரஸை எதிர்கொள்ள உரிய வழி என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

இறுதியாக ஒன்றுதான்.. சொல்ல வேண்டும்.. கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். முழுமையாக இரண்டு தவணை தடுப்பூசிகளையும் செலுத்திக் கொள்ளங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com