பண மதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன?

நவம்பர் 8, 2016: இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகமிக முக்கியமான நாள். வெகுமக்கள் எளிதில் மறக்க முடியாத நாள். 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை சாதித்தது என்ன?

நவம்பர் 8, 2016: இந்தியப் பொருளாதார வரலாற்றில் மிகமிக முக்கியமான நாள். வெகுமக்கள் எளிதில் மறக்க முடியாத நாள். 

நவம்பர் 8, 2016-க்கு முன், நவம்பர் 8, 2016-க்கு பின் என இந்தியப் பொருளாதாரத்தைப் பிரிக்கும் அளவுக்கு மிக முக்கியமான ஓர் அறிவிப்பை  வெளியிட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

இந்தியப் பொருளாதாரத்தில் இந்த அறிவிப்பின் தாக்கம் குறித்து 5  ஆண்டுகளுக்குப் பிறகும் ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றவிருக்கிறார் என்பதாக ஒரு செய்தி இன்று வெளியானால்கூட, மக்கள் மனம் நவம்பர் 8, 2016-ஐத்தான்  நினைவுகொள்கிறது என்றால் அதிலிருந்து அதன் தாக்கத்தினை உணரலாம்.

அன்று இரவு 8 மணிக்குத் தொலைக்காட்சிகளில் தோன்றிய பிரதமர் மோடி, நள்ளிரவு முதல் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார்.

அறிவிப்புக்கான காரணமாக பிரதமர் கூறியவை:

- கருப்புப் பணத்தை ஒழிப்பது
- கள்ள நோட்டுகளை ஒழிப்பது
- பயங்கரவாதத்துக்கான பணப் பரிவர்த்தனையை ஒழிப்பது

கையிலிருக்கும் பணம் செல்லாதா என்கிற பதற்றத்தில் ஏடிஎம் வாசல்களில் ஒரு வர்க்கம் கூட்டம் கூட்டமாக குவிந்துக்கொண்டிருக்க, கருப்புப் பணம் ஒழியப் போகிறது என மற்றொரு வர்க்கம் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளைக் குவித்துக் கொண்டிருந்தது.

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட மாபெரும் நடவடிக்கை பண மதிப்பிழப்பு நடவடிக்கை. இதற்கான காரணம், 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்ற முறை.  

10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி 2014-இல் முடிவுக்கு வருகிறது. நாடே ஊழலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது என்கிற எண்ணம் பெரும்பாலான மக்கள் மனதில் உதித்து ஊறிப்போன காலம். அதற்குப் பெரிதளவில் வலுச் சேர்த்த காரணங்கள் 2 ஜி வழக்கு, அண்ணா ஹசாரே போராட்டங்கள் போன்றவை.

இந்த இடத்தில்தான் பாஜகவின் பிரதமர் முகமாக நரேந்திர மோடி அறியப்படுகிறார். ஊழல் எதிர்ப்பு மனநிலையைக் கருத்தில்கொண்டு கருப்புப் பணத்தை ஒழிப்பேன் என வாக்குறுதியளிக்கிறார். கருப்புப் பணத்தை மீட்டால், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் வரை செலுத்தப்படலாம் எனப் பேசுகிறார்.

2014 மக்களவைத் தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்று ஆட்சிக்கு வருகிறது. இதன் நீட்சிதான் கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எனும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு.

இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அசாதாரண சூழலை உருவாக்கியது. ஏடிஎம் வாசல்களிலும், வங்கிகளிலும் கூட்ட நெரிசல்களில் ஏராளமான மக்கள் இன்னலுற்றனர். இந்த இன்னல்களில் உயிரிழப்புகள்கூட நேரிட்டன. பணப் புழக்கம் முடங்கிப்போயின. சிறு, குறு தொழில்கள் முடங்கின.

ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு கோவா விமான நிலையத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி.

"நீங்கள் கனவு கண்ட புதிய இந்தியா பிறக்கப் போகிறது, 50 நாள்கள் பொறுத்துக் கொள்ளுங்கள். என் நோக்கத்திலோ அல்லது செயல்படுத்தியதிலோ தவறு இருந்தால் நாடு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார்" என்கிறார்.

எனினும், பிரதமர் மோடியின் இந்த திடீர் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. சிலர் உ.பி. பேரவைத் தேர்தலுக்கான உத்தி என்ற விமர்சனத்தை வைத்தனர். விமர்சனத்துக்கு ஏற்றார்போல அடுத்த 4 மாதங்களில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது.

ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையினால் கருப்புப் பணம் ஒழிந்ததா? இந்த நோக்கம் வெற்றியடைந்ததா என்றால் இல்லை என்பதே தரவுகளின் பதிலாக உள்ளன.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் மட்டும் ரூ. 3-4 லட்சம் கோடி கருப்புப் பணம் ஒழிக்கப்படும் என மத்திய அரசு கணக்கிட்டது. ஆனால், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ. 15.41 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளில் ரூ. 15.31 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பிவிட்டதாத ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுகின்றன. 

பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட கருப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகள் மூலம் ரூ. 1.3 லட்சம் கருப்புப் பணம் மீட்கப்பட்டதாக மத்திய அரசு 2019-இல் தெரிவித்தது. ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் மட்டுமே ரூ. 3-4 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்க்கப்படும் என அரசு நம்பியது குறிப்பிடத்தக்கது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைப் பிறகு சில நாள்களிலேயே புதிய நோக்கம் முன்வைக்கப்பட்டது. பணப் புழக்கத்தைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எனக் கூறப்பட்டது.

மத்திய அரசு கணித்தபடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரித்தபோதிலும், கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய சூழல் காரணமாக, பணப் புழக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த அக்டோபர் 28 நிலவரப்படி, ரிசர்வ் வங்கி தரவுகள் கூறுவது ரூ. 29.17 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதுவே நவம்பர் 4, 2016 நிலவரப்படி ரூ. 17.74 லட்சம் கோடி மதிப்பிலான நோட்டுகளே புழக்கத்தில் இருந்துள்ளன.

இந்தியப் பொருளாதார வளர்ச்சியில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு வேகத் தடை என பொருளாதார வல்லுநர்கள் விமர்சனங்கள் வைத்தாலும், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டுள்ளதாக தரவுகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் வைத்தாலும், சாதக, பாதகங்களைத் தாண்டி அதன் நோக்கங்களையாவது பணமதிப்பிழப்பு நடவடிக்கை அடைந்திருக்கிறதா என்றால் இல்லை என்பதையே மேற்கண்ட தரவுகள் மூலம் தெரிகிறது.

அப்படி இருக்கையில், பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் சாதித்ததுதான் என்ன? தன்னுடைய சாதனைகளில் ஒன்றாகத் தேர்தல்களில் முன்வைக்குமா,  மத்திய, மாநில பா.ஜ.க. அரசுகள்?

நவம்பர் 8 -  பணமதிப்பிழப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நாள் (2016)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com