நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ காலநிலை மாநாடு

காலநிலை மாற்றத்தால் அழிவின் விளிம்பில் உலகம் நிற்கும் நிலையில் நாளை தொடங்க உள்ள கிளாஸ்கோ மாநாடு முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.
நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு
நம்பிக்கையை தரட்டும் கிளாஸ்கோ பருவநிலை மாநாடு

காலநிலை மாற்றத்தால் அழிவின் விளிம்பில் உலகம் நிற்கும் நிலையில் நாளை தொடங்க உள்ள கிளாஸ்கோ மாநாடு முக்கிய கவனத்தைப் பெற்றுள்ளது.

காலநிலை மாற்றத்தின் தீவிரத்தைக் குறைப்பது தொடர்பான பருவநிலை மாநாடு ஸ்காட்லாந்து நாட்டின் கிளாஸ்கோவில் நாளை தொடங்க உள்ளது. நவம்பர் 12ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த மாநாடுதான் தற்போது உலகின் பேசுபொருள்.

கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் காரணமாக அதிகரித்த உற்பத்தி தற்போது காலநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவு பருவநிலை பிறழ்வு, அதீத கனமழை, அதன்காரணமாக ஏற்படும் வெள்ளம், துருவப்பகுதிகளில் பனிப்பாறைகள் உருகுதல், கடல்நீர் மட்டம் உயர்தல், புவி வெப்பநிலை, அதனைத் தொடர்ந்து விவசாயம் பாதிப்பு, காட்டுத்தீ என பாதிப்புகளை சந்திப்பதை தற்போது உலகம் வழக்கமாக்கிக் கொண்டுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐபிசிசி அறிக்கையானது உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படப்போகும் அபாயங்களை இனி தடுக்க முடியாது எனவும், பேரிடர்களுக்கு மத்தியில்தான் இனி உலகம் இருக்கப் போகிறது எனவும் எச்சரித்திருந்தது.

இந்த நிலையில் அதிகரிக்கும் புவி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்துவது தொடர்பான உச்சி மாநாடு நாளை ஸ்காட்லாந்தில் தொடங்க உள்ளது. உலகின் அதிமுக்கியமான வேளையில் அதிமுக்கியமான மாநாடாக கிளாஸ்கோ மாநாடு பார்க்கப்படுகிறது. 

புதிய ஆற்றல் மூலங்களுக்கு மாறுவது தொடர்பாக இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ள நிலையில் உலக நாடுகள் எடுக்க உள்ள முடிவுகளே அடுத்த தலைமுறைக்கான உலகம் இருக்கப் போகிறதா இல்லையா என்பதைத்  தெரிவிக்கும்.

கடந்த சில தினங்களுக்கு முன்பாக பேசிய போப் பிரான்சிஸ், “இந்த மாநாட்டின் மூலம் உறுதியான நடவடிக்கையை எடுத்து அடுத்த தலைமுறைக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்” என உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

உண்மையில் அவரது அந்த வார்த்தைகள் ஒதுக்கித் தள்ள முடியாதவை. அமெரிக்காவும், சீனாவும் அதீத அளவிலான கார்பன் வெளியீட்டைக் கொண்டிருக்கும் சமயத்தில் இந்த மாநாட்டில் இவ்விரு நாடுகளும் தங்களது தொழில் போட்டிகளைக் கடந்து எடுக்கும் முடிவுகள் முக்கியமானவை.

புதைபடிம எரிபொருள் மூலங்களைத் தவிர்க்க முந்தைய மாநாடுகளிலேயே வலியுறுத்தப்பட்டு வந்த நிலையில் பெரிய அளவிலான மாற்றங்கள் ஏதும் இடைப்பட்ட காலத்தில் ஏற்படவில்லை. மாற்று எரிபொருள் மூலங்களை நோக்கி வேகமாக நகர வேண்டிய சூழலில் அவற்றுக்காக உலக நாடுகள் எத்தகைய வகையில் முனைப்பு காட்டுகின்றன என்பதையும் இந்த மாநாடு விவாதிக்க உள்ளது.

வழக்கமான அரசியல் மோதல்களும், குற்றச்சாட்டுகளையும் கடந்து இந்த மாநாடு நடக்க வேண்டும் என சூழலியல் விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் பருவநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட, தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவில் இருந்ததைவிட புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் அளவிற்கு குறைப்பது எனும் முடிவு நடைமுறையில் எந்தவிதமான முறையிலும் அமலாகவில்லை அல்லது முடிவை எட்டும் வகையில் அமல்படுத்தப்படவில்லை.

இந்த அறிவியல்பூர்வ கணக்கீடுகளுக்கு மத்தியில் பல நாடுகள் தங்களது கார்பன் வெளியீட்டை குறைப்பதில் அக்கறை காட்டுவதில்லை. “1.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைக் குறைப்பது என்பது வெறும் எண் என்றோ அல்லது அரசியல் விளையாட்டு என்றோ ஒதுக்கி தள்ளிவிடமுடியாது. எந்தவிதமான அரசியல் சூழலுக்காகவும் புவி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் முடிவைத் தள்ளிப்போடக் கூடாது” என போட்ஸ்டாம் காலநிலை ஆய்வு நிறுவனத்தின் இயக்குநரும், உலகின் முன்னணி காலநிலை விஞ்ஞானியுமான ஜோகன் ராக்ஸ்ட்ரோம் எச்சரித்துள்ளதை கிளாஸ்கோ மாநாடு கவனத்தில்கொள்ள வேண்டும்.

இத்தாலியின் ரோம் நகரத்தில் இன்று சந்தித்து பேசும் ஜி20 நாடுகளின் தலைவர்கள் அதனைத் தொடர்ந்து கிளாஸ்கோ பயணமாகின்றனர். உலகின் முன்னணி பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இந்த ஜி20 நாடுகளின் தலைவர்கள் எடுக்கப்போகும் முடிவே அடுத்த உலகிற்கான பாதையை அமைக்கும்.

இத்தகைய சந்திப்புகளுக்கு மத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிபொருள் தொழில்நுட்பத்திற்கு உலக நாடுகள் திரும்புவது ஒப்பீட்டளவில் மிகக் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் காலநிலை மாற்றத்திற்கு எதிரான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீடுகள் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இதில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. அமெரிக்கா 4800 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து 1860 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

அதனைத் தொடர்ந்து ஸ்வீடன் 580 கோடி அமெரிக்க டாலர்கள் முதலீட்டுடன் மூன்றாவது இடத்திலும், பிரிட்டன் 430 கோடி முதலீட்டுடன் 4ஆவது இடத்திலும் உள்ளன. மாற்று எரிசக்தி உற்பத்தியை நோக்கி உலகம் நகர வேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் இந்தப் பட்டியலில் இந்தியா 9ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

காலநிலை மாற்றம் குறித்து அதிகம் அக்கறை கொள்ளவேண்டியவை வளர்ந்த நாடுகளே. காரணம் இந்த அளவில் புவி வெப்பநிலை அதிகரித்ததற்கு அதிகப்படியான இயற்கை நுகர்வும், கார்பன் வெளியீட்டையும் கொண்டது இந்த நாடுகளே. ஆனால் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக் கூடிய அபாயத்தின் அருகில் இருப்பவை ஏழை மற்றும் வளரும் நாடுகள். 

இதையும் படிக்க | ஆடையின் மூலம் புரட்சி

ஏற்கெனவே வளர்ந்த நாடுகளின் சுரண்டல்களால் ஏழை மற்றும் வளரும் நாடுகள் சந்தித்து வரும் பேரிடர்களுக்கு மத்தியில் காலநிலை மாற்றம் அவர்கள் சந்திக்கும் சவக்குழி.

அதிகரித்துவரும் புவி வெப்பத்தால் ஏற்படும் காலநிலை மாற்றத்தால் 2050ஆம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் கிட்டதட்ட 21.6 கோடி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து சொந்த நாட்டிற்குள் இடம்பெயர்வார்கள் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சிக்கலால் வளர்ந்த நாடுகளைக் காட்டிலும் வளரும் நாடுகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புகளை எதிர்கொள்வார்கள் எனவும் இதனைத் தடுக்க உடனடியாக கரியமில வாயுக்களின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் எனவும்  வலியுறுத்தப்பட்டுள்ளது.

காலநிலை மாற்றத்தின் காரணமாக ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளால் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் மக்கள் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் எந்தநாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.

உலக வானிலை மையம் மேற்கொண்ட ஆய்வில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெரும் சேதத்தை விளைவித்துவருவது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி கடந்த 1970 முதல் 2019 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 11,000  பேரிடர் நிகழ்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களால் பலியான 20 லட்சம் மக்களில் 91 சதவிகிதத்தினர் வளரும் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனும் அதிர்ச்சிகரத் தகவலை இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.காலநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் பொருளாதார சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டி இருப்பதால் இதனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அந்த ஆய்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றை கருத்தில் கொண்டு புதைபடிம எரிபொருள்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து புதுப்பிக்கத்தக்க மாற்று எரிபொருள் மூலங்களுக்கான முதலீடுகளை வளர்ந்த மேலும் அதிகரிக்க வேண்டும்.  

மீண்டும் மீண்டும் உற்பத்தி பாதிப்பு, பொருளாதார சிக்கல் என்கிற தொழிற்போட்டி வகையிலேயே இத்தகைய பிரச்னைகளை அணுகுவதை உலக நாடுகள் கைவிட வேண்டும். குறைந்தபட்ச மனிதநேய அடிப்படையிலாவது அடுத்த தலைமுறைக்கான உலகை உறுதி செய்வதில் கவனம் செலுத்துவதாக இருக்கட்டும் கிளாஸ்கோ மாநாடு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com