Enable Javscript for better performance
மனைவி இறந்தது தெரியாமல் இரண்டு மணி நேரமாக காபி குடித்து... எழுத்தாளர் சார்வாகனின் துயரம்- Dinamani

சுடச்சுட

  மனைவி இறந்தது தெரியாமல் இரண்டு மணி நேரமாக காபி குடித்து... எழுத்தாளர் சார்வாகனின் துயரம்

  By 'அம்ரா' பாண்டியன்  |   Published on : 07th September 2021 06:27 PM  |   அ+அ அ-   |    |  

  writer1

  எழுத்தாளர் சார்வாகன்

  சார்வாகன்: தலைசிறந்த தமிழ் எழுத்தாளர், தொழுநோயாளிகளின் நீட்ட மடக்க முடியாத விரல்களுக்குத் தீர்வு கண்டு, ஐ.நா.வால் பாராட்டப்பட்ட டாக்டர்!

  சார்வாகன் என்று தமிழ் இலக்கிய வட்டத்தில் அறியப்பட்ட மருத்துவர் சீனிவாசன் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர் மட்டுமல்ல தொழுநோய் மருத்துவர் மற்றும் மடக்க நீட்ட முடியாத தொழுநோயாளிகளின் விரல்களை நீட்டி மடக்க வைக்கும் முட நீக்கியல் முறையை அறிமுகம் செய்து ஐ.நா.வின் பாராட்டினையும், இந்திய அரசின் விருதினையும் ஒருங்கே பெற்றவர்.

  தமிழகத்தின் அன்றைய வடாற்காடு மாவட்டத்தின் வேலூரில் 1923ஆம் ஆண்டு இதே நாளில் பிறந்தார். இவரின் தந்தை மருத்துவர் ஹரிஹரன், ஆரணியின் முதல் ஆங்கில மருத்துவர்.

  ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்த சீனிவாசன், சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு, இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் பட்டங்களை முடித்தார். 1954-ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆண்டுகள் இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்தார். இலண்டனில் திருமணம் நடந்தது. எண்பதுகளில் மூன்று ஆண்டுகள் போர்ட்லண்ட் நகரில் இருந்தார்.

  இந்தியா திரும்பிய சீனிவாசன் முதலில் முட நீக்கியல் வல்லுநராகத் தனது பணியைத் தொடங்கினார். 1960-இல் மங்களூரிலுள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றினார்.

  அங்கு தொழுநோயில் இருந்து குணமான அப்துல்லா என்பவரின் நீட்ட, மடக்க முடியாத விரல்கள் மற்றும் கரங்களைக் கண்டு இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். ஒரு பிரத்யேக முறையில் முயன்று சீரமைப்பு அறுவைச் சிகிச்சை செய்து வியக்கத்தக்க வெற்றியைக் கண்டார்.

  இதையும் படிக்க வாட்ஸ்ஆப் பயனாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும் புதிய வசதி

  அப்துல்லா இயல்பு நிலையை அடைந்தார்.அதுவரை தொழுநோய் குணமான பின்னரும் பழையபடி செயல்பட முடியாமல் பலரும் இருந்து வந்தனர். தொழுநோயால் குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு இவர் கண்டுபிடித்த இந்த அறுவைச் சிகிச்சை முறை பலரது கைகள், விரல்கள் செயல்பட உதவிகரமாக இதன் பின் இருந்தது.

  இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறையை ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு அழைத்துப் பாராட்டியதோடு, ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று இவரது பெயரையே இம்முறைக்குச் சூட்டியது. இதற்காக இவருக்கு 1984-இல் இந்திய அரசால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

  இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகு செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணியில் சேர்ந்து, அதன் இயக்குநராக உயர்ந்து 1984-இல் இவர் பணி ஓய்வுபெற்றார்.

  அதன் பிறகு, பல்வேறு நாடுகளின் மருத்துவக் கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றினார்.

  பார்க்கவே அருவருப்பாக உணரும் தொழுநோயாளிகளுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணம் செய்தவர், எவரிடமும் கட்டணம் என்று எதுவும் வசூலித்ததில்லை.

  இவரது தாத்தா கிருஷ்ணய்யர் வேலூரில் காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்தராக இருந்தார். அவர் பெரியதொரு நூலகத்தை வைத்திருந்தார்.

  அந்த நூலகத்தில் உள்ள புத்தகங்களைச் சிறிய வயதில் படித்துத் தனது படிப்பு ஆர்வத்தை வளர்த்துக்கொண்டார். எழுத்தில் ஆர்வம் கொண்ட இவர் கவிதைகளையும் சிறுகதைகளையும் சிற்றிதழ்களில் எழுதியுள்ளார்.

  இவரின் 'கனவுக்கதை’ என்னும் சிறுகதை 1971-ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது. இவருடைய சிறுகதைகள் சில, ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகி வெளியாகி இருக்கின்றன. இவர் எழுத்துகள் தொகுப்பாக 41 சிறுகதைகள் மற்றும் 3 குறுநாவல்கள் என 500 பக்கங்களுடன் சார்வாகன் கதைகள் என்ற பெயரில் புத்தகமாக நற்றிணை பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

  இதையும் படிக்க | அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிய வேண்டுமா? 'ஏசி' வெப்பநிலையை சரிசெய்யுங்கள்!

  காந்திய மற்றும் மார்க்சியத்தின் மீது மிக்க பற்றுள்ளவராக இவர் கடைசிவரை விளங்கினார்.

  அவருடைய இறுதி நாள்களில் அவரைச் சந்தித்தது பற்றி எழுத்தாளர் கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் குறிப்பிடுகிறார்...

  "கடைசியாக அவர் ஒருநாள் அவசரமாக என்னைத் தொலைபேசியில் அழைத்தார்.

  "வந்து பார்த்துவிட்டுப் போய்விடுங்கள். அடுத்த மாதம் நான் இல்லாமல் போய்விடலாம்.''

  எனக்குப் பதற்றமாக இருந்தது. சென்னையில் இருந்த அவரைப் பார்க்க நான் உடனே போனேன். தளர்ந்த நிலையில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் இனிமையும் சிநேகமும் அவர் முகத்தில் இன்னும் பரவியிருந்தன.

  "உங்களையெல்லாம் ஒரு தடவைப் பார்த்துவிடவேண்டுமென்றிருந்தது. இன்னும் ஓரிரு நண்பர்களிடமும் சொல்லிவிட்டேன். டாக்டராக இருப்பதால் இப்படி ஒரு தொல்லை. என் உடல்நிலை எனக்கே தெரிந்துபோய்விடுகிறது.

  என் பழைய அனுபவம் ஒன்றை உங்களுக்குச் சொல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியுமா? எங்கள் குடும்பத்தில் அத்தனை பேரும் டாக்டர்கள்! என் மனைவி உட்பட! என்ன பிரயோஜனம்? தினப்படி வழக்கமாக என் மனைவி என்னைத் தவறாமல் விடியற்காலம் எழுப்பிவிடுவாள். 'வாக்கிங் கெளம்புங்கோ!' என்று உத்தரவு போட்டுவிட்டு மீண்டும் திரும்பிப் படுத்துக்கொள்வாள். சில காலத்துக்குப் பிறகு விடியலில் அவள் உத்தரவு போடாமலேயே அவள் என்னை விரட்டுவதுபோல் எனக்குத் தோன்றி நானே எழுந்துவிடுவதும் உண்டு!

  பத்து வருஷத்துக்கு முந்தி அன்றும் நான் அப்படித்தான் எழுந்து அவளை நன்றாகப் போர்த்திவிட்டு வாக்கிங் போனேன். ஒரு மணி நேரம் கழித்துத்தான் வந்தேன். நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தாள். நான் அவள் தூக்கத்தைக் கலைக்க விரும்பவில்லை.

  நானே காபி தயாரித்துக்கொண்டு, கூடத்தில் பேப்பரை விரித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். மணி 9:30 க்கு மேல் ஆகிவிட்டது. அங்கே வந்த என் மகள் 'ஏன் அம்மாவை எழுப்பவில்லையா... இன்னுமா தூக்கம்?' என்றாள்.

  'தூங்கட்டுமேடீ... ஏதோ அசதியா இருக்கலாம்' என்றேன்.

  'நோ... நோ... எழுப்புங்கள் நேரமாகிவிட்டது' என்று உள்ளே போனாள். நான் உள்ளே போய் அவளை விதவிதமாக எழுப்ப முயன்றேன். அவள் கண் விழிக்கவே இல்லை. கைகள் சில்லிட்டுப்போயிருந்தன. கலக்கமுடன் அவசரமாக இன்னோர் இதய டாக்டரைக் கூட்டிவந்து காண்பித்தோம். 

  இதையும் படிக்க | செம்பருத்தியிலிருந்து விலகினாரா பிரியா ராமன்? தொடருக்கு வரவேற்பு குறைவது ஏன்?

  'உங்கள் மனைவி இறந்துபோய் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது' என்றார்.

  என்னால் அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. அவள் காலையிலேயே இறந்துபோய்விட்டாள். இரண்டு மணி நேரமாக மனைவி இறந்ததை உணராமல் நான் காபி குடித்துக் கொண்டு கூடத்தில் ஆசுவாசமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி ஒரு விபரீதமான சோகமா எனக்கு?''

  அவர் கண்ணில் ஈரம் துளிர்த்தது. "ஆனா, இப்ப என் விஷயத்தைப் பாருங்கள். என் முடிவு எனக்கு அநேகமாக நிச்சயமாகவே தெரிந்துவிட்டது. மாதம், தேதி, கிழமைகூடச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு ஆண்டவன் எனக்கு நோட்டீஸ் கொடுத்துவிட்டார்.

  என் மனைவியைப்போல் நான் யாருக்கும் தெரியாமல் சத்தமில்லாமல் சாக முடியாது. இப்போது விடிந்தால் எல்லோருமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் செய்தி என்னுடைய சாவுதான். அப்படி ஒரு ராசி எனக்கு!'' என்று சிரிக்க முயன்றார்.

  அவருக்கு பலமாக இருமல் வந்துவிட்டது. "நிச்சயம் அடுத்த மாதம் வருவேன். இதே கதையை மீண்டும் என்னிடம் சொல்லி, நீங்கள் சிரித்துக்கொண்டிருப்பீர்கள் சார்... வரட்டுமா?'' என்று விடை பெற்றேன்.

  மூன்று நாள்கள் கழித்து, டிசம்பர் 21, 2015 அந்தச் செய்தி அவர் குடும்பத்தாரால் அறிவிக்கப்பட்டது!

  [செப். 7 - சார்வாகன் பிறந்த நாள்]


  உங்கள் கருத்துகள்

  Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

  The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

  kattana sevai
  ->
  flipboard facebook twitter whatsapp