அலுவலகத்தில் சிறப்பாக பணிபுரிய வேண்டுமா?
By எம். முத்துமாரி | Published On : 07th September 2021 11:57 AM | Last Updated : 13th September 2021 12:16 PM | அ+அ அ- |

தொழில்நுட்ப வளர்ச்சியால் மின்னணு சாதனங்களின் பயன்பாடு மக்களிடையே பெருமளவில் அதிகரித்துவிட்டது. அந்தவகையில் வீட்டின் அத்தியாவசியத் தேவைகள் பட்டியலில் குளிர்சாதனப்பெட்டி(ஃபிரிட்ஜ்), சலவை இயந்திரம்(வாஷிங் மெஷின்), குளிரூட்டி(ஏசி) என மின் சாதனங்கள் பல்கிப் பெருகிவிட்டன.
படித்தவர்கள், அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் என்று பெரும்பாலானோர் இன்று ஏசி வாழ்க்கைக்கு பழகிவிட்டனர். ஏசி இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டனர். பலருக்கும் இதற்கு அடித்தளமிட்டது அலுவலகம் என்றுகூட சொல்லலாம்.
மேலும், பெருநகரங்களில் வசிப்பவர்கள் தட்பவெப்பநிலை, சுற்றுப்புறச்சூழல் காரணமாக ஏசி-யைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளனர். ஏன், கிராமங்களில் கூட நவீன மின்னணு சாதனங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன.
மின்னணு சாதனங்களினால் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் அவை மக்களின் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இதையும் படிக்க | அலுவலகத்திற்குச் சென்று பணிபுரிவது நல்லது, ஏன்?
இந்நிலையில் மின்னணு சாதனங்களில் ஒன்றான ஏசி-க்கும் ஒருவருடைய வேலையின் செயல்திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வொன்றில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
உதாரணமாக அலுவலகத்தில் நீங்கள் பணிபுரியும் அறையில் வெப்பநிலை அதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாக இருந்தால் ஒருவித அசௌகரியத்தை உணரலாம். அதிகமாக இருந்தால் மூச்சுவிடுவதில் சிரமமும், குறைவாக இருந்தால் குளிரினால் அசௌகரியமாக இருக்கும். குளிரைத் தாங்க முடியாதவர்களுக்கு மிகவும் சிரமமாக இருக்கும். இது உங்களுடைய உடல்நிலையை மட்டுமின்றி வேலைத்திறனைப் பாதிக்கும் என்று உறுதி செய்துள்ளனர் நிபுணர்கள்.
உதாரணமாக ஃபேஸிலிட்டிஸ் மேனேஜ்மென்ட் ஜர்னலில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பொருத்தமற்ற ஏசி வெப்பநிலை காரணமாக பணியாளர்களில் மூவரில் ஒருவரின் உற்பத்தித்திறன் குறைவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, வேலை உற்பத்தித்திறன், கற்றல் உள்ளிட்ட செயல்திறன்களில் அறையின் உட்புற வெப்பநிலை தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஏசி வெப்பநிலை காரணமாக சராசரியாக 10-30 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறல் ஏற்படுவதாகவும் திறமையாக வேலை செய்ய முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
ஏசி வெப்பநிலையில், உங்களுடைய உடல்நிலைக்குத் தகாதவாறு ஒரு சில டிகிரி வித்தியாசம் இருந்தால்கூட வேலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் இது உளவியல் தொடர்பானது என்றும் உளவியலாளர் சாலிஹா அப்ரிடி தெரிவிக்கிறார்.
இதையும் படிக்க | உறங்கும்போது எப்படிப் படுக்க வேண்டும்?
எது சிறந்த வெப்பநிலை?
24 டிகிரி செல்சியஸ் என்பது மனிதனின் உடல் வெப்பநிலைக்கு ஏற்றவாறு இருக்கும். மேலும் சிறந்த செயல்திறனை தரக்கூடியது.
22 டிகிரி செல்சியஸ் சற்று குளிரான வெப்பநிலை. ஆனால், இது ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் சிறந்த செயல்திறனை அளிக்கும்.
பெண்கள் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுறுசுறுப்பாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 21 டிகிரி செல்சியஸை ஒப்பிடுகையில், 26 அல்லது அதற்கு மேற்பட்ட வெப்பநிலையில் பெண்களின் செயல்திறன் 27% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
படுக்கைக்குச் செல்லும்போது உடலின் உள் வெப்பநிலை குறைவதால் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் தூங்குவது சிறந்தது என்று அமெரிக்கன் ஸ்லீப் அசோசியேஷன் கூறுகிறது.
உடற்பயிற்சி செய்வதற்கான வெப்பநிலை, 20-21 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று டியூக் பல்கலைக்கழக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், தற்போது பலரும் வீட்டில் இருந்து வேலை செய்து வருகின்றனர். அலுவலகத்தில் சக ஊழியர்களையும் மனதில்கொண்டு ஏசி வெப்பநிலையை வைக்க வேண்டும்.
ஆனால், உங்கள் அறையில் உங்களுடைய உடல்நிலைக்கு ஏற்றவாறு வெப்பநிலையை அறிந்து வைத்துகொள்ளுங்கள். இது உங்கள் வேலையின் செயல்திறனை அதிகரிக்கும்.
இதையும் படிக்க | புரோக்கோலி சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?