செம்பருத்தியிலிருந்து விலகினாரா பிரியா ராமன்? தொடருக்கு வரவேற்பு குறைவது ஏன்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 'செம்பருத்தி' தொடர் ஆயிரம் பாகங்களைக் கடந்து ஒளிபரப்பாகிறது என்ற சாதனையைப் புரிந்திருந்தாலும், அதுவே தற்போது சலிப்பாக மாறி மக்களிடம் வரவேற்பு குறையவும் காரணமாகியுள்ளது. 
செம்பருத்தியிலிருந்து விலகினாரா பிரியா ராமன்?
செம்பருத்தியிலிருந்து விலகினாரா பிரியா ராமன்?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி தொடர் ஆயிரம் பாகங்களைக் கடந்து ஒளிபரப்பாகும் தொடர் என்ற சாதனையைப் புரிந்திருந்தாலும், அதுவே தற்போது சலிப்பாக மாறி மக்களிடம் வரவேற்பு குறையவும் காரணமாகியுள்ளது. 

மேலும், செம்பருத்தித் தொடரில் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர்கள்  விலகுவதும் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. ஏற்கனவே ஆதி, ஐஸ்வர்யா, உமா ஆகிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர்கள் விலகிய நிலையில் தற்போது முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா ராமனும் விலக உள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அதற்குக் காரணம் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரியாக நடித்து வந்த பிரியா ராமன் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையில் தோன்றவே இல்லை. 

செம்பருத்தி கதையின்படி அகிலாண்டேஸ்வரி சிறைக்குச் சென்றிருந்தாலும், சிறையில் அவர் இருக்கும் ஒரு சில காட்சிகள் கடந்த மாதங்களில் ஒளிபரப்பானது மக்களிடையே கதை ஓட்டம் குறித்த கேள்வியை எழுப்பாமல் இருந்தது. 

ஆனால், தற்போது முக்கிய கதாபாத்திரமான அகிலாண்டேஸ்வரிக்கு பதிலாக ஐஸ்வர்யா - பார்வதி இடையேயான கருத்து மோதல்களை மட்டுமே மையமாக வைத்து காட்சிகள் நகர்வதால், அகிலாண்டேஸ்வரியாக நடித்து வந்த பிரியா ராமன் தொடரிலிருந்து விலகினாரா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.

முன்னதாக ஆதியாக நடித்து வந்த கார்த்திக்கிற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்த நிலையில், அவருக்கு பதிலாக தொகுப்பாளர் அக்னி கதாநாயகனாக மாற்றப்பட்டார்.

முன்பு ஆதி - பார்வதியாக நடித்த கார்த்திக் - ஷபானா இடையேயான காதல் காட்சிகள் இளைஞர்கள் உள்பட மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

சினிமா காட்சிகளுக்கு இணையாக பலரது வாட்ஸ்ஆப்  ஸ்டேட்டஸ்களாக  இவர்களது காதல் காட்சிகளே இருந்தன. ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள ஆதி (அக்னி) காதல் காட்சிகள் மட்டுமின்றி மற்ற காட்சிகளிலும் மக்களை கவர தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

அவர் மட்டுமின்றி பல முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் செம்பருத்தி சீரியலில் மாற்றப்பட்டனர். பழைய ஷாம் இல்லை, பழைய ஐஸ்வர்யா இல்லை, பழைய உமா இல்லை என்று ரசிகர்கள் தங்களது மனம் கவர்ந்த கதாபாத்திரங்களை மாற்றியது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தியில் தற்போது பார்வதி - ஐஸ்வர்யா இடையேயான அதிகார மோதல் காட்சிகளே அதிகம் இடம் பெற்று வரும் நிலையில், சிறையில் உள்ள அகிலாண்டேஸ்வரி விடுதலையாகி வந்தால் மட்டுமே இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து வந்தனர்.
 
ஆனால், ஒவ்வொரு நாளும் காட்சிகள் விறுவிறுப்பை இழந்து, அகிலாண்டேஸ்வரிக்கு அளிக்கப்பட்டு வந்த முக்கியத்துவமும் குறைந்து தற்போது செம்பருத்தி தொடரே முடிவுக்கு வரப்போகிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

மேலும், பிரியா ராமன் தொடரிலிருந்து விலகிவிட்டாரா என்றும் யூடியூப் தளத்தில் முன்னோட்ட காட்சிகளில் மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர். 

கடந்த வாரம் முழுவதும் அகிலாண்டேஸ்வரியின் பொறுப்புகளை நிர்வகிப்பதில் ஐஸ்வர்யா எடுக்கும் நடவடிக்கைகளால் பார்வதி, ஆதி, ஷாம் ஆகியோர் அதிருப்தி அடைந்து வரும் காட்சிகளே இருந்தன.

அதனைத் தொடர்ந்து இந்த வாரம் வெளியான முன்னோட்ட காட்சியில் தொழிலாளர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க வாங்கிய நிலம் மோசடியானது என்பதை பார்வதி மற்றும் குழுவினர் கண்டறிவதைப் போன்ற துப்பறியும் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன. 

இது மக்களிடையே பரபரப்பை கூட்டும் என்று இயக்குநர் நினைத்திருந்தாலும், சிரிப்பையே தருவதாக யூடியூபில் மக்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். 

தன்னுடைய அவசர நடவடிக்கையால் நில மோசடியில் சிக்கியதற்காக பார்வதி வருந்துவது அல்லது அதற்காக அவரது கணவர் கண்டிப்பது போன்ற காட்சிகளே அடுத்த வாரம் முழுக்க இருக்கப்போகிறது என்று மக்களே கணிக்கத் தொடங்கிவிட்டனர். 

மேலும், அகிலா கணவர் மாதிரி பார்வதி கணவரான ஆதியும் கைப்பாவையாகிவிட்டதாக ஆதியின் ரசிகர்கள் கருத்து பதிவிட்டுள்ளனர்.

முன்பு இருந்த ஆதிக்கு (கார்த்திக்) வனஜா அஞ்சுவாள். முன்பு இருந்த ஆதியின் நடிப்பும் அப்படி இருந்தது. ஆனால் தற்போது மாற்றப்பட்டுள்ள ஆதியை (அக்னி) பார்த்தால் சிரிப்பு மட்டுமே வருகிறது என்று பலர் தெரிவித்துள்ளனர். 

தற்போதைய சீரியலில் சீரியஸான காட்சிகள் வரும்போது கூட சிரிப்பு மட்டுமே வருவதாக சிலர் நையாண்டியாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

நல்லா தொடங்கின சீரியலை இப்படி சின்னாபின்னமாக்கிட்டாங்களே என்று சில ரசிகர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர். 

ஆரம்ப  காலகட்டத்தில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான செம்பருத்தி தொடர், அலுவலகம் சென்று வருபவர்களும் பார்க்கும் வகையில், மக்கள் கோரிக்கைக்கு ஏற்ப இரவு 9 மணிக்கு மாற்றப்பட்டது.

அப்படி பலரும் பார்க்க வேண்டும் என்பதற்காக கோரிக்கை வைத்து நேரம் மாற்றப்பட்ட தொடர், சூழல் காரணமாக எடுத்த சில முடிவுகளால் மக்களை வெறுக்க வைத்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். செம்பருத்தி வாடிவருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com