அறிவியல் ஆயிரம்: நினைவகத்தைத் தூண்டும் தரமான ஆழ்தூக்கம்! - புதிய கண்டுபிடிப்பு

நவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

உறக்கத்தினால், நினைவகம் நன்கு செயல்படுமா? அதிசயம்தான்... ஆனால் உண்மை. நவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும், ஆழ்ந்த தரமான தூக்கம் நினைவகத்தைத் தூண்டி, மீண்டும் செயல்பட வைக்கமுடியும் என்பதும். நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது - தரமான தூக்கத்துடன் இணைந்து - முக்கியமானது என்று  இன்றைய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இந்த செய்தியை, வடமேற்கு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து, அதன் முடிவினை இயற்கை அறிவியல் பத்திரிகையான, கற்றலின் அறிவியல்  (Nature partner journal NPJ: Science of Learning ) என்னும் இதழில் 2022 ஜனவரி 12-ம் நாள் வெளியிட்டுள்ளனர்.

ஆழ்ந்த தூக்கமும் நல்ல நினைவுத்திறனும்

உறக்கத்தின்போது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது தொடர்பாகவும், தூக்கத்தின்போது முகம் மற்றும் பெயரை நினைவில் வைத்துக்கொள்வது மற்றும் கற்றலில் ஏற்படுத்தும் விளைவை வடமேற்கு பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டறிந்து புதிய ஆய்வு முடிவினை ஆவணப்படுத்தியுள்ளனர். புதிதாக நாம் பார்த்து நினைவில் பதிய வைத்துக் கற்றுக்கொண்ட முகம்-பெயர் இணைந்த நினைவுகள் அவர்கள் தூங்கும்போது மீண்டும் செயல்பட்டு பதிவிடும்போது, அவை மனிதர்களின் பெயர் நினைவுகூருதல் கணிசமாக மேம்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த முன்னேற்றத்திற்கான திறவுகோல் என்பது தடையற்ற ஆழ்ந்த தூக்கம் என்பதையும் கண்டறிந்துள்ளனர்.

தூக்கம் அனைத்துக்குமான தீர்வு ..?

வயதாவதாலோ அன்றி அவர்களை சரியாக கவனிக்க மறந்ததாலோ, முகம் நினைவில் நிற்கும். ஆனால், பெயர் நினைவுக்கு வராது. அதற்கான ஆய்வுதான் இது. எனவே முகத்தை அரிதாகவே மறந்து, ஆனால் பெயர்களுடன் போராடுபவர்களுக்கு, இனி கற்றலை அதிகரிப்பதற்கான தீர்வு உங்கள் தலையணைக்கு அருகில் இருக்கலாம் என்று நினைத்துக்கொள்ளுங்கள். நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் புதிய ஆராய்ச்சியானது தூக்கத்தின் போது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவதன் விளைவை முகம்-பெயர் கற்றலில் முதலில் ஆவணப்படுத்தியுள்ளது.

உறக்கமும் நினைவும்

'இந்த ஆய்வு என்பது தூக்கத்தைப் பற்றிய ஒரு புதிய பரிமாணம் மற்றும் அற்புதமான கண்டுபிடிப்பு, ஏனெனில் நினைவக சேமிப்பை மேம்படுத்த தூக்கத்தின்போது தகவல் மீண்டும் ஊக்குவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் விதம் உயர்தர தூக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளது என்று இது நமக்குச் சொல்கிறது' என்று அறிவியல் முன்னணி  எழுத்தாளரும் மற்றும் வடமேற்கு பலகலைக்கழக நரம்பியல் திட்ட செயல்பாட்டாளருமான  நாதன் விட்மோர்(Nathan Whitmore) தெரிவிக்கிறார்.

இடையூறற்ற தூக்கமும் நினைவு செயல்பாடும்

"முகம்-பெயர் கற்றலின் இலக்கு என்பது நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது சரியாக போதுமான மற்றும் இடையூறு இல்லாத மெதுவான தூக்கத்தைப் பொறுத்தே இருக்கிறது" என்ற தகவல்தான். எனவே, தூக்கத்த்துக்கும் நினைவகத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் இப்போது அறிய முடிகிறது.

கட்டுரையின் மூத்த எழுத்தாளர் கென் பல்லர், உளவியல் பேராசிரியரும் வடமேற்கில் உள்ள வெயின்பெர்க் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அறிவாற்றல் நரம்பியல் திட்டத்தின் இயக்குநரும் ஆவார். இந்த கட்டுரையின் இணை ஆசிரியர் அட்ரியானா பாசார்ட், பிஎச்.டி. உளவியலில் ஆய்வாளர்.

இ.இ.ஜி(EEG) மூலமாக தரமான தூக்கத்தின் ஆய்வு

ஆய்வுக் குழுவானது, EEG (Electro Encepahlo Gram) அளவீடுகளைக் கொண்ட ஆய்வில் பங்கேற்பவர்களுக்கு மூளையின் மின் செயல்பாடுகளை பதிவு செய்யும் மின் கருவியின் மூலம் உச்சந்தலையில் உள்ள மின்முனைகளால் எடுக்கப்பட்ட பதிவின் வழியே அனைத்தையும் கண்டறிந்தது. இதில், தூக்கம் சரியாக ஆழமாக இல்லாதவர்களின் தூக்கத்தில் நினைவுகள் சீர்குலைவு ஏற்படுவது தெரிந்தது. அந்த தரமற்ற தூக்கம் நினைவகத்தை மீண்டும் செயல்படுத்துவது உதவாது மற்றும் தீங்கு விளைவிக்கும். ஆனால், குறிப்பிட்ட நேரங்களில் தடையற்ற தரமான தூக்கம் உள்ளவர்களில், மீண்டும் நினைவகத்தை செயல்படுத்துவது என்பது ஒப்பீட்டளவில் நினைவின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது.

ஆய்வின் முறை

இந்த ஆய்வு 18-31 வயதுடைய 24 பங்கேற்பாளர்களிடம் நடத்தப்பட்டது. அவர்கள் கற்பனையான லத்தீன் அமெரிக்க வரலாற்று வகுப்பிலிருந்து 40 மாணவர்களின் முகங்களையும் பெயர்களையும் மனப்பாடம் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர் மற்றும் ஜப்பானிய வரலாற்று வகுப்பில் இருந்து மேலும் 40 பேர், ஒவ்வொரு முகமும் மீண்டும் காட்டப்பட்டபோது, ​​அதனுடன் இணைப்பில் இருந்த பெயரைத் தெரிவிக்கும்படி கேட்கப்பட்டது. கற்றல் பயிற்சிக்குப் பிறகு, பங்கேற்பாளர்கள் EEG அளவீடுகளைப் பயன்படுத்தி மூளையின் செயல்பாட்டைக் கவனமாகக் கண்காணித்தனர்.  ​​பங்கேற்பாளர்கள் சிறிது நேரம் தூங்கினர். பங்கேற்பாளர்கள் ஆழ்ந்த உறக்க நிலையை அடைந்தபோது, ​​வகுப்புகளில் ஒன்றோடு தொடர்புடைய இசையுடன் கூடிய ஸ்பீக்கரில் சில பெயர்கள் மென்மையாக ஒலித்தன.

பங்கேற்பாளர்கள் எழுந்ததும், அவர்கள் முகங்களை அடையாளம் கண்டுகொள்வது மற்றும் ஒவ்வொரு முகத்துடன் தொடர்புடைய பெயரை நினைவுபடுத்துவதும் மீண்டும் சோதிக்கப்பட்டது. தூக்கம் சீர்குலைவு/தரமற்ற தூக்கம் மற்றும் நினைவகத் துல்லியம் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பின் கண்டுபிடிப்பு பல காரணங்களுக்காக குறிப்பிடத்தக்கது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தூக்கச் சிதைவு

"மூச்சுத்திணறல் போன்ற சில தூக்கக் கோளாறுகள் நினைவாற்றலைக் கெடுக்கும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிவோம்" என்று விட்மோர் கூறினார். "எங்கள் ஆராய்ச்சி இதற்கான சாத்தியமான விளக்கத்தை பரிந்துரைக்கிறது - இரவில் தூங்கும்போது அடிக்கடிஏற்படும்  குறுக்கீடுகள் நினைவாற்றலைக் குறைக்கும்" என்றார். 

இது தொடர்புடைய மூளையின் வழிமுறைகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்காக, நினைவுகளை மீண்டும் செயல்படுத்துவதற்கும், தூக்கத்தை வேண்டுமென்றே சீர்குலைப்பதற்கும், ஆய்வகம் ஒரு பின்தொடர்தல் ஆய்வினையும் செய்துகொண்டுள்ளது.

"இந்த புதிய ஆராய்ச்சியானது பல சுவையான கேள்விகளுக்கு பதிலளிக்கும். தூக்கத்தில் இடையூறு என்பது எப்பொழுதும் தீங்கு விளைவிப்பதா அல்லது தேவையற்ற நினைவுகளை பலவீனப்படுத்த இது பயன்படுத்தப்படுமா என்பது போன்ற பல சுவை மிகுந்த கேள்விகளுக்கு தீர்வு காணும்" என்று வடமேற்கு பல்கலைக்கழக ஜேம்ஸ் பாடிலாவின் கலை மற்றும் அறிவியலில் தலைவரான பல்லர் தெரிவிக்கிறார்.

"எந்த வகையிலும், உயர்தர தூக்கத்தை மதிப்பிடுவதற்கான நல்ல காரணங்களை கண்டுபிடித்து வருகிறோம். நல்ல தரமான தூக்கம் என்பது உடல்நலத்துக்கும், மன நலத்துக்கும், நினைவாற்றல் மற்றும் அறிவுத் தூண்டலுக்கும் ஆணிவேராகவே உள்ளது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்போதைய மென்பொறியாளர்கள் தூக்கத்தை தொலைத்துவிட்டு பணிபுரிகின்றனர். அவர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆழ்ந்த தரமான தூக்கம் பற்றி கூறவேண்டும் என்பதையும் இந்த ஆய்வு தெளிவாகவே தெரிவிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com