இளைய தலைமுறையின் எதிர்காலத்துடன் விளையாடுகிறதா டிஎன்பிஎஸ்சி?

அரசு வேலைக்குச் செல்வது பலரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும்.
இளைய தலைமுறையின் எதிர்காலத்துடன் விளையாடுகிறதா டிஎன்பிஎஸ்சி?

ரசு வேலைக்குச் செல்வது பலரின் கனவு மற்றும் லட்சியமாக இருக்கும். ஆனால், அண்மைக் காலத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைத்தின் செயல்பாடுகளால் தேர்வர்களுக்குப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கை ஒவ்வொரு தேர்வுக்கும் குறைந்து வருகிறது. அதற்கு சிறந்த உதாரணம் அண்மையில் நடைபெற்ற குரூப் 2 / 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட குளறுபடி. இந்தக் குளறுபடியினால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மீதான நம்பிக்கையைத் தேர்வர்கள் பெருமளவில் இழந்துள்ளனர். தேர்வாணையம் என்ன காரணங்கள் கூறினாலும் அவர்களின் கவனக் குறைவையும் பொறுப்பற்ற தன்மையையும் யாராலும் சுட்டிக் காட்டாமல் இருக்க முடிவதில்லை.

லட்சக்கணக்கில் தேர்வர்கள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் அதிக அளவிலான மாணவர்கள் குரூப் 1, குரூப் 2/2ஏ, குரூப் 4 ஆகிய தேர்வுகளை எழுதுகின்றனர். அதிலும் குறிப்பாக குரூப் 4 தேர்வுக்குத் தயாராகும் தேர்வர்களின் எண்ணிக்கையே அதிகம். லட்சக்கணக்கான தேர்வர்கள் குரூப் 4 தேர்வினை எழுதுகின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற குரூப் 4 தேர்வினை 18 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர் (இத்தனைக்கும் பணியிடங்கள் என்னவோ, 7301 தான்!). குரூப் 4 தேர்வுக்கு அடுத்தபடியாக குரூப் 2/2ஏ தேர்வுக்கும், குரூப் 1 தேர்வுக்கும் அதிக அளவில் தேர்வர்கள் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். 

தேர்வுக்குத் தயாராகும் பலரும் பயிற்சி மையங்களில் சேர்ந்து கட்டணம் செலுத்தித் தேர்வுக்குத் தங்களைத் தயார்படுத்திக் கொள்கின்றனர். இன்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பயிற்சி மையங்கள் ஏராளமாக குவிந்து கிடந்துக்கின்றன.  இருப்பினும், அனைவராலும் கட்டணம் செலுத்தி பயிற்சி பெற முடியாது. குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களால் குடும்பப் பொருளாதார சூழ்நிலையினால் பயிற்சி மையங்களில் சேர்ந்து தேர்வுக்குத் தயாராவது கடினம். கிராமப்புற மாணவர்களுக்கு அவர்களது பகுதியில் உள்ள நூலகங்களே அவர்களது பயிற்சி மையங்கள். வீட்டின் பல்வேறு சூழ்நிலைகளையும் ஓரமாக வைத்துவிட்டு படித்துத் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்துகின்றன. 

கடந்த ஆண்டு (2022) நடைபெற்ற தேர்வுகள்

கடந்த ஆண்டு குரூப் 2/2ஏ, குரூப் 4 மற்றும் குரூப் 1 தேர்வுகளை டிஎன்பிஎஸ்சி நடத்தியது. குரூப் 2/2ஏ தேர்வு (5413 பணியிடங்கள்) மே 21 ஆம் தேதியும், குரூப் 4 ( 7301 பணியிடங்கள்) தேர்வு ஜூலை 24 ஆம் தேதியும் மற்றும் குரூப் 1 ( 92 பணியிடங்கள்) தேர்வு நவம்பர் 19 ஆம் தேதியும் நடத்தப்பட்டது.

இந்த குரூப் 2/2ஏ தேர்வுக்கு சுமார் 9 லட்சத்துக்கும் அதிகமானோரும், குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்துக்கும் அதிகமானோரும் மற்றும் குரூப் 1 தேர்வுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானோரும் விண்ணப்பித்திருந்தனர். இந்த மூன்று தேர்வுகளில் குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வும், குரூப் 4 தேர்வும் திட்டமிட்டபடி மே 21 மற்றும் ஜூலை 24 ஆகிய தேதிகளில் முறையே நடத்தப்பட்டன.

இருப்பினும், குரூப் 1 தேர்வானது ஏற்கெனவே நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த அக்டோபர் 30 ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 19 ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தரப்பில் அறிவிக்கப்பட்டது. நிர்வாகக் காரணங்களுக்காகத் தேர்வு தேதி மாற்றப்பட்டதாக காரணம் கூறப்பட்டது.

கடந்த 2019 ஆம் ஆண்டு கடைசியாக குரூப் 1 மற்றும் குரூப் 4 போட்டித் தேர்வுகளை எழுதிய தேர்வர்களுக்கு கரோனா பரவலின் காரணத்தினால் போட்டித் தேர்வுகள் 2 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இந்த 2 ஆண்டுகள் தேர்வர்கள் பலரும் எப்போது தேர்வு வரும் எனக் காத்திருந்து தங்களது மனச்சோர்வினையும் பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் தேர்வுக்குத் தயாராகி வந்தனர்.

பலர் இந்த இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் தங்களது குடும்ப சூழலின் காரணத்தினால் போட்டித் தேர்வுக்கு படிப்பது ஒரு புறமும், வேலைக்குச் செல்வது மறுபுறம் என தங்களது அரசு வேலைக் கனவையும், குடும்ப சூழலையும் மனதில் வைத்து பல தேர்வர்கள் விடாமுயற்சியுடன் படித்து வந்தனர். இந்த சூழலில் அவர்களுக்கு சிறிது நம்பிக்கைத் துளிர்விடும் விதமாக கரோனா தொற்று குறைந்து மேற்கூறிய மூன்று தேர்வுகளும் நடைபெற்றன.

முடிவுகளை வெளியிடுவதில் டிஎன்பிஎஸ்சிக்கு என்ன பிரச்னை?

குரூப் 2/2ஏ தேர்வு கடந்த ஆண்டு மே 21 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்தத் தேர்வுக்கான முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியாகும் எனக் கூறப்பட்டது. ஆனால், முடிவுகள் வெளியாகவில்லை. பின்னர், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் என மாதங்கள் மட்டுமே கடந்தன. தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான அறிகுறிகளே இல்லை. இதனால் தேர்வர்கள் குரூப் 2/2ஏ முதன்மைத் தேர்வுக்கு படிப்பதா அல்லது குரூப் 4 தேர்வுக்குத் தயாராவதா என்ற குழப்பத்தில் தவித்தனர்.

இதற்கிடையில், ஜூலை 24 ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த குரூப் 4 தேர்வுக்கான முடிவும் ஒரு மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குரூப் 2/2ஏ கதையே இங்கும் தொடர்ந்தது. மாதங்கள் மட்டுமே கடந்தன. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கான அறிகுறிகளே இல்லை.

நடந்து முடிந்த தேர்வுகளுக்கே முடிவுகளை வெளியிடாமல் காலம் தாழ்த்தி தேர்வர்களை ஒரு வித பதற்றத்திலேயே வைத்திருந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வினை நிர்வாகக் காரணங்களுக்காக அக்டோபர் 30 ஆம் தேதிக்குப் பதிலாக நவம்பர் 19 ஆம் தேதிக்கு மாற்றியது அடுத்த வேடிக்கை.

உண்மையில் தேர்வர்களுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. எதற்காக தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் கடத்த வேண்டும்?ஒவ்வொரு முறையும் தேர்வாணையத்துக்கு ஏதேனும் காரணங்கள் கிடைத்து விடுகின்றன. நிர்வாகக் காரணம், நீதிமன்றத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு செல்வதால் தாமதம் என அவர்களுக்கு காரணம் கிடைத்து விடுகிறது.

ஆனால், உண்மையில் இங்கு பாதிக்கப்படுவது தேர்வர்களே. எத்துணை துயரங்கள் வந்தாலும் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். படித்துத் தேர்வை நன்றாக எழுதிய பின்பும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் எனத் தேர்வர்கள் காத்துக் கிடக்க வேண்டும். தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் எனத் தேர்வாணையம் எளிதாக கூறுவதுபோல் தேர்வர்களால் ஏனோ யாரிடமும் எளிதில் கூற முடிவதில்லை. அப்படியே அவர்கள் கூற முற்பட்டாலும் அவர்களின் மீது வீசப்படும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளை சமாளிப்பதற்கு பதில், பேசாது தேர்வு எழுதுவதையே விட்டுவிடலாமா என்ற விரக்தியும் மனதில் வந்து எட்டிப் பார்க்கும். மற்ற துறைசார்ந்த தேர்வுகளின் முடிவுகளையும், சான்றிதழ் சரிபார்ப்பினையும் மேற்கொள்ளும் தேர்வாணையம், தேர்வர்கள் அதிக அளவில் எழுதக் கூடிய குரூப் 4, குரூப் 2/2ஏ மற்றும் குரூப் 1 தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் மட்டும் டிஎன்பிஎஸ்சிக்கு என்னதான் பிரச்னை?

குரூப் 2/2ஏ தேர்வு முடிவும் முதன்மைத் தேர்வு குளறுபடியும்

ஒருவழியாக பல மாதக் காத்திருப்புக்கு பலன் கிடைத்துவிட்டது என்பது போல் குரூப் 2/2ஏ முதல்நிலைத் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் 8 ஆம் தேதி வெளியாகின. முதன்மைத் தேர்வு பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. தேர்வர்களுக்கு மறுபடியும் ஒரு 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஓடும் மனநிலைதான். இப்போதாவது தேர்வு முடிவு வெளியானதே என சந்தோஷத்தில் படிக்க ஆரம்பித்த தேர்வர்களுக்கான அதிர்ச்சி வைத்தியம் முடியவில்லை. முதன்மைத் தேர்வின் முதல் தாளான தமிழ் தகுதித் தேர்வுக்காக தேர்வர்கள் அறையில் காத்திருந்தனர். 9 மணிக்குத் தேர்வு அறைக்கு உள்ளே சென்ற தேர்வர்களுக்கு 9:15 மணிக்கு விடைத்தாள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், பல மையங்களில் 1 மணி நேரத்துக்கு மேலாகியும் விடைத்தாள் கொடுக்கப்படவில்லை. முதன்மைத் தேர்விலும்கூட அமைதியான மனநிலையில் தேர்வர்களால் தேர்வு எழுத முடியவில்லை. விடைத்தாளில் உள்ள பதிவெண்கள் மாறி வந்ததால் குளறுபடி. தமிழகத்தின் அனைத்துத் தேர்வு மையங்களிலும் இதே குளறுபடிதான். பிற்பகல் தேர்வில் இந்த குளறுபடி நடந்திருந்தால் தேர்வர்களின் நிலை என்ன ஆவது?

பொதுவாக தேர்வு எழுதுவதற்கு முன்பு பதற்றப்படாமல் அமைதியான முறையில் தேர்வினை அணுக வேண்டும் என பள்ளிப் பருவம் முதல் நமக்கு அறிவுரை வழங்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், தேர்வு அறையில் விடைத்தாள்களில் குளறுபடி எனும்போது எப்படித் தேர்வர்கள் பதற்றப்படாமல் அமைதியாக இருக்க முடியும்? அந்த நேரத்தில் தேர்வுக்கு படித்தது மட்டுமல்லாமல் பல்வேறு சிந்தனைகளும் தானாகத் தொற்றிக் கொள்ளும். நம்முடையத் தேர்வுக் கூடத்தில் மட்டும்தான் தாமதமாகத் தொடங்குகிறதா அல்லது எல்லாத் தேர்வுக் கூடங்களிலும் இதே நிலைதானா? தாமதமாக விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டால் கூடுதல் நேரம் வழங்கப்படுமா? பிற்பகல் உள்ள தேர்வுக்கு எப்படி தயாராவது? 1 மணி நேரத்துக்கும் மேலாகிறதே, தேர்வு நடக்குமா அல்லது நடக்காதா? இத்தனை நாட்கள் கஷ்டப்பட்டு படித்தது எல்லாம் வீணாகிவிடுமோ? எனப் பல கேள்விகள் தேர்வர்களின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். இந்த சூழலில் எப்படி அமைதியாக தேர்வை எழுத முடியும். தேர்வுக்குத் தயாராகும்போதுதான் தேர்வர்கள் பயம் கலந்த கவலையில் இருக்கிறார்கள் என்றால், தேர்வுக் கூடத்திலும் அப்படியே இருக்க வேண்டுமா என்ன?

ட்விட்டரில் தேர்வு முடிவுகள் கேட்டு டிரெண்டிங் செய்த தேர்வர்கள்

தேர்வர்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து  எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த நிலையில் ட்விட்டரில் குரூப் 4 தேர்வு முடிவுகளை வெளியிடக் கேட்டு ஒரு நாள் டிரெண்ட் செய்தனர். உரிய நேரத்தில் தேர்வாணையத்தின் இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியானால் தேர்வர்கள் ஏன் ட்விட்டருக்கு செல்லப் போகிறார்கள்? தேர்வாணையத்தின் கவனத்தை ஈர்த்தோ அல்லது அழுத்தம் கொடுத்தோ தேர்வர்கள் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளும் நிலைக்கு அவர்களை ஆளாக்கியதற்கு முக்கிய காரணம் தேர்வாணையமே. ட்விட்டரில் தேர்வு முடிவு குறித்த ஹேஷ்டேக் டிரெண்டான பிறகு, மார்ச் மாத இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது தேர்வர்களுக்கு சிறிது மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தேர்வு முடிவுகளை தேர்வாணையத்துக்கு அழுத்தம் கொடுத்துதான் தேர்வர்கள் தெரிந்துகொள்ள வேண்டுமா என்ன?

சோதனைகளுக்கு நடுவே சாதிக்க நினைக்கும் தேர்வர்கள்

அனைவராலும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடிவதில்லை. குடும்ப சூழல் காரணத்தினால் ஏழை மாணவ, மாணவிகள் தங்களது பொருளாதாரத் தேவைகளையும், குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளையும் சமாளித்துக் கொண்டு தாமாகவே தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். ஒருவேளை பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க நினைத்தாலும் அவர்களுக்கு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தெரிந்தால்தான் அதுவும் சாத்தியம். பலரும் இந்த போட்டித் தேர்வுகளை தங்களது எதிர்காலமாக நினைத்துத் தீவிரமாகப் படித்து வருகின்றனர். நல்ல அரசு வேலைக்குச் செல்ல வேண்டும், வீடு கட்ட வேண்டும், திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கனவுகளுடன் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். பலரும் தங்களது குடும்பத்தில் நடக்கும் எந்த ஒரு விசேஷங்களிலும்கூட கலந்துகொள்ளாமல் தங்களது நேரத்தை வீணாக செலவிடக் கூடாது என நினைத்து தேர்வுக்குத் தயாராகின்றனர். இதனால், அவர்கள் சந்திக்கும் விமர்சனங்கள் பல. சிலர் தங்களது சொந்த ஊர்களில் இருந்து வேறு ஒரு மாவட்டத்தில் வேலை செய்துகொண்டும் தேர்வுக்குத் தயாராகின்றனர். அவர்கள் குடும்பத்தின் நிலையினையும் பார்க்க வேண்டும். தங்களது படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். இதற்கிடையில், இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படியே படிச்சிட்டு இருக்கப் போற என்ற விமர்சனங்களும், கிண்டல் கேலிகளையும் தாங்கிக் கொள்ள வேண்டும். வயது கொஞ்சம் அதிகமாக இருந்துவிட்டால் இப்படியே படிச்சிக்கிட்டே இருந்தா மட்டும் போதுமா, அடுத்தடுத்து பொறுப்புகள் இல்லையா? தம்பி, தங்கைகளைப் பற்றியெல்லாம் உனக்கு கவலை இல்லையா? என்ற கேள்விகளும் வரும். மேலே கூறிய அனைத்தும் கடலில் மிதக்கும் ஒரு மிகப் பெரிய பனிப்பாறையின் நுனியைப் போன்றது. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு அதன் நுனிப் பகுதி மட்டுமே தெரியும். அது போலத்தான் போட்டித் தேர்வர்கள் சந்திக்கும் பிரச்னைகளும்.

தனது கனவுக்காக ஒருவர் இத்தனை விஷயங்களையும் சமாளித்து வரும் போது, தேர்வாணையம் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காட்டும் தாமதமும், தேர்வினை நடத்துவதில் காட்டும் மெத்தனமும் தேர்வர்களின் நம்பிக்கையினை முற்றிலுமாக சிதைத்துவிடுகிறது. எதற்கு இத்துணை அலட்சியம்? தேர்வுகளை அறிவிப்பதிலும் சரியான நேரத்தில் நடத்துவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு என்னதான் பிரச்னை? தேர்வாணையம் இதனை வெறும் தேர்வு என்று பார்க்காமல் தேர்வர்களின் வாழ்க்கை என மிகுந்த சிரத்தையுடன் செயல்பட்டு தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.

தேர்வாணையம் எப்படி செயல்பட்டால் நன்றாக இருக்கும்?

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இனிவரும் காலங்களில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிடுவதிலும், தேர்வுகளை உரிய நேரத்தில் காலம் தாழ்த்தாமல் நடத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும். மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் தவறாது ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான தேர்வுகளை நடத்தி வருகிறது.

தேர்வுக்கான அறிவிப்பினை ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் வெளியிடுகிறது. அறிவிப்பு வெளியான மூன்று மாதங்களில் அதாவது மே இறுதி அல்லது ஜூன் மாதங்களில் முதல்நிலைத் தேர்வினை நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு முடிவடைந்த 3 மாதங்களில் முதன்மைத் தேர்வு அதாவது செப்டம்பர் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வர்களுக்கான நேர்முகத் தேர்வு ஜனவரியில் நடத்தப்படுகிறது. மூன்று படிநிலைகளைக் கொண்ட இந்த குடிமைப் பணித் தேர்வை ஒவ்வோர் ஆண்டும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சிறப்பாக நடத்தி வருகிறது.

தேர்வு முடிவினை வெளியிடுவதிலும் அவர்கள் காலம் தாழ்த்துவதில்லை. கரோனா பேராபத்துக் காலத்தில்கூட தேர்வு நடைபெறும் நாள்கள் மாற்றி வைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டதே தவிர, தேர்வே நடக்காமல் இருந்ததில்லை. அதேபோல எஸ்எஸ்சி மற்றும் வங்கித் தேர்வுகளும் உரிய நேரத்தில் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் போன்று ஆண்டுதோறும் தேர்வுகளை நடத்த வேண்டும். ஒரு மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறினால் அந்த குறிப்பிட்ட நாளில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியான பிறகு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டுப் பணி வழங்கப்பட வேண்டும். இவையனைத்தையும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சரிவர செய்தால் தேர்வர்கள் தங்களது படிப்பில் கவனம் செலுத்தி முழு முயற்சியுடன் படிக்க உதவியாக இருக்கும். தேர்வாணையம் மீதும் தேர்வர்களுக்கு நம்பிக்கை ஏற்படும்.

(2022 ஜூன் மாதத்தில் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன் ஓய்வுபெற்ற நிலையில், இன்னமும் அரசால் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. பொறுப்பு தலைவராக உறுப்பினர் முனியநாதன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்).

இழந்த நம்பிக்கையை எவ்வாறு மீட்கப் போகிறது டிஎன்பிஎஸ்சி?

அண்மையில் நடந்த குரூப் 2/2ஏ முதன்மைத் தேர்வு குளறுபடி, உரிய நேரத்தில் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலம் கடத்துவது உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வரும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எவ்வாறு தனது இழந்த நம்பிக்கையை தேர்வர்கள் மத்தியில் மீட்டெடுக்கப் போகிறது என்பதுதான் தேர்வாணையத்தின் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. ட்விட்டர் டிரெண்டிங்கிற்குப் பிறகு, மார்ச் மாத இறுதியில் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தேர்வாணையம் தெரிவித்திருக்கிறது. தேர்வாணையத்தின் இந்த அறிவிப்பு, தேர்வர்களை சற்று நிம்மதியடையச் செய்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மார்ச் இறுதிக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியானால் தேர்வர்களுக்குத் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கை வரும்.

இதேபோல, குரூப் 2/2ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் எப்போது வரும் என்பதும் கடவுளுக்கும் டிஎன்பிஎஸ்சிக்கும்தான் வெளிச்சம்! இதுபற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டால் இளைஞர்களுக்குப் பெரும் நிம்மதி. 

ஆணையத்தின் மீதான நம்பிக்கையினை எதிர்கால தேர்வு மற்றும் முடிவு அறிவிப்புகளில் தக்கவைத்துக் கொள்வதுதான் தேர்வாணையத்தின் முன் உள்ள மிகப் பெரிய சவால்.

இனியாவது தேர்வு அறிவிப்புகளிலும், உரிய நேரத்தில் தேர்வினை நடத்துவதிலும் மற்றும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதே தேர்வர்களின், அவர்களை நம்பியுள்ள, சார்ந்துள்ள குடும்பங்களின் மிகப் பெரிய கவலை மற்றும் எதிர்பார்ப்பு. தேர்வர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமா தேர்வாணையம்? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.