தீபமாலா

எத்தனையோ திருவிழாக்கள் இந்தியத் திருநாட்டில் நடைபெற்று வந்தாலும் அத்துணை விழாக்களுக்கும் முத்தாய்ப்பாய் திகழ்வது தீபாவளிப் பண்டிகை.
தீபமாலா

உலகெங்கும் வாழ்ந்து வருகின்ற மக்கள் அவரவர்தம் கலாசாரம், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை எடுத்துரைக்கும் வண்ணமாக குறிப்பிட்ட ஏதாவது ஒருநாளில் விழா எடுத்து மகிழ்வர். இதுபோன்ற விழாக்களுக்கு அவரவர் மரபு சார்ந்த வரலாற்று நிகழ்வுகள் பின்புலமாக இருந்து வருகின்றன.

பிரேசிலில் நடைபெறக்கூடிய தக்காளித் திருவிழா, சீனாவில் நடைபெறும் டிராகன் திருவிழா போன்று நாடுகள்தோறும் விழாக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

தொன்மையும் நீண்ட கலாசாரத்தையும் கொண்ட இந்திய திருநாட்டில் எண்ணற்ற இந்து பண்டிகைகள் ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய மரபுப்படி சித்திரையில் தொடங்கி பங்குனி வரை மாதந்தோறும் விழாக்கள் நடந்த வண்ணமே உள்ளன. 

சித்திரையில் சித்ரா பெளர்ணமி என்ற முழு நிலவு நாள் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து சிலப்பதிகாரத்திலும் பேசப்படுகிறது. வைகாசி மாதத்தில் நடைபெறும் விழாக்களுள் விசாகத் திருவிழா சிறப்புப் பெற்றது.

ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சனம், சாதுர்மாஸ்ய விரதம், சோம வார வழிபாடு போன்றவைகளும், ஆடி மாதத்தில் ஆடிப்பூரம், ஆடி பதினெட்டு, ஆடித்தபசு, ஆடிப்பட்டம் தேடி விதை என்கிற வழக்குச் சொல் உண்டு. நல்ஏறு பூட்டி இந்த ஆண்டு விளைச்சல் அதிகரிக்க இறைவனை வேண்டி வயல்களில் முதல் உழவுப் பணியைத் தொடங்குவர்.

ஆவணி மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து வரலெட்சுமியை வணங்கி வழிபடுவர். ஆவணி அவிட்டம், ஆவணி மூலம், ஓணம், விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களும் புரட்டாசி மாதம் அனைத்து சமுதாய மக்களும் திருமலைப் பெருமாளை வேண்டி சனிக்கிழமை விரதம் ஏற்று அசைவம் தவிர்த்து மரக்கறி உணவையே உண்பர். ஐப்பசி மாதம்தான் விழாக்களின் கதாநாயகன் உலகெங்கும் இருக்கும் பெரும்பான்மை இந்துமக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்ற பெரும் விழாவாக தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் தீபஒளித் திருநாளின் தொடர்ச்சியாக கார்த்திகை தீபம் ஏற்றுதல் நாடெங்கும் கொண்டாடாப் பெற்றாலும், திருவண்ணாமலையில் ஏற்றும் தீபமே பெரும் விழாவாக இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. மார்கழி மாதத்தில் தெருவெங்கும் பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்யபிரபந்தம் ஓங்கி ஒலித்துக் கொண்டும், ஆலயம்தோறும் மங்கல ஒலி கேட்டுக்கொண்டும் இருக்கும். திருவாதிரை சிறப்பையும் நாம் அறிவோம். தை மாதம் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்பது தமிழில் வழங்கப்பெறும் வழக்குச் சொல். அத்தகுசிறப்பிற்குரிய இம்மாதம் வேளாண் உழுகுடி மக்கள் தாங்கள் விளைவித்த பொருட்களை அறுவடை செய்து வேளாண் தொழிலுக்கு பெருந்துணை புரியும் இயற்கை அன்னையையும் தன் தொழிலுக்கு உதவி புரியும் கால்நடைச் செல்வங்களையும் போற்றி மகிழ்ந்து வணங்கித் துதித்து புதுப்பொங்கலிட்டு தைப் பொங்கல் திருநாளை மகிழ்வோடு கொண்டாடுவர்.

மாசி மாதம் நடைபெறும் முக்கிய விழாவில் மாசி மகத் திருவிழா ஒன்றாகும். பங்குனி மாதத்தில் அறுபடை வீடு மட்டுமன்றி அனைத்து முருகப்பெருமான் ஆலயங்களிலும் பங்குனி உத்திரப் பெருவிழா மகிழ்ச்சிப் பெருக்கோடு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. படை வீடு கடந்து திருச்செந்தூரில் கடற்கரையில் நடைபெறக்கூடிய சூரசம்ஹார விழாவில் கடல் அலையையும் அதிரச் செய்யும் மக்கள் கூட்டமும் கடல் அலையின் ஓசையை அடக்கிவிடும் அரோகரா முழக்கமும் பார்ப்போர் மனதை கொள்ளை கொள்ளும்.

இப்படி எத்தனையோ திருவிழாக்கள் இந்தியத் திருநாட்டில் நடைபெற்று வந்தாலும் அத்துணை விழாக்களுக்கும் முத்தாய்ப்பாய் திகழ்வது தீபாவளிப் பண்டிகை.

இந்த தீபாவளிப் பண்டிகை இந்தியாவெங்கும் பரவி வாழும் இந்துக்களிடையேயும் உலகெங்கும் வாழும் இந்துக்களிடையேயும் அவரவர் பாரம்பரிய முறைப்படி வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.
 
இந்துக்களில் மராட்டியர்கள் மூன்று நாட்களும், கன்னடர்கள் நான்கு நாட்களும் வட இந்திய மக்கள் ஐந்து நாட்கள் என்றும் கொண்டாடி வருகின்றனர். தீபாவாளி கொண்டாட்டத்திற்கென்று பலவிதமான புராண வரலாற்று நிகழ்வுகளும் கூறப்பட்டால்கூட இந்துக்கள் பெரும்பாலும் நம்பக்கூடிய ஒன்று நரகாசுரன் வதை செய்யப்பட்ட நாளே ஆகும்.

யார் அந்த நரகாசுரன்? இன்றைய அசாம் பகுதி முற்காலத்தில் காமரூபம்(பிராக்ஜோதிசம்) என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியை ஆட்சி செய்த பாமா என்ற அரச மரபில் தோன்றியவரே நரகாசுரன். வரலாற்றில் மக்கள் நலன் கருதி முடியாட்சி செய்த மன்னர்களும் உண்டு. மக்கள் விரோதப்போக்கை மேற்கொண்டு மக்கள் நலனுக்கு எதிராக ஆட்சி செய்த தீமை செய்த மன்னர்கள் ஒரு சிலர் உண்டு. அதுபோன்று மக்களுக்கு தீமை செய்து மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டு இவன் அழிந்து ஒழியமாட்டானா என்று ஏங்குகின்ற நிலையை ஏற்படுத்தியதால் இம்மன்னனின் இறப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்ததால் அதைக் கொண்டாடினர்.

இதுவே பிற்காலத்தே நரகாசுரன் என்பவன் பத்து அவதாரங்களில் ஒன்றாகியவராக அவதாரம் எடுத்த திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் என்றும், இவன் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி கொடுங்கோல் அரசனாக இருந்தது மட்டுமன்றி, தன்னுடைய இறப்பு யாராலும் ஏற்படக் கூடாது, தன் பெற்றோரால் மட்டுமே ஏற்பட வேண்டும் என்ற வரமும் பெற்றிருந்ததால், தம்மை அழிக்க யாருமில்லை என்ற ஆணவத்தில் மக்களை வெகுவாக துன்புறுத்தினான். பாதிப்புக்கு உள்ளானவர்கள் இறைவனிடம் முறையிட்டதாகவும், அதனால் திருமாலே மீண்டும் கிருஷ்ணன் அவதாரம் எடுத்து நரகாசுரனை அழித்ததாகவும் புராண வரலாற்றுச் செய்தி குறிப்பிடுகின்றது. இவன் ஆட்சி செய்ததாகக் கருதப்படும் காமரூபம் பகுதியில் இன்றும் கூட ஒரு மலையின் பெயர் நரகாசுரன் மலை என்று அழைக்கப்படுகிறது.

ஒருபக்கம் நல்லவர்களைக் கொண்டாடக்கூடிய நம் மக்கள் மற்றொரு புறம் மக்களுக்கு தீமை செய்த ஒருவன், மக்களால் வெறுக்கப்படும் ஒருவன் அழிந்துபட்ட நாளையும் கொண்டாடி வருகின்றனர்.

அதேநேரத்தில் தான் இறக்கும் தருவாயில் தன் தவற்றை உணர்ந்து வருந்தி இறைவனிடம் வேண்டுகோள் விடுக்கிறான் நரகாசுரன். தான் இறந்த நாளை மக்கள் வெறுப்போடு கடைபிடிக்காமல் தங்களில் ஒருவனாக என்னையும் ஏற்றுக் கொண்டு பட்டவன் வழிபாடு போல குளித்து முழுகி புத்தாடை அணிந்து பலவிதமான இனிப்புகள், பலகாரங்கள் வைத்து படையல் இட்டு மத்தாப்பு கொளுத்தி வணங்கி மகிழ வேண்டும் என்பதே ஆகும். துக்கம்  என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். 

நடந்து விட்ட துக்கத்தையே எண்ணிக் கொண்டிருந்தால் எந்தவித பயனும் கிட்டாது. ஆகவே அதனை மறக்கும் பொருட்டு மாற்றும் பொருட்டு இறந்துபட்ட நம் முன்னோர்கள் நாம் எவ்வாறு மகிழ்வாக வாழ வேண்டும் என்று எண்ணினார்களோ அவற்றை செயலாக்கும் விதத்திலும் மகிழ்ச்சியே நமக்குத் தொடர்ந்து நீடிக்க வேண்டும். இருள் அகன்று ஒளி பிறக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதே தீபாவளிப் பண்டிகை .

தீபத்திருநாளை இல்லந்தோறும் கொண்டாடுவதோடு நில்லாமல் நண்பர்களுக்கும் உறவுகளுக்கும் பகிர்ந்தளிப்பதோடு மட்டுமல்லாமல் ஆதரவு அற்றோர்களும் மகிழ்ந்து கொண்டாடும்படி இந்நாளை அமைத்துக் கொள்வோம். 

[கட்டுரையாளர் -  ஆசிரியர், சக்கராப்பள்ளி]

தீபாவளி ஸ்பெஷல்
  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com