ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?

ஒரு எழுத்தாளர் ஒரே கதையைத்தான் தனது வாழ்நாள் எல்லாம் எழுதுகிறார்...
ஏமாற்றி வெல்லும் ஹீரோக்கள்! கார்த்திக் சுப்புராஜின் தந்திரம்?

எந்த ஒரு எழுத்தாளரும் ஒரே கதையைத்தான் தனது வாழ்நாள் எல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்ற பிரபலமான அடைமொழி உண்மைதான் என்பதுபோல பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் படங்களில் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் ஒளிந்திருக்கிறது. 

குறும்படங்களின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் முதல்படம் பீட்சா 2012-ல் வெளியானது. இந்தப்படம் முதல் நேற்று (நவ.10) வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படங்கள்வரை தங்களது கதாநாயகர்களின் கதாபாத்திரங்களை வடிவமைத்தில் ஒரே பாணியை கையாள்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதாவது தந்திரம் மிகுந்த கதாநாயகன். இதுதான் அவரது அனைத்து பட நாயகர்களின் பொதுவான குண அம்சமாக இருக்கிறது. இதை சற்று விரிவாகப் பார்க்கலாம். 

பீட்சா: 

இந்தப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி பீட்சா டெலிவரி செய்யும் நபராக நடித்திருப்பார். தனது முதலாளியின் 2 கோடி மதிப்புள்ள வைரங்களைத் திருட பேய் கதையைச் சொல்லி தந்திரமாக ஏமாற்றுவார். இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பினைப் பெற்றது. 

ஜிகர்தண்டா: 

உண்மையான ரௌடியை வைத்து கேங்ஸ்டர் படம் எடுக்க நினைக்கும் இளம் இயக்குநர் கதாபாத்திரத்தில் நடிகர் சித்தார்த் நடித்திருப்பார். கேங்ஸ்டராக பாபி சிம்ஹா நடித்திருப்பார். ரௌடியை வைத்து அவருக்கே தெரியாமல் நகைச்சுவையாக படம் எடுத்து வெற்றி பெறுவார். இந்தப் படத்திலும் கதாநாயகன் தந்திரமாக செயல்பட்டு இருப்பார். இந்தப் படத்துக்காக பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. 


பேட்ட: 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் தனது நண்பன் (சசிகுமார்) கொல்லப்பட்டதுக்கு காரணமான சிங்காரம் (நவாசுதின்) என்பவரை கொல்லுவதுதான் கதை. இதற்கிடையில் நண்பனின் மகன் படிக்கும் கல்லூரியில் விடுதிக் காப்பாளராக ரஜினி அதகளம் செய்திருப்பார். இந்தக் கதையிலும் பெரிய கேங்ஸ்டரான சிங்காரத்தைக் கொல்ல அவரது மகனை (விஜய் சேதுபதி) தன்னுடைய மகன் எனப் பொய்சொல்லி வில்லனை கொன்றுவிடுவார். இங்கும் கதாநாயகன் செய்வது ஏமாற்று வேலையே. 

குறிப்பாக இந்தப் படத்தில் ரஜினி பேசும், “நல்லவனா இரு, ஆனால் ரொம்ப நல்லவனாக இருக்காதே” என்ற வசனம்தான் கார்த்திக் சுப்புராஜின் அடிநாதமாகவே இருக்கிறது. தனது அனைத்துப் படங்களிலும் கதாநாயகன் நல்லவனாகவும் இல்லாமல் கெட்டவனாகவும் இல்லாமல் சராசரி மனிதனுக்கு உண்டான நேர்மறை, எதிர்மறை குணாம்சங்களைக் கொண்டிருப்பதாகக் காட்சிப்படுத்தியிருப்பார். 

ஜகமே தந்திரம்: 

கரோனா காரணத்தினால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். இதில் தனுஷ் சுருளி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். லண்டன் செல்லும் தனுஷ் அங்கு சிவதாஸ் (ஜோஜு ஜார்ஜ்) என்பவரை ஏமாற்றிதான் கொல்லுவார். இந்தப் படத்திலும் நாயகன் செய்வது ஏமாற்று வேலையே. 


மகான்: 

இந்தப் படமும் கரோனா காரணத்தினால் திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியாகியது. இந்தப் படத்தில் காந்தி மகான் எனும் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரம் நடித்திருப்பார்.

காந்தியைப் போலவே மது அருந்தாமால் வாழ வேண்டும் என்ற அவரது தந்தையின் கொள்கையோடு இருப்பவர் ஒருநாள் மது அருந்த, அது மனைவிக்குத் (சிம்ரன்) தெரிந்து, குடும்பத்தை விட்டு பிரிவார் விக்ரம். பின்னர், மதுபானம் தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கி பெரிய கேங்ஸ்டராக இருப்பார். தன்னை கொல்ல வரும் நண்பன் சத்ய சூசையப்பன் (பாபி சிம்ஹா) மற்றும் தனது மகனையும் ஏமாற்றியே வெல்லுவார். இந்தப் படத்திலும் கதாநாயகன் வெல்லுவதற்குக் காரணம் அவரது தந்திரமே. 

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: 

ஒரு ரௌடியைக் (ராகவா லாரன்ஸ்) கொல்ல படம் இயக்கும் இயக்குநராக (எஸ்.ஜே.சூர்யா) ஏமாற்றிக் கொல்லச் செல்லும் கதைதான். ஆனால் இங்கு அவரது மனமாற்றம் ஏற்பட்டு அவரை கொல்லாமல் விட்டுவிடுவார். சரி கார்த்திக் சுப்புராஜ் ஏமாற்றாமல் ஜெயித்து விடுவார் என நினைக்கையில் கடைசி சில காட்சியில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்த நாயகன் இங்கு செய்வதும் தந்திரமே. (தற்போது திரையரங்குகளில் படம் ஓடிக்கொண்டு இருப்பதால் ஸ்பாய்லர் ஆகிவிடும் என்பதால் ட்விஸ்டை தவிர்க்கிறேன்)

இறைவி, மெர்குரி : 

இறைவி கார்த்திக் சுப்புராஜின் வழக்கமான கேங்ஸ்டர் படமாக இல்லாமல் பெண்களைப் பற்றிய படமாகவே அமைந்தது. இதில் 3 கதாநாயகர்கள். இதிலும் சிலைக் கடத்தல், எமாற்றுவது என இருந்தாலும் இதில் பெண்களே பிரதானம் என்பதால் வழக்கமான ட்விஸ்டை இங்கு உபயோகிக்கவில்லை. இதே போல மெர்குரி படத்திலும் இந்த ட்விஸ்டினை உபயோகிக்கவில்லை. அதனாலயே என்னவோ இந்த இரண்டு படங்களும் சரியாக மக்களிடம் சென்று சேரவில்லை. 

ஆக, கார்த்தி சுப்புராஜ் தனது அனைத்துப் படங்களிலும் தனது தந்திரத்தின் மூலமே வெற்றியடைகிறார். இது அவரது ஒரு பாணியாகவே அமைந்துள்ளது. கலைஞனது மனதில் இருப்பதுதான் எழுத்தாக வெளிவரும் என்பதால் இந்த தந்திரம் செய்வது என்பது கார்த்திக் சுப்புராஜின் அந்தரங்கமான உளவியலாகக்கூட இருக்கலாம் அல்லது ராமாயணத்தில் ராமர் இராவணனை ஏமாற்றி வெல்லுவது என்ற யோசனை மிகவும் கவர்ந்து அதையே தனது எல்லா படங்களுக்கும் பயன்படுத்தியிருக்கலாம். 

ஒரே பாணியிலான ஹீரோவானாலும் தேர்வு செய்யும் கதைக்களம், நடிகர்கள், ஒளிப்பதிவு,  படமாக்கும் விதம் என அனைத்திலும் கவனம் செலுத்தி வெற்றி பெறுகிறார் கார்த்திக் சுப்புராஜ். 

தீபாவளி ஸ்பெஷல்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com