
மாஞ்சேரி நாராயணன் நம்பியார்!
நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கப்படும் எம்.என். நம்பியார் வாழ்ந்திருந்தால் தற்போது 104 வயதாக இருக்கும். மறைந்து இன்றுடன் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன.
தமிழ்நாட்டில் – தமிழ்த் திரையுலகில் எம்.ஜி.ஆர். என்ற பெயரைத் தெரிந்த ஒவ்வொருவருக்கும் தெரிந்த பெயர் நம்பியார்.
தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் என்றால் ஒரே வில்லன்தான், நம்பியார். இப்போது கதை நாயகர்கள் எல்லாம் வில்லன்களாக நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இருந்தாலும், கதை நாயகர்களுக்கு மட்டுமல்ல, வில்லன்களுக்கெல்லாம்கூட வில்லன் ஒரே ஒருவர்தான், நம்பியார்.
கேரளத்தில் பிறந்தாலும் தமிழகத்தில் வளர்ந்தவர். சிறுவயதிலேயே – 13 வயதில் - நாடகக் குழுவுடன் சேர்ந்து நவாப் ராஜமாணிக்கம் குழுவுடன் ஊர் ஊராகச் சமையல் உதவியாளராகச் சென்று, நடிக்க வாய்ப்புக் கிடைக்காத நிலையில், மும்பையில் ராம்தாஸ் என்ற நாடகம் பக்த ராமதாஸ் எனத் திரைப்படமானபோது எதிர்பாராத விதமாக, சிறு - நகைச்சுவை வேஷத்தில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார் நம்பியார் - 1935-ல்!
1982 ஜூலை 15 சினிமா எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த நேர்காணலில் நம்பியார் கூறுகிறார்:
“என்னுடைய முதல் படம் பக்த ராமதாஸ். மந்திரி வேடத்தில் இந்தப் படத்தில் நடித்தேன். இந்தப் படத்தில் நடித்தவர்கள் அனைவருமே ஆண்கள்தான். பெண் வேஷங்களைக்கூட ஆண்களேதான் போட்டார்கள். ஆரம்பத்தில் படங்களில் காமெடியனாகத்தான் நடித்தேன். மோகினி, மாலதி, வித்யாவதி, அபிமன்யு போன்ற படங்களிலெல்லாம் நான் காமெடியன்தான். மாடர்ன் தியேட்டர்ஸின் திகம்பர சாமியார் படத்தில் வில்லனாக நடித்துப் பாராட்டுப் பெற்றேன். தொடர்ந்து வில்லனாக நடித்து வருகிறேன்.”
வடுவூர் கே. துரைசாமி அய்யங்காரின் நாவலைத் தழுவி மாடர்ன் தியேட்டர்ஸ் எடுத்த திரைப்படம்தான் திகம்பர சாமியார். இந்தப் படத்தில் 11 வேஷங்களில் வருவார். இதைத் தொடர்ந்து, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கும் மேலாகத் தமிழ்த் திரைப்படங்களில் வில்லனாக வெற்றிக் கொடி நாட்டியவர் நம்பியார்.
அந்தக் காலத்தில் பெரும்பாலான திரைப்படங்களில் கட்டாயம் கத்திச் சண்டை இருக்கும். கத்திச் சண்டை என்றால் பி.எஸ்.வீரப்பா, நம்பியார். குடும்பப் படங்கள் வரத் தொடங்கியதும் வேறுவகை சண்டைக் காட்சிகளும் இடம் பெறத் தொடங்கிவிட்டன.
எம்.ஜி.ஆர். – நம்பியார் சண்டை, அது என்ன சண்டையாக இருந்தாலும் சரி, மிகவும் பிரசித்தம். பிற்காலத்தில் சண்டைக் காட்சிகளில் சிறிய சலிப்பும் தோன்றியது.
சண்டைக் காட்சிகள் பற்றி நம்பியார் என்ன கூறுகிறார்?
“தமிழ்ப் படங்களில் சண்டைக்காட்சிகள் தேவைதானா? என்று சிலர் கேட்கிறார்கள். சண்டைக் காட்சிகளை மக்கள் விரும்புவதால்தான் எடுக்கிறார்கள். சண்டைக் காட்சிகளைக் கதைக்குத் தேவையான இடங்களில் வைத்தால்தான் இயல்பாக இருக்கும். வேண்டுமென்றே திணிக்கக் கூடாது. அவ்வாறு வலுவில் திணிக்கப்பட்ட பல படங்கள் தோல்வியைத்தான் தழுவியுள்ளன. இப்போது வரும் சண்டைக்காட்சிகளை ‘பெயின்’ எடுத்து யாரும் செய்வதில்லை.
அவசர அவசரமாக எடுத்து முடிப்பதாலும் கதைக்குத் தேவையில்லாத இடங்களில் திணிப்பதாலும் ரசிக்க முடிவதில்லை. மற்றபடி இப்போது வந்துள்ள இளம் தலைமுறை நடிகர்கள் அனைவருமே சிறப்பான முறையில் சண்டைக் காட்சிகளைச் செய்கிறார்கள்”.
திரைப்படங்களில் கதாநாயகனாக நடிப்பவர்கள் எல்லாரும் அவர்களுடைய நிஜ வாழ்க்கையிலும் நல்லவர்களாகவே இருப்பார்கள் என்றும் வில்லனாக நடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்களாகவே இருப்பார்கள் என்றும் நினைப்பது பற்றிக் கேட்டபோது கூறுகிறார்:
“என்னுடைய பிஸினஸ் நடிப்பு. இதில் எனக்குக் கிடைத்து வரும் பாத்திரம் வில்லன். கொடுக்கிற ஊதியத்துக்கு எனது வேலையைச் செய்கின்றேன். வில்லனாக நடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்களாகவும் ஹீரோவாக நடிப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்று சொல்ல முடியாது. ஓரிருவர் வேண்டுமானால் சிலர் கூறுவதைப் போல இருக்கலாம். வீரபாண்டிய கட்டபொம்மனை வரலாற்றில் வெள்ளையர்களிடம் காட்டிக் கொடுத்தவர் எட்டப்பன். இதனால் எட்டயபுரத்தில் பிறந்தவர்கள் எல்லாரும் காட்டிக் கொடுப்பவர்கள் என்று நாம் நினைத்தால் அது எவ்வளவு பெரிய தப்போ, அதைப் போலத்தான் வில்லனாக நடிப்பவர்கள் எல்லாரும் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று கருதுவதும். என்னைப் பொருத்தவரை நான் இதுவரை திரையில் போட்டுவந்த வில்லன் வேஷத்தைப் பார்த்துவிட்டுச் சிலர், ‘பாவி, இப்படிச் செய்கிறானே’ என்று சொல்வதைப் பார்த்திருக்கிறேன். அந்த அளவுக்கு என்னுடைய கேரக்டர் அவர்கள் மனதில் பதிந்திருக்கிறது என்பதைத்தான் இது காட்டுகிறது. அவர்கள் ஆழ்ந்து சிந்தித்தால் இவையெல்லாம் ஒரு கனவு, மாயத் தோற்றம் என்பதைப் புரிந்துகொள்வார்கள். என்னைப் பற்றித் தமிழக மக்களுக்கு நன்கு தெரியும். அதனால் நான் அந்த இமேஜைப் பற்றி வருத்தப்பட்டதில்லை”.
நம்பியாரின் தாய்மொழி மலையாளம் என்றாலும் மலையாளத்தில் அவர் நடித்த படங்களிலெல்லாம்கூட டப்பிங் குரல்தான். படித்தது, வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில்தான் என்பதால் தொடக்கத்தில் நடித்த சில மலையாளப் படங்களில் குரல் கொடுக்கப் போக, நல்ல தமிழ் கலந்த மலையாளம் என்பதால் வேண்டாமே என்று கூறிவிட்டனர். நம்பியாரின் மருமகன் தயாரித்த சந்திர பிம்பம் என்ற மலையாளப் படத்தில்கூட இவருக்கு டப்பிங் குரல்தான்.
தொடர்ச்சியாக ஒரே மாதிரி வேஷங்களில் நடித்து வருவது பற்றியும் கேரக்டர் ரோலில் நடிக்க வேண்டும் என்று ஆசையில்லையா? என்றும் கேட்டபோது:
“நல்லவனாக ஹீரோ வேஷத்தில் நடித்தால்தான் கேரக்டர் ரோலா? வில்லன் வேஷம் போட்டு கேரக்டர் ரோல் செய்ய முடியாதா? இன்று படவுலகில் இருக்கும் எத்தனையோ கதாநாயக நடிகர்கள் அன்று வில்லன் வேடத்தில் நடித்துப் புகழ் பெறவில்லையா? கேரக்டர் ரோலை வில்லனாகவும் காமெடியனாகவும் நடித்தும்கூடச் செய்யலாம்”.
எத்தனையோ படங்களில் வில்லனாக நடித்து எவ்வளவோ உயரங்களைத் தொட்டிருந்தாலும், 1982-ல் பாக்கியராஜ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட முகமாக தூறல் நின்னு போச்சு படத்தில் நடித்தார் நம்பியார். இதன் பிறகு நிறைய படங்களில் வில்லன் கெட் அப்பிலிருந்து விடுபட்டு வெவ்வேறு பாத்திரங்களில் நடித்துச் சிறப்பித்தார் அவர்.
மாற்றத்துக்குக் காரணமான தூறல் நின்னு போச்சு பற்றி அப்போது அவரிடம் கேட்டபோது:
“அந்தப் படத்தில் என்னை நடிக்க ஒப்பந்தம் செய்வதற்காக எனது வீட்டிற்கு ஒரு நாள் மாலை வருவதாக பாக்கியராஜ் சொன்னார். அவர் குறிப்பிட்ட நேரம் சரியான ராகு காலம். அந்த நேரத்தில் வர வேண்டாம். ராகு காலம் முடிந்தவுடன் வாருங்கள் என்று கூறினேன். ஆனால், அவர் தனது உதவி இயக்குநருடன் ராகு காலத்திலேயே எனது வீட்டிற்கு வந்தார். கதையைச் சொன்னார். அவர் முதலில் கதை சொல்லும்போது படத்தில் என்னுடைய கேரக்டர் குறைவாகத்தான் இருந்தது. படப்பிடிப்பு தொடங்கியவுடன் எனது கேரக்டர் விரிவாகப் போய்விட்டது. இந்தப் படத்தில் தனக்கு (பாக்கியராஜுக்கு) பெயர் வாங்கிக் கொடுக்கின்ற அளவுக்குப் பல காட்சிகள் இருந்தாலும் பாக்கியராஜ், தான் ஓர் இயக்குநர் என்ற முறையில் அவருக்கு உள்ள முக்கியத்துவத்தைக் குறைத்துக்கொண்டு எனக்குப் பல காட்சிகளில் அதிக ஸ்கோப்பைக் கொடுத்தார். நான் அந்த இடத்தில் நடிகர் பாக்கியராஜைப் பார்க்கவில்லை. டைரக்டர் பாக்யராஜைத்தான் பார்த்தேன். அவரும் படத்தின் மொத்த வெற்றியைத்தான் பார்த்தாரே தவிர, தன்னுடைய தனிப்பட்ட வெற்றியைப் பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பைவிட 10 மடங்கு உழைப்பு அவருடையது. அந்த உழைப்புக்குப் பலன் கிடைத்து இன்று (1982-ல்) படம் அமோக வெற்றி அடைந்துள்ளது.”
நிறைய படங்களில் நடித்தவர்களிடம் எப்போதும் ஒரு கேள்வி கேட்கப்படும். பல நம்பியார் படங்களின் ஹீரோவான எம்.ஜி.ஆரும் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார். நம்பியாரிடமும் அதே கேள்வி, நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துப் பழுத்த அனுபவம் பெற்ற நீங்கள் ஏன் ஒரு படத்தை இயக்கக் கூடாது? நெற்றியடியாக அவர் தெரிவித்த பதில்:
“எனக்கு டைரக்ட் செய்யும் அளவுக்குத் திறமை இல்லை. அதேசமயம் திறமையில்லாதவர்களும் டைரக்ட் செய்கிறார்கள். அதற்காக நான் யாரையும் குறை சொல்வதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எனக்குத் தெரிந்த ஒரே தொழில் நடிப்பு. எனது தகுதிக்கு மேல் உள்ள ஒரு வாழ்க்கையை நான் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இந்த நிமிஷம் வரை நானும் என் குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறோம். நானாக ஒரு கனவு உலகை சிருஷ்டித்துக் கொண்டு சொப்பன வாழ்வு வாழாமல் நிஜமான உலகில் ஓர் அலுவலகப் பணியைப் போல இந்தத் தொழிலைச் செய்துகொண்டிருக்கிறேன்”.
அவர்தான் நம்பியார் - எளிய தோற்றம், தெய்வ பக்தி, திறமை, உயர்ந்த பண்புகள்!
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஜங்கிள் என்றோர் ஆங்கிலப் படம் பல நூறு படங்களில் நடித்திருக்கிறார் நம்பியார்.
நம்பியாருக்குப் பிடித்தது - உடற்பயிற்சி. பிடிக்காதது - பொது விழாக்களில் பங்கேற்பது, தன்னைப் பற்றித் தனக்கு முன்பாகவே புகழ்வது, பிறரைப் பற்றித் தன்னிடம் குறை கூறுவது, தொழிலில் அக்கறை செலுத்தாத நடிகர்கள்.
[நவ. 19 – நம்பியார் நினைவு நாள்]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.