'பொன்னி நதியும் பொங்கல் திருநாளும்’

பொங்கல் பண்டிகை இன்றளவும் கிராமங்களில் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கொண்டாடப்படுகிறது. அதுவும் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் கேட்கவா வேண்டும்...? 
'பொன்னி நதியும் பொங்கல் திருநாளும்’

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே, ஞாபகத்தில் வருவது கிராமங்கள்தான். பொங்கல் பண்டிகை இன்றளவும் கிராமங்களில் உயிரோட்டமாகவும், மண் மணத்தோடும் கொண்டாடப்படுகிறது. அதுவும் நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியில் பொங்கல் பண்டிகை என்றால் கேட்கவா வேண்டும்...? 

பொன்னி நதி பாயும் டெல்டா கிராமங்களில்...  பொங்கல் வருவதற்கு ஒரு மாதம் இருக்கும்போதே, அதாவது மார்கழி பிறந்ததுமே 'பரப்பரப்புத் தொற்றிக் கொண்டுவிடும். அதுநாள் வரையில் பால்கட்டி பச்சையம் பூசி இருந்த நெற்கதிர்கள், பொன்னி நதியின் அளப்பரிய கொடையால் நெற்கதிர்கள் முற்றி தலைசாய்ந்து நிற்கும். காவிரியின் கடைமடை பகுதிகளான கும்பகோணம், மாயவரம் போன்ற பகுதிகளில் கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல் வெளியெங்கும் தங்கத்தை தூவியது போன்று நெற்கதிர்கள் பொன்பூசி நிற்கும் அழகே அழகு!   

கிட்டதட்ட நாற்பது வருடங்களுக்கு முன்னர் பெருவாரியான வீடுகள் ஓடு மற்றும் கூரை வேய்ந்த வீடுகள் என்பதாலும், மண் தரை என்பதாலும் வீட்டு வேலைகள் நிறைய இருக்கும். காவிரி பாசனம் என்பதால், முப்போகம் விளையும் பூமி. சேற்றுக்கும் சோற்றுக்கும் வஞ்சனை இல்லாத கிராமங்களே டெல்டா மாவட்டங்களில் அதிகம்.

வீட்டில் உள்ள தட்டு முட்டு சாமன்களையெல்லாம் வீட்டிற்கு வெளியே கொண்டு வந்து போட்டு விடுவார்கள். சாணம் மெழுகி சும்மா... ஜில்லுன்னு இருந்த தரையெல்லாம் கரண்டியைக் கொண்டு சுரண்டி புது மண் போடுவார்கள். இதற்காகவே ஊரைவிட்டு வெளியே இருக்கும் திடல் மற்றும் களங்களில் (மண் மேடுகளில்) கூடை கூடையாய் மண் எடுப்பார்கள்.

மண்ணை வீட்டின் வெளியே கொட்டி தண்ணீர் விட்டு, நன்றாக சாணி மிதிப்பதுபோல் மிதித்து (ஊரில் உள்ள குஞ்சு குளவாங்களையெல்லாம் இறக்கி விட்டுவிடுவார்கள். அதுங்க 'தையா தக்கான்னு' குதிக்கும்) காவிரி கடை மடை முழுவதும் களி மண் என்பதால் (களி மண் நீரை சேமிக்கும் திறன் கொண்டது), நன்றாக குழைந்து வரும். மண் பிசையும் போதே அதில் உள்ள சிறு கற்கள், சிலாம்பு, தூசி, ஓட்டாஞ் சில்லு (மண் பானை ஓடு) எல்லாம்  நீக்கி விடுவார்கள். மண்ணை சிறு சிறு அளவில் எடுத்து, வீட்டின் தரையில் பூசிக் கொண்டு வருவார்கள். நன்றாக காய்ந்து வரும்போது, கை அளவில் உள்ள தீத்துக்கல்லு (கூழாங்கல்) கொண்டு தரையை தேய்ப்பார்கள். பின்னர் மண் தரை நன்றாக காய்ந்ததும், சாணியைத் திக்காக கரைத்து  தரையை மெழுகி எடுப்பார்கள். தரை கருப்பாக வருவதற்காக வைக்கோலை சிறிய அளவில் கொளுத்தி, அதிலிருந்து கருப்பு சாம்பலை எடுப்பார்கள். அந்த கருப்பு நிறச் சாம்பலை சாணியோடு சேர்த்து கரைத்து தரையை மீண்டும் மெழுகுவார்கள். பின்னர் தீத்துக்கல்லைக் கொண்டு தரையை தேய்க்கத்... தேய்க்க தரை வழவழன்னு., அப்படியே... மொசைக் தரைபோல மாறும். அந்த நேரங்களில் நாம் தப்பித் தவறி கூட வீட்டிற்குள் செல்ல முடியாது. 

பிற்பாடு அரிசியை ஊறவைத்து, ஆட்டுகல்லில் இட்டு அரைத்து, வீடு முழுவதும் அரிசி கோலம் (மாக்கோலம்) போடுவார்கள். எந்த வீட்டு திண்ணையிலாவது உட்கார்ந்தோமென்றால் கை காலெல்லாம் வெள்ளையாகிவிடும். நான் சொல்வது முப்பது நாற்பது வருடங்களுக்கு முந்தைய கதை. இப்போது சிமெண்ட் மற்றும் தரையில் டைல்ஸ் போட்டுவிட்டார்கள். இப்போதெல்லாம் இரவு எட்டு மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. கிராமத்தில் பலர் இப்போது சீரியலில் முழுகிக் கிடக்கிறார்கள். போதாதக்குறைக்கு இப்போது யூடியூப் வேறு..?

மண் போட்டு முடிந்ததும், சுண்ணாம்பை (கிளிஞ்சல் -கடல் மட்டி) ஒரு வாளி போன்ற பெரிய பாத்திரத்தில் இட்டு சுடுதண்ணீர் ஊற்றுவார்கள். தண்ணீர் பட்டதும் அது 'குபு குபு'ன்னு பொங்கத் தொடங்கும். அதைப் பார்க்க, சின்ன பசங்களாகிய எங்களுக்கு ஒரே ஆச்சரியமா இருக்கும். வெந்த சுண்ணாம்போடு வஜ்ஜிரம் கலப்பார்கள். அது மாட்டு கொழுப்பாலானது. கட்டி கட்டியாக ஒரே நாற்றம் அடிக்கும். அதை வாங்கி தனியே அடுப்பில் வைத்து காய்ச்சினால், பிசின் போல் ஆகிவிடும். அதை வெந்த சுண்ணாம்போடு கலந்து சுவருக்கு வெள்ளை அடிப்பார்கள். அப்போதுதான் சுண்ணாம்பு சுவரில் ஒட்டும். பெரிசுங்க வெந்த சுண்ணாம்பை (வஜ்ஜிரம் கலப்பதற்கு முன்பு) எடுத்து, தங்களது சுண்ணாம்பு 'டப்பியில்' அடைத்துக்கொள்வார்கள். அது ஒரு மாசத்துக்கு ஓடும். வெற்றிலையையும் ஊர் வாயையும் மெல்ல...!

சுவற்றுக்கு சுண்ணாம்பு அடிக்க தேங்காய் மட்டை பெஸ்ட். அதை சுத்தியலால் தட்டி, புருஸ் (கிராமத்து பிரஷ்) போன்று செய்துகொள்வார்கள். கூடவே நீலம், பச்சை, செவப்பு, கருப்பு, மஞ்சள் போன்ற கலர்களை வாங்கிவந்து சுண்ணாம்போடு கலந்து வீட்டின் முகப்பில் படம் வரைவதும் உண்டு. இதில் தேர்தல் சின்னங்கள் முக்கிய இடம் பிடிக்கும். இப்போதெல்லாம் அப்படி யாரும் செய்வதில்லை.

பொங்கலின் தனிச் சிறப்பே கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே 'கொடாப்பு' போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான். பெரும்பாலும் எல்லோரது வீட்டிலும் வாழை மரம் இருக்கும். தரையில் குழி தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழை சீப்பை அடுக்கி வைத்துவிடுவார்கள். அதன் மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு பானையை கவிழ்த்தாற்போல் வைத்து மண்ணை கொண்டு மூடி மெழுகி விடுவார்கள். இப்போது மண்பாணையின் சிறு பகுதி மட்டும் வெளியில் தெரியும். அதில் ஒரு ஓட்டையைப் போட்டு நெருப்பு வைத்து காலையிலும், மாலையிலும் ஊதி புகை போடுவார்கள். அந்த மண் பானை முழுவதும் வாழைச் சருகு இருக்கும். அதனால் நெருப்புக் கொண்டு ஊதினால் புகை உள்ளே பரவி காயை பழுக்க வைக்கும். இரண்டு நாள் கழித்து கொடாப்பை பிரித்தால் வாழைக்காய் செங்காயாக பழுத்து இருக்கும். அப்போதே பொங்கல் வந்துவிட்டது போன்ற உணர்வு வந்துவிடும். வாழைக் காய்களை எடுத்து கொடியில் அடுக்கி விட்டால் போதும்....பொங்கல் அன்று காலையில் பழம் பழுத்து விடும். இப்படி இயற்கையான முறையில் வாழைப்பழங்களை பழுக்க வைப்பதானால் உடலுக்கு எந்த தீங்கும் வருவதில்லை. ஆனால் இன்று கார்பைடு கல்லை வைத்து வாழைப்பழங்களை பழுக்க வைக்கின்றனர். இப்படி பழுக்க வைப்பது கெடுதல் என்று தெரிந்தே செய்கின்றனர். மற்றொன்று கரும்பு; இது மட்டும்தான் எந்த கலப்படமும் இல்லாமல் கிடைக்கிறது.

புது அரிசி, புதுப் பானை, புது அடுப்பு என பொங்கல் வைக்க எல்லாமே புதுசுதான். சிலர் வீட்டிற்கு வெளியே பொங்கல் வைப்பார்கள், சிலர் வீட்டு முற்றம் அல்லது வராண்டாவில் பொங்கல் வைப்பார்கள். பொங்கலுக்கு மண் பானையைத்தான் அதிகம் பயன்படுத்துவார்கள். வசதி உள்ளவர்கள் வெண்கலப் பானையை பயன்படுத்துவார்கள். மொத்தம் இரண்டு அடுப்பு செய்வார்கள், ஒன்று வெண் பொங்கலுக்கு மற்றொன்று சர்க்கரை பொங்கலுக்கு. அரிசி, காய்கறிகளை படையளிட்டப் பிறகுதான் பொங்கல் வைப்பார்கள்.

பெரும்பாலும் மஞ்சள் கொத்து எல்லோரது வயல் வரப்பிலும் / தோட்டத்திலும் இருக்கும். இஞ்சி கொத்து கடையில் வாங்கிக்கொள்வர்கள். பொங்கல் பொங்கும் போது "பொங்கலோ... பொங்கல்..." என்று சில்வர் தாம்பாளத்தில் தட்டில் குடும்பமே உற்சாகக் குரல் எழுப்புவார்கள். . பெரும்பாலும் வெண் பொங்கல்தான் முதலில் பொங்கும். அதுதான் சுபீட்சம் என்றும் சொல்வார்கள். பொங்கல் வைத்தப் பிறகு, முறத்தில் வாழையிலையைப் பரப்பி அதில் பொங்கல் வாழைப்பழம் வைத்து சூரியனுக்கு படைப்பார்கள்.  

வெண் பொங்கலை 'நண்ட சோறு'  என்று சொல்வார்கள். அதில் உப்பு இருக்காது. வெறும் பச்சரிசியைப் போட்டு பொங்கி இருப்பார்கள். அதற்கு ஊற்றிக்கொள்ள 'கதம்ப குழம்பு' (பகவான் குழம்பு) கொடுப்பார்கள். இதில் முள்ளங்கி, வாழைக்காய், அவரைக் காய், கருணைக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு,பரங்கிக் காய், செளவ் செளவ், கத்திரிக்காய், உருளை இப்படி இப்படி என்று இருபத்தியொரு காய்கறிகளை கொண்டு இந்த குழம்பு வைப்பார்கள். இதை தாளிக்க மாட்டார்கள். சர்க்கரைப் பொங்கல் வழக்கம்போல்தான். சர்க்கரைப் பொங்கலை அடுத்த நாள் காலையில் தை மாத குளிரில் சாப்பிட்டால் ஜில்லென்று சுகமாக இருக்கும்.

பெரும் பொங்கல் முடிந்து அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். விடியற்காலையிலேயே மாட்டை மேய்ச்சலுக்கு இழுத்துச் சென்றுவிடுவார்கள். இன்று மாடுகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்து விடுவார்கள். மாடுகளை எங்கு வேண்டுமானாலும் மேய்க்கலாம். ஊர் தலையாரி கண்டுகொள்ள மாட்டார். இதுவே வேற நாட்களாக இருந்தால் மாட்டைப் பிடித்து பவுண்டில் அடைத்துவிடுவார்கள். அபராதம் கட்டிதான் மாட்டை மீட்க முடியும்.  இன்று மாட்டுப் பொங்கல் என்பதால் மாட்டை பார்த்து பார்த்து அலங்கரிப்பார்கள். ஆறு குளங்களில் மாட்டை நன்றாக நீச்சல் அடிக்கவிட்டு குளிப்பாட்டுவார்கள். கொம்புகளில் கூர் சீவி கலர் பெயிண்ட் அடிப்பார்கள். மாட்டுக் கழுத்தில் கட்ட புது கழுத்துக் கயிறு, மூக்கனாங்கயிறு, தாம்பு கயிறு என்று பார்த்து பார்த்து வாங்குவார்கள். கூடவே நெட்டிமாலை, பூ மாலை, நெற்கதிர் மாலை என்று மாட்டுக்கு சோடிப்பு ஒரு பக்கம் நிகழும்.

மாடு அடைத்திருக்கும் மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்து, கோலம் போட்டு பரங்கிப்பூ வைப்பார்கள். கொட்டகையின் ஒரு மூலையில் சாணியால் ஒரு தொட்டி கட்டி (கையளவிற்கு) அதில் ஆலம் (மஞ்சள்-சுண்ணம்பு) கரைத்து ஊற்றுவார்கள். அதில் பரங்கி பூ, செவ்வந்திப் பூ, தும்பைப் பூ போன்ற பூக்களைக் கொண்டு அலங்கரித்து விளக்கு ஏற்றி வைப்பார்கள். கூடவே.. ஒரு பெரிய நெற்கதிரை மண்ணோடு பிடிங்கி அந்த தொட்டிக்கு அருகில் வைப்பார்கள். பிற்பாடு மாட்டுக்கு பொங்கல் வைத்து, படையிலிட்டு கோயிலுக்கு மாட்டை அழைத்துச் சென்று கும்பிட்டுவிட்டு மாட்டை அவிழ்த்து விடுவார்கள். மாட்டின் கழுத்தில் கரும்பு, தேங்காய், புதுத்துண்டு போன்றவற்றை கட்டிவிடுவார்கள் முடிந்தவர்கள் அதை கழட்டிக்கொள்ளலாம். தென் மாவட்டங்கள் போல இங்கு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதில்லை. சில இடங்களில் ரேக்ளா ரேஸ், மாட்டுப்பந்தயம் போன்றவை நடத்தப்படும்.

இந்த மாட்டுப் பொங்கல் நாளில் மற்றுமொரு சிறப்பும் இருக்கிறது. அது முன்னோர்கள் அல்லது வீட்டு தெய்வங்களுக்கான வழிபாடு. ஆடு, கோழி, மீன், முட்டை கருவாடு என்று அனைத்துவிதமான அசைவ உணவுகளை செய்து முன்னோர்களுக்கு படையளிடுவார்கள். அதனாலே இந்த நாள் வெகு சிறப்பாக கொண்டாடத்தோடும் உற்சாகத்தோடும் கொண்டாப்படுகிறது. இன்றைய நாட்களில் வேப்பமரத்தின் கிளைகளை ஒடித்து கூராக சிறு சிறு முளைக்குச்சிகளாக சீவி, அதற்கு மஞ்சள் தடவி வீட்டின் வெளியே நாலு மூலைகளிலும் அடிப்பார்கள். இதனால் 'காத்து கருப்பு' அண்டாது என்பது ஒரு நம்பிக்கை இருக்கிறது. கண் திருஷ்டியைப் போக்கும் என்பதால் 'கள்ளிச் செடியை' வீட்டு வாசலில் கட்டித் தொங்கவிடுவார்கள்.

மூன்றாம் நாள் வருவது கன்னிப் பொங்கல். பெருவாரியான இடங்களில் இதை காணும் பொங்கல் என்று சொல்லுவார்கள். கொங்கு வட்டத்தில் இதை பூப் பொங்கல் என்பார்கள். இன்று முறைப்பிள்ளைகள் மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி விளையாடுவார்கள். வெள்ளை வேஷ்டி சட்டை  போட்டுக்கொண்டு நடமாட முடியாது. கொண்டான் கொடுத்தான் முறையுள்ள மாமனுங்கள் ஊருக்குள் வந்தால் தொலைந்தார்கள். தூக்கிக் கொண்டு போய் மஞ்சள் தண்ணீர் அண்டாவில் வைத்து முக்கி எடுத்துவிடுவார்கள். அதிலும் தண்ணீரில் மஞ்சளோடு சுண்ணாம்பு கலந்துவிட்டர்கள் என்றால் தண்ணீர் சிவப்பாக மாறிவிடும். அந்தக் கறை ஆடைகளில் பட்டால் போகாது. அப்படி ஒரு ஏகடியமும், பரிகாசமும் கேலியும்  துள்ளி விளையாடும். மாலை நேரம் நெருங்க...நெருங்க கன்னிப் பெண்கள் எல்லோரும் குழுவாகப் பிரிந்து வட்ட... வட்டமாக நின்று 'கும்மி' அடிப்பர்கள்.  வயதான பெண்கள் கும்மிப் பாட்டு படிப்பார்கள். 

ஒரு மலை உச்சி மலை 
ஒசக்க இருக்கும் சாமிமலை
எங்கங்கோ  மலைய கண்டேன் 
தூக்க வேண்டும் காவடிய 
தேங்காய ஒடைக்க வேண்டும் 
மாவிளக்கு போட வேண்டும் 

-------

ஊரா(ன்).. ஊரான் தோட்டத்தில
ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா
வெள்ளரிப்பழம் வாசத்துக்கு 
வரி போட்டனாம் வெள்ளைக்காரன்
காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி
காயிதம் போட்டனா(ம்) வெள்ளைக்காரன்
தந்தானே...னானானே
னானானே தந்தானே...

கும்மிப்பாட்டு நம்மை வசீகரிக்கச் செய்யும். இன்று தமிழர்கள் கும்மி அடிப்பதை மறந்துவிட்டார்கள். மலையாளிகள் இன்றும் ஓணம் போன்ற விசேஷ நாட்களில் கும்மி கொட்டுகிறார்கள். கேரளத்தில்  தொடர்கிறார்கள்; நாம் விட்டுவிட்டோம்.  

இதைத் தொடர்ந்து சாமி புறப்பாடு மாலையில் இருக்கும். கன்னிப் பொங்கல் தினமான இன்று உழுகுடித் தெய்வமான கன்னியம்மன் வழிபாடு வெகு சிறப்பாக நடைபெறும். காலையிலேயே நாதசுவரம் மேளக் கச்சேரி தொடங்கிவிடும். தலைஞாயிரு, செம்பொன்னார்கோயில், கும்பகோணம் போன்ற ஊர்களில் இருந்து நாதஸ்வர பார்ட்டிகள் வருவார்கள். காலையில் ஆரப்பித்தார்களானால் இரவு எட்டு மணி வரை அடி பின்னியெடுத்து விடுவார்கள். மாவிளக்கு போடுவது, தீ சட்டி ஏந்துவது, அலகு குத்துவது, காவடி, கரகம் எடுப்பது, காவிரி ஆற்றிலிருந்து கரகம் எடுத்து வீதி உலாவருவது உண்டு. அப்போது அருள்வந்து சாமி ஆடும் நிகழ்வு நடைபெறும். வயது வித்தியாசமின்றி சாமி ஆடுவார்கள். வாண வேடிக்கை நடைபெறும். 

ஒவ்வொரு ஊருக்கும் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில் சிறு சிறு வேறுபாடு இருக்கும். பெருவாரியான கிராமங்களில்  மார்கழி தை மாதங்கள் முழுவதும் இறை வழிபாட்டுகுறியதாகவே இருக்கும். மார்கழி மாதம் முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மண்டகப்படி இருக்கும். அவர்கள் அந்த நாளை மாவிளக்கு போட்டு, சாமி அலங்காரம் என்று பிரமாதப்படுத்துவார்கள்.   இப்படியாக 'பொங்கல் விழா' தமிழனின் பாரம்பரியத்துடன் இனிதே நிறைவு பெறும்.

"சொல்லப் போனால் திருவிழாக்கள் தான் மனிதர்களை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. குடும்பத்தையும், உறவுகளையும், நட்பையும் சீரான பாதையில் கொண்டு செல்கிறது. கிராமத்தையும் கிராம மக்களின் ஒற்றுமையையும் போற்றி பாதுகாப்பதில் தமிழர் திருநாளான  பொங்கல் பண்டிகை முக்கியப் பங்காற்றுகிறது. 

பொங்கலோ....பொங்கல்!!

 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com