கையைக் காலைக் குறைச்சுக்கவா முடியும்? ரஜினியால் விஜயகாந்த் பட்ட சங்கடம்!

மறைந்த நடிகர் விஜயகாந்த் செய்த உதவிகளும் பட்ட சங்கடங்களும் பற்றி...
இடிமுழக்கம்!
இடிமுழக்கம்!

இடி முழக்கம் ஓய்ந்துவிட்டது!

தேமுதிக தலைவரும் நடிகருமான மறைந்த விஜயகாந்த் பற்றி இனி எழுத எதுவுமே இல்லை என்கிற அளவுக்கு  அவர் மறைவுக்குப் பின் எழுதியும் பேசியும் முடித்தாகிவிட்டது.

சட்டப்பேரவையில் ஒரு தருணத்தில் அவர் கொண்ட கோபத்தின் எதிர்வினையால் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிந்துவிட்டது அவருடைய அரசியல் பயணம். அவர் மறைந்தபோது மக்களும்கூட அவருடைய அரசியலைப் பொருட்படுத்தவேயில்லை.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கொடைத் தன்மையைப் பற்றி ஊரே பேசியது விஜயகாந்த் பற்றிதான். அவர் உணவளித்தது மட்டுமல்ல. இடது கரம் செய்ததை வலது கரம் அறியாமல் செய்ததும் எவ்வளவோ!

1998, ஆக. 23, 24 - தினமணி நாளிதழ்களில் 'இடம் கிடைத்தும் வழிபிறக்கக் காத்திருக்கும் பி.இ. மாணவன்' என்ற தலைப்பிலும் இன்னும் இரு மாணவர்களின் இல்லாநிலை பற்றியும் செய்திகள் வெளிவந்தன.

பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தும் சேர இயலாத திருச்சி அருகேயுள்ள திருப்பைஞ்ஞீலி என்ற கிராமத்தைச் சேர்ந்த மாணவனைப் பற்றி எழுதியிருந்தேன். மாலையில் சென்னை அலுவலகத்திலிருந்து தொலைபேசி. “இன்று விஜயகாந்த் பிறந்த நாள். தினமணியில் செய்தி வெளிவந்த அனைவருடைய கல்லூரிப் படிப்புக்கான – விடுதிக் கட்டணங்கள் உள்பட- செலவையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நடிகர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார். முழு விவரம், தொடர்பு முகவரி, தொலைபேசி எண்கள் அனுப்பவும்”.

சொன்னபடி செய்தார். ஒரே ஓராண்டு பணம் கட்ட சற்றுத் தாமதமாகிவிட்டது. தகவல் தெரிவித்தவுடன், விஜயகாந்த் அலுவலகத்தில் வருத்தம் தெரிவித்து, உடனே பணம் கட்டிவிட்டார்கள். அந்த மூவரையும் அவர்தான் படிக்க வைத்தார். அவர்களில் நான் எழுதிய மாணவர், படித்து முன்னேறி, பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றித் தொடர்ந்து, தற்போது வெளிநாடு சென்று பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

25 ஆண்டுகளுக்கு முன் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் என்றால்... இன்றைக்கு அந்தத் தொகையின் மதிப்பு எவ்வளவு என்று கூறுவது? இவ்வாறு அவரால் ஆளாக்கிவிடப்பட்டவர்கள் எத்தனை பேர் என யாருக்கும், ஏன் அவருக்கேகூட தெரியாது. சம்பந்தப்பட்டவர்கள் யாராவது சொன்னால் மட்டும்தான் உண்டு.

விஜயகாந்த் நடித்த முதல் படம் தூரத்து இடிமுழக்கம். ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு நடித்த மூன்று படங்கள் – வெளிவந்த பின்னரும் இடிமுழக்கம் வெளிவரவில்லை. ஆனால், அந்தக் காலத்திலேயே உலகப் பட விழாவில் திரையிடப்பட்டது.

‘நான் ஹீரோவா நடிச்ச முதல் படம் அது. ஆனால், பிறகு நடித்த அகல்விளக்கு, நீரோட்டம், சாமந்திப்பூ என மூணு படங்கள் வந்திட்டது. அது வரல. எனக்கு ராசியில்லாததுனாலதான் படம் ரிலீஸாகலேன்னு சொல்லிப்பிடுவாங்களோன்னு ரொம்ப ஃபீல் பண்ணிட்டிருந்தேன். ஆனா, அது லேட்டா வந்தாலும் பிலிம் பெஸ்டிவல்ல கலந்துக்குதுன்னு கேள்விப்பட்டவுடனே இனிமே நடிக்காட்டாக்கூட போகுதுடா. நிம்மதிதான். இது என் வாழ்க்கையிலே கிடைச்ச மாபெரும் வெற்றி’

என்று குறிப்பிட்டிருக்கிறார் விஜயகாந்த், ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்கு அளித்த பேட்டியில்.

ரஜினிகாந்த்தைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்க முடியாதவர்களின் மாற்றாக இருந்தார் விஜயகாந்த் என்பார்கள். ஆனால், தொடக்க காலத்தில் அதுவே அவருக்கு பெரிய பிரச்சினையாகவும் இருந்திருக்கிறது.

விஜயகாந்த் சொல்கிறார்:

‘இனிக்கும் இளமை’யில் என் கிராப்பையும் நடிப்பையும் பார்த்திட்டு, ரஜினி மாதிரி இருக்கார்னு அவுட்டோர் ஷூட்டிங்கில சில ரசிகர்கள் சொன்னாங்க. அப்புறம் நீரோட்டம் படத்துக்கு விமர்சனம் எழுதின சில பத்திரிகைக்காரங்க பேசி வச்சாப்புல முடி முன்னால விழுதுன்னு எழுதினாங்க. என்னடா வம்பா போச்சேன்னு ஹேர் கட் பண்ணிட்டேன். அதோட நடிப்பிலே இருக்கிற ஸ்பீடையும் குறைச்சுக்கிட்டு சட்டம் ஒரு இருட்டறையில ஆக்ட் பண்ணினேன். அப்படி இருந்தும் அந்தப் படத்துக்காகப் படமான முதல் பாடல் காட்சியில நான் நடிக்கும்போது, ரஜினி மாதிரி இருக்குதுன்னுட்டாங்க. என்னதான் பண்றது? முடியைக் குறைச்சுக்கிட்ட மாதிரி கையைக் காலைக் குறைச்சுக்கவா முடியும்?’

சென்னையில் ரோகிணி லாட்ஜில் ஒரு சிறிய அறையில் கல்லூரி மாணவரைப் போலவே இருந்தவர் விஜயகாந்த். அவருடைய முன்னேற்றத்தை மட்டுமே கருதி, உதவியாக அவருடன் இருந்தவர்கள் இப்ராஹிம் (ராவுத்தர்), திருமுருகன் – ஒரே பள்ளியில் உடன் பயின்ற வகுப்புத் தோழர்கள். ஒரு சந்தோஷத்துக்காக என்ன பாடுபட்டிருக்கிறார் விஜயகாந்த்?

‘நான் சினிமாவில் நடிக்கறது குடும்பத்துக்குப் பிடிக்காத்தனாலே பணம் அனுப்ப மாட்டாங்க. நண்பர்கள் உதவியினாலதான் இப்போ இங்கே நான் இருக்கிறேன். ஆனா, சட்டம் ஒரு இருட்டறை வந்த பிறகு என் குடும்பத்திலே கொஞ்சம் நிம்மதி ஏற்பட்டிருக்கிறதாம். நண்பர்கள் கடிதம் எழுதியிருக்காங்க. டைரக்டர் காஜா சார் ஒரு ஏரியாவுக்கு அந்தப் படத்தை வாங்கியிருக்கிறார். டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரிட்ட அவர், நான் அறிமுகப்படுத்தின பையனை நீங்க நல்லா யூஸ் பண்ணியிருக்கீங்கனு சொல்லி சந்தோஷப்பட்டாராம். அவரும் துரை சாரும் வந்து பார்க்கும்படியா என்னிடம் சொல்லியிருக்காங்க. உண்மையிலேயே இருட்டறையிலேர்ந்து நான் வெளிச்சத்துக்கு வந்திருக்கேன்’.

உலகப் பட விழாவில் தூரத்து இடிமுழக்கம் கலந்துகொண்டதையே தன் வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் வெற்றியெனக் கொண்டாடியவர், ரஜினிகாந்த் மாதிரி இருந்துவிடக் கூடாது என்பதற்காக இனிமேல் என்ன, கையைக் காலை வெட்டிக்கொள்ளவா முடியும்? என சங்கப்படப்பட்டவர் பின்னால் புரட்சிக் கலைஞராகப் பெரும் உயரங்களைத் தொட்டார்.

விஜயகாந்த் மறைவின்போது எல்லாரும் நிறைய சொன்னார்கள். புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தினார்கள். யார் மாதிரி இருந்துவிடக் கூடாது என்பதற்காக பெரிதும் மெனக்கெட்டாரோ, அந்த ரஜினிகாந்த் சொன்ன வரிதான் ஹைலைட்:

'வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி, மக்கள் மனதில் நிற்பவர் விஜயகாந்த்!'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com