

தமிழகத்தில் இரண்டு (1937, 1957) இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்கள் வெளிக்காட்டிய இணையற்ற எழுச்சியின் விளைவாக, “இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை அம்மொழி முழுதாக ஆட்சிமொழியாக்கப்படாது; ஆங்கிலம் தொடர்ந்து நாட்டின் அலுவல் மொழியாகத் தொடரும்” என்று பிரதமர் நேரு 1959 ஆம் ஆண்டு வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதிக்குச் சட்டபூர்வ அந்தஸ்து வழங்க, அலுவல் மொழிகள் சட்டம், (Official Language Act, 1963) ஏப்ரல் 27, 1963இல் நிறைவேற்றப்பட்டது.
‘அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இந்தியா குடியரசாக ஆனதிலிருந்து (1950) பதினைந்து ஆண்டுகள் ஆனவுடன் (1965 சனவரி 26 முதல்) இந்தியே முழுமையாக ஆட்சிமொழியாகும் என்றிருந்த நிலையை மாற்றி, அதன்பின்னும் ஆங்கிலத்தைத் தொடர்ந்து அலுவல் மொழியாகப் பயன்படுத்துவதற்கு இடமளிக்கும்வகையில் அலுவல் மொழிகள் சட்டம் 1963 நிறைவேற்றப்படுவதாக’ நேரு அச்சமயத்தில் விளக்கமளித்தார்.
நேருவின் மறைவுக்குப் பிறகு (1964) பிரதமரான லால்பகதூர் சாஸ்திரி ஆரம்பத்தில் இந்தி ஆதரவாளராகவே இருந்தார். ஆதலால், அவரது ஆட்சிக்காலத்தில் -1965இல் - இந்தி ஆட்சிமொழியாகி விடுமோ என்ற அச்சம் தமிழகத்தில் விரைந்து படர்ந்தது. தமிழகமெங்கும் மாணவர்களது ஒன்றிணைந்த, வீறுகொண்ட எழுச்சியால், 1965 சனவரி 25 தொடங்கிப் புதிய வரலாற்றுப் புரட்சியாக மொழிப்போர் வெடித்து தீ பரவியதுபோலத் தமிழகம் கடந்தும் பரவியது. இங்கே உறுதியாக எண்ணிச்சொல்ல இயலாத உயிரிழப்புகள், துப்பாக்கிச்சூடுகள், அரசுத்தரப்பிலிருந்து கட்டவிழ்த்துவிடப்பட்ட இரக்கமற்ற கடுமையான அடக்குமுறைகள் என்பனவற்றால் அதிதீவிரமான மொழிப்போரின் உக்கிரம் தலைநகர் டெல்லியை உலுக்கியது. மொழிப்போரின் கொதிநிலையை நன்குணர்ந்து, அதனைத் தணிக்கும் நோக்கில், நேரு அளித்த உறுதிமொழி செயல்படுத்தப்படும் என மீண்டும் சாஸ்திரியும் வலியுறுத்தி, வானொலி உரைவாயிலாகத் தமிழக மக்களுக்கு அறிவிக்க வைத்தது. அதன்பின் தமிழகத்தில் போராட்டத் தீ தணியும் சூழலுக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், அதன் கனல்கள் அணையாது உயிர்த்தே இருந்தன என்பது விரைவில் (1967) வெளித்தெரிந்தது.
ரஷ்யா சென்றிருந்த லால்பகதூர் சாஸ்திரி, எதிர்பாராது (1966 சனவரி) மறைவடைந்தபின் திருமதி இந்திராகாந்தி பிரதமரானார். அவரது ஆட்சிக்காலத்தில் நாடாளுமன்றத்தில் அலுவல் மொழிகள் சட்டத் திருத்த மசோதா 27 நவம்பர் 1967இல் நாடாளுமன்றத்திற்கு வந்தது. காங்கிரஸ் பெரும்பான்மை மூலம் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு, 8 சனவரி 1968இல் குடியரசுத்தலைவர் ஒப்புதலும் பெற்றது.
அலுவல் மொழிகள் (திருத்தச்) சட்டம் 1967 (The Official Languages (Amendment) Act, 1967) எனப் பெயர்கொண்ட இந்தச் சட்டம், “ இந்தி மட்டுமல்லாமல், ஆங்கிலமும் ஆட்சி மொழியாகத் தொடர” வழிவகுத்தது. இது இந்தி பேசாத மாநிலங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், "இந்த (திருத்தச்) சட்டம் கொடுப்பதை, உடனே மற்றொருகையால் பறித்துக் கொள்வதுபோலச் சட்டத்துடன் சேர்த்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆட்சி மொழித் தீர்மானம் ஒன்றும் உடன்வந்தது.
அந்தத் தீர்மானம் கூறுவது என்ன? அத்தீர்மானம், ‘இந்தியை நாடு முழுவதும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வளர்க்க வேண்டும் என்று கூறியது. குறிப்பாக, மும்மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வலியுறுத்தியது. ‘நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே ஒருமைப்பாட்டையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்த மும்மொழிக் கொள்கையை உருவாக்கி, அதனை எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றது அந்தத் தீர்மானம்.
"இந்தி பேசும் பகுதிகளில் இந்தி, ஆங்கிலம் தவிர, தென்னிந்திய மொழிகளில் ஒன்றையும், இந்தி பேசாத மாநிலங்களில் பிராந்திய மொழி, ஆங்கிலம் தவிர, இந்தியையும் கட்டாயம் கற்றுக்கொடுக்க வேண்டும்" என்றும் விதித்தது. மத்திய அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் கட்டாயம் இந்தியோ, ஆங்கிலமோ அறிந்திருக்க வேண்டும் எனவும் அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.
இதனால், தமிழகத்தில் அணையாதிருந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புக் கனல்கள் மீண்டும் கொளுந்துவிடத் தொடங்கின. மகத்தான 1965 மொழிப்போரின் விளைவாகத் தமிழகத்தில் 1967இல் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தது. முந்தைய போராட்டக்கள வீர்ர்கள் பலர் அண்ணாவின் ஆட்சியில் அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, அரசின் உயரலுவலர்களாக ஆகியிருந்தனர். மாணவர்களின் மொழியுணர்வு எண்ணங்களுக்கு அரணாக நிற்கும் ஆட்சியாக அது அமைந்திருந்ததை தீவிரப் போராட்ட எண்ணங்கொண்ட மாணவத் தலைவர்களில் ஒரு பகுதியினர் கருதுவதாக இல்லை. ஆகவே, அத்தகைய தரப்பு மாணவர்கள் சேர்ந்து 19 டிசம்பர் 1967இல் மீண்டும் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை வெடிக்கச் செய்தனர். முன்பு, 1965இல், இருந்ததுபோல மாணவரிடையே முழு ஒற்றுமை இல்லை. ஆனாலும், இரண்டு நாட்களில் (21-12-1967) போராட்டம் வன்முறை வடிவெடுத்தது.
முதலமைச்சர் அண்ணா மாணவர்களைக் கலந்து பேசி ஆவன செய்யலாம் என்று அழைத்ததையும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ முன்னோடிகள் முதலில் பொருட்படுத்தவில்லை. சிறிதும் பொறுமையிழக்காது, மாணவர்களின் பலகுழுக்களை அழைத்து அண்ணா தொடர்ந்து பல இரவுகள் கலந்துரையாடினார். வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கைகளைப் பாயவிடவேண்டும் எனப் பல கட்சியினர் வலியுறுத்தியபோதும் மாணவர்களிடையே ஒரு உயிரிழப்புகூட நிகழ்ந்துவிடக் கூடாதென்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கரிசனங்காட்டினார் அண்ணா. “போராட்டங்களால் பொதுச் சொத்துக்களுக்கு ஏற்படும் இழப்புகளைக் காலப்போக்கில் சரிசெய்துவிடலாம்; ஆனால் வளருந்தலைமுறை மாணவர்களின் ஒரு உயிர்போனாலும் மீட்டெடுக்க முடியாது என்பதைத் தான் பூரணமாக உணர்ந்து செயல்படுவதாகத்” தாயுள்ளம் காட்டினார் முதலமைச்சர் அண்ணா.
மாநில மாணவர்கள் மீண்டும் இந்தித்திணிப்புக்கு எதிராகப் போர்க்கோலங்கொண்டு நின்ற சங்கடம்தரும் சூழலில், சட்டமன்றத்தின் அவசரக்கூட்டத்தை கூட்டச்செய்தார் அண்ணா. தமிழகச் சட்டப் பேரவை, 1968 சனவரி 23 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி அளவில் மாண்புமிகு பேரவைத்தலைவர் திரு. சி.ப. ஆதித்தனார் தலைமையில் வரலாறு படைக்கக் கூடியது.
கல்வி அமைச்சராக இருந்த மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன்,“1967-ம் ஆண்டு அலுவல் மொழிகள் (திருத்தச்) சட்டத்தையும்,அதைச் சார்ந்த தீர்மானத்தையும் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியதின் விளைவாக இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் நிலைமை குறித்து ஆய்வு செய்தல் வேண்டும்"என்ற தீர்மானத்தை அவைமுன் விவாதத்திற்கு வைப்பதாக அறிவித்தார்.
எதிர்கட்சித் தலைவர் திரு. பி.ஜி.கருத்திருமன், அவரைத் தொடர்ந்து திருவாளர்கள். எ. பாலசுப்பிரமணியன், டாக்டர் எச்.வி.ஹாண்டே, ஏ. ஆர்.மாரிமுத்து, டாக்டர் ஹபிபுல்லா பெய்க், கே.பூவராகன், ம. பொ. சிவஞானம்,க. ர, நல்லசிவன் ஆகியோர் தமது கட்சிகளின் சார்பில் அத்தீர்மானத்திற்குத் திருத்தத் தீர்மானங்களை முன்மொழிந்தனர். அவற்றை முறையே திருவாளர்கள் கே. விநாயகம், என். சங்கரய்யா, கே. சீமைச்சாமி, கோ. பாரதிமோகன், எம். அப்துல்கபூர் சாகிப், ப.மகாதேவன், ஆ. கு. சுப்பையா ஆகியோர் வழிமொழிந்தனர். மாண்புமிகு முதல்வர் அண்ணாவும் தனது திருத்தத் தீர்மானத்தை அவையில் முன்மொழிந்தார்.
விவாதத்தைத் தொடங்கி மாண்புமிகு திரு. இரா. நெடுஞ்செழியன் உரையாற்றும்போது, இந்தி எவ்வாறு சுதந்திர இந்தியாவின் ஆட்சிமொழி என்ற நிலையை அடைந்தது என்பதை,
“நாடு விடுதலை பெற்றதற்குப் பிறகு, அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குகின்றபோது ஆட்சி மொழி எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பற்றி தீர்மானிக்கின்ற நிலைமையில், அந்த முடிவுகள் ஒத்த கருத்தின் அடிப்படையில்........ஒருமித்த மனப்பான்மை என்ற அடிப்படையில் --ஆட்சி மொழிப் பிரிவை- அரசியல் நிர்ணய சட்டத்தில் சேர்த்திருப்பதாக வரலாறு நமக்கு அறிவுறுத்தவில்லை. முடிவுகள் எடுக்கும்போது கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய காலஞ்சென்ற பாபு இராஜேந்திர பிரசாத் அவர்களுடைய ஒருவாக்கின் மூலமாக அது வெற்றி பெறுகின்ற நிலைமை ஏற்பட்டது.
சாதாரணமாக ஒரு கருத்து விவாதிக்கப்பட்டு, இரண்டு பிரிவினர் பிரிந்து சம அளவாக இருப்பார்களேயானால், அந்தக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறவர், தான் அளிக்கின்ற ‘காஸ்ட்டிங்வோட்டை'(Casting Vote) ஏற்கெனவே இருந்து வருகிற ஒரு நிலைக்குத்தான் (Status quo) அளிக்க வேண்டுமே தவிர, புதிய, மாறுபட்ட, நிலைக்கு அளிப்பது மரபு அல்ல என்ற முறை இருக்கிறது. அந்த மரபு மாறிய வகையிலேதான் அரசியல் சட்டத்திலே ‘இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாகும் என்றும், அதுவும் தேவநாகரி வடிவத்தில் இருக்குமென்றும், பதினைந்து ஆண்டுகள் கழித்து அது முழுஆட்சி மொழியாக இருக்கும்’ என்ற நிலைமையும் ஏற்பட்டது.’’
அதனை ‘’மாற்றுவதற்குப் பல முயற்சிகளும் போராட்டங்களும் பல வகையிலே நடைபெற்றுக்கொண்டு வந்தன என்பதை நாம் மிகத் தெளிவாக அறிந்துள்ளோம்.” எனத் தனது உரையில் விளக்கியதுடன்,பேரவையை அவசரமாகக் கூட்டித் தற்போதைய தீர்மானம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, திருத்தத் தீர்மானங்களை முன்மொழிந்தவர்கள் அனைவரும், கூடுதலாக மாண்புமிகு திரு. மு. கருணாநிதி, திருவாளர்கள் இராம. அரங்கண்ணல், சோ. அழகர்சாமி, என், சங்கரய்யா, கே. பி. எஸ். மணி,கே. போஜன், டி. மார்டின்,செ. பாலசுப்பிரமணியன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி ஆகியோரும் தங்களது கருத்துக்களை எடுத்துரைக்கவும் குறுக்கீடுகள்மூலம் விளக்கங்கள் கேட்கவும் தாராளமான வாய்ப்பு வழங்கப்பட்டது.
நிறைவாக,மாண்புமிகு முதலமைச்சர் அண்ணா, தனக்கு முன்னர் அவையில் கருத்துரைத்தவர்கள் அனைவருக்கும் உரிய பதில்கள் அளித்து, தமது திருத்தங்களை விளக்கி, உணர்ச்சிகரமாக வழங்கிய நீண்டதொரு - சுமார் ஒன்றரை மணிநேர- உரை என்றும் மக்கள் நினைவில் நிலைக்க உரியது.
மாணவர்கள் மீது அவர்நெஞ்சிற்கொண்டிருந்த நிறைநேயத்தை; தான் அதிகாரமுள்ள முதலமைச்சர் என்று ஒருசிறுகணமும் கருதாது, பாசமிகு தோழனாக மாணவர்கள்பால் வெளிப்படுத்திய கனிவைப், பரிவை; எரிச்சலூட்டும் வகையில் மாணவர்கள் தன்னிடம் நடந்துகொண்டபோதும், ஒரு மூத்த சகோதரனைப் போல அவர்களிடம் காட்டிய அளப்பரிய பொறுமையை; மாணவர்களுக்கு உதவுவதே ஆட்சிப் பொறுப்பிலுள்ள தன் கடமை எனக்காட்டிய நல்லுறவை, நகரா உறுதியை வெளிப்படுத்திய, ஒளிவு மறைவற்ற அன்பூறித் ததும்பும் அபிமானச் சொற்களால் வேயப்பட்ட உரை அது.
இதோ, கேட்போம், அவர் உரைத்ததை, அவர் மொழியிலேயே:
‘’1965-ல் நடந்த மாணவர்கள் கிளர்ச்சிக்கும் இப்போது நடப்பதற்கும் இடையே இருக்கின்ற வேற்றுமைகளை நாம் மறந்து விடுகின்றோம். அப்போது நம் மாணவ நண்பர்கள், முதலமைச்சர் திரு. பக்தவத்சலம் அவர்களைப் பார்க்க வேண்டுமென்று சொன்னதற்குப்பேட்டி கிடைக்கவில்லை; ஆனால் இப்போது, எனக்கிருக்கிற நிலை- சில மாணவர்களைப் பார்க்க வேண்டுமென்று நினைக்கிறேன், அவர்கள் எனக்குப் பேட்டி கொடுக்க மறுக்கிறார்கள். ஏன் அவர்களிடம் பணிந்து செல்கிறேன் என்றால், அவர்கள்உணர்ச்சிக்கு நான் மதிப்பு அளிக்கிறேன். அவர்கள் நிரந்தரமாகக் கலவரம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் உள்ளத்தில் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.
நம் மதிப்புமிக்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராஜ் அவர்கள், ‘பெரியோர்கள் சரியாக வழி காட்டாவிட்டால் மாணவர்கள், பாவம், என்ன செய்வார்கள்?’ என்று என்னிடத்தில் கேட்டார்கள். அந்த முறையில்,... அவர்கள் விஷயத்தில் மிகுந்த பரிவோடு,மிகுந்த அக்கறையோடு நடந்து கொள்ளவேண்டுமென்று, இதுவரை ஐந்து இரவுகளாவது மாணவர்களிடம் பேசுவதில் செலவழித்திருப்பேன்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவர்கள் மட்டுமல்ல, காங்கிரஸ் மேடையில் பேசும் மாணவர்கள் எல்லாம் கூட வந்தார்கள். 20. 25 மாணவத்தோழர்கள் வந்தார்கள். வந்தவர்கள் என்னைப் பார்த்து 15, 20 ஆண்டுகள் அமைச்சராக இருந்து, டிபார்ட்மெண்ட் தலைவர்களைக் கூப்பிட்டு அது என்னவாயிற்று?இது என்னவாயிற்று? என்று கேட்பது போல், ‘உங்கள் மொழிக்கொள்கை என்ன? இதுபற்றி உங்கள் திட்டம் என்ன?தெளிவாகச் சொல்லுங்கள்’ என்றார்கள். நான் ரொம்ப சந்தோஷப்பட்டேன் ஏனென்றால் அவர்கள் நாளைக்கு ஒரு வேலைக்குப்போய் அவர்களை மேலதிகாரிகள் இதே குரலில் கேட்டால், அன்று இது நினைவிற்கு வரும் என்று நான் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு என்னாலான விளக்கங்களைக் கொடுத்தேன். இதுதான் 65-ல் இருந்த நிலைக்கும் 67-ல் இருக்கிற நிலைக்கும் உள்ள வித்தியாசம்.
எதிர்க்கட்சியினர், “மாணவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகவா மாற்றவேண்டும்? என்று கேட்கிறார்கள். மாணவர்களுக்காகவா இதைச் செய்வது?.” என்கிறார்கள்.
மாணவர்கள் யார்? அவர்கள் நம் ரத்தத்தின் ரத்தம். அவர்கள் நம் குடும்பத்துப்பிள்ளைகள். அவர்கள் நம் எதிர்காலத்தின் உருவங்கள். அவர்கள் ஒன்றை விரும்புகிறார்கள் என்றால் என்னால் நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய அளவிற்கு நான் நிறைவேற்றிக் கொடுக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டியது ஜனநாயகக் கடமை என்று கருதுகிறேன்.” என உருக்கம் காட்டினார். (பார்க்க:தமிழக சட்டப் பேரவை வெளியீடு, தொகுதி VII – ‘மொழிப் பிரச்சினையின் மீதான விவாதம்’, சனவரி 23, 1968, பக்.130-133)
உரையின் நிறைவில்,வரலாற்றுச் சிறப்புமிக்க கீழ்க்காணும் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
“பல்வேறு மொழி-பண்பாடு-நாகரீகங்களைக் கொண்ட இந்தியாவில், ஒரு வட்டார மொழியை மட்டும் ஆட்சி மொழி ஆக்குவது இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கலைத்து. ஒரு மொழிப் பகுதி மற்ற மொழிப் பகுதிகளை அடிமைகொள்ளச் செய்திடும் என்று உணரப்படுவதால், தமிழும், மற்ற தேசீய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியல் சட்டம் திருத்தப்படவேண்டும். அதுவரையில்,ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்துவர வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு திருத்தப்பட வேண்டும் என்று இந்த மன்றம் வற்புறுத்துகிறது.
இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள மொழிச் சட்டம் இந்த இலட்சியத்துக்கு ஒத்ததாக அமையவில்லை என்று கருதுவதுடன், இந்தியா பிளவுபடவும் அரசாங்க நிர்வாகத்தில் இருப்பவர்களிடையே, வெறுப்பு, குழப்பம், வேதனைகள் மலிந்த இருபிரிவுகளை உண்டாக்கிடவும் வகை செய்கிறது என்று கருதுவதோடு, முதலில் குறிப்பிட்ட மொழி உரிமை இலட்சியம் நிறைவேறுவதற்கான முறையில் தொடர்ந்து வலியுறுத்தி வருவது எனத் தீர்மானிக்கிறது.
மொழித் திருத்தச்சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இந்தி பேசாத பகுதி மக்களுக்கு பளுவையும் சங்கடத்தையும், புதிய பளுவையும் உண்டாக்குகிறபடியால், அந்தத் தீர்மானம் அமலாக்கப்படக்கூடாதென்பதில் பல அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்திருப்பதைக் கவனத்தில்கொண்டு, மத்திய அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தை நீக்கி வைத்து இந்தி பேசாத மக்களுக்குச் சங்கடமும், பளுவும் ஏற்படாத ஒரு முறையை வகுக்க வேண்டுமென்று இந்த மன்றம் வவியறுத்துகிறது. மொழிப்பிரச்னை பற்றி ஆய்ந்தறியவும். மொழிச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் விளையும் தீங்கை அகற்றும் வழி காணவும் எல்லா அரசியல் கட்சித்தலைவர்களையும் கொண்ட ஒரு மேல்மட்ட மாநாட்டை இந்தியப் பேரரசு கூட்டவேண்டும் என்று இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.
மொழிச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இந்தி பேசாத பகுதியினருக்குப் பளுவையும் சங்கடத்தையும் தருவதுடன், மும்மொழித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துவதன் மூலம் இந்தித் திணிப்பை நடத்தி, இறுதியில் இந்தியையே ஆட்சிமொழியாக ஆக்கிவிடுவது என்ற நோக்கத்துடன் அமைந்திருக்கிறது என்று இந்த மன்றம் கருதுகிறது.
மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை இந்தமன்றம் ஏற்க மறுக்கிறது.
மத்திய அரசின் மொழித் தீர்மானத்தை இந்த அரசு செயல்படுத்த மறுக்கிற வகையிலும் தமிழக மக்களும், மாணவர்களும் வெளியிட்டுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிற முறையிலும், தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இம்மன்றம் தீர்மானிக்கிறது.
என். சி. சி. முதலிய அணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி ஆணைச் சொற்களை நீக்கிவிடுவது என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தால், என்.சி.சி. போன்ற அணிகளைக் கலைத்துவிடவும் இந்த மன்றம் தீர்மானிக்கிறது.
தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாடமொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும்; நிர்வாக மொழியாக பல்வேறு துறைகளிலும், ஐந்தாண்டுக் காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்றும் இம்மன்றம் தீர்மானிக்கிறது.
அரசியல்சட்டத்தில் இந்திக்கு பிரத்தியேக அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிறமொழிகளுக்குக் கீழ்நிலை அளிக்கும் ஷரத்துக்களெல்லாம், எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்படவேண்டும்.
8-வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும், மத்திய அரசு சமமாக நிதி வசதிகளை வழங்க வேண்டும்.’’ என்று இந்த விரிவான, உறுதி கொண்ட, உரிமை முழங்கிய ‘தீர்மானம்–1968 முதல் இன்றுவரை நிலைபெற்று, யாரும் அசைத்துப்பார்க்க எண்ணக்கூட இயலாத திண்மை கொண்டிருக்கும் தீர்மானம் –சட்டமன்றத்தில் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறியது. (ஆதரவு அளிக்க விரும்பாதவர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.)
அண்ணா 1968ல் நிறைவேற்றி நிலைக்கச்செய்துள்ள இந்தத் தீர்மான வேரை இறுகப் பற்றி நின்றுதான், ஒன்றிய அரசு 2020ல் அறிமுகப்படுத்திய இந்தியாவின் புதிய கல்விக் கொள்கையை(NEP 2020), அதில் குறிப்பிடப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு – பலஆயிரங்கோடி ரூபாய் நிதிமறுப்பை, இழப்பைத்தொடர்ந்து எதிர்கொண்டு வரும் நிலையிலும் உறுதியாக ஏற்க மறுத்து வருகிறது.
பற்றுந்தழல்மீது பசுநெய் ஊற்றுவதுபோல, "மேலும் ஒரு பாரதிய பாஷா கற்றுக்கொள்ளுங்கள்" என்ற ஒன்றிய அரசு முன்னெடுப்பின்கீழ், நாடெங்கும் உயர்கல்வி நிலையங்களில் 2026 கல்வி ஆண்டு முதல், மும்மொழித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமாம். இதற்கான சீண்டல் அறிவுறுத்தல் ஒன்றை- (D.0.No.F.1-2/2023BharatiyaBhasha)–கடந்த மாதம், டிசம்பர் 3,2025இல், விரைவில் காலாவதியாகக் காத்திருக்கும் பல்கலைக்கழக நிதியுதவிக்குழு(UGC), ஓசையின்றி வெளியிட்டுள்ளது. வழக்கம்போல ஆளுநர் அரசின் உரையை சட்டப்பேரவையில் வாசிக்காமல் 20-1-2026இல் வெளியேறினாரல்லவா? அவ்வுரையில்(பக்.60-61, பாரா75), தீ பரவும் சூழல்களைத் திரும்பவும் விளைவிப்பதாகவே உள்ள UGCயின் இந்த நடவடிக்கைக்கு அண்ணாவின் மரபில், தமிழ்நாடு அரசின் வலிமையான, உறுதியான எதிர்ப்பு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எஃகு அரணாக 58 ஆண்டுகளாக, இருக்குதிங்கே அண்ணாவின் 1968 இருமொழிக்கொள்கைப் பிரகடனம். எப்பக்கம் நுழைந்துவிடும் இந்தி? எப்போதும் தப்பாது தடுத்துநிற்கும் தமிழ்நாடு.
(இருமொழிக்கொள்கைத் தீர்மானத்தின் வரலாற்று முக்கியத்துவம் கருதித் தமிழக சட்டப் பேரவை வெளியீடு, தொகுதி VII –‘மொழிப் பிரச்சினையின்மீதான விவாதம்’, சனவரி 23, 1968,பக் 150- 152வரை உள்ளது உள்ளபடியே வழங்கப்பட்டுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகள் குறித்துக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள செய்திகள், பெயர்களுக்கும் ஆதாரம் அவ்வெளியீடே.)
**
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.