வரவேற்பு பெறாத சுற்றுச்சூழல் சேவை!
சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது; மாறாக எதிர்ப்புதான் வரும். அதுவும் அவர்கள் பெண்களாக இருந்துவிட்டால்...


ஒரு சமூகம் பல தளங்களில் இயங்குகிறது. வேளாண்மை, சுகாதாரம், கல்வி, பெண்கள் முன்னேற்றம், முதியோர் நலன், சமத்துவம், ஆன்மிகம், சுற்றுச்சூழல், மருத்துவம், வறுமை ஒழிப்பு என்று எண்ணற்ற தளங்கள் உள்ளன. ஒவ்வோர் தளத்திலும் பல சமூக ஆர்வலர்கள் ஓசையின்றி பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அரசு உதவிபெறும் அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள், தன்னார்வலர்கள் என்று பலரும் பல நிலைகளில் தங்கள் பங்களிப்பை அளிக்கின்றனர்.
இந்தப் பணிகள் பெருவாரியான மக்களுக்குப் பலனளிப்பதாக இருக்குமானால், அதிலும் உடனே பலனளிக்கும் என்றால், அந்த ஆர்வலர்களுக்கும் அவர்களது பணிகளுக்கும் மக்களுடைய ஆதரவும் அரசின் ஆதரவும் எளிதில் கிடைக்கும். அந்த வகையில், பசுமைப் புரட்சி, வெண்மைப் புரட்சி, இலவச மருத்துவ முகாம்கள், மருத்துவக் காப்பீடுகள், மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள், பெண்களுக்கு சுய உதவிக் குழுக்கள் அமைத்தல், கோயில்களில் அன்னதானம் வழங்குதல், கோயில் விழாக்கள் நடத்துதல் போன்ற சமூக நலப் பணிகள் மிகுந்த வரவேற்பைப் பெறுகின்றன.
இந்தப் பணியைச் செய்யும் ஆர்வலர்கள் தங்கள் வீடு, அலுவலகப் பணிகளையும் பார்த்துக்கொண்டு, நிதி திரட்டி, பல நேரங்களில் தங்கள் கைக்காசையும் செலவழித்து அயராமல் பாடுபடுகிறார்கள். அரசும் மக்களும் ஒத்துழைப்பதால் இவர்களது பணி எளிதாகவும் சுமுகமாகவும் நடைபெறுகிறது. இந்த ஆர்வலர்களுக்கு அங்கீகாரம் கிடைக்கிறதோ இல்லையோ, அவர்களுக்கு இந்தச் சமுதாயத்துக்கு ஒரு நல்ல காரியம் செய்தோம்' என்னும் மனநிறைவு கிடைக்கிறது!
'சுற்றுச்சூழல்' என்று ஒரு தளம் இருக்கிறது; அதில் மட்டும் இத்தகைய சுமுகமான சூழல் இல்லை. 'சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்று ஒரு பாவப்பட்ட கூட்டம் ஒன்று உள்ளது. அரசும் மக்களும் இவர்களை எதிரிகளாகவே பார்க்கிறார்கள். இவர்கள் பயணிக்கும் பாதை மட்டும் முள்பாதையாக இருக்கிறது.
ஒரு கிலோ பிரியாணி வாங்கினால் கால் கிலோ பிரியாணி இலவசம்' என்று ஒரு கடை அறிவித்தால் மக்கள் கூட்டம் அங்கே ஓடுகிறது. உடனே'வயிறு புடைக்கச் சாப்பிடலாமே! ஒரு மருத்துவ முகாம் நடக்கிறது என்றால் இலவசமாக ஏதோ சில மாத்திரைகள் கிடைக்கலாம் என்று அங்கும் மக்கள் சேருவார்கள். கோயிலிலோ வேறு ஏதாவது பொது இடத்திலோ ஏதோ ஒரு தன்னார்வ அமைப்பு அன்னதானம் வழங்குகிறது என்றால், அங்கு கூடும் கூட்டம் சொல்லி மாளாது. 'இலவசமாக மரக்கன்றுகள் தருகிறோம். உங்கள் வீட்டின் முன் நட்டு வளருங்கள் என்று ஒரு சுற்றுச்சூழல்அமைப்பு சொன்னால், ஒருவர்கூடப் போகமாட்டார்கள்!
அந்த மரக் கன்றால் உடனடிப் பலன் ஒன்றுமில்லையே!
உடனடியாகப் பலன் கிடைக்காது என்பதால், இது நமக்குத் தேவையில்லை' என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் அப்படி நினைப்பது அரசுக்கு வசதியாக இருப்பதால் அரசும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பணிகளை வரவேற்பதில்லை.
சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் பணிகள் உடனடி நன்மைகள் தராது என்பது உண்மையே. அதேபோல் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் விளையும் தீமைகளும் உடனடியாகத் தெரியாது! மேலும், அவ்வாறு விளைந்துவிட்ட தீமைகளை உடனடியாகச் சரி செய்யவும் முடியாது! இந்த உண்மையை அரசும் சரி மக்களும் சரி அறிந்து கொள்ளவில்லை. இந்த உண்மை தெரிந்தும் மனம் தளராமல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் அமைப்புகள் பலவும் தங்கள் பணிகளை எதிர்ப்புகளுக்கிடையே செய்துகொண்டு இருக்கின்றன. அப்படிச்செய்கிறபோது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு சுற்றுச்சூழல் விதிமுறை மீறப்படும்போது பொதுமக்கள் அதை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதில்லை. அப்படியே கொண்டு வந்தாலும் அரசு எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இங்குதான் முக்கியத்துவம் பெறுகிறார்கள். அவர்களாலும் பெரிதாக ஒன்றும் செய்துவிட முடியாதுதான். என்றாலும், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற நிலையிலிருந்து சிலர் சுற்றுச்சூழல் போராளிகளாக' மாறுகிறார்கள். நீதிமன்றத்தை நாடுகிறார்கள்; பெரும்பாலான சுற்றுச்சூழல் விதிமீறல்கள், நீதிமன்றங்களில் பொதுநல வழக்குகளாகத் தொடுக்கப்பட்டு, அங்குதான் தீர்வு கிடைக்கப் பெறுகின்றன.
நீதிமன்றத்தில் நேரடியாக ஒரு வழக்கு தொடர முடியாது. முதலில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்குப் புகார் கடிதங்கள் அனுப்ப வேண்டும். அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். மாவட்ட ஆட்சியரிடம் பல நாள்கள் காத்திருந்து, குறை கேட்கும் நாளில் நேரில் சென்று மனு அளிக்க வேண்டும். பல நாட்களுக்குப் பிறகு யாரோ ஒரு கீழ்நிலை அதிகாரி மனுதாரரைத் தொடர்புகொண்டு சில கேள்விகள் கேட்பார். மீண்டும் மீண்டும் சென்று மனு கொடுக்க வேண்டும். அதற்கும் பலனிராது.
தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கடிதம் அனுப்பிக் காத்திருந்தால், 29-ஆவது நாள் பதில் கடிதம் வரும். (30 நாள்களுக்குள் பதிலனுப்ப வேண்டியது கட்டாயம்).
இதற்கிடையில் சுற்றுச்சூழல் மீது அக்கறையுள்ள ஒரு வழக்குரைஞரைத் தேடிப் பிடித்து வைத்துக்கொள்ள வேண்டும். முதன்முதலில் அனுப்பிய புகார் கடிதத்திலிருந்து எல்லாவற்றின் பிரதிகளையும் தேதிவாரியாக அடுக்கி, இருக்கும் எல்லா ஆதாரங்களையும் அவருக்கு அனுப்ப வேண்டும். இதற்கே ஓராண்டுக்குமேல் ஆகிவிடும். வழக்குரைஞர் முன்கூட்டியே எச்சரிப்பார் ’ஆதாரங்கள் போதவில்லை என்று கூறி நீதிமன்றம் வழக்கை அபராதத்தோடு தள்ளுபடி செய்யக்கூடும்' என்று. அதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் தொடர்பான தரவுகள் அவ்வளவு எளிதில் கிடைத்து விடாது. அதிலும் வனம், நீர் ஆதாரங்கள் குறித்த தரவுகளுக்கு மிகப் பழைமையான ஆவணங்கள் தேவைப்படும். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளலாமே! பெரும்பாலும் மாட்டார்கள். பழைய அரசாணைகள், ஆவணங்கள் ஆகியவற்றைப் பெறவேண்டும். அதற்கு அரசு அதிகாரிகள் உதவ மாட்டார்கள். உதவினால் அரசின் மீது தவறு என்று ஒப்புக் கொள்வது போலாகுமே! பொதுமக்கள் வாயே திறக்க மாட்டார்கள். வழக்கைக் கையாளும் நீதிபதியோ, வாதாடும் வழக்குரைஞரோ விதிமீறல் நடைபெற்ற இடத்தை நேரில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இருக்கும் ஆதாரங்களும் வழக்குரைஞரின் வாதத் திறமையுமே வழக்கின் வெற்றி -தோல்வியை நிர்ணயிக்கும். இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்துத் தான் தீர்ப்பு கிடைக்கும். அதற்குள் விதி மீறலுக்குட்பட்ட இடம் சரி செய்ய முடியாத அளவுக்கு சிதைந்து போயிருக்கும்.
கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் செயல்பட்ட சட்ட விரோதச் செங்கல் சூளைகள் குறித்து ஒரு சுற்றுச்சூழல் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தது. அவ்வியக்கத்தின் விடாமுயற்சியால் நீதிமன்றம் அவற்றை மூட உத்தரவிட்டது. உடனே செங்கல் சூளைகள் எல்லாம் கோவையின் பிற மலைப் பகுதிகளுக்கு இடம்பெயர ஆரம்பித்தன. சுற்றுச்சூழல் போராளிகள் தனித்தனியாக வெவ்வேறு வழக்குகள் தொடர்ந்தனர். தொண்டாமுத்தூர் பகுதியில் இவற்றுக்குக் கட்டுமானம் ஏற்படுத்தியபோதே அவற்றையெல்லாம் புகைப்படம் எடுத்து, இன்னும் பல ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியர், வனத் துறை, சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை, கிராம நிர்வாக அலுவலர் என்று பலருக்கும் புகாரனுப்பியும் பலனில்லை.
வேறு வழியில்லாமல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன். தீர்ப்பு வந்த பிறகு, அதிகாரிகள் அலறி அடித்துக் கொண்டு வேலை செய்தனர். இதுதான் நிதர்சன உண்மை!
ஆக, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு எங்கிருந்தும் உதவி கிடைக்காது; மாறாக எதிர்ப்புதான் வரும். அதுவும் அவர்கள் பெண்களாக இருந்துவிட்டால் மிக அதிக சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். வீட்டுப் பொறுப்புகளை முடித்து விட்டுத்தான் இந்தப் பிரச்னையை எடுக்க முடியும். சுற்றுச்சூழல் எனும்போது அதிக அளவில் வெளியிடங்களுக்குப் பயணம் செய்ய வேண்டியிருக்கும். பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தக் காரணங்களாலேயே நம் நாட்டில், ஏன் உலகிலேயே விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் பெண் சுற்றுச்சூழல் போராளிகள் இருக்கிறார்கள்.
இத்தனை சிரமங்களுக்கிடையில் இவர்கள் ஏன் தொடர்ந்து செயல்படுகிறார்கள்? பிறருக்குக் கிடைக்காத வாய்ப்பு தங்களுக்குக் கிடைத்திருக்கிறதே என்றே நன்றியுணர்வால் செய்கிறார்கள்! எதற்காகச் செய்கிறார்கள்? தாங்களும் செய்யவில்லையென்றால் பிறகு யார் செய்வார்கள் என்ற ஆதங்கத்தால் செய்கிறார்கள்! யாருக்காகச் செய்கிறார்கள்? இது குறித்தெல்லாம் சற்றும் கவலையில்லாமல் திரைப்படங்களிலும், வலைதளங்களிலும், போதையிலும், மூழ்கிக் கிடக்கும் அடுத்த தலைமுறையினருக்காகச் செய்கிறார்கள்! அவர்கள் காற்றுக்கும் தண்ணீருக்கும் உணவுக்கும் என்ன செய்வார்கள் என்ற அச்சத்தால் செய்கிறார்கள்!
'இந்தப் பூமி நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்ற சொத்து. இதைப் பாது காத்து நமது அடுத்த தலைமுறையினரிடம் ஒப்படைக்க வேண்டியது நமது கடமை' என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டால் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் சுமை குறையும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...