ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!தமிழகத்தில் 600 எம்பிபிஎஸ் இடங்கள் குறையக் காரணம் என்ன? அருண்ராஜ் விளக்கம்3- வது நாளாக தங்கம் விலை குறைந்தது! வெள்ளி விலையும் குறைவு!சென்னை மாநகராட்சியின் ரூ. 700 கோடி டெண்டர்கள் ரத்து! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு! பிற்பகலில் விசாரணை! அரசுப் பள்ளி மாணவியிடம் ஒரு அக்காவைப் போலவே பேசினார் கீர்த்தனா! அமைச்சர் ராஜ்மோகன் பதில்எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

மயக்கும் பாடல் வரிகளா? மனம் வருடும் இசையா? முதலீடு தந்த ‘மாஸ்டர் ரெக்கார்டிங்’கா? சட்டம் என்ன சொல்கிறது?

பதிப்புரிமைச் சட்டம், திருத்தம், நீதிமன்ற ஆணைகள் குறித்த சட்டப் பார்வை....

News image

இளையராஜா - தினமணி

Updated On :8 ஜூலை 2026, 3:36 pm IST

இசையும் இசையிணைந்த பாடலும் ஒரு மந்தமான பொழுதைக்கூட ஒளிரச் செய்து, மனதை வருடி மகிழ்வைக் கூட்ட வல்லவை. ஆனால், அதே பாடல், நீதிமன்றங்களில் பதிப்புரிமை முரண்பாடுகள் குறித்த வழக்குகளின் மையமாக மாறும்போது சிக்கலான முன்வைப்புகளும், மாறுபட்ட தீர்ப்புகளும் விளைகின்றன; இதனால் குழப்பமான நிலைகள் விரிகின்றன. 

தற்காலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் (பல பில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள, உலகளாவிய மிகப்பெரும் வணிகமாக இசை விகசித்துள்ளது.

இந்தியத் திரையிசை வணிகத்தில், 1957இல் பதிப்புரிமைச் சட்டம் (Copyright Act) அமலுக்கு வந்தது முதல் திரையுலகை உலுக்கி வரும் பல கேள்விகள் எழுந்துள்ளன. திரைப்படப் பாடல்களின் உண்மையான உரிமையாளர் யார்? பெரும் பணத்தை முதலீடு செய்த தயாரிப்பாளரா? இனிய வரிகளை எழுதிய பாடலாசிரியரா? பாடலுக்கு இதயம் தொடும் மெட்டமைத்த இசையமைப்பாளரா? என்ற கேள்விகளுக்கு - 1957 முதல் 2012 வரை -   தெளிவான தீர்வுகள் எட்டப்படாமலே கழிந்தது. 

நீதிமன்றத் தீர்ப்புகளின் போக்கு 2012 வரை பண முதலீடு செய்த தயாரிப்பாளர்களுக்குச் சாதகமாகவே இருந்து வந்தது. இவ்வாண்டு தில்லி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள மூன்று தீர்ப்பாணைகளின் மூலம் முன்குறிப்பிட்ட கேள்விகளுக்கு மிகத் தெளிவான, சட்ட விளக்கம் வழங்கப்பட்டுள்ளதாகவே பதிப்புரிமைச் சட்டக் களத்திலுள்ளோர் கருதுகிறார்கள்.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கும் சரிகம (Saregama India Ltd  அதன் முந்தைய பெயர்: ‘த கிராமபோன் கம்பெனி ஆஃப் இந்தியா லிமிட்டெட்’) நிறுவனத்திற்கும் இடையே சில காலமாக நிலவி வரும் சட்டப் போராட்டமானது இந்தியப் பதிப்புரிமைச் சட்டம்,1957 மற்றும் 2012 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் எல்லைகளைச் சோதிக்கும் களமாக மாறியுள்ளது. திரைப்படப் பாடல்களிலுள்ள இசைக்கான ராயல்டி (Royalty) உரிமையைக் கடந்து, பாடல்களை (இசையுடன்) தனிப்பட்ட முறையில் பிற தளங்களுக்கு (Platforms) விற்கவோ அல்லது மறுபதிப்பு (Recreation) செய்யவோ இசையமைப்பாளருக்குத் தனித்த, முழுமையான அதிகாரம் உள்ளதா என்ற விவாதம் தற்போது நீதிமன்றத்தில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

இந்த விஷயங்களில் சரியான புரிதல் பெற, 'இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி லிமிட்டெட்' (Indian Performing Right Society Ltd. - ஐ.பி.ஆர்.எஸ்.)  அமைப்பின் சட்டப்பூர்வ அந்தஸ்து; 2012 ஆம் ஆண்டில் பதிப்புரிமைச் சட்டத்தில் ஏற்பட்ட முக்கிய திருத்தங்கள்; சட்டப்பிரிவு 13(4)-இன் பாதுகாப்பு ஆகியவற்றின் பின்புலத்தில்  சமீபத்திய தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் இசையமைப்பாளர் இளையராஜாவின் ‘தன்னிச்சையான செயல்பாடுகள்’ எவ்வாறு நீதிமன்றத்தால் ‘சட்ட எல்லை மீறல்’ (Overstepping) எனப் பார்க்கப்படுகிறது என்பதைப் பதிப்புரிமைச் சட்டம், நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியன காட்டும் வெளிச்சத்தில் நின்று  விரிவாக ஆராய்வோம்.

இந்தியன் பெர்ஃபார்மிங் ரைட் சொசைட்டி' ( ஐ.பி.ஆர்.எஸ்)

ஐ.பி.ஆர்.எஸ். அமைப்பு, 1969 ஆகஸ்ட் 23இல் நிறுவனங்கள் சட்டத்தின் (Companies Act) கீழ், லாப நோக்கற்ற, வரம்பிற்குள்பட்ட ஒரு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகும். ஐ.பி.ஆர்.எஸ். ஒரு சட்டப்பூர்வ அமைப்பு (Statutory Body) அல்ல. இருப்பினும், பதிப்புரிமைச் சட்டம் 1957-ன் பிரிவு 33-ன் கீழ், மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே அதிகாரப்பூர்வ 'பதிப்புரிமைச் சங்கம்' (Copyright Society) இதுவாகும்.

இந்த அமைப்பின் முதன்மைப் பணியானது திரைப்படப் பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் என்ற வகைப் படைப்பாளிகளுக்காக (Creators) ராயல்டி வசூல் செய்து உரியவர்களுக்குப் பகிர்ந்தளிப்பதாகும். இவ்வாறு ராயல்டி வசூலிக்க ஐ.பி.ஆர்.எஸ். எப்படி அதிகாரம் பெறுகிறது என்பதற்கான விடை, பதிப்புரிமைச் சட்டப்பிரிவு 33 (1)-இல் உள்ளது. 

சட்டப்பிரிவு 33(1)-ன்படி, திரைப்படங்கள் அல்லது ஒலிப்பதிவுகளில் (Sound Recordings) இடம்பெறும் இசை மற்றும் இலக்கியப் படைப்புகளுக்கான உரிமங்களை (Licenses) வழங்கும் வணிகத்தை ஒரு பதிவு செய்யப்பட்ட 'பதிப்புரிமைச் சங்கம்' (அதாவது ஐ.பி.ஆர்.எஸ்.) மட்டுமே செய்ய முடியும். மாற்றுத் திறனாளிகளுக்கான விதிவிலக்குகள் தவிர, தனிநபர்கள் வணிக ரீதியாகப் பெருமளவில் உரிமம் வழங்குவதை இச்சட்டம் கட்டுப்படுத்துகிறது. ஆகவே, வானொலி, தொலைக்காட்சி, இணையதள நிகழ்தளங்கள் (ஸ்ட்ரீமிங்) மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பாடல்கள் ஒலிபரப்பப்படும்போது, அதற்கான உரிமக் கட்டணத்தை வசூலித்து, அதிலிருந்து உரிய, நியாயமான பங்கைப் படைப்பாளிகளுக்கு வழங்கும் சட்டப்பூர்வ முகவராக ஐ.பி.ஆர்.எஸ். செயல்படுகிறது.

தொடர்ந்து, நாம் காண உரியது கிழக்கிந்திய திரைப்பட சங்க (Eastern India Motion Picture Association (1977) 2 SCC 820) வழக்கு.

தற்போதைய சட்டச் சிக்கல்களுக்கு மிக முக்கியமான தொடக்கப் புள்ளியாக அமைவது 1977 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஐ.பி.ஆர்.எஸ். எதிர் கிழக்கிந்திய திரைப்பட வர்த்தக சங்கம்' என்ற வழக்கின் வழிகாட்டுநிலைத் தீர்ப்பாகும். 1977-க்கு முந்தைய காலகட்டத்தில், திரைப்படங்களில் பாடல்கள் பயன்படுத்தப்பட்ட பிறகும், பொது வெளியில் அவை ஒலிபரப்பப்படும்போது தங்களுக்கு ராயல்டி சேர வேண்டும் என்று படைப்பாளிகள் சார்பில் ஐ.பி.ஆர்.எஸ். வாதிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் இந்த வாதத்தை அடியோடு நிராகரித்துவிட்டது.

உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்வந்த் சிங் வழங்கிய 1977 தீர்ப்பில், பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 17(b) மற்றும் 17(c)-ன் கீழ், ஒரு திரைப்படத் தயாரிப்பாளர், குறிப்பிட்ட ஊதியம் ( Valuable Consideration  / Remuneration) அல்லது ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஒரு பாடலாசிரியரையோ அல்லது இசையமைப்பாளரையோ பணிக்கமர்த்தும்போது, அந்தப் பணியின் மூலம் வரிகள் மற்றும் இசையும் சேர்ந்த உருவாக்கத்திற்கு 'முதல் உரிமையாளர்' (First Owner) தயாரிப்பாளரே என்று உறுதிப்படுத்தப்பட்டது (பாரா 17).  1977 தீர்ப்பு இந்தியத் திரையுலகின் ஒட்டுமொத்த படைப்பாளிகளையும் அடிப்படையில் தயாரிப்பாளர்களின் ‘வேலையாள்களாக’ மாற்றியது என விமர்சிக்கப்பட்டது. 

மேலும் திட்டவட்டமாக, ஒரு பாடலைத் திரைப்படத்தில் இசையுடன் இணைத்தவுடன் (Synchronization), அந்தப் பாடலின் மீதான ஒட்டுமொத்த உரிமையும் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளருக்குச் சென்றுவிடும் என்றும், ஏதேனும் ஒப்பந்தத்தில் தனியாகக் குறிப்பிடாதவரை பாடலாசிரியருக்கோ இசையமைப்பாளருக்கோ எந்தத் தனி உரிமையும் இல்லை என்றும் அத்தீர்ப்பில் கூறப்பட்டது. இதன் விளைவாகப், பல பதிற்றாண்டுகளாகத் தயாரிப்பாளர்களும், அவர்களிடம் இருந்து உரிமைகளைப் பெற்ற (சரிகம, டி சீரிஸ் போன்ற) இசை லேபிள்களும் தொடர்ந்து ஆண்டுகள் கடந்தும் கோடிக்கணக்கில் சம்பாதித்துவர வழிகிடைத்தது. அதேசமயத்தில் மயக்கும் வரியெழுதிய கவிஞர்களும் இனிக்கும் மெட்டமைத்த இசைக் கலைஞர்களும், தயாரிப்பாளர் ஒருமுறை வழங்கிய ஊதியத்தோடு (One-time remuneration) மட்டுமே நின்று வாடும் நிலை ஏற்பட்டது.

‘ஜாவேத் அக்தர் திருத்தம்’ 2012

அந்தக் காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர் பிரபல திரைப்பாடலாசிரியர் ஜாவேத் அக்தர். அவர், தயாரிப்பாளர்கள் மற்றும் இசை லேபிள்களின் சுரண்டல்களுக்கு எதிராக ஒற்றை மனிதனாகக் களமாடி, அரசியல் கட்சிகளின் ஆதரவைத் திரட்டி 2012 திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட முதன்மைக் காரணியாக நின்றார். அதனால் இச்சட்டம் திரையுலகிலும், பொதுவெளியிலும் "ஜாவேத் அக்தர் திருத்தம்" (Javed Akhtar Amendment) என்று போற்றப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தின் 1977 ஆம் ஆண்டுத்  தீர்ப்பினால் திரைத்துறைப் படைப்பாளிகளுக்கு இழைக்கப்பட்டிருந்த அநீதியைத் துடைத்தெறியவே 2012 ஆம் ஆண்டின் பதிப்புரிமை (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாறு.

2012 திருத்தம் செய்த மாற்றங்கள்

திருத்தச் சட்டம், காப்புரிமைச் சட்டப் பிரிவுகள் 17, 18 மற்றும் 19 ஆகியவற்றில் அதிரடியான மாற்றங்களைச் செய்தது. 

  • பிரிவு 17 (‘முதல் உரிமையாளர்’): காப்புரிமைச் சட்டப் பிரிவு 17-இல் ஒரு புதிய நிபந்தனை (Proviso) சேர்க்கப்பட்டது. அதன்படி, ‘ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் திரைப்படத்தின் முதல் உரிமையாளராக இருந்தாலும், அந்தத் திரைப்படத்திற்குள் பயன்படுத்தப்படும் மூலப் படைப்புகளான 'இலக்கிய வேலை' (Lyrics) மற்றும் 'இசை வேலை' (Musical Notes) ஆகியவற்றின் ஆசிரியர்களுக்குரிய (Authors) தனிப்பட்ட பதிப்புரிமையை அது எவ்வகையிலும் பாதிக்காது’.

  • பிரிவு 18 (ராயல்டி உரிமை மாற்றப்படக்கூடா நிலை): திருத்தத்தின் மிக முக்கியமான அம்சம், பிரிவு 18-ல் கொண்டு வரப்பட்டது. இதன்படி, திரைப்படங்கள் மற்றும் ஒலிப்பதிவுகளில் பயன்படுத்தப்படும் பாடல் வரிகள் மற்றும் இசை ஆகியவற்றின் படைப்பாளிகள் (Authors / Creators), தியேட்டர்களைத் தவிர வானொலி, தொலைக்காட்சி, டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் போன்ற பிற ஊடகங்களில் தங்கள் படைப்புகள் பயன்படுத்தப்படும்போது, அதிலிருந்து ராயல்டி பெறும் உரிமையை யாருக்கும் மாற்றி எழுதிக் கொடுக்கவோ (Assignment) அல்லது விட்டுக் கொடுக்கவோ (Waiver) முடியாது என்றது. 

இந்த ஏற்பாட்டிற்கு எதிராகச் செய்யப்படும் ஒப்பந்தங்கள் எதுவும் சட்டப்படி செல்லாதவை (Void) ஆகிவிடும். ‘ராயல்டி உரிமையை படைப்பாளிகள் தங்களது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கோ அல்லது ஐ.பி.ஆர்.எஸ். போன்ற பதிப்புரிமை சங்கத்திற்கோ மட்டுமே மாற்ற முடியும்’ என்று படைப்பாளிகளது உரிமைப் பாதுகாப்புக்கு வகை செய்யப்பட்டது.

  • பிரிவு 19 (ஒப்பந்த முறை மற்றும் 50:50 ராயல்டி பகிர்வு): பிரிவு 19 (9)-ன் படி, எந்தவொரு பதிப்புரிமை மாற்ற ஒப்பந்தத்திலும் படைப்பாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ராயல்டி தொகை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும். இதன் மூலம், ஒரு பாடல் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும்போது கிடைக்கும் வருவாயில் 50% தயாரிப்பாளர் அல்லது இசை லேபிளுக்கும், மீதமுள்ள 50% படைப்பாளிகளுக்கு (பாடலாசிரியர் 25%, இசையமைப்பாளர் 25%) சமமாகப் பகிரப்பட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது.

  • பிரிவு 13(4) வழங்கும் சட்டப் பாதுகாப்பு: மூலப் படைப்பாளர்களின் பதிப்புரிமைச் சட்டக் கவசமாக விளங்குவது சட்டப் பிரிவு 13(4). ஒரு திரைப்பாடல் என்பதை இரண்டு அடுக்குகளைக் கொண்டதாகச் சட்டம் காண்கிறது.

  1. மூலப் படைப்புகள் (Underlying Works): பாடலாசிரியரின் வரிகள் (Literary Work) மற்றும் இசையமைப்பாளரின் மெட்டு (Musical Work). 

  2. வழித்தோன்றல் படைப்பு (Derivative Work): முன்சொன்ன இரண்டையும் சேர்த்து ஸ்டுடியோவில் பதிவு செய்யப்படும் இறுதி மாஸ்டர் ஒலிப்பதிவு (Sound Recording).

பிரிவு13(4)-ன்படி, தயாரிப்பாளர், மாஸ்டர் ஒலிப்பதிவின் முதல் உரிமையாளராக இருந்தாலும், பாடலாசிரியர் (வரிகளுக்கும்), இசையமைப்பாளர் (மெட்டிற்கும்) கொண்டுள்ள அவர்களது தனிப்பட்ட பதிப்புரிமைகள் அழியா.

இசையமைப்பாளர் இளையராஜாவின் செயல்பாடுகள் 

  • டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது: 1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் வெளியான (16 வயதினிலே, முள்ளும் மலரும் உள்ளிட்ட) 134 திரைப்படங்களின் அசல் மாஸ்டர் ஒலிப்பதிவுகளை (Original Sound Recordings) – தயாரிப்பாளர்களிடமிருந்து உரிமை மாற்றம் பெற்றிருந்த சரிகம நிறுவனத்தின் அனுமதியின்றி -  இளையராஜா தனது அதிகாரப் பூர்வ கணக்குகள் மூலம் அமேசான் மியூசிக், ஐ டியூன்ஸ், ஜியோசாவன்  போன்ற தளங்களில் பதிவேற்றினார்.

  • மறுஉருவாக்கத்திற்கு உரிமம் வழங்கியது: 1980-ல் வெளியான 'மூடு பனி' படத்தின் "என் இனிய பொன் நிலாவே" பாடலை, 'அகத்தியா' என்ற புதிய திரைப்படத்தில் மறு உருவாக்கம் (Remix) செய்ய, வேல்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா தன்னிச்சையாக உரிமம் வழங்கினார்.

இசையமைப்பாளர் இளையராஜா தரப்பு  நீதிமன்ற வாதங்கள்

பிரிவு 2(d)(ii)-இன் படி ஒரு இசைப் படைப்பின் 'ஆசிரியர்' தானே என்றும், 2012 சட்டத் திருத்தம் படைப்பாளிகளின் உரிமைகளை முழுமையாக மீட்டளித்திருப்பதால், அதற்கு முன் (1980-களில்) ‘சரிகம’வுக்குத் தயாரிப்பாளர்கள் எழுதிக் கொடுத்த உரிமை மாற்ற ஒப்பந்தங்கள் செல்லாது என்றும்  வாதிடப்பட்டது. ஒட்டுமொத்த பாடலையும் எங்கு, எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கும் முழு அதிகாரமும் தன்னிடம் மட்டுமே உள்ளது என்பது அவர் தரப்பின் நிலைப்பாடு.

ஆனால், சட்ட வல்லுநர்கள் மற்றும் நீதிமன்றங்களின் பார்வையில், இசையமைப்பாளரின் இந்தச் செயல்பாடுகள் மூன்று முக்கியக் காரணங்களுக்காக 'எல்லை மீறல்' (Overstepping) ஆகக் கருதப்படுகிறது:

1. பாடலாசிரியரின் உரிமைப் பரப்பில் கால்வைத்தல் (Trespassing on Lyricist's Right)

ஒரு பாடல் என்பது மெட்டு மட்டும் அல்ல; அதில் கவிஞரின் வரிகளும் கலந்திருக்கின்றன. தான் மெட்டமைத்த பாடல்களை இளையராஜா முழுமையாக டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றும்போது அல்லது பிறருக்கு மறுபதிப்பு செய்ய உரிமம் அளிக்கும்போது, அவர் பாடலாசிரியர்கள் எழுதிய வரிகளையும் சேர்த்தே விற்கிறார். பதிப்புரிமைச் சட்டத்தின்படி, பாடலாசிரியரின் அனுமதி பெறாமல் அவர்களின் வரிகளைப் பயன்படுத்தவோ, விற்கவோ இசையமைப்பாளருக்கு எள்ளளவும் உரிமையில்லை. இது மற்றொரு படைப்பாளியின் தனிப்பட்ட உரிமையில் தலையிடும் அப்பட்டமான எல்லை மீறலாகும்.

2. மாஸ்டர் ஒலிப்பதிவு உரிமையை மீறுதல் (Infringement of Sound Recording)

இசையமைப்பாளர் டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது வெறும் மெட்டுகளை மட்டுமல்ல; மாறாகத், தயாரிப்பாளர்களின் பணத்தில், ஸ்டுடியோக்களில் பதிவு செய்யப்பட்ட அசல் மாஸ்டர் ஒலிப்பதிவுகளையும்தான் (Original Sound Recordings). நிலவுகிற சட்டப்படியும், 1977 தீர்ப்பின்படியும், இந்த ஒலிப்பதிவுகளின் முழு உரிமை தயாரிப்பாளர்களிடம் (அல்லது அவர்களிடமிருந்து உரிமை பெற்ற சரிகம போன்ற இசை லேபிள்களிடமுமே) உள்ளது. தயாரிப்பாளரின் சொத்தான மாஸ்டர் டிராக்குகளை, இசையமைப்பாளர் தனது சொந்தச் சொத்து போலப் பயன்படுத்திப் பணமாக்க முயல்வது சட்டப்படி பதிப்புரிமை மீறலாகும்.

3. ஊதியம் பெற்றுக்கொண்ட பின்னும் உரிமை கோருதல்

பழைய சட்ட அமைப்பின் கீழ், திரைப்படத் தயாரிப்பாளர்களிடம் இருந்து முறையான ஊதியம் (Remuneration) பெற்றுக் கொண்டுதான் பாடல்களுக்கு இசையமைப்பாளர் இசையமைத்துள்ளார். குறிப்பிட்டு ஒப்பந்தங்கள் இல்லாத நிலையில், ஊதியத்தைப் பலனாகப் பெற்றுக்கொண்டு அதற்காக உருவாக்கப்பட்ட படைப்பின் முழு வணிக உரிமையும் தயாரிப்பாளரையே சாரும். 2012 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம், படைப்பாளிகளுக்கு 'ராயல்டி' உரிமையை மட்டுமே வழங்கியுள்ளதே தவிர, தயாரிப்பாளரே 'உரிமையாளர்' என்ற தகுதியை மாற்றவில்லை. எனவே, தன்னை ஒட்டுமொத்தப் பாடலின் ஒரே அதிபதியாகக் கருதி இசையமைப்பாளர் செயல்படுவது சட்ட விதிகளுக்குப் புறம்பானது என்றே கருதப்பட உரியது. 

தில்லி உயர்நீதிமன்ற அண்மைத் தீர்ப்பாணைகள்

1. தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கேதல்லா 13-2-2026 -இல் வழங்கிய 13 பக்கத் தீர்ப்பாணையில் (பாரா 30,) கூறப்பட்டுள்ளது :

‘பிரதிவாதி, (இசையமைப்பாளர் இளையராஜா) அதன் பங்குதாரர்கள் ....., …… மற்றும் பிரதிவாதியின் சார்பாக பணிபுரியும் வேறு எந்த நபரும், வாதியின் (சரிகம லிட்) பதிப்புரிமை பெற்ற படைப்புகளுக்கு -அதாவது ஒலிப் பதிவுகள் மற்றும் இலக்கிய மற்றும் இசைப் படைப்புகள்- இந்த உத்தரவுடன் (இணைப்பு A இல்) பட்டியலிடப்பட்டுள்ள சினிமாடோகிராஃப் படங்களின் எந்தொரு பகுதியையும் உருவாக்கும் உரிமங்களை சுரண்டுதல் / பயன்படுத்துதல் / வழங்குதல் அல்லது மூன்றாம் தரப்பினருக்கு உரிமை அளித்தல் அல்லது வாதியின் பதிப்புரிமை பெற்ற படைப்புகள் தொடர்பாக சுரண்டலுக்கான எந்தவொரு உரிமத்தையும் வழங்குதல் ஆகிய எதனையும் செய்வதிலிருந்து தடுக்கப்படுகிறார்கள் (restrained).’

2. அதே நீதிபதி முன் மேற்சொன்ன (13-2-2026) தடையாணை விலக்கிக் கொள்ளப்படவேண்டி இசையமைப்பாளர் சார்பில் தாக்கலான [CS (COMM) 143/2026] வழக்கில், 1-7-2026 அன்று வழங்கப்பட்டுள்ள 58 பக்க ஆணையில் முந்தைய தடையாணை விலக்கப்படாது; நிரந்தரமாக்கப்படுகிறது என்று நீதிபதி துஷார் ராவ் கேதல்லா உறுதிப்படுத்தியுள்ளார். அவரது ஆணையில் (பாரா 53) CS (COMM) 1310/2025 & CS (COMM) 143/2026 வழக்குகளில்  கீழ்க்கண்டவாறு செயல்பாட்டு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

‘A. CS (COMM) No.143 / 2026 இல் (IA No.4116 / 2026) பிரதிவாதி/இளையராஜாவுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு கோருவது அனுமதிக்கப்படுகிறது மற்றும் பிரதிவாதி/ இளையராஜா, அமேசான் மியூசிக் உள்பட …. எந்தவொரு ஆன்லைன் இசைதளத்தின் மூலமாகவும் வாதியின்/ சரிகம இந்தியா லிட். பத்தி 7 இல் பட்டியலிடப்பட்டுள்ள ஒளிப்பதிவு படங்களில் உள்ள பாடல்களை ஒளிபரப்பவோ அல்லது வெளிப்படுத்தவோ  தடை செய்யப்படுகிறார், 

ஆப்பிள் ஐடியூன்ஸ் மற்றும் ஜியோ சாவன் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அல்லது மறு உத்தரவு வரும்வரை 13.02.2026 தேதியிட்ட எக்ஸ் - பார்ட்டி உத்தரவை ரத்து செய்யக் கோரியுள்ள பிரதிவாதி / இளையராஜாவின் ஐஏ எண் 6361/2026 தள்ளுபடி செய்யப்படுகிறது. 

B. பிரதிவாதி 1 பிளாக் மெட்ராஸ் பில்ம்ஸ் & மற்றோர், பிரதிவாதி 2 இளையராஜாவுக்கு எதிராக 09.12.2025 தேதியிட்ட இடைக்கால தடை உத்தரவு முழுமையானதாக ஆக்கப்பட்டுள்ளது மற்றும் 09.12.2025 தேதியிட்ட எக்ஸ்-பார்ட்டி உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனு (IA எண் 4553/2026) தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவற்றுக்கிடையில் இன்னொரு வழக்கின் தீர்ப்பும் கவனத்திற்குரியதாகிறது.

3. மூடுபனி திரைப்படப் பாடல் வழக்கு தீர்ப்பு (21-5-2026)

1980 இல் வெளியான 'மூடுபனி' திரைப்படத்தில் இடம்பெற்ற "என் இனிய பொன் நிலாவே" என்ற பாடலை, வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் மறுபதிப்பு செய்ய இளையராஜா உரிமம் வழங்கியது முன்னர் குறிப்பிடப்பட்டது. அவ்வாறு உரிமம் வழங்கப்பட்டதை எதிர்த்து சரிகம நிறுவனம் தொடர்ந்த வழக்கில்  இளையராஜாவுக்கு எதிராகத் தடையாணை வழங்கப்பட்டது. அத்தடையாணையை நீக்கக் கோரி இளையராஜா தாக்கல் செய்த வழக்கில் FAO (OS) (COMM) 52/2025]  நீதிபதிகள் சி. ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அடங்கிய அமர்வு (21 மே 2026இல்) வழங்கிய தீர்ப்பின் முக்கியக் கூறுகள்-

  • பதிப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 2(p)-ன் படி, 'இசை வேலை' (Musical Work) என்பது பாடலின் வரிகளைத் தவிர்த்த மெட்டை (Tune) மட்டுமே குறிக்கும். (பாரா.25)

  • "பாடலின் வரிகள் என்பது இசையமைப்பாளருக்குச் சம்பந்தமில்லாத, அவர் கால்வைக்க இயலாத, எஜமானர் இல்லாத பகுதி (No Man's Land (Para 28) அதில் இசையமைப் பாளர் இளையராஜாவிற்கு எந்தப் பதிப்புரிமையும் இல்லை" என்று மிகக் கடுமையாக அறிவித்தது.

  • கவிஞரின் பாடல் வரிகளையும், தயாரிப்பாளரின் ஒலிப்பதிவையும் பயன்படுத்த இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு அதிகாரம் எதுவும் இல்லாததால், அவர் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு வழங்கிய உரிமம் செல்லாது என நீதிமன்றம் அதனை ரத்து செய்தது.

படைப்பாற்றலின் உன்னதமும் சட்டத்தின் எதார்த்தமும்

2012 ஆம் ஆண்டின் "ஜாவேத் அக்தர் திருத்தம்" இளையராஜா போன்ற கலைஞர்களின் உரிமையைப் பாதுகாக்கிறது. அதன்படி, ஸ்பாட்டிஃபை அல்லது யூடியூபில் அவரது பாடல்கள் ஒலிக்கும்போதெல்லாம், அவருக்குரிய ராயல்டித் தொகை ஐபிஆர்எஸ் மூலம் அவரது வங்கிக் கணக்கிற்குச் சென்று சேருவதை சட்டம் உறுதி செய்கிறது. ஒரு படைப்பாளியாக, தனக்குரிய 25% ராயல்டி பங்கைக் கோரவும், பெறவும் இசையமைப்பாளருக்கு முழு உரிமை உண்டு. ஆனால், ராயல்டி பெறும் உரிமையே (Right to Receive Royalty), ஒட்டுமொத்தப் பாடலின் மீதான முழுமையான சொத்துரிமை (Absolute Ownership) ஆகாது. 

திரைப்பாடல் மீதான உரிமைகள் முதலீட்டாளர் (தயாரிப்பாளர்) பாடலாசிரியர், பாடலுக்கு இசைகோர்த்த இசையமைப்பாளர் ஆகிய முத்தரப்புக்கும் உண்டு. இசையமைப்பாளர் திரைப் பாடலின் மீது உரிமை கொண்ட மூவரில் ஒருவரே. கலைஞர்கள் தத்தமக்குள்ள தார்மிக, சட்ட உரிமைகளுக்கு விடாது போராடுவது உத்தமம்தான்! அவ்வாறு போராடுவோர் சக கலைஞர்களது தார்மிக, சட்ட உரிமைகள் மீது காலிடறப் பயணிக்கக் கூடாது.

பாடலாசிரியரின் வரிகளையும், தயாரிப்பாளரின் மாஸ்டர் ரெக்கார்டிங் உரிமையையும் புறந்தள்ளிவிட்டு, உரிமை கொண்ட மூவரில் ஒருவர் "நானே பாடலின் முழு அதிபதி" எனச் செயல்படுவதும், அதுகுறித்து நீதிமன்றில் தொடர்ந்து வழக்காடி நிற்பதும் தற்போதைய சட்டம் வழங்கக் கருதாத உரிமையைக் கோரி மன்றாடுவதாகும். இதுவே நிலவிவரும் பதிப்புரிமைச் சட்டமும், நடப்பு (2026) ஆண்டில் தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள மூன்று தனித்தனி ஆணைகளும் மிகத் தெளிவாக அறியத் தரும் நிலை.

[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]

Summary

Composer Ilaiyaraaja copyright battle: copyright law, amendments, and court orders

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.