பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

கண்ணதாசன் அல்ல, கலைமகள் தாசன்!

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, கண்ணதாசன் எழுதிய தனித்துவமான திரைப்படப் பாடல்கள் பற்றி...

News image

கண்ணதாசன் - PC: Respecting Owner

Updated On :13 ஜூலை 2026, 4:51 pm IST

தமிழ்த் திரைப் பாடல்களில் மிக நீண்ட காலம் அரசு செலுத்தியவர் கவியரசு கண்ணதாசன். ஆழமாகவும், நீளமாகவும், அகலமாகவும் அவரது பேனா, தித்திக்கும் பல திரைப் பாடல்களைத் தீட்டி இருக்கிறது.

ஐந்தாயிரத்துக்கு மேற்பட்ட அழகிய திரைப் பாடல்களை வரைந்தவர் கண்ணதாசன். தன்னியல்பாக அவர் எழுதிய திரைப் பாடல்கள் ஆயிரமாயிரம். அதுபோல பழந்தமிழ் இலக்கிய வரிகளை அகத்தூண்டுதலாகக் கொண்டு அவர் எழுதிய பாடல்களும் அதிகம்.

செம்மண்ணிலே தண்ணீரைப் போல்...

‘செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே‘

என்பது சங்க இலக்கியமான குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள வரிகள். (பாடல் எண்: 40)

‘நம் இருவரது நெஞ்சங்களும் செம்மண் நிலத்தில் விழுந்த மழைநீர் போல ஒன்றாகி விட்டன’ என்பது இதற்கு அர்த்தம்.

1979ல் வெளிவந்த தர்மயுத்தம் படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ‘ஒரு தங்க ரதத்தில் ஒரு மஞ்சள் நிலவு’. அந்தப் பாடலில் வரும் ஒரு வரி, ‘செம்மண்ணிலே தண்ணீரைப் போல் உண்டான சொந்தம் இது. சிந்தாமணி ஜோதியைப் போல உண்டான பந்தம் இது’

குறுந்தொகையில் வந்த ‘செம்புல பெயல்நீர்’ என்ற வரிதான் கவியரசரின் கைவண்ணத்தில் செம்மண்ணில் தண்ணீராக குதித்து ஓடுகிறது.

தூது செல்ல ஒரு தோழி....

நிலவு கூட சுடுமா? ஆம். காதலனைப் பிரிந்த காதலிக்கு நிலவுகூட நெருப்பாகத் தோன்றும். காதலன் நேரில் வரும் வரை எல்லாம் வெறுப்பாகத் தோன்றும்.

மகாகவி பாரதியார் காதல் பிரிவு தொடர்பான அவரது கவிதை ஒன்றில், ‘பாலும் கசந்தது, படுக்கையும் நொந்தது, கோலக் கிளிமொழி குத்தல் எடுத்தது’ என்பார்.

இப்படி காதலன் பிரிவால் காதலி படும்பாட்டை பச்சை விளக்கு (1964) படத்தில் அழகான பாடலாக்கியிருப்பார் கவியரசர் கண்ணதாசன். அந்தப் பாடல், ‘தூது செல்ல ஒரு தோழி இல்லையென துயர் கொண்டாயோ தலைவி? துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட சுகம் கண்டாயோ தலைவி?’

அந்தப் பாடலில், ‘தென்றல் தொட்டதடி திங்கள் சுட்டதடி கண்கள் வாடுதடி தோழி’ என்றிருப்பார் கண்ணதாசன்.

அதே பாடலில், ‘இடையணி மேகலை விழுந்திடும் வண்ணம் ஏங்கலாகுமோ தலைவி?’ என்ற கேள்விக்கு ‘கடையிருந்தும் பொருள் கொள்வோர் இல்லையே கலக்கம் வராதோ தோழி’ என்ற வரியும் வரும்.

இது, ‘கடைவிரித்தோம் கொள்வார் இல்லை கட்டிவிட்டோம்’ என்ற வள்ளலாரின் வாக்கு.

இரவுக்கு ஆயிரம் கண்கள்....

கவியரசு கண்ணதாசன், வில்லியம் ஷேக்ஸ்பியர் போன்ற வெளிநாட்டு நாடக மேதைகள், கவிஞர்களின் வரிகளையும்கூட தமிழ்த் திரைப் பாடல்களில் தவழவிட்டவர்.

பிரான்சிஸ் வில்லியம் போர்தியான் என்று ஒரு கவிஞர். போர்தியான் எழுதிய கவிதைகளில் ஒன்று,

‘The night has a thousand eyes, And the day but one;

The mind had a thousand eyes, And the heart but one:

இப்போது 1963ஆம் ஆண்டு வெளிவந்த ‘குலமகள் ராதை’ என்ற படத்தில் கவியரசர் கண்ணதாசன் எழுதிய ஒரு பாடல் உங்களுக்கு நினைவுக்கு வந்திருக்கும். ஆம். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள், பகலுக்கு ஒன்றே ஒன்று. அறிவுக்கு ஆயிரம் கண்கள், உறவுக்கு ஒன்றே ஒன்று’ என்ற அற்புதமான பாடல் அது.

10 நிமிடங்களில் எழுதி முடித்த பாடல்...

கவியரசர் கண்ணதாசன் ஒரே படத்தின் பாடல்களை ஒரே மூச்சிலும் எழுதி முடிப்பார். ஒரேயொரு பாடலை எழுத பல நாள்களையும் எடுத்துக் கொள்வார்.

நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் வரும் ‘சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே’ பாடலை எழுத கவியரசர் மொத்தமாக 20 நாள்கள் எடுத்துக் கொண்டார். அதே படத்தில் இடம்பெற்ற ‘முத்தான முத்தல்லவோ முதிர்ந்து வந்த முத்தல்லவோ’ பாடல், வெறும் பத்து நிமிடங்களில் அவர் எழுதி முடித்த பாடல்.

கர்ணன் படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் இரண்டே நாள்களில் கண்ணதாசன் எழுதி முடித்து விட்டார்.

சில பாடல்களுக்கு அதிக அளவில் பல்லவி, சரணங்களை எழுதிக் குவித்து விடுவது அவரது வழக்கம்.

களத்தூர் கண்ணம்மா படத்தில் வரும் ‘அருகில் வந்தாள் உருகி நின்றாள் அன்பு தந்தாளே’ என்ற பாடலுக்கு கண்ணதாசன் எழுதிய மொத்த பல்லவிகளின் எண்ணிக்கை 56.

பாடல் எழுதி முடித்து விட்டு போனபிறகு, திடீரென்று அந்த பாடலுக்கு மேலும் ஒரு சரணம் வேண்டும் என்று கேட்டால் அதை தொலைபேசியில்கூட சொல்லி முடித்து விடுவார் கண்ணதாசன்.

அவரே தயாரித்த கருப்புப் பணம் படத்தில் ‘கையிலே பணமிருந்தால் கழுதை கூட நடிகனடி’ என்ற பாடலுக்கு இன்னொரு சரணம் வேண்டும் என்று இசையமைப்பாளர் கேட்டபோது, தொலைபேசியிலேயே புதிதாக ஒரு சரணத்தை சொல்லி முடித்தவர் கண்ணதாசன்.

தாலாட்டு பாடல்கள்...

கவியரசர் கண்ணதாசன் சினிமாப் பாடல்களில் தாலாட்டுப் பாடல்களையும் எழுதியிருக்கிறார்.

பாசமலர் படத்தில் வரும் ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழிவண்ணமே’ என்ற பாடல் அவரது தாலாட்டுப் பாடல்களில் காலத்தை வென்ற பாடல்.

அதுபோல,‘ஆயர் பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப்போல் மாயக்கண்ணன் தூங்குகிறான் தாலேலோ’ என்ற பாடலும் மிகச்சிறப்பான தாலாட்டு பாடல்.

ஆலய மணி படத்தில் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என்ற பாடலை எழுதினார் கண்ணதாசன். அது குழந்தைக்கான தாலாட்டுப் பாடல் அல்ல. காதலனைத் தூங்க வைக்க காதலி பாடும் தாலாட்டுப் பாடல்.

ஆங்கில நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் நாடகத்தில் வரும் ஒரு புகழ்பெற்ற வசனத்தை தமிழில் அப்படியே திரைப்பட பாடல் வரிகளாக்கினார் கண்ணதாசன். அதுதான் ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே’ என்ற அந்த பாடல்.

தாலாட்டு என்பது மனித வாழ்வின் தொடக்கத்தில் இடம்பெறுவது.

ஆனால், கவியரசரின் கடைசிப் பாடல் ஒரு தாலாட்டுப் பாடலாக அமைந்தது விசித்திரம்.

கண்ணதாசன் கடைசியாக எழுதிய திரைப்பாடல் மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற ‘கண்ணே கலைமானே கன்னிமயிலென கண்டேன் உனை நானே’ என்ற பாடல்.

வாழ்வின் தொடக்கத்தில் வரும் தாலாட்டுப் பாடலை தனது வாழ்வின் கடைசிப் பாடலாக கவியரசர் கண்ணதாசன் எழுதியது வியப்பான ஒன்று.

காமராஜருக்குத் தூதுவிட்ட கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசனால் மிகவும் மதிக்கப்பட்ட அரசியல் தலைவர்களில் ஒருவர் கர்மவீரர் காமராஜர்.

ஒருமுறை காங்கிரஸ் கட்சி மீதும் அந்த கட்சியின் தலைவர் காமராஜர் மீதும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் ஒதுங்கிக் கொண்டார் கண்ணதாசன். இணக்கமும், பிணக்கமும் கவியரசர் வாழ்வில் அடிக்கடி நடைபெறுபவை.

சில காலத்துக்குப் பிறகு மீண்டும் காமராஜருடன் சேர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் கண்ணதாசனுக்குத் தோன்றியது.

அந்த நேரம் ‘பட்டணத்தில் பூதம்’ என்ற படத்துக்கு கண்ணதாசன் ஒரு பாடல் எழுத வேண்டியிருந்தது.

அந்த சினிமாப் பாடல் மூலமாக காமராஜருக்குத் தூதுவிட கண்ணதாசன் முடிவு செய்தார்.

காமராஜரின் தாயார் பெயர் சிவகாமி. ஆகவே, ‘அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி, என்னை சேரும் நாள் பார்க்கச் சொல்லடி, வேறு எவரோடும் நான் பேச வார்த்தை ஏதடி...’ என்று அந்தப் பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதினார்.

அந்த பாடல் மூலமாகவே காமராஜருடன் ஓர் இணக்கத்தை ஏற்படுத்தி, மீண்டும் காமராஜருடன் நட்புறவை வளர்த்துக் கொண்டார் கண்ணதாசன்.

முகில் விடு தூது, அன்னம் விடு தூது, தென்றல்விடு தூது என்று தூதுகளில் பலவகை உண்டு. ஆனால் திரைப்படப் பாடல் மூலமாக தூதுவிட்ட ஒரே கவிஞர் கவியரசு கண்ணதாசன்தான்.

மனோரமாவை அறிமுகம் செய்தவர்...

கவியரசு கண்ணதாசன் வெறுமனே திரைப்படப் பாடல்களை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த சினிமா பாடலாசிரியர் இல்லை.

நாவல்கள், கவிதைக் காவியங்களையும் அவர் எழுதிக் குவித்தார். சேரமான் காதலி என்ற அவரது புதினம் (நாவல்) சாகித்ய அகாதெமி விருது பெற்றது. கண்ணதாசன் எழுதிய இயேசு காவியம், மாங்கனி போன்ற காவியங்கள் இன்றும் பேசப்படுகின்றன.

வெறும் பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர் என்பதையெல்லாம் தாண்டி திரைப்படத் தயாரிப்புத் துறையிலும் கண்ணதாசன் தைரியமாகக் கால் பதித்தார்.

மாலையிட்ட மங்கை, கருப்புப் பணம், சிவகங்கை சீமை, வானம்பாடி, ரத்தத் திலகம் போன்றவை அவர் தயாரித்த படங்கள்.

கண்ணதாசனின் மாலையிட்ட மங்கை திரைப்படத்தில்தான் நடிகை மனோரமா முதன்முதலாக அறிமுகமானார். அந்தவகையில் ஆச்சி மனோரமாவை திரைப்படத்துறைக்கு அறிமுகம் செய்தவரே கவியரசு கண்ணதாசன் தான்.

படத்தயாரிப்புகள் மூலம் அடிக்கடி கையைச் சுட்டுக் கொள்வது கண்ணதாசனின் வழக்கம். சிலவேளைகளில் படத்தை மேற்கொண்டு உருவாக்க முடியாமல் பணத்தட்டுப்பாடு ஏற்படும்போது அண்ணன் ஏ.எல். சீனிவாசனை தஞ்சம் அடைவார் கண்ணதாசன்.

சாரதா என்ற படம், அப்படி கண்ணதாசனால் தொடங்கப்பட்டு பின்னர் சீனிவாசனால் முடிக்கப்பட்ட படம்.

அண்ணனுடன் ஒருமுறை மனத்தாங்கல் ஏற்பட்டபோது கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்தான் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே’ என்ற பாடல்.

பழனி என்ற திரைப்படத்தில் அந்த பாடல் இடம்பெற்றது.

கலைமகளுக்கு மரியாதை...

‘ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு’ என்று பாடல் எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.

கண்ணதாசன் ஒரு மதுப்பிரியர் என்பது உண்மைதான். ஆனால் அவர் குடித்துவிட்டுத்தான் பாட்டு எழுதுவார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது பெரிய தவறு.

கண்ணதாசன் குடித்து விட்டு எப்போதும் பாட்டு எழுத மாட்டார். அல்லது பாட்டு எழுதும் போது குடித்திருக்க மாட்டார்.

இசையமைப்பாளரின் முன்பு மெத்தையில் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்திருக்கும் அவர், இசையமைப்பாளர் சொல்லும் மெட்டைக் கவனமாகக் கேட்பார். அதற்கான பாடல் வரிகள் மனதில் தோன்றியதும், கால் மேல் போட்டிருக்கும் காலை எடுத்துக் கொண்டு வரிகளைச் சொல்வார்.

அது கலைமகள் வரும் நேரம், கலைமகளுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதால் கால் மேல் கால் போட்டிருப்பதை கண்ணதாசன் தவிர்த்துக் கொள்வார்.

கண்ணதாசன் கண்ணனுக்கு தாசன் என்றாலும் உண்மையில் அவர் கலைமகள் தாசன். இல்லாவிட்டால் இத்தனைத் திரைப்பாடல்கள், நாவல்கள், காவியங்களை அவர் எழுதியிருக்க முடியுமா என்ன?

Summary

Poet Kannadasan unique film songs On the occasion of his centenary celebrations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.