/

அறிவியல் ஆயிரம்: முடிவு செய்வதற்கு முன்பே இயங்கும் மூளை!

மூளையின் செயல்பாடுகள் பற்றி...

News image

கோப்புப் படம் - ENS

Updated On :3 ஜூன் 2026, 3:32 pm IST

செயலுக்கு முந்தைய மூளைப் பயணம்!

ஒரு பறவை பறக்கத் தொடங்கும் முன் அதன் சிறகுகள் காற்றின் ரகசியத்தை உணர்கின்றன. ஒரு மலர் மலர்வதற்கு முன் அதன் இதழ்களில் விடியலின் ஒளி நுழைகிறது. அதுபோலவே ஒரு மனிதன் மற்றொருவரை நோக்கி நடக்கத் தொடங்கும் அந்தச் சிறிய தருணத்தில் வெளியில் இருந்து பார்த்தால் ஒரு சாதாரண செயல்போலத் தோன்றலாம். ஆனால், அந்த ஓரடியின் பின்னால், கண்களுக்குப் புலப்படாத ஓர் அற்புதமான இசைக் கச்சேரி, மூளையின் ஆழத்தில் ஏற்கனவே தொடங்கி விட்டிருக்கும். நாம் நெருங்கிச் செல்ல முடிவு செய்வதற்கு முன்பே, நம் மூளை அந்தப் பயணத்தின் முதல் அடியை அமைதியாக எடுத்து வைக்கிறது.

மூளை

உங்களுக்கு நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாகவே இருக்கும். ஓர் உண்மை தெரியுமா? நீங்கள் என்ன நினைக்கப் போகிறீர்கள் என்பதற்கு முன்பே, உங்களின் மூளை உங்களுக்கு முன்னால் முந்திக்கொண்டு, ஆழமாக நீங்கள் நினைக்கும், செய்யப்போகும் செயலுக்கான ஆணையை உருவாக்குகிறது. இது ரொம்ப ரொம்ப வியப்பான மூளையின் செயலாகும். விதை முளைப்பதற்கு முன் உள்ள நல்ல வீரிய விதையின் நிலையாகும். இதை எல்லாம் மீனில் செய்த ஆய்வின் மூலம் அதன் கருத்தொற்றுமையை நீட்டியே கூறப்படுகிறது. ஒரு நாளில் உங்களின் மூளை ஆயிரக்கணக்கான முடிவுகளைக்கூட எடுக்கலாம். நாம் அறியாத ரகசிய சுரங்கம் நம் மூளை.

முன் கணிப்பு மூளை!

ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், புதிய ஆய்வு ஒன்றினை, சமூக உறவுகள் தொடர்பான, மூளைச் செயல்பாடுகளில் நடத்தி உள்ளனர். சமூக நடத்தை எவ்வாறு உருவாகிறது என்பதற்கான ஒரு முக்கியமான ரகசியத்தை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது அந்த ஆய்வு. உடலின் இந்த மறைமுக இசையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து கணித இனத்தின் செயல்பாட்டுக்கு உதவ தெரிவிக்க, ஆய்வுத் தகவலை 2026 ஆம் ஆண்டு, ஜூன் 2 ஆம் நாள், அறிவியல் இதழில் வெளியிட்டுள்ளது.  ஒருவர் மற்றொருவரை அணுகிச் செல்லும் முடிவை எடுப்பதற்கு பல வினாடிகள் முன்னரே, மூளையில் உள்ள ஒரு தனித்துவமான பகுதி அமைப்பில் உள்ள செல்களில், நரம்பியல் செயல்பாட்டு வடிவம் தோன்றுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மீனின் பார்வை

இந்த ஆய்விற்காக, விஞ்ஞானிகள் "ஜீப்ரா மீன்" (ZebraFish) எனப்படும் சிறிய வகை மீனைத் தேர்ந்தெடுத்தனர். வெளிப்படையான(Transparent) உடலமைப்பைக் கொண்ட இந்த மீன், மூளையின் ஒவ்வொரு செல்லின் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்காணிக்க அனுமதித்தது. ஒரு மீன் அருகில் நீந்திக் கொண்டிருக்கும்போது, அதை நோக்கி நகர உள்ள மற்றொரு மீன் எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் கவனித்தனர். அந்த நேரத்தில், பார்வையிடும் மீனின் முழு மூளையிலும் நிகழும் நரம்பியல் மாற்றங்கள் நொடிக்கும் குறைவான நேரத்தில் நொடிக்கு நொடி நேரடியாக, எல்லோரும் அறியும்படி துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டன.

அரிய உண்மை!

ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் மீனைக் கண்காணித்துக் கொண்டிருக்கும்போது ஒரு வியப்பூட்டும் உண்மை வெளிப்பட்டது. மூளையின் உயர்நிலைச் செயல்பாடுகள் மற்றும் சிக்கலான நடத்தைகளுடன் தொடர்புடைய 'பாலியம்' (Pallium) எனப்படும் பகுதியில் செயல்பாடு அதிகரித்தது. அதேநேரத்தில், சில பிற பகுதிகளில் செயல்பாடு குறைந்தது. இந்த மாற்றங்கள் அனைத்தும் சேர்ந்து, ஒரு சமூகச் செயல் பிறக்கப் போகிறது என்பதை முன்னரே அறிவிக்கும் மௌனச் சைகையாக அமைந்தன.

இந்த உயர்வும் தாழ்வும் ஒன்றாக இணைந்து "முன்-முடிவு நிலை" (Pre-Decision State) எனப்படும் ஒரு மூளை நிலையை உருவாக்கின. ஒரு மீன் மற்றொரு மீனை நோக்கி நீந்தத் தொடங்குவதற்கு முன்பே, அதன் மூளையில் ஒரு "முன்-முடிவு நிலை" (Pre-decision State) உருவாகிறது. இது ஒரு நாடகத்தின் திரை திறக்கப்படுவதற்கு முன் மேடையின் பின்னால் நடைபெறும் ஆயத்தங்களைப் போன்றது இது.

அதிசயமான விஷயம் என்னவென்றால், இந்த நரம்பியல் வடிவத்தைப் பார்த்து, அந்த மீன் விரைவில் சமூக ரீதியாக மற்றொரு மீனை அணுகப்போகிறதா என்பதை முன்கூட்டியே கணிக்கவும் முடிந்தது.

ஆய்வு மேற்கொண்ட லைலாக் அவிட்டன்(Lilach Avitan) குழு

இந்த ஆய்வை டாக்டர் லைலாக் அவிட்டன் தலைமையில், அவரது ஆய்வகத்தில் பணியாற்றிய முனைவர் பட்ட ஆய்வாளர் இம்ரி லிஃப்ஷிட்ஸ் மற்றும் குழுவினர் மேற்கொண்டனர். மனித சமூக நடத்தையின் அடிப்படைத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்த உயிரினம், சிறியதாய் இருந்தாலும் அறிவியலுக்கு பெரும் சேவை செய்ய ஜீப்ரா மீனைத் தேர்ந்தெடுத்தனர்.

ஏன் ஜீப்ரா மீன்?

இந்த மீனின் மூளை வெளிப்படையாக வெளியிலிருந்தே பார்க்க முடியும் என்பதால், அதன் ஒவ்வொரு நரம்பு உயிரணுவின் செயல்பாட்டையும் நேரடியாகக் கண்காணிக்க முடிகிறது. இதனால் சமூக முடிவுகள் உருவாகும் தருணங்களை உயிரோடு பதிவு செய்யும் அரிய வாய்ப்பு ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைத்தது.

ஒவ்வொரு மூளையும் ஒவ்வொருவிதம்

ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த நரம்பியல் கையொப்பத்தின் வலிமை/செயல்பாடு என்பது ஒவ்வொரு மீனிடமும் ஒவ்வொரு மாதிரியாக, வெவ்வேறு விதமாகவே இருக்கிறது. அதிக வலிமையுடன் இந்த மூளை அலைகளை வெளிப்படுத்திய மீன்கள், இயல்பாகவே அதிக சமூக உணர்வும், பழகும் விருப்பமும் கொண்டிருந்ததை, இந்த ஆய்வின் மூலம் அறிய முடிந்தது என்பது வியப்பான விஷயமே. இது ஒரு குறிப்பிட்ட பகுதியின் செயல்பாடு மட்டும் அல்ல; பல பகுதிகள் இணைந்து உருவாக்கிய ஒருங்கிணைந்த நரம்பியல் அலை.

மூளைக்குமுன்னர் விதை!

அதாவது, ஒருவரின் சமூகத் தன்மை/செயல்பாடு வெளிப்படும் முன்னரே, அதன் விதை மூளையின் ஆழத்தில் முளைக்கத் தொடங்குகிறது. அதிசயமான விஷயம் என்னவென்றால், இந்த நரம்பியல் வடிவத்தைப் பார்த்து, அந்த மீன் விரைவில் சமூக ரீதியாக மற்றொரு மீனை அணுகப் போகிறதா என்பதை முன்கூட்டியே கணிக்க முடிந்தது.

ஆய்வின் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு, இந்த நரம்பியல் கையொப்பத்தின் வலிமை ஒவ்வொரு மீனிடமும் மாறுபட்டது என்பதாகும் (நமது கைரேகை போலத்தான்).

சமூக செயல்பாடு!

மூளையில் இந்தச் சிக்னல் மிகவும் வலிமையாகக் காணப்பட்ட மீன்கள், பொதுவாக அதிக சமூகத் தன்மை கொண்டவையாக இருந்தன. அவை மற்ற மீன்களுடன் அதிகமாகப் பழகவும், நெருங்கிச் செல்லவும் விரும்பின. மனித சமூகத்திலும்கூட ஒருவர் அதீத சமூக செயல்பாடும், ஒரு சிலர் குறைவான செயல்பாடும் கொண்டிருப்பதும் இதனால்தானோ என்ற கணிப்பும்கூட இதன் மூலம் ஏற்படலாம் என்ற கருத்தாக்கமும்கூட ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்த நரம்பியல் செயல்பாடு வெறும் ஒரு செயலின் முன்னறிவிப்பாக மட்டுமல்லாமல், அந்த உயிரினத்தின் அடிப்படை சமூக உந்துதலின் அளவையும் பிரதிபலிக்கிறது என்பது தெரியவந்தது.

ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி, 'பாலியம்' எனப்படும் மூளையின் பகுதி என்பது மற்றவர்களை ஏன் அணுக வேண்டும் என்ற உந்துதலை உருவாக்குவதில் மையப் பங்கு வகிக்கிறது. செயல்பாட்டின் முக்கிய புள்ளி/ மைய விசையே இதுதான்.

ஆய்வை வழிநடத்திய டாக்டர் லைலாக் அவிட்டன் கூற்று:

"சமூக அணுகுமுறையை முன்னறிவிக்கும் ஒரு முழு-மூளை நரம்பியல் கையொப்பத்தை நாங்கள் கண்டறிந்துள்ளோம். இது அடுத்த செயல் சமூகமானதா என்பதை மட்டுமல்ல, அந்த உயிரினம் எவ்வளவு சமூக உந்துதலுடன் செயல்படுகிறது என்பதையும் வெளிப்படுத்துகிறது."

புதிய தேடலுக்கு வழிவகுக்கும் ஆய்வு

இந்தக் கண்டுபிடிப்பு, ஏன் சிலர் இயல்பாகவே மக்களுடன் எளிதில் பழகுகிறார்கள், சிலர் அமைதியான தனிமையை விரும்புகிறார்கள் என்ற கேள்விகளுக்கு புதிய வெளிச்சம் தரக்கூடும்.

ஏனெனில், மனிதனின் சமூகப் பயணம் கால்கள் நகரும் தருணத்தில் தொடங்குவதில்லை; அது அதற்கு முன்பே, நமது எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட மூளையின் அமைதியான அரங்கில் விதைக்கப்பட்டு உருவாகிப் பிறக்கிறது என்ற உண்மை இந்த ஆய்வின் மூலம் வெளிப்படுகிறது.

நாம் யாரையாவது நோக்கி ஒரு புன்னகையுடன் நகரும் முன்,
நம் உள்ளத்தின் ஆழத்தில் நரம்புகளால் பின்னப்பட்ட ஓர் அற்புதமான காணாக் கவிதை ஏற்கனவே உண்டாகிவிட்டதுதான்.

சமூகப் பயணமும் பிரமாண்டமூளையின் ஆழமும்

ஜீப்ரா மீன்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு சுட்டிக்காட்டுவது என்னவென்றால்...

மனிதனின் சமூகப் பயணம் எனபது, அவன் எடுக்கும் முதல் அடியில் தொடங்குவதில்லை. அதற்கும் முன்னரே, அவனது மூளையின் அமைதியான பிரபஞ்சத்தில் எண்ணற்ற நரம்பு நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து ஒரு முடிவை உருவாக்குகின்றன. நாம் ஒருவரை நோக்கி நகரும்போது, அந்தச் செயல் வெளியில் தெரிவது ஓர் அடி மட்டுமே; அதன் உண்மையான தொடக்கம், பின்னணி நம் மூளையின் ஆழத்தில் சில வினாடிகள் முன்னரே எழுதப்பட்ட ஒரு மௌனக் கவிதை என்பதே நிதர்சனமான உண்மை.

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Summary

Brain That Acts Before Deciding

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.