மகாராஷ்டிர மாடலைப் போன்று மேற்கு வங்கத்திலும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் தொடங்கிவிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில், 15 ஆண்டுகள் மாநிலத்தை ஆட்சி செய்துவந்த மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், மொத்தமுள்ள 294 பேரவைத் தொகுதிகளில் 80 தொகுதிகளில் மட்டுமே வென்று பெருந்தோல்வியைச் சந்தித்தது.
பாரதிய ஜனதா கட்சி 207 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்று, அக்கட்சியின் தலைவரும், 2021 ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகியவருமான சுவேந்து அதிகாரி முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
பவானிபூர் தொகுதியில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி, சுவேந்து அதிகாரியிடம் தோல்வியடைந்தது கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2021 பேரவைத் தேர்தலிலும் சுவேந்து அதிகாரிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டு மமதா பானர்ஜி தோல்வியைச் சந்தித்தார். பின்னர், பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.
இந்த நிலையில், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த மூத்த தலைவர்களின் சிலர் பாஜகவுக்குத் தாவும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். மமதாவின் மிக நெருக்கமானவராக அறியப்படும், திரிணமூலின் மூத்த எம்.பி. காகோலி கோஷ் தஸ்தி, கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜிநாமா செய்துள்ளார்.
இதனிடையே, திரிணமூல் மூத்த தலைவரும் எம்.பி.யுமான கல்யாண் பானர்ஜி, நாடாளுமன்ற வளாகத்தில் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் காகோலி கோஷ் புகார் அளித்துள்ளார்.
மேலும், மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவராக சோபன்தேவ் சட்டோபாத்யாய தேர்வு செய்யப்பட்ட கடிதத்தில் தங்களின் கையெழுத்து போலியாக இடம்பெற்றிருப்பதாக ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா ஆகியோர் பேரவைத் தலைவரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து, கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக இருவரும் திரிணமூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, சோபன்தேவ் சட்டோபாத்யாயவுக்கு ஆதரவு தெரிவித்த கடிதத்தில் பல திரிணமூல் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து போலியாக இடம்பெற்றிருப்பதாகக் காவல் நிலையத்தில் ரிதப்ரதா பானர்ஜி புகார் அளித்ததை தொடர்ந்து, விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த விசாரணைக் குழுவிடம் திரிணமூல் எம்.எல்.ஏ.க்கள் அரூப் ராய், சுபாசிஷ் தாஸ் மற்றும் பஹருல் இஸ்லாம் ஆகிய மூவரும், அந்தக் கையொப்பங்கள் தங்களுடையவை இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அனுமதியுடன் எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துகளைச் சரிபார்க்கும் பணியில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக அபிஷேக் பானர்ஜியையும் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளனர்.
மமதா பானர்ஜி புறக்கணிப்பு?
இதனிடையே, மமதா பானா்ஜி மருமகனும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீது கற்கள், முட்டைகள், காலணிகளை வீசி அடையாளம் தெரியாத நபா்கள் சனிக்கிழமை தாக்குதல் நடத்திய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதலுக்கு மறுநாள், ஞாயிற்றுக்கிழமை மமதா பானர்ஜி திரிணமூல் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார். மொத்தமுள்ள 80 எம்.எல்.ஏ.க்களின் வெறும் 20 பேர் மட்டுமே வந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த கட்சியின் மூத்த தலைவர் குணால் கோஷ், “அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலை கண்டித்து எம்.எல்.ஏ.க்கள் அவரவர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மமதா பானர்ஜி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆகையால், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நாள் நடத்தப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, மமதா பானர்ஜி கூட்டத்தைப் புறக்கணித்த எம்.எல்.ஏ.க்கள் கூடி தனியாகக் கூட்டம் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், அபிஷேக் பானர்ஜி மீதான தாக்குதலை கண்டித்து கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை மமதா பானர்ஜி நடத்திய தர்னாவில், வெறும் 8 எம்.எல்.ஏ.க்களும், 4 எம்.பி.க்கள் மட்டுமே கலந்துகொண்டது கட்சித் தலைமை மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸிடம் 80 எம்.எல்.ஏ.க்கள் (கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இருவர் உள்பட), 42 எம்.பி.க்கள் உள்ளனர்.
மகாராஷ்டிர மாடலா?
கடந்த 2024 ஆம் ஆண்டு திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த தபஸ் ராய், சுவேந்து அதிகாரி தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில், அவரின் முகநூல் பதிவு புயலைக் கிளப்பியுள்ளது.
“திரிணமூல் காங்கிரஸ் துண்டு துண்டாகச் சிதறி வருகிறது. மகாராஷ்டிரத்தைப் போன்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜியுடன் 50 திரிணமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவைத் தலைவரைச் சந்தித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
சில நாள்களுக்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பாஜக தலைவா் சமிக் பட்டாச்சாா்யா, ”திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் பலா் ஆளும் பாஜகவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், இப்போதைக்கு யாரும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாா்கள். ஊழல் கறை படிந்தவா்களுக்கு பாஜகவில் இடம் கிடையாது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மகாராஷ்டிரத்தில் 2022 ஆம் ஆண்டு, தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவி வகித்து வந்தார். அப்போது, பாஜகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று சிவசேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கினர். தொடர்ந்து, உத்தவ் தாக்கரேவைப் பதவி இழக்கச் செய்து, பாஜக ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வரானார்.
இதேபோன்று, தேசியவாத காங்கிரஸின் நிறுவனர் தலைவர் சரத் பவாருக்கு எதிராக அஜித் பவார் தலைமையிலான எம்.எல்.ஏ.க்கள் போர்க் கொடி தூக்கி, கட்சியின் பெயரையும் சின்னத்தையும் கைப்பற்றினர்.
தற்போது மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் தலைவர் மமதா பானர்ஜியின் தர்னா போராட்டத்தை 90 சதவிகித எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.
இந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரிணமூல் முத்த தலைவா் சோபன்தேவ் சட்டோபாத்யாய கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ”திரிணமூல் காங்கிரஸில் பிளவை ஏற்படுத்தும் முயற்சிகளை பாஜக மேற்கொண்டது உண்மைதான். ஆனால், கட்சி வலுவாக உள்ளது. பெரும்பான்மையான எம்எல்ஏக்கள் கட்சித் தலைவா் மம்தாவின் பக்கமே உள்ளனா். பாஜக தனது பணபலத்தைப் பயன்படுத்தி எங்கள் கட்சியைச் சோ்ந்த சிலரை தலைமையை விமா்சித்துப் பேச வைக்கிறது. அதை நாங்கள் வெற்றிகரமாக சமாளித்து வருகிறோம்” என்றாா்.
இதனிடையே, கொல்கத்தாவில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்கியிருக்கும் திரிணமூலில் இருந்து நீக்கப்பட்ட ரிதப்ரதா பானர்ஜி மற்றும் சந்தீபன் சாஹா, அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் சார்பில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சோபன்தேவ் சட்டோபாத்யாயவுக்கு மூன்றில் இரு பங்கு எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் பட்சத்தில் அவர் பதவி விலக நேரிடும்.
மேலும், திரிணமூல் காங்கிரஸின் சட்டப்பேரவைக் குழுத் தலைவரையும் எதிர்க்கட்சித் தலைவரையும் அவர்களால் தேர்வு செய்ய முடியும்.
இதுபோன்ற நிலை ஏற்பட்டால், திரிணமூல் காங்கிரஸ் மமதா பானர்ஜியின் கையைவிட்டு பறிபோக நேரிடும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Summary
Maharashtra Model Repeat in West Bengal? Mamata Banerjee Faces Internal Revolt
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









