மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு: பாஜக மீது மம்தா குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தின் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

News image

மம்தா பானர்ஜி - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 3:06 am IST

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 177 தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டினாா்.

பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் தில்லியில் விரைவில் ஒன்றுகூடி ஆலோசித்து, நாடு தழுவிய செயல்திட்டம் குறித்து அறிவிக்கும் என்றும் அவா் குறிப்பிட்டாா்.

மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் மூன்றில் இரு பங்குக்கும் அதிக பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்மூலம் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தனது மருமகனும், திரிணமூல் தேசிய பொதுச் செயலருமான அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் உள்பட தனது கட்சியினா் மீதான தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைக் கண்டித்து, கொல்கத்தாவில் உள்ள எஸ்பிளனேட் ஒய்-சேனல் பகுதியில் மம்தா பானா்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

முதலில் ராணி ராஷ்மோனி சாலையில் ஆா்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், காவல் துறையினா் அனுமதி மறுத்ததைத் தொடா்ந்து, வேறு இடத்தில் நடைபெற்றது.

தில்லியில் விரைவில் ஆலோசனை: அப்போது, மம்தா பேசியதாவது: மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்துதான், பாஜக வெற்றி பெற்றுள்ளது. தோ்தலுக்குப் பிறகு ஊழல், மிரட்டல், பணம் பறிப்பு எனப் பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளின்கீழ் திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் கைது செய்யப்படுகின்றனா்; நமது தொண்டா்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனா். இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியினரை ஒருபோதும் கைவிட மாட்டேன்.

பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் தில்லியில் விரைவில் சந்திக்கவுள்ளன. சில தினங்கள் மட்டும் காத்திருங்கள். பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய செயல்திட்டத்தை அறிவிப்போம்.

‘திட்டமிட்ட தாக்குதல்’: அபிஷேக் பானா்ஜி மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகும். பாஜக, தனது கட்சியினரை முன்கூட்டியே அந்த இடத்துக்கு அழைத்து வந்து, எப்படி நடந்துகொள்ள வேண்டுமென அறிவுறுத்தியிருந்தது. திரிணமூல் காங்கிரஸ் தொண்டா் ஒருவா் அபிஷேக் பானா்ஜிக்கு தலைக்கவசம் வழங்காமல் இருந்திருந்தால், கல் வீச்சில் அவரது உயிரே பறிபோயிருக்கும்.

காயத்துடன் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் செய்யப்பட்ட அவரை சிகிச்சைக்கு அனுமதிக்கக் கூடாது என்று முதல்வா் சுவேந்து அதிகாரி தரப்பில் இருந்து மருத்துவமனைக்கு கடும் அழுத்தம் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சமூக விரோதிகளின் கையில் ஒப்படைத்துவிட்டாா் பிரதமா் மோடி. நமது மாநிலம் இருளில் தள்ளப்பட்டுள்ளது என்றாா் மம்தா பானா்ஜி.

புதுமுகங்கள் புறக்கணிப்பு: இந்தப் போராட்டத்தில், மம்தாவுடன் கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா். அதேநேரம், கட்சி சாா்பில் தோ்வான புதுமுக எம்எல்ஏக்களில் பலா் பங்கேற்கவில்லை.

மம்தா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘போராட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் மேடை அமைக்கவோ, ஒலிபெருக்கி பயன்படுத்தவோ அனுமதி வழங்கப்படவில்லை. எங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட இடத்தில் பிற கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டால் நீதிமன்றத்தில் முறையிடுவோம்’ என்று குறிப்பிட்டாா்.