/

அறிவியல் ஆயிரம்: மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? புதிய ஆய்வு சொல்லும் தகவல்!

நல்ல உடல்நலத்துடன் மகிழ்ச்சியுடன் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வின் முடிவுகள் பற்றி....

News image

கோப்புப் படம் - ENS

Updated On :13 ஜூன் 2026, 6:04 pm IST

உடல் அசைவும் மகிழ்ச்சியும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்றும் மனம் இயல்பைவிட அதிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருந்தால் உடல் தானாகவே அசையத் தூண்டப்படும் என்று புதிய ஆய்வு கூறுகிறது.

மனித வாழ்வின் ரகசியங்களில் ஒன்றை சமீபத்திய ஆய்வு ஒன்று கண்டுபிடித்து ஒளிரச் செய்துள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சிறு சிறு உடல் அசைவுகளும், நிகழ்வுகளும் நம் மன மகிழ்ச்சியும் ஒன்றை ஒன்று வளர்க்கும் முடிவில்லா வட்டமாக இயங்குகின்றன என்பதே அதன் முக்கிய கண்டுபிடிப்பு.

ஆய்வுகள்

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வு அமைப்புகள் 8,000 -க்கும் மேற்பட்ட மக்களின் வாழ்க்கை முறைகளையும், அவர்களின் 3,20,000 -க்கும்அதிகமான மனநிலைப் பதிவுகளும் இணைக்கப்பட்டு ஆய்வு செய்தனர். இந்த மாபெரும் ஆய்வில், பல வியத்தகு விஷயங்கள் கிடைத்துள்ளன. மனித மனமும் உடலும் இணைந்து ஆடும் அதிசய நடனத்தை இந்த ஆய்வு மிகத் தெளிவாக, துல்லியமாகவே வெளிப்படுத்துகிறது.

எது எதில் ஆய்வுகள்?

வீட்டு வேலைகளைச் செய்வது, படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது, தெருவோரம் ஒருசில நிமிடங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டே நடப்பது, தோட்டத்தில் செடிகளைப் பார்த்துப் பார்வையிட்டு, மகிழ்வது, குழந்தையைக் கொஞ்சுவது போன்ற எளிய அசைவுகளும், செயல்பாடுகளும்கூட,  மனதில் உடனடியாக மகிழ்ச்சியின் விதைகளைத் தூவி மலரச் செய்கின்றன என்பதை இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. அங்கே உடனேயே உள்ளுக்குள் உடலுக்குள் புத்துணர்வின் தென்றல் வீசத் தொடங்குகிறதாம்.

ஆனால், இந்தக் கதை அங்கேயே முடிவதில்லை ....

குட்டி அசைவும் பெரிய மகிழ்வும்

நாம் வழக்கத்தைவிட சற்றே அதிகமாக உடல் அசைந்தால், ஒரு பாடலுக்கு ஒரு நடன மொழி ஆடினால், மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் களிக்கிறது. அதேபோல், மனம் இயல்பைவிட அதிக மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருந்தால், உடல் தானாகவே அசையத் தூண்டப்படுகிறது. மகிழ்ச்சி அசைவைக் கூப்பிடுகிறது துணைக்கு அழகான நடனம் போட; அசைவு,, மகிழ்ச்சியைப் பிறப்பிக்கிறது. இவ்விரண்டும் கைகோத்து இணைபிரியா நண்பர்களாய், வாழ்வின் பாதையில் ஒன்றை ஒன்று இணைத்துக்கொண்டு ஆனந்த நடனமாடிக்கொண்டே முன்னேற்றுகின்றன.

ஆய்வின் புதிய தகவல்

இந்தப் புதிய ஆய்வு, மிகவும் ஆச்சரியமாகவே, உடற்பயிற்சி என்றால் கட்டாயம் உடற்பயிற்சிக் கூடங்களில் வியர்வை சிந்த வேண்டும் என்ற அவசியமில்லை என்கிறது இது. உடற்பயிற்சி தொடர்பான பழைய எண்ணத்தையும்கூட தூர வீசிவிட்டு பல விஷயங்களை மாற்றுகிறது. அன்றாட வாழ்க்கையின் சாதாரண அசைவுகளில்கூட உடலுக்கும் மனதுக்கும் ஆழமான நன்மைகள் மறைந்திருக்கின்றன என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.

உடற்கல்வி இயக்குனர் டாக்டர் யூ லியாவோவின் புதிய கூற்று

டெக்சாஸ் ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தின் உடற்கல்வித் துறை உதவிப் பேராசிரியரும், உடல் செயல்பாடு மற்றும் சென்சார் ஆய்வக இயக்குநருமான டாக்டர் யூ லியாவோ, மகிழ்ச்சிக்கும், புத்துணர்வுக்கும்அதிசயத்தக்க புதிய அத்தியாயம் படைக்கிறார். அவரின் ஆழமான கருத்து என்னவென்றால்,

"மன மகிழ்ச்சியையும் புத்துணர்வையும் பெறுவதற்கு கடுமையான உடற்பயிற்சிகள் அவசியமில்லை; தேவையும் இல்லை. ஒருவர் தன் வழக்கமான அசையும் முறையில்கூட , மிகச் சிறிய அளவும் அதிகரித்தால்கூட, அதன் பலனாக மனதில் மகிழ்ச்சியும் உடலில் உற்சாகமும் உடனடியாக பேராற்றலாகவே மலரத் தொடங்குகின்றன. ஆற்றல்தான், சக்தி, உயிரோட்டம் தருவது” என்கிறார்.

மகிழ்ச்சி என்பது....

இந்த ஆய்வு நம் எல்லோருக்கும் சொல்லும் முக்கியமான எளிய உண்மை இதுதான்:

“மகிழ்ச்சியைத் தேடி நாம் ஓட வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. சில அடிகள் நடந்தாலே போதும், அது நம்மை நோக்கி ஓடிவந்து சேரும். உடலை அசையச் செய்யுங்கள், கொஞ்சம் நடை பழகுங்கள், நடன அசைவுகளைத் தாருங்கள், மனம் மலரும்.

“மனம் மலர்ந்தால், வாழ்க்கை முழுவதும் வசந்தமாகும்”

மனமும் மகிழ்ச்சியும்: ஓர் உளவியல் தொடர்பு

·  நேர்மறை சிந்தனை: மனம் அமைதியாகவும், நிகழ்காலத்திலும் இருக்கும்போது மகிழ்ச்சி இயற்கையாகவே உருவாகிறது.

·   எதிர்மறை எண்ணங்களை நீக்குதல்: கவலை, பயம், சினம் ஆகியவற்றை அகற்றும்போது மனம் லேசாகி மகிழ்ச்சியை ஈர்க்கிறது.

·  நோய்த் தற்காப்பு : மனம் மகிழ்ச்சி என்றால், உடலில் எண்டோர்பின்(Endorphin) என்ற மகிழ்ச்சி ஹார்மோன் சுரக்கிறது

·  நோய் எதிர்ப்பு தன்மை: எண்டோர்பின் தற்காப்பு சக்தியும் நோய் எதிர்ப்பு தன்மையையும் வழங்குகிறது. நீண்ட ஆயுளைத் தருகிறது

தொடரும் மகிழ்ச்சியின் பயணம்

இந்த ஆய்வின் மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு என்ன தெரியுமா? டாக்டர் யூ லியாவோ முன்பு மேற்கொண்ட தனிப்பட்ட ஆய்வுகளையும் இந்த ஆய்வின் மூலம் வலுவாக உறுதிப்படுத்துகிறது. நீங்கள் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக கொஞ்ச தூரம் சிறிது நடப்பது, வீட்டுப் பணிகளைச் செய்வது போன்ற எளிய உடல் அசைவுகளில் ஈடுபட்டவர்கள், அடுத்த நாள் கணிசமாக அதிக உற்சாகத்துடனும், அதிக மகிழ்ச்சியுடனும் இருந்தது ஆய்வின் வழியே தெரியவந்தது. இதனை முன்பே  கடந்த ஆய்வுகள் ஏற்கனவே காட்டியிருந்தன. இப்புதிய ஆய்வு அந்த உண்மையை மேலும் வலுப்படுத்தி தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்று, அதன் உலகளாவிய ஒருமைப்பாடு ஆகும்.

பல்வேறு நாடுகள், பல பல கலாசாரங்கள் இணைந்த ஆய்வு

உலகின் பல்வேறு நாடுகளிலும், பல்வேறு கலாசாரங்களிலும் வாழும் மக்களின் தரவுகள் இதில் இணைக்கப்பட்டன. 50க்கும் மேற்பட்ட ஆய்வுக் குழுக்கள் தங்களது தரவுகளைப் பகிர்ந்து, ஆய்வின் முடிவுகளை ஒன்றாக விவாதித்தன. அதன் மூலம், "அசைவு – மகிழ்ச்சி" என்ற இந்த இனிய வட்டம் மனிதர்களின் வயது, பாலினம், கலாசாரம் அல்லது வாழும் பிரதேசம் எதுவாக இருந்தாலும் ஒரே மாதிரியாக இயங்குகிறது என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டது.

டெக்சாஸ் ஆர்லிங்டன் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பு

டெக்சாஸ் ஆர்லிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான டாக்டர் யூ லியாவோ, உலகளாவிய இந்த ஆய்வில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர். ஒரு நாளின் பல்வேறு நேரங்களில், மனிதர்களின் உடல் அசைவுகளில் ஏற்படும் மாற்றங்களும், அவர்களது மனநிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் எவ்வளவு நெருக்கமாக இணைந்துள்ளன என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.

8,000 -க்கும்மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 3,20,000 - க்கும்அதிகமான மனநிலைப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. மக்கள் தங்களது வழக்கமான அளவைவிட சற்றே அதிகமாக அசைந்தபோது, அவர்கள் அதிக மகிழ்ச்சியுடன் இருந்தனர். அதிக உற்சாகத்தை உணர்ந்தனர். மேலும் நேர்மறையான எண்ணங்களுடன் காணப்பட்டனர்.

அதே நேரத்தில், ஒருவர் இயல்பைவிட அதிக மகிழ்ச்சியாக உணர்ந்தால் அதன்பின் சிறிது நேரத்திலேயே அவர் உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக மாறுவதற்கான வாய்ப்பும் அதிகரித்தது.

இந்த ஆய்வு முடிவுகள் உலகின் புகழ்பெற்ற அறிவியல் இதழான 'நேச்சர் ஹியூமன் பிஹேவியர்' (Nature Human Behavior)-இல் வெளியிடப்பட்டுள்ளன.

ஏன் உடல் அசைவு இத்தனை நன்மைகளை அளிக்கிறது?

டாக்டர் லியாவோ:

உடல் அசைவு நிகழும்போது, நமது உடலிலும் மனதிலும் உடனடியான மாற்றங்கள் தொடங்குகின்றன. நாம் அதை உடனடியாக உணராவிட்டாலும், உடலின் பல்வேறு உறுப்புகள் செயல்படத் தொடங்குகின்றன. ரத்த ஓட்டம் மேம்படுகிறது, நரம்பியல் செயல்பாடுகள் சுறுசுறுப்படைகின்றன, மனம் புத்துணர்ச்சி பெறுகிறது.

இந்த ஆய்வு காட்டுவதுபோல, உடல் அசைவு மனநிலையிலும் உடனடியான நல்ல மாற்றங்களை உருவாக்குகிறது.

இந்த ஆய்வில் “உடல் அசைவு” என்பது எப்படி வரையறுக்கப்படுகிறது?

 உடற்பயிற்சி என்றால் பலர் கடுமையான பயிற்சிகளை மட்டுமே நினைக்கிறார்கள். இந்த ஆய்வில் அது எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?

டாக்டர் லியாவோ: உடல் அசைவு என்பது உடற்பயிற்சிக் கூடங்களில் செய்யப்படும் திட்டமிட்ட பயிற்சிகளுக்கு மட்டும் கட்டுப்பட்டதல்ல.

இந்த ஆய்வில் அணியக்கூடிய மின்னணு கருவிகள் மூலம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் இயல்பான உடல் அசைவுகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றில் நடைப்பயிற்சி, படிக்கட்டுகளில் ஏறுதல், வீட்டு வேலைகள், சிறிய உடல் உழைப்புகள் போன்ற குறைந்த மற்றும் மிதமான தீவிரத்திலான செயல்பாடுகள் அனைத்தும் அடங்கும்.

தினசரி நலனை மேம்படுத்த விரும்புபவர்களுக்கு இந்த ஆய்வு சொல்லும் செய்தி என்ன?

தங்களது அன்றாட வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்ற விரும்புபவர்கள் இந்த ஆய்விலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

டாக்டர் லியாவோ: நீங்கள் மகிழ்ச்சியாக உணருவதற்கு கட்டாயம் ஜிம்முக்குச் செல்ல வேண்டியதில்லை. உங்கள் வழக்கமான அசைவளவை விட சற்றே அதிகமாக அசைந்தாலே போதும். அதன் பலனாக மனநிலை மேம்படும். குறிப்பாக, நீங்கள் அதிக ஆற்றலுடனும் புத்துணர்ச்சியுடனும் இருப்பதை உணர்வீர்கள்.

மற்றவர்களுடன் போட்டியிடுவதைவிட, உங்களுடனே நீங்கள் போட்டியிடுங்கள். உங்கள் தற்போதைய அசைவளவு என்ன என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின்னர் ஒவ்வொரு நாளும் சில கூடுதல் அடிகள் நடக்கலாம். சில கூடுதல் நிமிடங்கள் சுறுசுறுப்பாக இயங்கலாம். சிறிய முன்னேற்றங்களே பெரிய மாற்றங்களை உருவாக்கும்.

உலகின் பல நாடுகளைச் சேர்ந்த நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது?

டாக்டர் லியாவோ பதில்:அது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது.

பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஒரே கேள்விக்கான பதிலைத் தேடி ஒன்றாகச் செயல்படுவதைப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. பொதுவாக பெரிய ஆய்வுகளில், தலைமை ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட ஆய்வுகளிலிருந்து தரவுகளை எடுத்துக் கொண்டு பகுப்பாய்வு செய்வார்கள். பல சமயங்களில் அந்தத் தரவுகளின் மூல ஆசிரியர்களுக்குக் கூட அது தெரியாது.

ஆனால் இந்த ஆய்வில் அவ்வாறு நடக்கவில்லை. ஒவ்வொரு ஆய்வுக் குழுவுடனும் நேரடியாக தொடர்பு கொள்ளப்பட்டது. அனைவரும் தங்களது தரவுகளைப் பகிர்ந்தனர். பின்னர் அனைவரும் சேர்ந்து முடிவுகளை விவாதித்தோம்.

இது உண்மையான உலகளாவிய ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டு.

ஆம், அதனால் எங்கள் மின்னஞ்சல் ஒருபோதும் ஓய்வெடுக்கவில்லை! ஆனால், உலகின் எந்த மூலையிலும் வாழும் மக்களிடமும் உடல் அசைவும் மனநிலையும் ஒரே மாதிரியான தொடர்பைக் கொண்டுள்ளன என்பதைப் பார்க்கும் மகிழ்ச்சி அதைவிடப் பெரிதாக இருந்தது.

ஆய்வு பதிலளித்த முக்கியக் கேள்விகள்

மன அழுத்தத்தைப் போக்கவும் மகிழ்ச்சியாக உணரவும் கடினமான ஜிம் பயிற்சிகள் அவசியமா?

பதில்: இல்லை.

உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட இந்தப் பெரிய ஆய்வு, வீட்டுப் பணிகள், படிக்கட்டுகளில் ஏறுதல், சில நிமிடங்கள் நடைப்பயிற்சி போன்ற எளிய அசைவுகள்கூட உடனடியாக மகிழ்ச்சியையும் ஆற்றலையும் அதிகரிப்பதை நிரூபித்துள்ளது. ஜிம் அவசியமில்லை. உங்கள் வழக்கமான அளவை விட சற்றே அதிகமாக அசைந்தாலே போதும்.

மகிழ்ச்சியான மனநிலை உடல் அசைவை உருவாக்குகிறதா? அல்லது உடல் அசைவு மகிழ்ச்சியை உருவாக்குகிறதா?

இரண்டுமே உண்மை.இது இருவழிப் பாதை.

உடல் அசைவு மகிழ்ச்சியை உருவாக்குகிறது. அதே நேரத்தில், மகிழ்ச்சியான மனநிலை உடலை அசையத் தூண்டுகிறது. ஒன்று மற்றொன்றை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருக்கும் முடிவில்லா இனிய சுழற்சிதான் இது.

இந்த ஆய்வின் முடிவுகளை என் வாழ்க்கையில் எப்படி பயன்படுத்தலாம்?

உங்களை சமூக வலைதளங்களில் காணும் உடற்பயிற்சி நிபுணர்களுடன் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக, நேற்றைய உங்களுடன் இன்றைய நீங்கள் போட்டியிடுங்கள். உங்கள் தினசரி அசைவளவை கண்காணியுங்கள். பின்னர் அதைவிட சில அடிகள் கூடுதலாக நடக்கவும்; சில நிமிடங்கள் கூடுதலாகச் செயல்படவும் முயலுங்கள். அவ்வளவுதான். இது ஓரூ நரம்பியல் செயல்பாடு.

உங்கள் இயல்பான அசைவளவைவிட சிறிதளவு மேலே செல்லும் ஒவ்வொரு நாளும், உங்கள் மனதில் புதிய மகிழ்ச்சியின் விதைகளை விதைக்கும்.

மகிழ்ச்சி ஒரு இலக்கு அல்ல; அது அசைந்து கொண்டிருக்கும் காலடிகளின் நிழலில் மலரும் ஒரு பூ...

[கட்டுரையாளர் - தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர்]

Summary

A new study suggests that physical movement and happiness are interconnected

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.