காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 333 புள்ளிகள் உயர்வு; 23,200 ஐ கடந்த நிஃப்டி!!மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களில் மலர் மாலைகள் சாற்றும் பணி!விஜய் சேதுபதியை தனிப்பட்ட முறையில் தாக்க வேண்டாம்! சீனு ராமசாமிஇடைத்தேர்தலில் பாமக போட்டியில்லை! யாருக்கு ஆதரவு? அன்புமணி பேட்டிராஜிநாமா செய்தவர்களே இடைத்தேர்தலில் போட்டியிடுவது கேலிக்கூத்து! உயர் நீதிமன்றம் அதிருப்தி!ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் குடமுழுக்குகளின் வரலாறு!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்குகளின் வரலாற்றைப் பற்றி...

2009-ல் நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு

Published On :

உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நாளை (செப். 17) நடைபெறுகிறது. கடந்தகால திருக்குடமுழுக்குகளின் வரலாற்றை இங்கே பார்க்கலாம்.

ஆலய கோபுரங்கள், விமானங்கள், சந்நிதிகள் மற்றும் பரிவார தெய்வங்களின் திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கலசங்களில் நிரப்பப்பட்டு இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் நிகழ்வே திருக்குடமுழுக்கு.

பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற திருப்பணிகளையும், பல்வேறு காலகட்டங்களில் நடைபெற்ற திருக்குடமுழுக்குகளையும் கண்ட சாட்சியாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் இன்று கம்பீரமாக நிற்கிறது. ஒவ்வொரு குடமுழுக்கும் ஆலயத்தின் ஆன்மிக சக்தியைப் புதுப்பிப்பதோடு மட்டுமல்லாமல், பக்தர்களின் நம்பிக்கையையும் உறுதியையும் மேலும் வலுப்படுத்துகிறது.

அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலின் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவை எதிர்நோக்கி, மதுரை மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். பல நூற்றாண்டு பாரம்பரியத்தை தாங்கி நிற்கும் மீனாட்சியம்மன் திருக்கோயில், மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்குடமுழுக்கை நோக்கி பயணித்து வருகிறது.

கோலாகலமான குடமுழுக்கு விழா

மதுரையின் இதயத்தில் கம்பீரமாக எழுந்து நிற்கும் மீனாட்சி அம்மன் திருக்கோயில், மீண்டும் ஒரு வரலாற்று நிகழ்வை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களின் வழிபாட்டால் ஆன்மிக ஒளியில் திகழும் இந்த திருத்தலம், திருக்குட நன்னீராட்டு பெருவிழாவிற்காக புதிய பொலிவுடன் தயாராகி இருக்கிறது.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கிற்குப் பிறகு, 17 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெறும் இந்த மாபெரும் விழாவை உலகம் முழுவதும் வாழும் தமிழர்களும், மீனாட்சி அம்மனின் பக்தர்களும் ஆவலுடன் பார்த்திருக்கின்றனர்.

இந்தப் பெருவிழாவை முன்னிட்டு ரூ. 32.28 கோடி மதிப்பில் குடமுழுக்கு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையாக சேதமடைந்த வீரவசந்தராயர் மண்டபத்தை மீண்டும் அதன் பழைய கம்பீரத்திற்கு கொண்டு வர ரூ. 35.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் ரூ. 67.58 கோடி மதிப்பிலான பணிகள் கோயிலைச் சுற்றி முழுவீச்சில் நடைபெற்றுள்ளன.

மதுரை நகரமே ஆன்மிகக் கொண்டாட்டத்தில் மூழ்கி, விழாக் கோலம் பூண்டிருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் 1923, 1963, 1974, 1995 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் ஐந்து முறை குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. அந்த வரிசையில், தற்போது, 2026-ல் குடமுழுக்கு நடைபெறுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை

ஆகம விதிகளின்படி, ஒரு கோயிலில் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குட நன்னீராட்டு விழா நடத்தப்பட வேண்டும். குடமுழுக்கு என்பது வெறும் சடங்கு அல்ல; ஆலயத்தின் ஆன்மிக ஆற்றலைப் புதுப்பிக்கும் முக்கிய நிகழ்வாகவும் கருதப்படுகிறது. ஆனால், மீனாட்சி அம்மன் கோயில் போன்ற பிரம்மாண்ட ஆலயங்களில், இந்த காலக்கெடு எப்போதும் துல்லியமாக பின்பற்றப்படுவதில்லை.

காரணம், கோவிலின் பரப்பளவு, நூற்றாண்டுகள் பழமையான கட்டடங்களின் பராமரிப்பு, கோபுரங்கள், மண்டபங்களின் திருப்பணிகள், ஆகம அறிஞர்களின் ஆலோசனைகள், நிர்வாக ஏற்பாடுகள், நிதி ஒதுக்கீடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்ற பல அம்சங்கள் ஒன்றோடொன்று இணைந்துள்ளன.

2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்து ஆலய வரலாற்றில் ஒரு பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. அந்த விபத்தில் புகழ்பெற்ற வீரவசந்தராயர் மண்டபம் கடுமையாக சேதமடைந்து, அதன் ஒரு பகுதி முற்றிலுமாக சிதிலமடைந்தது. பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தை தாங்கி நின்ற அந்த மண்டபத்தை மீண்டும் பழைய கம்பீரத்துக்குக் கொண்டு வருவது மிகப் பெரிய சவாலாக மாறியது. இதனால், சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. மண்டபத்தின் மறுகட்டுமானம் மற்றும் அதனைச் சுற்றிய திருப்பணிகள் முழுமையாக நிறைவடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், குடமுழுக்கு விழாவும் திட்டமிட்ட காலத்தைத் தாண்டி தள்ளிப்போனது.

அதன் விளைவாக, 12 ஆண்டுகள் இடைவெளியில் நடைபெற வேண்டிய குடமுழுக்கு, இந்த முறை 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது.

இதுவரை நடந்த குடமுழுக்குகள்

மீனாட்சி அம்மன் கோவிலின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், அது வெறும் ஒரு ஆலயத்தின் கதை அல்ல; பல தலைமுறைகளாக நடந்த திருப்பணிகள், அரசர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பக்தர்களின் பங்களிப்பால் உருவான ஒரு பாரம்பரிய காவியமாகவே தெரிகிறது. இன்று நாம் காணும் பிரம்மாண்டமான மீனாட்சி அம்மன் கோயில், ஒரே காலகட்டத்தில் உருவானது அல்ல. பல நூற்றாண்டுகளாக பல்வேறு மன்னர்களாலும் ஆட்சியாளர்களாலும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு, செம்மைப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

கி.பி. 1559 முதல் 1563 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மதுரையை ஆட்சி செய்த விஸ்வநாத நாயக்கர், மீனாட்சி அம்மன் கோயிலின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றினார். அவரது ஆட்சிக் காலத்தில் ஆலயம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டது. அந்த திருப்பணிகள் நிறைவடைந்த பின் குடமுழுக்கு நடைபெற்றதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதைத் தொடர்ந்து, நாயக்கர் ஆட்சியின் புகழ்பெற்ற அமைச்சரும் தளபதியுமான அரியநாத முதலியார், கோயிலுக்குள் பல மண்டபங்களையும் பிரகாரங்களையும் உருவாக்கினார். ஆலயத்தின் கட்டட அமைப்பில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய இந்தப் பணிகளுக்குப் பிறகும் குடமுழுக்கு நடத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகக் கூறுகின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

பின்னர், கி.பி. 1623 முதல் 1659 வரை ஆட்சி செய்த திருமலை நாயக்கர் காலம், மீனாட்சி அம்மன் கோயிலின் பொற்காலமாகக் கருதப்படுகிறது. புதுமண்டபம், கோபுரப் பணிகள், பொற்றாமரைக் குளம் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் அந்தக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. ஆலயத்தின் அழகும் பெருமையும் பல மடங்கு உயர்ந்த அந்தக் காலகட்டத்திலும் குடமுழுக்குகள் நடைபெற்றிருக்கலாம் என வரலாற்றுச் சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன.

அதன் பிறகும், பதினெட்டாம் நூற்றாண்டில் ஆலயத்தின் பராமரிப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. காலம் மாறினாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும், மீனாட்சி அம்மன் கோயிலின் ஆன்மிகப் பெருமையையும் கட்டடக் கம்பீரத்தையும் பாதுகாக்கும் பணிகள் மட்டும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருந்தன.

இவ்வாறு ஒவ்வொரு தலைமுறையும் இந்த ஆலயத்திற்கு ஏதோ ஒன்றைச் சேர்த்துச் சென்றதால்தான், இன்று உலகம் வியந்து பார்க்கும் மகத்தான ஆன்மிகச் சின்னமாக மீனாட்சி அம்மன் கோயில் விளங்குகிறது.

2009 ஆம் ஆண்டில் 29 கிலோ தங்கம்

மீனாட்சி அம்மன் கோயிலில் பல நூற்றாண்டுகளாக குடமுழுக்குகள் நடைபெற்றிருக்கலாம் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதினாலும், ஆவணங்களுடன் உறுதிப்படுத்தப்பட்ட முதல் திருக்குட நன்னீராட்டு விழா 1878 ஆம் ஆண்டு பிப். 6-ல் நடைபெற்றதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

அந்தக் காலத்தில் நாட்டுக்கோட்டை நகரத்தார் சமூகத்தினர் மிகப் பெரிய அளவில் பங்களிப்பு செய்து, கோயிலின் திருப்பணிகளையும் குடமுழுக்கையும் சிறப்பாக நடத்தி வைத்தனர். இன்று கோயிலின் கோபுரங்களை அலங்கரிக்கும் தங்கக் கலசங்கள் அனைத்தும் அவர்களது பங்களிப்பின் நினைவுச் சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

அதனைத் தொடர்ந்து, 1923 ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண நிர்வாகத்தின் கீழ், திருவாவடுதுறை ஆதீன குருமகா சந்நிதானம் தலைமையில் குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் 1963 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் முதல்வராக காமராஜர் இருந்த காலத்தில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் காஞ்சி காமகோடி பீடாதிபதியும் பங்கேற்று சிறப்பித்தார்.

அதன் பிறகு 1974 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், 1995 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும், மீண்டும் 2009 ஆம் ஆண்டு முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்திலும் திருக்குட நன்னீராட்டு விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றன.

குறிப்பாக 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு, மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. அந்த விழாவை முன்னிட்டு, அம்மன் சன்னதியின் விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்டது. இந்தப் பணிக்காக சுமார் 1,150 கிலோ செம்பும், 29 கிலோ தங்கமும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தங்க விமானம் இன்றளவும் பக்தர்களை வியப்பில் ஆழ்த்துவதாக இருக்கிறது.

ராஜ கோபுரப் பணிகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கம்பீரத்தை உலகிற்கு எடுத்துச் சொல்வதில் மிக முக்கிய பங்கு வகிப்பவை அதன் பிரம்மாண்டமான ராஜகோபுரங்களே. மதுரை நகரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் கண்ணில் படும் இந்த கோபுரங்கள், வெறும் கட்டுமானங்கள் அல்ல; பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாற்றின் உயிருள்ள சாட்சிகளாக நிற்கின்றன.

கிழக்குப் பகுதியில் எழுந்து நிற்கும் 161 அடி உயர ராஜகோபுரம், கி.பி. 1216 முதல் 1238 வரை ஆட்சி செய்த மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் உருவானதாகக் கூறப்படுகிறது. அதேபோல், 170 அடி உயரத்துடன் கோயிலின் மிக உயரமான கோபுரமாக விளங்கும் தெற்கு ராஜகோபுரம், 16 ஆம் நூற்றாண்டில் வணிகரான சிராமலை செவ்வந்தி மூர்த்தி செட்டியாரால் கட்டப்பட்டது.

மேற்கே அமைந்துள்ள 163 அடி உயர ராஜகோபுரம், கி.பி. 1374 ஆம் ஆண்டு மல்லப்பன் என்பவரால் உருவாக்கப்பட்டது. வடக்கே கம்பீரமாக நிற்கும் 160 அடி உயர கோபுரம், பல தலைமுறைகளின் முயற்சிக்குப் பிறகு நிறைவுபெற்றது. கிருஷ்ண வீரப்ப நாயக்கரால் தொடங்கப்பட்ட இந்தப் பணி, பின்னர் அமராவதி புதூர் வயிநாகரம் செட்டியாரால் நிறைவு செய்யப்பட்டது. நிறைவு பெறாமல் நீண்ட காலம் இருந்த காரணத்தால், இந்த கோபுரம் இன்னமும்கூட ‘மொட்டைக் கோபுரம்’ என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

இந்த நான்கு பிரம்மாண்ட ராஜகோபுரங்களைத் தவிர, மீனாட்சி அம்மன் கோயிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் தனித்தனி காலகட்டங்களில், வெவ்வேறு ஆட்சியாளர்கள், பக்தர்களின் பங்களிப்பால் உருவானவை.

இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த கோபுரங்கள் அனைத்தும் ஒரே மன்னரால் கட்டப்படவில்லை. சுமார் 700 ஆண்டுகளுக்கும் மேலாக பாண்டிய பேரரசர்கள், நாயக்க மன்னர்கள், வணிகர்கள், செல்வந்தர்கள், எண்ணற்ற பக்தர்களின் அர்ப்பணிப்பால் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

அதனால்தான் மீனாட்சி அம்மன் கோவில் என்பது ஒரு மன்னரின் படைப்பு அல்ல; பல தலைமுறைகளின் உழைப்பு, பக்தி மற்றும் பாரம்பரியத்தின் சங்கமமாக உருவான ஒரு மகத்தான பண்பாட்டுச் சின்னமாக உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.

கலைக்கூடம்

மீனாட்சி அம்மன் கோயில் என்பது வெறும் வழிபாட்டுத் தலம் மட்டுமல்ல; அது கல், சிற்பம், ஓவியம் மற்றும் வரலாறு பேசும் ஒரு பிரம்மாண்ட கலைக்கூடமாகவும் திகழ்கிறது. ஆலயத்தின் ஒவ்வொரு மூலையிலும் காலத்தை வென்று நிற்கும் கலைப் பொக்கிஷங்கள் நிறைந்துள்ளன.

அர்த்தநாரீஸ்வரர்.

அர்த்தநாரீஸ்வரர்.

தோராயமாக 33 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் இந்தக் கோவிலில் இருப்பதாக ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். இவை அனைத்தும் பாண்டியர்கள், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்க மன்னர்கள் மற்றும் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த சிற்ப வல்லுநர்களின் அசாதாரண கலைத் திறனை வெளிப்படுத்துகின்றன.

சக்கர தானர்

சக்கர தானர்

சிவபெருமானின் பல்வேறு திருக்கோலங்களைச் சித்திரிக்கும் நடராஜர், சோமாஸ்கந்தர், பிச்சாடனர், வீரபத்திரர், திரிபுராந்தகர், அர்த்தநாரீஸ்வரர், கால சம்ஹார மூர்த்தி உள்ளிட்ட சிற்பங்கள் இங்கே கலை நயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதேபோல் மீனாட்சி அம்மனின் அவதாரம், பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், திக்கு விஜயம் போன்ற நிகழ்வுகளையும் சிற்பங்கள் உயிர்ப்புடன் எடுத்துரைக்கின்றன.

அஷ்டசக்திகள், சப்த மாதர்கள் போன்ற தெய்விக வடிவங்களும் ஆலயத்தின் ஆன்மிகப் பெருமையை வெளிப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, மதுரையின் அடையாளமாக விளங்கும் திருவிளையாடல் புராண நிகழ்வுகள் கல்லில் செதுக்கப்பட்டு வரலாற்றைக் கண்முன் நிறுத்துகின்றன.

ராமாயணம், மகாபாரதம், சிவபுராணம், ஸ்கந்த புராணம், பாகவத புராணம் உள்ளிட்ட இதிகாசங்களும் புராணங்களும் இங்கு சிற்ப வடிவில் உயிர் பெற்று நிற்கின்றன. ஒவ்வொரு சிற்பமும் ஒரு கதையையும், ஒவ்வொரு மண்டபமும் ஒரு வரலாற்றையும், ஒவ்வொரு கல்லும் ஒரு காலத்தின் பண்பாட்டையும் பேசுகின்றன.

ஆயிரங்கால் மண்டபம்

ஆயிரங்கால் மண்டபம்

மீனாட்சி அம்மன் கோயிலின் மற்றொரு அதிசயம் ஆயிரங்கால் மண்டபம். சிற்பக் கலையின் உச்சமாக விளங்கும் இந்த மண்டபம், கட்டடக் கலை மற்றும் பொறியியல் திறமையின் சான்றாக இன்றும் வியப்பை ஏற்படுத்துகிறது. அதேபோல் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள், பல நூற்றாண்டுகளாக நடந்த சமூக, அரசியல், சமய மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளை பதிவு செய்துள்ள வரலாற்று ஆவணங்களாக திகழ்கின்றன.

அதனால்தான் மீனாட்சி அம்மன் கோவில் ஒரு ஆலயம் மட்டுமல்ல; தமிழர் கலை, இலக்கியம், வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை ஒருங்கே தன்னகத்தே தாங்கி நிற்கும் உயிருள்ள அருங்காட்சியகமாகவும் போற்றப்படுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வரலாற்றுச் சுவடுகளை மீட்டெடுக்கும் பணியில், தொல்லியல் அறிஞர் சொ. சாந்தலிங்கம் தலைமையிலான ஆய்வுக் குழு, மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டுகளைப் படியெடுத்து ஆவணப்படுத்தியுள்ளது. அந்தக் குழுவின் முக்கிய உறுப்பினரும், சிவகங்கை அரசு அருங்காட்சியக காப்பாட்சியருமான முனைவர் மீ. மருதுபாண்டியன், மதுரையின் பெருமையைப் பற்றி கூறுகையில், “இந்த ஆலயத்தில் நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டு விழா, ஒரு சாதாரண மத நிகழ்வு அல்ல. அது தலைமுறைகள் கடந்த தமிழர் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். இன்று நாம் கும்பாபிஷேகம் என்று அழைக்கும் இந்த விழா, புனித நீராடல் என்ற கருத்தோடு பல நூற்றாண்டுகளாக தமிழர் சமய மரபுகளில் இடம்பெற்று வருகிறது.

பழந்தமிழ் கல்வெட்டுகள், குடமுழுக்கு மற்றும் ஆலயப் புனரமைப்புப் பணிகள் குறித்த பல்வேறு தகவல்களை பதிவு செய்துள்ளன. ஆலயங்கள் புதுப்பிக்கப்பட்ட பின்னர், புனித நீரால் திருக்குட நன்னீராட்டு நடத்தும் மரபு தமிழர் வாழ்வியலின் ஒரு அங்கமாக இருந்ததை அவை உறுதிப்படுத்துகின்றன.

ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தமிழர் பாரம்பரியங்களையும் தொன்மையான சமய மரபுகளையும் மதித்து, கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில்கூட இப்பகுதியில் உள்ள கோயில்களில் குடமுழுக்குகள் நடைபெற்றதற்கான சான்றுகள் காணப்படுகின்றன.

அதாவது, மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு என்பது ஒரு புதிய நிகழ்வு அல்ல; பல நூற்றாண்டுகளாக தொடர்ந்துவரும் தமிழர் ஆன்மிக மரபின் மற்றொரு அத்தியாயம்.

காலம் மாறினாலும், ஆட்சியாளர்கள் மாறினாலும், தலைமுறைகள் மாறினாலும், குடமுழுக்கு என்ற அந்த புனித மரபு மட்டும் தமிழர் பண்பாட்டின் உயிரோட்டமாக தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது.

கல்வெட்டுகள் சொல்லும் வரலாறு

கோயிலுக்குள் உள்ள கல்வெட்டுகள், மீனாட்சி அம்மன் கோயில் ஒவ்வொரு காலகட்டத்திலும் எவ்வாறு விரிவடைந்தது, யார் யார் அதன் வளர்ச்சிக்குப் பங்களித்தனர். என்னென்ன திருப்பணிகள் நடைபெற்றன என்பதற்கான அரிய தகவல்களை வழங்குகின்றன. பாண்டியர் கால கல்வெட்டுகள் முதல் நீர் மேலாண்மை குறித்த பதிவுகள் வரை பல்வேறு தகவல்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன.

அதனால்தான், திருக்குட நன்னீராட்டு விழா என்பது வெறும் கோயில் நிகழ்வு மட்டுமல்ல. அது வரலாறு, பாரம்பரியம், பக்தி, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்கும் தமிழர் மரபின் மாபெரும் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாக கல்வெட்டுகள் பாதுகாத்து வந்த அந்த வரலாற்றின் தொடர்ச்சியாக, மீனாட்சி அம்மன் கோயில் மீண்டும் ஒரு முறை குடமுழுக்கு என்ற புனித நிகழ்வின் மூலம் புதிய அத்தியாயத்தை எழுதுகிறது” என்றார்.

மீண்டும் பொலிவுடன்

பல நூற்றாண்டுகளைக் கடந்த வரலாறு, தலைமுறைகளைத் தாண்டிய பாரம்பரியம், கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை என அனைத்தையும் தன்னகத்தே சுமந்து நிற்கும் மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறவுள்ள திருக்குட நன்னீராட்டின் மூலம் மற்றொரு வரலாற்று அத்தியாயத்தை எழுத உள்ளது. காலம் மாறலாம்; தலைமுறைகள் மாறலாம். ஆனால், மதுரையின் அடையாளமாகவும், தமிழர்களின் பெருமையாகவும் விளங்கும் மீனாட்சி அம்மன் கோயிலின் மகத்துவம் என்றும் மாறாது. அதற்கு சாட்சியாக, புதுப்பொலிவுடன் மீண்டும் அருள்பாலிக்கத் தயாராகிறாள் மதுரையின் அரசி மீனாட்சி.

Summary

The grand consecration ceremony of the world-renowned Madurai Meenakshi Amman Temple takes place tomorrow (Sept. 17). Here is a look at the history of past consecrations.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.