
1974 - மதுரை மீனாட்சியம்மன் ஆலய கும்பாபிஷேகம்!
1974 ஆம் ஆண்டு நடைபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் ஆலய குடமுழுக்கு நிகழ்வைப் பற்றி...

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்.
மதுரை, ஜூன் 26- மதுரை ஸ்ரீ மீனாட்சி கோயிலின் மகா கும்பாபிஷேகம் இன்று காலை 6.30 மணிக்கு, நல்ல சுபமான வேளையில் வேத கோஷங்களுடனும், மந்திரங்களுடனும், நாதஸ்வர இசையுடனும் விமரிசையாக நடைபெற்றது.
இதற்கு முன்பு 1923-லும், 1963-லும் இங்கு கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது. ஒரு அதிர்வெடி ஒலித்தவுடன் கோயிலிலுள்ள 27 கோபுரங்களிலுமுள்ள கலசங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இந்தக் காட்சியைக் காண சுமார் 3 லட்சம் பக்தர்கள் கூடி இருந்தனர்.
பிரதம சிவாச்சாரியரான கே. சுந்தரேச பட்டர் தலைமையில் அபிஷேகங்கள் நடந்தன. கங்கை, யமுனை, நர்மதை, காவேரி, வைகை ஆகிய புண்ய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்த ஜலம் ஒரே சமயத்தில் கலசங்களின் மீது அபிஷேகம் செய்யப்பட்டன. பின்னர் தீபாராதனை நடைபெற்றது.
சென்னை ஹைக்கோர்ட் நீதிபதி பி. ஆர். கோகுல கிருஷ்ணன், த.நா. சர்க்கார் பிரதம காரியதரிசி சபாநாயகம், விழா கமிட்டி தலைவர் எல். நாராயணன் செட்டியார், மதுரை, ராமனாதபுரம், கலெக்டர்கள் மற்றும் பிரமுகர்கள் தரிசனம் செய்தனர்.
இந்த ஜீர்ணோத்தாரண திருப்பணிக்கு சுமார் ரூ. 12 லட்சம் செலவாகியிருக்கும் என்று, மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கும்பாபிஷேகத்தைக் கூட்டத்தைக் காண வந்திருந்த ஏராளமான பக்தர் ஒழுங்குபடுத்த நல்ல போலீஸ் பந்தோபஸ்துகள் செய்யப்பட்டிருந்தன. தென் ஜில்லாக்களிலிருந்து மதுரைக்கு விசேஷ ரயில்களும் விடப்பட்டன.
மகா கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட 120 குருக்களில் ஒருவரான எம். நாகரத்தின குருக்கள் கும்பாபிஷேகம் ஆன பிறகு, சில மணி நேரம் கழித்து காலமானார். அவருக்கு வயது 60.
கும்பாபிஷேகம் முடிந்த சிறிது நேரத்துக்கெல்லாம் அவர் தலைசுற்றுவதாகக் கூறினார். உடனே சர்க்கார் எர்ஸ்கின் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் சேர்ந்த பிறகு சிறிது நேரத்தில் மரணமடைந்தார். மதுரை மீனாட்சி கோயிலில் முக்கிய குருக்களில் ஒருவர், அன்னாருடைய சகோதரர். அவருடைய வீட்டுக்கு சடலம் கொண்டு வரப்பட்டது. திருச்சி ஜில்லா கொப்பம்பட்டி கிராமத்தின் குருக்களான நாகரத்தின குருக்களுக்கு புதல்வர்கள் உள்ளனர்.
[1974 - ஜூன் 27 தேதியிட்ட தினமணி நாளிதழிலிருந்து]
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





