விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

மதுரை ஆட்சியர் பீட்டர் பாண்டியனும் அரசி மீனாட்சியின் திருவிளையாடலும்!

மதுரை ஆட்சியர் பீட்டர் பாண்டியனும் அரசி மீனாட்சியின் திருவிளையாடலையும் பற்றி...

ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவில் அங்கவடியுடன் மதுரை மீனாட்சி - பீட்டர் பாண்டியன். - Credit to the respective owner

Published On :

மதுரையில் ‘பீட்டர் பாண்டியன்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட ஆங்கிலேயரான ஆட்சியர் ரௌஸ் பீட்டருக்கும், மதுரையின் அரசியான அன்னை மீனாட்சி அம்மனுக்கும் இடையே நடந்த திருவிளையாடல் மிகவும் சுவாரசியமானது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1812 ஆம் ஆண்டு முதல் 1828 வரை மதுரையின் ஆட்சியராகத் (கலெக்டர்) திகழ்ந்தவர் ரோஸ் பீட்டர். மக்களின் இன்ப துன்பங்களில் அதிக அக்கறை காட்டியதால் மதுரை மக்களின் பாசத்திற்குரிய ஆட்சியராகவும், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னனாகவும் நினைத்து பீட்டர் பாண்டியன் என வாஞ்சையோடு அழைத்து மகிழ்ந்தனர்.

இவர் பிரிட்டனில் கார்ன்வால் மாவட்டத்தில் உள்ள ஹார்லி என்ற இடத்தில் 1785 ஆம் ஆண்டு ஆக. 24 ஆம் நாள் பிறந்தவர். படித்து பட்டம் பெற்ற பின் இந்தியா வந்து மதுரையில் ஆட்சியராக பணியாற்றினார்.

பீ்ட்டர் பாண்டியன் மதுரையை ஆண்ட காலங்களில் பல அரிய வரலாற்றுத் தடங்களை நம்மிடம் விட்டுச் சென்றுள்ளார். அந்த வகையில் மதுரை மீனாட்சி அம்மனுக்கு பீட்டர் பாண்டியன் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பாத அங்கவடியையும் கொடுத்து மகிழ்ந்திருப்பதை வரலாற்று நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

இ்ந்த பாத அங்கவடி சில ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருந்தது. இந்த ஆண்டு ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவின் 8 ஆம் நாளில் மீனாட்சியின் பாதங்களில் பொருத்தப்பட்டது.

இதனை ஆன்மிகவாதிகளும், ஆய்வாளர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். அதில், 211 சிவப்புக் கற்கள், 36 மரகதக் கற்கள், 40 பலச்ச வைரம், 2 முத்து, 2 நீலம், 2 வைடூரியம் என மொத்தம் 27-12-0 தோலா எடை கொண்டது. 27 தோலா 12 மாஷா 0 குன்றி என்பது இதன் விளக்கம். 1 தோலா என்பது 11.664 கிராம். 1 மாஷா 0.972 கிராம். அதாவது இன்றைய எடை மதிப்பில் 323.79 கிராம். 

மீனாட்சி அம்மனுக்கு பீட்டர் பாண்டியன் ஏன் பாத அங்கவடிகளைக் கொடுத்தார் தெரியுமா? அதன் பின்னணியில் பெரும் உண்மைக் கதையும் இருக்கிறது.

மதுரையை ஆண்ட பீட்டர் பாண்டியன், பிற மதங்களை மதிக்கும் குணம் கொண்டவராகவும், கோயில் நிர்வாகத்தையும் மிகுந்த மரியாதையுடனும் நேர்மையுடனும் கையாண்டுள்ளார். பிற மதங்களைச் சேர்ந்த மக்களையும் அவர் அன்போடும் மரியாதையோடும் நடத்தியுள்ளார். நாள்தோறும் அவரது அலுவலகத்துக்குச் செல்லும் வழியில் அவர் மீனாட்சி அம்மன் கோயிலைக் கடந்து செல்வாராம்.

அவர், மீனாட்சி அம்மன் கோயில் வழியே செல்லும்போது, தனது குதிரையிலிருந்து இறங்கி, தனது தொப்பியையும் காலணிகளையும் கழற்றிவிட்டு மீனாட்சியை வணங்கிவிட்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

ஒரு நாள் இரவு நேரம் அன்றைய தினம் மதுரையில் பயங்கர இடி மின்னலுடன் பயங்கர மழை பெய்துகொண்டிருந்தது. பீட்டர் பாண்டியன் அறையில் அமர்ந்து அலுவல் சம்பந்தமான கோப்புகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது அறைக்குள் திடீரென சுமார் மூன்று வயதுடைய ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தார். பட்டுப் பாவாடை, காலில் கொலுசு அணிந்து, அழகான ஆபரணங்களைச் சூடி அங்கு அறையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார் பீட்டர்.

அந்தச் சிறுமி, அவரின் கையைப் பிடித்து, “பீட்டர் வா, பீட்டர் வா” என்று கூறி, அவரது வீட்டைவிட்டு வெளியே இழுத்துச் சென்றுள்ளார். பீட்டர் பாண்டியன், சிறுமியுடன் வெளியே வந்த சில நொடிகளில் அவர் தங்கியிருந்த வீடு, இடி விழுந்து தரைமட்டமானது.

அதிர்ச்சியில் உறைந்துபோன பீட்டர் பாண்டியன் தன்னை அழைத்து வந்த சிறுமியைத் தேடினார். சிறுமி அங்கு இல்லை. யார் அந்த சிறுமி? என்ற சந்தேகம் பீட்டர் பாண்டியனுக்கு வந்தது.

உண்மையைக் கண்டறிய சிறுமியின் கால் தடங்களின் பின்னாலே நடந்துசென்றார். கடைசியில் அந்த சிறுமியின் கால்தடம் மீனாட்சி அம்மன் கோயில் வரை சென்று மறைந்தது. தன்னைக் காப்பாற்றியது மீனாட்சி அம்மன் என்பதை முழுமையாக உணர்ந்தார் பீட்டர் பாண்டியன். அன்று முதல் தனது மொழி, சமயம் வேறாக இருந்தபோதும் மதுரை மக்களின் நம்பிக்கையான மீனாட்சி அம்மனை கிறிஸ்துவரான ரௌஸ் பீட்டர் மனதார ஏற்று வணங்கி மகிழ்ந்தார்.

இது குறித்து நாம் தொலைத்த மதுரை வீதிகள் என்ற நூலின் ஆசிரியர்களுள் ஒருவரான தமிழினியாள் கூறுகையில், “மதுரைக்கு நீண்ட நெடிய வரலாறு உள்ளது. இரவும் பகலும் தொடர்ந்து இயங்குகின்ற உலகின் வெகுசில நகரங்களுள் மதுரையும் ஒன்று. கடந்த 1812 ஆம் ஆண்டில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த ரோஸ்பீட்டர், மீனாட்சி மீது அளவு கடந்த பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர்.

சிறுமியாய் வந்து தன்னைக் காப்பாற்றியது மீனாட்சிதான் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், மீனாட்சி அம்மனுக்கு பாத அங்கவடிகள் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தி மகிழ்ந்தார். ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவின்போது மீனாட்சிக்கு அங்கவடிகள் அணிவிக்கப்படுவது வழக்கம்.

சில ஆண்டுகளாக அணிவிக்காமல் இருந்த நிலையில், இந்தாண்டு அதனை கோவில் நிர்வாகம் அணிவித்திருந்தது பொதுமக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பெரிதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக கோவில் நிர்வாகத்திற்கு நன்றி” தெரிவிக்கிறேன் என்றார்.

மதுரை மக்களால் அன்போடு பீட்டர் பாண்டியன் என அழைக்கப்பட்ட ரௌஸ் பீட்டரும், மதுரை மாநகரை தற்போது உள்ளதைப் போன்று விரிவாக்கம் செய்த ‘பிளாக்பர்ன்’ என்ற கலெக்டரும் மதுரை மக்கள் இப்போதும் போற்றிக் கொண்டாடும் ஆங்கிலேய அதிகாரிகளாவர்.

தெற்கு ஆவணி மூல வீதி - மேல ஆவணி மூல வீதி சந்திப்பில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலய தாழ்வறையில் ரோஸ் பீட்டரின் கல்லறை உள்ளது. ரௌஸ் பீட்டர், கடந்த 1828 ஆம் ஆண்டு, மதுரையில் 'பீட்டர் பாண்டியனாக' ஆக. 6 ஆம் நாள் காலமானார். அவர் மறைந்தாலும் செயின்ட் ஜார்ஜ் தேவாலய தாழ்வறையில் உள்ள கல்லறையில் துயில் கொள்வதாகவே மதுரை மக்களின் நம்பிக்கை.

Summary

The story of the divine interaction between the British Collector Rous Peter affectionately known to the people as ‘Peter Pandian’ and Goddess Meenakshi of Madurai is truly fascinating.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER