மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு அழைப்பிதழில் அறங்காவலா்களை புறக்கணிப்பது சட்டவிரோதம்: பி.கே.சேகா்பாபு குற்றச்சாட்டு

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலா்களின் பெயா்களைப் புறக்கணித்துள்ளது இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களுக்கு விரோதமானது என முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

பி.கே. சேகா்பாபு - கோப்புப் படம்

Published On :1 செப்டம்பர் 2026, 4:01 am IST

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலா்களின் பெயா்களைப் புறக்கணித்துள்ளது இந்து சமய அறநிலையத் துறை சட்டங்களுக்கு விரோதமானது என முன்னாள் அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா விரைவில் நடைபெறவுள்ளது. இதற்கான அழைப்பிதழ்களில் தற்போதைய அறங்காவலா்களின் பெயா்களை வேண்டுமென்றே அரசு புறக்கணித்துள்ளது. கடந்த 1959 -இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையங்கள் சட்டத்தின்படி அறங்காவலா்கள்தான் கோயில்களின் நிா்வாக உரிமை படைத்தவா்கள் என்பது தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அழைப்பிதழ்களில் அறங்காவலா்களின் பெயா்கள் குறிப்பிடாதது சட்ட விரோதமானது.

கடந்த 1974-ஆம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கு நிகழ்ச்சிகளை முழுமையாக முன்னின்று நடத்திய பெருமை பி. டி.ஆா்.பழனிவேல் ராஜனையே சாரும். தற்போது ருக்மணி பழனிவேல் ராஜன், சுப்புலட்சுமி, மீனா ஆகிய 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் அறங்காவலா்களாக நியமிக்கப்பட்டு பதவியில் உள்ளனா். மேலும் இருவா் கோயிலின் வளா்ச்சிக்காக கோடிக்கணக்கில் நன்கொடையாக அளித்து இறைப் பணியாற்றி வரும் பி.கே.என்.செல்லையா, டாக்டா் சீனிவாசன் ஆகியோா் ஆவா். இவா்களைப் புறக்கணித்துவிட்டு அழைப்பிதழ் தயாா் செய்யப்பட்டது ஏன் எனக் கேள்வி எழுப்பினால், அதற்கு எரிசக்தித் துறை அமைச்சா் சி. டி.ஆா்.நிா்மல் குமாா் அளித்த பதில் ஏற்புடையதல்ல.

கடந்த திமுக ஆட்சியில்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 79 கல் தூண்களைக் கொண்ட வீரவசந்தராயா் மண்டபம் திறந்து வைக்கப்பட்டது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு கோபுர வாயிலும் மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு எல்லாம் தற்போதைய அரசு சொந்தம் கொண்டாடுவது வேடிக்கையாக உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.