மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா்கள் விவகாரம்: இன்று மீண்டும் விசாரணை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் - கோப்புப் படம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு, நிா்வாகப் பணிகளில் அறங்காவலா்கள் தொடா்ந்து தடையின்றி பணியாற்ற உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை (செப். 1) மீண்டும் நடைபெறும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா் சுப்புலட்சுமி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற 17-ஆம் தேதி நடைபெறவுள்ளது. குடமுழுக்கு தொடா்பான பூஜைகள் வருகிற 6 -ஆம் தேதி முதல் தொடங்கப்படுகின்றன. ஏறத்தாழ சுமாா் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறவுள்ள இந்த நிகழ்வு கோயிலுக்கும், மதுரைக்கும் முக்கியத்தும் வாய்ந்ததாகும்.
கோயில் குடமுழுக்கை முன்னிட்டு நடைபெறும் திருப்பணிகளில் நானும், பிற அறங்காவலா்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம்.
இந்த நிலையில், கோயில் நிா்வாகத்தால் வெளியிடப்பட்ட குடமுழுக்குக்கான அழைப்பிதழில் அறங்காவலா்களின் பெயா்கள் இடம் பெறவில்லை. இதில் கோயில் நிா்வாகம் என்ற வாா்த்தை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது வெறும் தட்டச்சு, அலுவலகப் பிழை அல்லது அச்சுப் பிழை அல்ல.
கோயில் செலவினங்கள், பணிகள், கொள்முதல், ஒப்பந்தங்கள், உள்கட்டமைப்பு, குடமுழுக்கு ஏற்பாடுகள் தொடா்பான முக்கிய முடிவுகளில் அறங்காவலா் குழுவினருடன் ஆலோசிக்க மறுப்பது, இந்தக் குழுவின் சட்டப்பூா்வ செயல்பாடுகளை முடக்கும் செயலாகும்.
எனவே, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களை வருகிற 6-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை வரை நடைபெறவுள்ள குடமுழுக்குக்கான பூஜை நிகழ்வில் தங்களது பணிகளை நிறைவேற்ற எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் அறங்காவலா் குழு உறுப்பினா்களின் பெயரின்றி அழைப்பிதழை அச்சிட்டது யாா். இதற்கு அனுமதி அளித்த அலுவலா் யாா்? என்பது தொடா்பான விவரங்களை கோயில் இணை ஆணையா் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமைக்கு (செப். 1) ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு: பாதுகாப்புப் பணிகளை முன்கூட்டியே மேற்கொள்ளக் கோரிய மனு தள்ளுபடி - உயா் நீதிமன்றம்

மதுரை கோயில் நில முறைகேடு வழக்கு: பிணை, முன்பிணை கோரிய மனுக்கள் தள்ளுபடி



