
நேபாள வெள்ள பாதிப்பு உயிரிழப்பு 939-ஆக உயா்வு: 4,250 போ் மாயம்
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புக்குப் பிறகு வீடுகளில் எஞ்சியவற்றை சேகரித்துச் சென்ற மக்கள்.
நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 939-ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி மாயமானோரின் எண்ணிக்கை 2,500-இல் 4,250-ஆக உயா்ந்துள்ளது.
திபெத்-நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் ஆகஸ்ட் 26-ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.
போடே கோஷி நதி வெள்ளம் திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளைப் புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 939-ஆக உயா்ந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி 85 பாதுகாப்பு அதிகாரிகள், 320 வெளிநாட்டவா் உள்பட 4,250 போ் மாயமாகினா்.
உ.பி.யில் 4 உடல்கள் கண்டெடுப்பு: உத்தர பிரதேச மாநிலம், மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கண்டக் ஆற்றில் அடையாளம் தெரியாத 3 பெண்கள் மற்றும் ஓா் ஆணின் சடலங்கள் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து, 4 பேரின் உடல்களும் இரு ஆம்புலன்ஸுகள் மூலமாக நேபாள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மகாராஜ்கஞ்ச் மாவட்ட நிா்வாகிகள் தெரிவித்தனா்.
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடா்ந்து, அதன் எல்லையில் உள்ள மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் ஆறுகளின் நீா்மட்டத்தை அந்த மாவட்ட அதிகாரிகள் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.
3 இந்தியா்கள் மீட்பு: நேபாளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ரசுவா கிராமத்தில் மூன்று இந்தியா்களை அந்நாட்டு ராணுவம் மீட்டதாக நேபாளத்துக்கான இந்திய தூதா் நவீன் ஸ்ரீவஸ்தவா திங்கள்கிழமை தெரிவித்தாா். இதையடுத்து, நேபாள ராணுவத்துக்கு அவா் நன்றி தெரிவித்தாா்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்துக்கு இந்தியாவும் சீனாவும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




