நல்லவர் மறைந்தார்!

முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ராலின் மரணம் அமைதியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அவருக்கு இந்த நாடு செலுத்தும் அஞ்சலியும் ஆரவாரம் இல்லாததாகவே இருக்கப் போகிறது.
Updated on
2 min read

முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ராலின் மரணம் அமைதியாக இருந்தது என்பது மட்டுமல்ல, அவருக்கு இந்த நாடு செலுத்தும் அஞ்சலியும் ஆரவாரம் இல்லாததாகவே இருக்கப் போகிறது. ஐ.கே. குஜ்ராலின் மரணத்துக்கு நியாயமாகக் கிடைத்திருக்க வேண்டிய முக்கியத்துவம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருப்பது சற்று வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்றாலும், பொதுவாழ்க்கையை ஆரவாரமில்லாமல் நடத்திக் காட்டிய அந்த மனிதர், இப்படி ஓர் இறுதி அஞ்சலியைத்தான் விரும்பியும் இருப்பார்.

பதினொரு மாதங்கள் மட்டுமே பிரதமராக இருந்தார். சத்தம்போட்டுக்கூடப் பேசாதவர். தனக்கென்று மக்கள் செல்வாக்கு எதுவும் இல்லாதவர். ஆனாலும், கட்சி பேதமின்றி அனைவராலும் மதிக்கப்பட்டவர். நேசிக்கப்பட்டவர். இதுதான் இந்தர்குமார் குஜ்ரால்.

குஜ்ராலின் மறைவு இந்திய சரித்திரத்தின் ஒரு முக்கியமான காலகட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய கடைசி தேசியத் தலைவர் ஐ.கே. குஜ்ராலாகத்தான் இருப்பார். இப்போது பாகிஸ்தானாகி விட்டிருக்கும் மேற்குப் பஞ்சாபிலுள்ள "குஜ்ரால்' என்கிற கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்ட இந்தர்குமார் 1919-ஆம் ஆண்டு டிசம்பர் 4-ஆம் தேதி ஜீலம் நகரில் பிறந்தவர் என்றாலும், பிரிவினைக்குப் பிறகு இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்த குடும்பம் அவருடையது. லாகூரில் கல்லூரி மாணவராக இருக்கும்போதே விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். 1942-இல் அண்ணல் காந்தியடிகளின் அறைகூவலை ஏற்று "வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் குதித்தவர்.

இன்றைய தேசிய அரசியலில் சுதந்திரப் போராட்டத்தில் நேரடியாகப் பங்குகொண்ட தலைவர்கள் யாருமே இல்லை என்கிற நிலையில், அந்த சகாப்தத்தின் கடைசித் தலைவராக இந்தர்குமார் குஜ்ரால் சரித்திரத்தில் அடையாளம் காணப்படுவார். அதுமட்டுமல்ல, தனது 60 ஆண்டுப் பொதுவாழ்க்கையில் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக, யாரும் அவர்மீது சுண்டுவிரலைக்கூட நீட்டிக் குற்றம் காணமுடியாத நேர்மையாளராக இருந்த பெருமைக்குரியவரும் இந்தர்குமார் குஜ்ராலாகத்தான் இருக்க முடியும்.

குஜ்ராலின் பொதுவாழ்க்கை 1947 பிரிவினையின்போதுதான் புதிய இலக்கை நோக்கி நகர்ந்தது. அதுவரை சுதந்திரப் போராட்ட வீரராக மட்டுமே இருந்த குஜ்ரால், பிரிவினையால் பாதிக்கப்பட்டு, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு விரட்டப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளிக்க இந்திரா காந்தியின் தலைமையில் களமிறங்கிய இளைஞர் கூட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். இந்திரா காந்தியுடனான அந்த நெருக்கம்தான், அவர் 1964-இல் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படக் காரணமாக அமைந்தது. அதற்கு முன்னால்வரை, தில்லி மாநகராட்சி அளவில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஐ.கே. குஜ்ரால் தேசியத் தலைவராக உருவாக வழிகோலியது மாநிலங்கள் அவை உறுப்பினர் பதவி.

பிரதமர் இந்திரா காந்தியின் நம்பிக்கைக்கு உரியவர் என்றுதான் ஆரம்பத்தில் குஜ்ரால் அறியப்பட்டார். சொல்லப்போனால், 1975 ஜூன் 25-ஆம் நாள் இந்தியாவின்மீது நெருக்கடிநிலை திணிக்கப்பட்டபோது செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்தவர் குஜ்ரால். பத்திரிகைத் தணிக்கை என்பது சுதந்திர இந்தியாவில் அவரது அமைச்சகத்தால்தான் கொண்டுவரப்பட்டது. ஆனால், "எமர்ஜென்சி' காலத்தின் தவறுகள் எதுவுமே, குஜ்ராலின் மரியாதையைப் பாதிக்கவில்லை. காரணம், அவருக்கு அதில் தொடர்பில்லை என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

தன்னால் நெருக்கடிநிலை அமலையும், அடக்குமுறை ஆட்சியையும், தணிக்கைக் கொள்கையையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று குஜ்ரால் வெளிப்படையாகவே பிரதமர் இந்திரா காந்தியிடம் சொன்னபோது, அவர் கோபப்படவில்லை. மாறாக, குஜ்ராலை அன்றைய சோவியத் யூனியனுக்கு இந்தியாவின் தூதுவராக அனுப்பி வைத்தார். நெருக்கடிநிலை காலத்திலும் குஜ்ராலால் தாமரை இலைத் தண்ணீராக இருக்க முடிந்தது என்பதைத்தான் இது காட்டுகிறது.

1977-இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி பதவி ஏற்றபோது இன்னொரு அதிசயம் நிகழ்ந்தது. இந்திரா காந்தியால் நியமிக்கப்பட்ட எல்லா தூதுவர்களும் மாற்றப்பட்டனர் - ஐ.கே. குஜ்ராலைத் தவிர. பிரதமர் மொரார்ஜி தேசாயும் சரி, அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் அடல்பிகாரி வாஜ்பாயியும் சரி, குஜ்ராலின் ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளாமல் பதவியில் தொடரச் சொன்னார்கள். அதன் விளைவாக, இந்தியா ஒரு தலைசிறந்த வெளிவிவகார சிந்தனையாளரைப் பெற முடிந்தது.

குஜ்ராலின் ஐந்து அம்ச வெளிவிவகாரக் கொள்கை, இந்திய சரித்திரத்தில் பஞ்ச சீலத்துக்கு அடுத்தபடியாக பாராட்டவும், விமர்சிக்கவும் பட்ட ஒன்று. சோவியத் யூனியனின் வீழ்ச்சியுடன் வல்லரசு நாடுகளின் பனிப்போர் அகன்றுவிட்ட நிலையில், தெற்காசிய நாடுகளின் கூட்டுறவும், அணிசாரா நாடுகளை இந்தியா வழிநடத்துவதும்தான் சரியான வெளிவிவகாரக் கொள்கையாக இருக்க முடியும் என்கிற அவரது வாதம் செயல்படுத்தப்படுமானால் மட்டுமே இந்தியா அச்சுறுத்தல்கள் இல்லாத முன்னேற்றம் காண முடியும் என்பதை மறுப்பதற்கில்லை.

11 மாதம் பிரதமராக இருந்து இந்தர்குமார் குஜ்ரால் பெரிதாக என்ன சாதித்து விட்டார் என்று கேட்கலாம். "இப்படியும் ஒரு பிரதமர்' என்று வருங்காலம் அவரைச் சிறப்பித்துப் பாராட்டாமல் இருக்கலாம். ஆனால், சரித்திரம் "இப்படியும் ஒரு நல்ல மனிதர் பிரதமர் பதவியை அலங்கரித்தார்' என்று பதிவு செய்யாமல் இருக்க முடியாது!

எந்தவிதக் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பிரதமராக அவரால் பதவியில் இருக்க முடிந்தது. நேர்மையையும், பொதுவாழ்க்கையில் சில குறிக்கோள்களையும் கடைப்பிடிக்கும் அரசியல்வாதியாக அவரால் வாழ்ந்து காட்ட முடிந்தது. தான் வகிக்கும் பதவியின் கௌரவத்தைக் காப்பாற்றப் பிரதமர் பதவியையே தூக்கி எறியும் துணிவுடன் செயல்பட முடிந்தது.

இந்தர்குமார் குஜ்ராலின் மரணம் என்பது இந்தியாவை நேசித்த, அப்பழுக்கற்ற பொதுவாழ்க்கையை வாழ்ந்து காட்டிய ஒரு நல்ல மனிதரின் மரணம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com