இந்திய ரயில்களில் முன்பதிவு செய்து பயணம் செய்யும் அனைத்துப் பயணிகளும் ரயில்வே பரிந்துரைத்த அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் மூலச்சான்றைக் கொண்டுவர வேண்டும், இவற்றின் ஒளிநகல் ஏற்கப்படமாட்டாது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதற்கு பயணிகளிடையே பொதுவாக எதிர்ப்பு இருக்கிறது. இது தொடர்பாக ஒரு நுகர்வோர் அமைப்பு தொடர்ந்த வழக்கில், இந்த நடைமுறையை எளிமைப்படுத்த வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளபோதிலும், இத்திட்டம் வரவேற்புக்குரியது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை.
ரயில்களில் முதல் வகுப்பில் (ஏ.சி. கோச்) பயணம் செய்யும் பயணிகள் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் பரிந்துரைக்கப்பட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும் என்கின்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
முதல் வகுப்புப் பயணிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காததற்குக் காரணம் அவர்கள் அனைவருமே ரயில்வே சொல்லும் ஏதேனும் ஓர் அடையாள அட்டையுடன் - குறைந்தபட்சம் பான் கார்டு, டிரைவிங் லைசன்ஸ், பாஸ்போர்ட் பெற்றிருப்பவர்களாக இருக்கின்றனர். இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காததற்கு இது மட்டுமே காரணம் அல்ல. இத்திட்டத்தை ரயில்வே அறிமுகப்படுத்தியதன் நோக்கமே முதல் வகுப்புப் பெட்டிகளில் அதிக அளவு திருட்டுகள் நடைபெறுவதைத் தடுக்க இதுவும் ஒரு முயற்சி என்று அவர்களுக்குத் தெரியும்.
முதல் வகுப்பில் பயணம் செய்யும் அனைவரும் வசதியானவர்கள், தொழிலதிபர்கள், உயர் பதவி வகிப்போர், ரயில்வே உயரதிகாரிகள் என்பதாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. திருடர்களும் முதல் வகுப்பில் பயணம் செய்யலாம். முதல் வகுப்புப் பெட்டி ஒவ்வொன்றிலும் உதவியாளர்கள் இருந்து, வேறு யாரும் அந்தப் பெட்டிக்குள் ஏறாமல் பார்த்துக்கொண்டாலும் திருட்டுகள் நடக்கும். நிறைய திருட்டுச் சம்பவங்களில், முந்தைய ஸ்டேஷனில் இறங்கிய நபர்தான் பெட்டியை எடுத்துச்சென்றார் என்று தெரிந்து, விசாரித்தால் அது பொய்யான முகவரியாக இருப்பதும், யாரையும் பிடிக்க முடியாத நிலையும் இத்தகைய அடையாள அட்டையைக் கட்டாயமாக்கின.
தற்போது இதே நடைமுறையை இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கும் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தியிருக்கிறது ரயில்வே நிர்வாகம். இதற்குத் திருட்டுகள் முதன்மைக் காரணம் அல்ல. மேலும் இத்தகைய அடையாள அட்டை நிபந்தனைகளால் இரண்டாம் வகுப்பு முன்பதிவுப் பெட்டிகளில் திருட்டை ஒழித்துவிடவும் முடியாது. ஏனென்றால், இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் ஏறிக்கொள்ளும் முன்பதிவு செய்யாத பயணிகளைத் தடுக்க ஒவ்வொரு பெட்டியிலும் ஊழியர்கள் கிடையாது.
முன்பதிவு செய்யாத பயணிகள்கூட, டிக்கெட் பரிசோதகர் திட்டக்கூடும் என்று கூச்சப்பட வாய்ப்புண்டு. ஆனால் பிச்சைக்காரர்களும் திருநங்கையர்களும் யாருக்கும் அச்சப்படுவதில்லை. ஆகவே யார் வேண்டுமானாலும் இந்தப் பெட்டிகளில் ஏறிக்கொள்ள முடியும். டிக்கெட் பரிசோதகர் கேள்வி எழுப்பினால்தான் உண்டு. ஒவ்வொரு பெட்டிக்கும் டிக்கெட் பரிசோதகர் இல்லாத நிலையில் அதுவும் சாத்தியம் கிடையாது.
தீவிரவாதிகளைத் தடுக்கும் நடவடிக்கை என்றும் இதைச் சொல்ல முடியாது. பல தீவிரவாதிகள் இவர்கள் கேட்கும் அனைத்து அடையாள அட்டைகளும் காட்டக்கூடியவர்கள். ஆகவே, இரண்டாம் வகுப்புப் பெட்டிகளைப் பொருத்தவரை போலிப் பயணிகள்தான் மிகப்பெரிய தொல்லையாக இருக்கிறார்கள். இந்தப் போலி பயணிகள் அனைவரும் ரயில்வே துறையினால் அங்கீகரிக்கப்பட்ட டிராவல் ஏஜன்டுகளால் வந்து சேருபவர்கள் என்பதுதான் வேடிக்கை!
2011-12 ரயில்வே துறைக்கு சரக்குக் கட்டணம் மூலம் ரூ.62,171 கோடி வருவாய் கிடைத்தது என்றால் பயணிகள் மூலம் ரூ. 25,858 கோடி கிடைத்தது. இந்தியாவில் ஆண்டுதோறும் 7,586 கோடி பயணிகள் ரயிலில் பயணம் செய்கிறார்கள். இந்த எண்ணிக்கையில், முதல் வகுப்புப் பயணிகள், முன்பதிவு செய்யாத பயணிகள், புறநகர் ரயில் பயணிகள் என கணக்கிட்டுக் கழித்துவிட்டாலும், குறைந்தபட்சம் 2,000 கோடி பயணிகள் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளில் பயணம் செய்கிறார்கள். இவர்களில் சரிபாதிபேர் டிராவல் ஏஜன்டுகளின் மூலம் கடைசி நேரத்தில் வந்து சேருபவர்கள்.
போலிப் பெயர்களில் பயணம் செய்யும் ரயில் பயணிகளைக் கட்டுப்படுத்த டிராவல் ஏஜன்ஸிகள் மீது அதிகக் கட்டுப்பாடு, தண்டனை விதிப்பதைவிட்டு, ரயில்வே பயணிகள் மீது இத்தகைய கட்டுப்பாடுகளை விதிப்பது ஏன் என்று கேட்கலாம். ஏனென்றால், ரயில்வே ஏஜன்ஸிகள் பெரும்பாலும் ரயில்வே ஊழியர்களின் உறவினர்களாலும், அல்லது ஒழுங்காக கையூட்டு வழங்குபவர்களாலும் நடத்தப்படுபவை. சில டிராவல் ஏஜன்ஸியில் டிக்கெட் வாங்கினால், காத்திருப்போர் பட்டியலில் எந்தக் கடைசியில் இருந்தாலும் இடம் உறுதியாகிவிடும் என்கிற நிலைமைதான் காணப்படுகிறது.
ரயில்வே நிர்வாகிகளே இத்தகைய டிராவல் ஏஜன்ஸிகளுக்கு ஆதரவாக இருப்பதால் ரயில்வே துறை தற்போது பயணிகளை ஓர் ஒழுங்குக்குள் இட்டுவர முயலுகிறது. அடையாள அட்டை இருந்தால் மட்டுமே இரண்டாம் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்ய முடியும் என்ற நிலைமை ஏற்பட்டால், போலிப் பயணிகள் இல்லாமல் போவார்கள் என்று ரயில்வே நிர்வாகம் நம்புகிறது.
பயணத்துக்கான கடைசி இரண்டு மணிநேரத்தில் "சார்ட் பிரிப்பேர்ட்', "நாட் கன்பர்ம்டு' என்கின்றபோதுதான் டிராவல் ஏஜன்ஸிகளிடம் பயணிகள் சிக்க நேர்கிறது. ரயில்வே நிர்வாகம் இன்னும் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கலாம்.
மூலச்சான்றுகள் திருடுபோனால், தொலைந்துபோனால் மீண்டும் பெறுவது சிரமம் என்பதால், ஒளிநகல்களை அனுமதிக்க வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும், ஒளிநகல்களைப் போலியாகத் தயாரிப்பது எளிது என்பதால் மூலச்சான்று அவசியமாகிறது.
ஒவ்வொருவரும் ஒரு செல்போன் வைத்திருக்கும்போது, ஒரு மூலச்சான்று வைத்திருப்பது கடினமா என்ன? இன்றைய காலம் அப்படி. பொதுநன்மைக்காக சில சிரமங்களை ஏற்கத்தான் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் மக்கள்: சந்திரபாபு நாயுடு

‘எக்ஸ்’ தளத்தில் ஆபாச உள்ளடக்கம்: எலான் மஸ்குக்கு பிரான்ஸ் அழைப்பாணை

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

தெற்கு லெபனானில் சிலுவை அவமதிப்பு: இஸ்ரேல் வீரருக்கு வலுக்கும் கண்டனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

