"மோடி' வித்தை வென்றது!

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி, அக்கட்சிக்கான வெற்றி அல்ல. அது நரேந்திர மோடி என்கிற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி!
Updated on
2 min read

குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்குக் கிடைத்துள்ள வெற்றி, அக்கட்சிக்கான வெற்றி அல்ல. அது நரேந்திர மோடி என்கிற தனிமனிதருக்கு கிடைத்த வெற்றி!

பாஜக தலைமைகளோடு கருத்து மாறுபாடுகொண்டு, குஜராத் மாநிலத்தில் அவர் புதிய கட்சி தொடங்கி போட்டியிட்டிருந்தாலும், இதே வெற்றியைப் பெற்றிருப்பார். அந்த அளவுக்கு அவர் அந்த மாநில நடுத்தர மக்களிடம் புகழ் பெற்றிருக்கிறார்.

இந்த வெற்றியைக் கொண்டு அவரை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தினால், இதே வெற்றியை இந்தியா முழுவதிலும் அவர் பெறுவார் என்று சொல்வதற்கில்லை. ஆனாலும், காங்கிரஸ் கட்சி தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், இன்னமும்கூட நரேந்திரமோடி மீது ஆத்திரத்தைக் கொட்டிக்கொண்டிருப்பது நாகரிகமாகத் தெரியவில்லை.

மோடியின் வெற்றியில் இரண்டு விஷயங்களைப் பார்க்க முடிகிறது. இன்று இந்திய மக்கள், கட்சியைவிட, யார் அரசாங்கத்தை நடத்தப்போகிறார்கள், அவரது திறன் என்ன, அவர் நேர்மையானவரா என்பதற்கு முதலிடம் தருகிறார்கள். இரண்டாவதாக, மாநிலம் உண்மையிலேயே வளர்ச்சிப் பாதையில் செல்கின்றதா என்பதை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

மேற்சொன்ன இரண்டும் சொல்லித் தெரிய வேண்டிய விவகாரங்களே அல்ல. மோடி மீது எதிர்க்கட்சிகள் வைக்கும் மிகப்பெரும் குற்றச்சாட்டு, அவர் முஸ்லிம்களின் விரோதி என்பது மட்டுமே. கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் அவர் ஹிந்துக்களுக்கு ஆதரவாக நின்றார் என்பதும், கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்தார் என்பதும்தான் இந்த நாள்வரை மோடி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. அவர் ஊழல் செய்தார், சுவிட்சர்லாந்தில் அவருக்கு இத்தனைக் கோடி ரூபாய் சேமிப்பு இருக்கிறது என்பதாக ஒரு காங்கிரஸார்கூட குற்றம்சுமத்த முடிந்ததில்லை.

இரண்டாவதாக, காங்கிரஸ் கட்சி தனது பிரசார மேடைகளில் பேசியபோது, மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் இல்லை என்று வலிந்து கூறினாலும் மக்கள் மத்தியில் அதற்கு வரவேற்பு இல்லை. ஏனென்றால், வளர்ச்சி என்பது மத்திய அரசு தரும் புள்ளிவிவரங்களால் மக்கள் புரிந்துகொள்வதல்ல. அவர்கள் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் வேலைவாய்ப்பு, வாங்கும்சக்தி ஆகியவற்றைக் கொண்டுதான் தீர்மானிக்கிறார்கள். சாதாரண மக்களுக்கு, ""நாம் நன்றாக இருக்கிறோம்'' என்ற திருப்தி இருந்தால், அந்த மாநிலமும் நன்றாக இருக்கிறது, வளர்ச்சிப் பாதையில் செல்கிறது என்பதாக அர்த்தம். குஜராத் மாநிலத்தில் உண்மையாகவே வளர்ச்சி இருந்ததை மக்கள் உணர்ந்து இருந்ததால்தான் காங்கிரஸின் பிரசாரம் எடுபடாமல் போனது.

மத்திய அரசு வழங்கிய நிதியை நரேந்திர மோடி தவறாகப் பயன்படுத்தினார் என்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி சொன்ன குற்றச்சாட்டும்கூட மக்கள் மத்தியில் எடுபடவில்லை. காரணம், அவர் தவறாகப் பயன்படுத்தியிருந்தாலும் மாநிலத்தின் வேறு திட்டங்களுக்குத்தானே தவிர, தனது சொந்தப்பெயரில் பணத்தைத் திருப்பிக் கொண்டுவிடவில்லை என்பதை அம்மாநில நடுத்தர வருவாய்ப் பிரிவினர் புரிந்துகொண்டிருப்பதால்தான்!

மோடி, சிறுபான்மையினருக்கு எதிரானவர் என்பதோடு, இந்தத் தேர்தலில் அவரை மீனவர்களுக்கு எதிரானவராகவும் குற்றம்சாட்டியது காங்கிரஸ். கடலோரப் பகுதிகளை டாட்டா, அதானி, ரெகிஜா, சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கு தாரை வார்த்துவிட்டதாகவும் காங் கிரஸ் குற்றம் சாட்டியது. மீனவர்கள் நலன் இதனால் பாதிக்கப்படும் என்று கூறியது.

இதற்கு எதிர்வினையாக, "சர்-கிரீக்' பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று மிகவும் பாமரத்தனமான குற்றச்சாட்டை மோடி வைத்திருக்க வேண்டியதில்லை. இந்தக் குற்றச்சாட்டு அவரை ""அரசாங்க நடைமுறைகள் தெரியாத இவரா, பிரதமர் வேட்பாளர்?'' என்ற நகைப்புக்கும் இடமாக்கியது. ஆனாலும் அரசியலில் இதெல்லாம் சகஜம்.

குஜராத் தேர்தலைப் பொருத்தவரை மற்ற மாநிலங்கள் - குறிப்பாக தமிழகம் - படிக்க வேண்டிய பாடம் ஒன்று உள்ளது. இலவசங்கள் மட்டுமே வெற்றிக்குக் காரணமாக அமையாது என்பதுதான் அது.

குஜராத் தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சியினர் பள்ளி மாணவர்களுக்கு இலவச கணினி "டேப்லெட்', கல்லூரி மாணவர்களுக்கு இலவச "லேப்-டாப்' என்று அறிவித்தது வாக்காளர்களிடையே எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

"வாட்' வரி குறைப்பின் மூலம் பொருள்களின் விலையைக் குறைக்கவும் பெட்ரோலியப் பொருள்களின் விலையைக் குறைக்கவும் முடியும் என்றும் காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது.

தேர்தல் நேரத்தில், ""குடும்பத்துக்கு மானிய விலையில் 9 சிலிண்டர்கள்'', ""உங்கள் பணம் உங்கள் கையில்'' ஆகியவற்றையும் மத்திய அரசு அறிவித்து தனக்கு ஆதரவு திரட்டும் வேலையிலும் ஈடுபட்டது. எதுவுமே குஜராத்தில் எடுபடவில்லை. காரணம், மக்கள் விரும்புவது தாற்காலிக மானியங்களை அல்ல, நிரந்தரத் தீர்வை. அதற்கான நடவடிக்கைகளை. நரேந்திர மோடியின் நிர்வாகம் நிரந்தரத் தீர்வுக்கான முயற்சிகளை மேற்கொள்வதாக மக்கள் நம்புகிறார்கள். அதனால் வாக்களித்தார்கள்.

அதேபோல, நரேந்திர மோடியின் குஜராத் வெற்றி, அவரைப் பிரதமர் வேட்பாளராக நிறுத்தினால் அகில இந்திய அளவிலும் தொடரும் என்று நினைப்பதும் சரியல்ல. குஜராத் என்கிற ஜாடிக்கு ஏற்ற மூடி, நரேந்திர மோடி அவ்வளவே. மாநிலத் தலைமை என்பது வேறு தேசியத் தலைமை என்பது வேறு.

மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், அவர் நிச்சயம் மக்கள் செல்வாக்குப் பெற்ற தலைவராகத்தான் இருக்க முடியும். நரேந்திர மோடிக்கு நமது நல்வாழ்த்துகள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com