பிப்ரவரி 5, 2007-இல் அறிவிக்கப்பட்ட காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 20, 2013-இல் அரசிதழில் வெளியாகியுள்ளது. இதற்குத் தமிழக முதல்வர் ஜெயலலிதாதான் முக்கியமான காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மத்திய அரசின் மெத்தனத்தை அவர் தொடர்ந்து ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்துரைத்த, இந்திய அறிவுஜீவிகளையும் இவர் சொல்வது சரிதானே என்று திரும்பிப் பார்க்க வைத்த விடாமுயற்சியும் வற்புறுத்தல்களும்தான், இன்று மத்திய அரசு இந்த இறுதித் தீர்ப்பை வெளியிடக் காரணம்.
அடுத்தபடியாக, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிடத் தடையில்லை என்றும், எப்போது வெளியிடுவீர்கள் என்று மத்திய அரசுக்குக் கெடு வைத்த உச்ச நீதிமன்றத்துக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். அதைத் தொடர்ந்து இந்த கருத்தாக்கத்துக்கு ஆதரவாக நின்றவர்களுக்கும் விவசாயிகளுக்கும்கூட இந்த பாராட்டை நீட்டிக்கலாம்.
இறுதித் தீர்ப்பு வெளியானது முதல் இன்றுவரை மத்திய அரசில் திராவிட முன்னேற்றக் கழகம் இடம்பெற்றிருந்தும், இது அரசிதழில் வெளியாகவில்லை. இத்தனைக்கும், மாநிலத்திலும் அப்போது திமுக ஆட்சி இருந்தது, அடுத்த நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது என்பதை நாம் மறக்கவா முடியும்?
அரசிதழில் வெளியிட வேண்டும் என்பதை மாநில ஆட்சியிலும், மத்தியில் கூட்டணி அரசிலும் அங்கம் வகித்த திமுகவும் இதை முன்னிறுத்தி இருந்தால், எப்போதோ இந்த இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியிருக்கும்.
அரசிதழில் தீர்ப்பு வெளியான பிறகு, காவிரி நதிநீர் ஆணையம், காவிரி கண்காணிப்புக் குழு இவை கலைக்கப்படும். இதற்குப் பதிலாக, அரசிதழில் வெளியான 90 நாள்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்று குழுமம் ஏற்படுத்தப்பட வேண்டும். காவிரி மற்றும் துணை நதிகளில் உள்ள 8 அணைகளும் காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்புக்கே விடப்பட வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம், நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளின்படி அமைக்கப்படுகிறதா, இதில் உறுப்பினர்களாக நீர்மேலாண்மை வல்லுநர்கள் நியமிக்கப்படுகிறார்களா என்பதை உறுதிப்படுத்துவதில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், தமிழக விவசாயத்தில் ஆர்வமும் அக்கறையும் உள்ள கட்சிகள் மற்றும் பிற அமைப்புகளும் கவனமாக இருத்தல் வேண்டும்.
காவிரி மற்றும் துணை நதிகளில் 8 அணைகள் உள்ளன. ஹேமாவதி, ஹேரங்கி, கபினி, கிருஷ்ணராஜ சாகரம் ஆகியன கர்நாடகத்திலும், லோயர் பவானி, அமராவதி, மேட்டூர் அணை தமிழ்நாட்டிலும், பாணசுரசாகர் அணை கேரளத்திலும் உள்ளன. இவை அனைத்தும் காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பில் வந்துவிடுகின்றபோது, இறுதித் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள அளவின்படியே ஒவ்வொரு மாதமும் (ஜூன்-10, ஜூலை-34, ஆகஸ்ட்-50, செப்டம்பர் 40, அக்டோபர் 22, நவம்பர்-15, டிசம்பர்-8, ஜனவரி-3, மற்ற நான்கு மாதங்களுக்கும் தலா 2.5 டிஎம்சி) தண்ணீர் விடும் பொறுப்பு இந்த மேலாண்மை வாரியத்தைச் சார்ந்தது. இந்த மேலாண்மை வாரியத்தில் பாரபட்சமில்லாத, அரசியல் சாய்வு இல்லாத வல்லுநர்கள் இருந்தால் மட்டுமே முறையாக நீர்ப்பங்கீடு அமையும். ஆகவே இதை உறுதிப் படுத்துவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
அடுத்ததாக, இப்போது கர்நாடகம் புதிதாக இரு விவகாரங்களை முன்வைத்து இந்தத் தீர்ப்பை மீண்டும் எதிர்க்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. முன்னாள் பிரதமர் தேவ கவுடா இதற்கான விதைகளை கர்நாடகத்தில் தூவிக்கொண்டிருக்கிறார்.
கர்நாடகம் வழங்கும் நீரைக் கணக்கிடுவதை, முன்புபோல மேட்டூரில் செய்ய வேண்டும்; பிலிகுண்டுலுவில் அளக்கக்கூடாது என்பது கர்நாடகத்தின் முதல் எதிர்ப்பு. பிலிகுண்டுலுவுக்கும் மேட்டூர் அணைக்கும் இடைப்பட்ட பகுதியில், சிற்றாறுகள் மற்றும் மழைநீர் மூலம் சுமார் 25 டிஎம்சி தமிழகத்துக்கு கூடுதலாகக் கிடைக்கிறது என்று ஒரு திரிபுவாதத்தை முன்வைக்கிறார்கள். இடைவழியில் கிடைக்கும் நீரையும் கணக்கில் கொண்டே நடுவர்மன்றம் 192 டிஎம்சியை தீர்மானித்தது என்பதையும் பிலிகுண்டுலுவில் நீரைக் கணக்கிடுவது மட்டுமே சரியான முடிவு என்பதையும் வலியுறுத்த வேண்டிய கடமை நமக்கு உள்ளது.
பெங்களூர் நகரம் விரிந்துவிட்டதால் ஆண்டுக்கு 25 டிஎம்சி காவிரிநீர் குடிநீருக்குத் தேவைப்படுகிறது என்கின்ற வாதத்தையும் கர்நாடகம் முன்வைக்கிறது. விவசாயிகளுக்குத் தண்ணீர் தருவதைக் குறைத்துக்கொண்டு, எவ்வளவு வேண்டுமானாலும் அவர்கள் செலவிடலாம். தமிழகம் இதை எதிர்க்காது. தமிழகத்துக்குத் தேவை 192 டிஎம்சி. அவ்வளவுதான் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும்.
1970 முதலாக பேச்சு நடத்தி முடியாமல் 1990-இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்கால தீர்ப்பு கேட்டு, நீதிமன்றத்தின் படியேறி, 1991-இல் இடைக்காலத் தீர்ப்பாக 205 டிஎம்சி தண்ணீர் தமிழகத்துக்கு வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்பிறகு 2007-இல் இறுதித் தீர்ப்பு வெளியானபோது நமக்கு கர்நாடகம் அளிக்க வேண்டிய தண்ணீர் 192 டிஎம்சியாகக் குறைந்துபோனது. அதையும்கூட தர மறுத்தது கர்நாடகம்!
இதுநாள்வரை அணைகள் கர்நாடகத்தின் பொறுப்பில் இருந்துவந்தன. இப்போது, அரசிதழில் தீர்ப்பு வெளியானதால், விரைந்து காவிரி மேலாண்மை வாரியத்தின் பொறுப்பில் அணைகளை வழங்கச் செய்வதே நமது வெற்றியை உறுதி செய்யும்.
அரசிதழில் வெளியாகி இருப்பது ஒரு வெற்றி என்றாலும், இதனை வெற்றியின் முதல்படி என்றே கருத வேண்டும். "நெடுந்தொலைவு போகவேண்டும், நாம் நிம்மதியாய் உறங்க' என்பதை மறந்துவிடக் கூடாது.
தமிழக முதல்வர் குறிப்பிட்டிருப்பதுபோல, அவரது 30 ஆண்டு பொதுவாழ்வில் கிடைத்த மிகப்பெரிய வெற்றி இது என்பதில் சந்தேகமில்லை. இது அவருக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல. தர்மத்துக்குக் கிடைத்த வெற்றியும்கூட!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.