நல்லதொரு முன்னுதாரணம்

ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம்பிரகாஷ் சௌதாலா, அவரது மகனும் ஹரியாணா சட்டப்பேரவை உறுப்பினருமான அஜய் செளதாலா உள்ளிட்ட...
Updated on
2 min read

ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும் இந்திய தேசிய லோக் தளம் கட்சித் தலைவருமான ஓம்பிரகாஷ் சௌதாலா, அவரது மகனும் ஹரியாணா சட்டப்பேரவை உறுப்பினருமான அஜய் செளதாலா உள்ளிட்ட 53 பேரும் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டதால் தில்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் இவர்கள் அனைவருக்கும் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

செளதாலா, அவரது மகன், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சில கல்வித்துறை அதிகாரிகள் உள்பட பலருக்கும் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கும் தீர்ப்பும் அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று அந்தக் கட்சியினரால் சொல்லப்பட்டாலும், அது உண்மையே என்றாலும்கூட, இவர்கள் ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்துள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை.

3,206 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் வேலையை இவர்கள் ஒரு தனிஅறையில், சில லட்சம் ரொக்கப்பணம் வாங்கிக்கொண்டுதான் பட்டியலே தயாரித்துள்ளார்கள். இதற்காக இவர்கள் செய்த தில்லுமுல்லு அனைத்தும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குறைந்தபட்சம் ரூ.100 கோடி லஞ்சம் புழங்கிய இந்த ஆசிரியர் பணி நியமனத்தில் இவர்கள் இத்தனை ஆண்டுகள் கழிந்தாகிலும் தண்டனை பெற்றிருப்பது, வாய்மையே வெல்லும் என்பதற்கு வலு சேர்க்கின்றது.

இந்த வழக்கில் செளதாலா குடும்பத்தினர் சிறைத்தண்டனைப் பெற்றதைக் காட்டிலும், இதில் தொடர்புடைய அரசுப் பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் என்று உடந்தையாக இருந்த 51 பேரும் தண்டிக்கப்பட்டுள்ளதால், இந்தத் தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அரசு நிர்வாகத்தில், ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு உடந்தையாக இருக்கும். ஊழல்பேர்வழிகளுக்கு இது ஓர் எச்சரிக்கையாக இருக்கும்.

ஊழல் செய்யும் அதிகாரிகள் தப்பிக்க முடியாது என்பதையும், அரசியல்வாதிகளோடு சேர்ந்து "சில்லறை' பார்த்தவர்கள் 'சிறை'யையும் சேர்த்துப் பார்த்தாக வேண்டும் என்பதையும் உணர்த்தும் தீர்ப்பு இது.

இதேபோன்ற தீர்ப்பு, தற்போதைய 2 ஜி வழக்கிலும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்குக் கிடைக்குமேயானால், இந்தியாவில் ஊழல் பெருமளவு குறையும் என்பது நிச்சயம்.

இந்தத் தீர்ப்பு, ஊழலைப்பற்றி மட்டுமே குறிப்பிடுகிறது. லஞ்சம் கொடுத்து, பட்டியலில் இடம்பெற்ற ஆசிரியர்கள் குறித்து ஏன் பேசவில்லை? லஞ்சம் கொடுத்து ஆசிரியர் பணியில் அமர்ந்தவர்களும் ஊழலுக்குத் துணை போனவர்கள்தான். ஆசிரியர் நியமனத்தில் முறைகேடுகளை நிரூபிக்க முடிந்ததுபோல, இவர்கள் லஞ்சம் வழங்கியதை சாட்சியுடன் நிரூபிக்க வழியில்லை என்பதால் இந்த ஆசிரியர்கள் சட்டத்திலிருந்து தப்பிக்கலாம். ஆனால், இவர்களுக்கு மறுபடியும் தகுதித் தேர்வு நடத்தி, மறுநியமனம் செய்வதுதானே முறையாக இருக்கும்? அதையும் ஏன் நீதிபதி தனது தீர்ப்பில் எழுதவில்லை என்பது நமது ஆதங்கம்.

தமிழகத்தில் சென்ற ஆட்சியிலும் தற்போதும் ஆசிரியர் நியமனங்கள் அதிகளவில் நடைபெற்று வருகின்றன. திமுக ஆட்சிக் காலத்தில் தகுதித் தேர்வின் அடிப்படையில் அல்லாமல், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் நியமனங்கள் நடைபெற்றன.

பதிவு மூப்பு மட்டுமே அடிப்படை என்ற காரணத்தால், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார்கள் அப்போதே எழுந்தன.

அந்தந்த மாவட்டங்களின் காலி இடங்களுக்கு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலிருந்து நேர்காணலுக்கு பரிந்துரைக்கப்பட்டதால், பி.எட். பட்டதாரிகள் குறைவாக பதிவாகியுள்ள மாவட்டங்களின் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு தங்கள் பதிவை மாற்றிக்கொண்டு, வேலைவாய்ப்பு பெறுவதில் பெரும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

உதாரணமாக, திருவண்ணாமலை, தருமபுரி போன்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருந்த பி.எட். பட்டதாரிகளின் எண்ணிக்கைக் குறைவாக இருந்ததால், தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், தமது மாவட்டங்களில் அதிகமானோர் பதிவு செய்திருந்ததால் தங்கள் பதிவை, பி.எட். பதிவு குறைவாக இருந்த வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு மாற்றினர்.

மாவட்டம்விட்டு மாவட்டம் மாறும்போது, அதற்கான நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும் என்று அரசு பரிந்துரைத்த விதிமுறைகள் பின்பற்றப்படவே இல்லை. புதிய மாவட்டத்தில் வசிப்பதற்கான சான்றுகள்கூட "போலி'யாகச் சேர்க்கப்பட்டு, பணிவாய்ப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன. இதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் நடத்திய ஊழல், ஆசிரியர் உலகம் நன்கு அறிந்த ஒன்று. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், அம்மாவட்டத்தில் ஏற்கெனவே பதிவு செய்திருந்த பி.எட். பட்டதாரிகள்தான்.

பதிவு மூப்பு அடிப்படையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனங்களில், இவ்வாறு மாவட்டம்விட்டு மாவட்டம் மாறிப் பதிவு செய்தவர்களை மட்டுமாகிலும் கணக்கில் எடுத்துக்கொண்டு, இவர்களது பதிவு முறைப்படி நடைபெற்றதா என்று ஆய்வு நடத்தினால், மிகப்பெரும் ஊழல் அம்பலமாகும். ஹரியாணாவில் சிக்கிய அதிகாரிகள் போல, பல வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் இந்த ஊழலில் சிக்குவார்கள்.

ஆசிரியர் அமைப்புகளும் அரசியல்வாதிகளும் தகுதித் தேர்வு கூடாது என்று சொல்வதற்கும், பதிவு மூப்பு அடிப்படையில்தான் ஆசிரியர்கள் நியமனம் நடைபெற வேண்டும் என்று சொல்வதற்கும் காரணம் அனைவரும் அறிந்ததுதான்! ஆட்சி யாருடையதாக இருந்தாலும், ஊழலும் முறைகேடும் தகுதியைத் தடம்புரட்டும்போது, தட்டிக் கேட்கப்பட்டு தண்டனை உறுதிப்படுத்தப்பட்டால்தான் நிர்வாகம் நேர்மையானதாகத் தொடரும்.

ஹரியாணா ஆசிரியர் நியமன முறைகேடு பற்றிய தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு, இந்தியாவில் ஏனைய மாநிலங்களில் நடைபெற்ற, நடைபெறும் முறைகேடுகளும் சட்டத்தின் பார்வைக்குக் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நிர்வாகத்தின் மீதும் மக்களாட்சியின்மீதும் நம்பிக்கை ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com