சுதாரித்துக் கொள்வோம்!

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட வேண்டும். ஆனால், வழக்கம்போல இந்த ஆண்டும் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.
Updated on
2 min read

குறுவைச் சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன் 12-இல் திறக்கப்பட வேண்டும். ஆனால், வழக்கம்போல இந்த ஆண்டும் அதற்கு வாய்ப்புகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது.

நீர்மேலாண்மை வல்லுநர்களை உறுப்பினர்களாகக் கொண்டு காவிரி மேலாண்மைக் குழுவை அமைக்க வேண்டிய மத்திய அரசு, அதில் ஆர்வம் காட்டாமல், வெறுமனே நீதிமன்றத்தைத் திருப்திப்படுத்துவதற்காக மாநிலங்களின் தலைமைச் செயலர்களைக் கொண்ட காவிரி மேற்பார்வைக் குழுவை அமைத்தது. ஆனால், இதனால் பயன் கிடைக்கும் என்பது வெறும் கனவுதான்.

புதுதில்லியில் ஜூன் 1-ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேற்பார்வைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற கர்நாடக அரசின் தலைமைச் செயலர் எஸ்.வி. ரங்கநாத்தின் பேச்சு இதை உறுதிப்படுத்துகிறது. அவர் முதல்வர் சித்தராமையாவின் கருத்தை முன்வைப்பவராகத்தான் இருக்கிறார். "கர்நாடக மாநிலத்தில் புதிய அரசு இப்போதுதான் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அதனால் நதிநீர்ப் பங்கீடு குறித்து முடிவு எடுக்க நான்கு வார கால அவகாசம் தேவைப்படுகிறது' என்று அவர் பேசியுள்ளார். அதாவது ஜூலை முதல் வாரத்தில்தான் காவிரி நீரைத் தமிழகத்துக்கு வழங்குவது குறித்து யோசிக்கவே செய்வார்கள்.

காவிரி நீர்ப் பங்கீட்டை, எந்த மாநில அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையீடும் இல்லாமல், நிலைமையைப் பரிசீலித்து அதற்கேற்ப நீர்மேலாண்மை செய்யும் அமைப்பு இருந்தால் மட்டுமே, தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும். இதுபோன்ற மேற்பார்வைக் குழுவால் எதுவும் நடக்கப்போவதில்லை. ஜூன் 12-ஆம் தேதி இவர்கள் மீண்டும் கூடினாலும்கூட, கர்நாடக தலைமைச் செயலர் இதே நான்கு வார காலஅவகாசத்தைத்தான் மீண்டும் கிளிப்பிள்ளைபோல கேட்கப்போகிறார்.

அணையைத் தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு தண்ணீர் திறந்துவிடும் அதிகார பலம் இந்தக் குழுவுக்குக் கிடையாது. அதனால், இந்தக் குழுவால் எந்த முடிவையும் காண முடியாது. ஆகவே தமிழ்நாட்டுக்கு நிகழாண்டில் குறுவைச் சாகுபடிக்கு தண்ணீர் கிடைக்க வாய்ப்பே இல்லை.

சென்ற ஆண்டு தென்மேற்குப் பருவமழை 63 மில்லிமீட்டர் மட்டுமே பொழிந்தது. (சராசரி அளவு 280 மில்லிமீட்டர்). மிகக் குறைந்த அளவு பெய்த பருவமழையும் கர்நாடகத்தின் (நீர்)விடாப்பிடியும் நிகழாண்டு சென்ற குறுவையில் பெரும் இழப்பை ஏற்படுத்தின. அந்த நிலைமை இந்த ஆண்டும் ஏற்படுதல் கூடாது. சென்ற ஆண்டு, நிலத்தடி நீர் மட்டுமே விவசாயிகள் பலருக்கு ஆதரவாக இருந்தது. அதுவும்கூட, மின்பற்றாக் குறையால் மிகவும் சிரமமான ஒன்றாக மாறியபோது, அரசு தலையிட்டு டெல்டா மாவட்டங்களில் மட்டும் 12 மணிநேர விவசாய மின்சாரம் வழங்கியதால் குறுவை பல இடங்களில் பிழைத்து நின்றது.

நேற்றைய தினம் கேரளத்தில் தொடங்கியுள்ள தென்மேற்குப் பருவமழை தமிழ்நாட்டிலும் பரவலாக மழையைக் கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு பருவமழை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழக விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டுவதாகப் பருவமழையின் வருகை அமைந்துள்ளது.

ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்க முடியாமல் போனாலும், பருவமழை பரவலாகப் பெய்து, அதே நேரத்தில் மேட்டூர் அணையிலும் போதுமான நீர்வரத்து அதிகரித்து, ஜூன் 25 தேதிக்குள்ளாக அணைநீர் திறக்கப்பட்டால், குறுவைச் சாகுபடியைத் தொடங்க வாய்ப்புள்ளது. ஆனால் அந்த அளவுக்கு தண்ணீர் கிடைக்குமா என்பதே சந்தேகம். "மன-காவிரி'-யின் மிகைநீர் ஓடும் வாய்க்காலாகத்தான் தமிழகக் காவிரியை கர்நாடகம் கருதுகிறது.

2012 ஜூன் மாதம் மேட்டூர் அணையில் 41 டிஎம்சி தண்ணீர் இருப்பு இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அணையில் நீர் இருப்பு வெறும் 4 டிஎம்சி மட்டுமே. பருவமழை பெய்தாலும் அணைக்கு எந்த அளவுக்குத் தண்ணீர் கிடைக்கும் என்பதும், கிருஷ்ணராஜ சாகர் முழுதும் நிரம்பாமல், அதிகளவு தண்ணீர் வெளியேற்றுவதைக் கர்நாடகம் மேற்கொள்ளாது என்பதும் தெள்ளத் தெளிவு. ஆகவே, பருவமழையை நம்பி, சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்யலாம். கர்நாடகத்தை நம்பிக் குறுவைச் சாகுபடி செய்வது தற்கொலைக்கு ஒப்பானது.

தற்போது தமிழக அரசு, தனது வேளாண்மைத் துறையை முடுக்கிவிட்டு, எங்கெல்லாம் குறுவைச் சாகுபடி செய்ய இயலும் என்பதைத் தெளிவாக அடையாளப்படுத்த வேண்டியது மிகமிக அவசியம்.

மேட்டூர் அணை ஜூன் மாத இறுதியில் திறக்கப்படும்போது, எவ்வளவு தண்ணீர் அணையில் இருக்கும், எத்தனை ஆயிரம் ஏக்கர் பயிருக்குப் போதுமானது என்பதைத் தெளிவாகக் கணித்து, எந்தெந்த மாவட்டங்களில், எந்தெந்த பகுதி விவசாயிகள் மட்டுமே குறுவையைச் சாகுபடி செய்யலாம் என்பதை மிகத் தெளிவாக அறிவித்தால், தங்களுக்குத் தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு குறைவு என்பதை அறியவரும் விவசாயிகள் சம்பா பயிரை மட்டுமே பயிரிடத் தீர்மானிப்பார்கள். இடைப்பட்ட இரண்டு மாதங்களில் சிறுதானியப் பயறு வகைகளை சாகுபடி செய்து, குறுவையால் கிடைக்கக்கூடிய ஆதாயத்தைக் காண்பார்கள்.

இதைச் செய்ய தமிழக அரசும் வேளாண்மை அதிகாரிகளும் தயக்கம் காட்டக்கூடும். காரணம், இப்போது குறுவையைத் தியாகம் செய்துவிட்டு, சிறுதானியப் பயிருக்கு மாறினால், கர்நாடகம் இதையே முன்னுதாரணமாகச் சொல்லி, ஒவ்வொரு ஆண்டும் தண்ணீர் திறந்துவிட மறுக்குமே என்ற எண்ணத்தால்தான், இது உண்மையும்கூட.

கர்நாடகத்தின் குறுக்குப் புத்திக்காக, விவசாயிகள் வாழ்க்கையில் குறுக்குச்சால் ஓட்டலாமா? எந்தெந்த பகுதிக்கு குறுவை சாத்தியம் என்பதை இப்போதே அறிவுறுத்துவதும், சிறுதானியத்துக்கு ஊக்கப்படுத்துவதும் விவசாயிகள் வாழ்வைக் காப்பாற்றும், தற்கொலைகள் நிகழாது. அரசு இதில் தயக்கம் காட்டக்கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com