கேரளம் அருகே இந்திய மீனவர்களைச் சுட்டுக் கொன்றதாக கைது செய்யப்பட்டு, பிணையில் இத்தாலி சென்ற என்ரிக்கா லெக்ஸி கப்பல் வீரர்களை, இந்தியாவுக்குத் திரும்ப அனுப்ப மாட்டோம் என்று இத்தாலி கூறியிருக்கிறது. இதற்காக இத்தாலி கடும்விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருந்தாலும், மார்ச் 22 வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழலில் ரூ.360 கோடி இந்தியாவுக்கு வந்தது தொடர்பான ஆவணங்கள் வாங்க வேண்டிய நேரத்தில், இந்தியா-இத்தாலி இடையே இப்படியொரு "திடீர்' சிக்கல் முளைத்திருக்கிறது. உங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா கூறினால், அவர்களும் எந்த ஆவணமும் தர மாட்டார்கள். சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிடும்.
2012, பிப்ரவரி 15-ஆம் தேதி என்ரிக்கா லெக்ஸி கப்பலை நெருங்கிய மீனவர் படகை, கடற்கொள்ளையர் என்று கருதிச் சுட்டதில், இரண்டு மீனவர்கள் கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். எந்த முகாந்திரமும் இல்லாமல் சுட்டுக்கொன்றதற்காக கப்பல் வீரர்கள் இருவரை கேரள போலீஸ் கைது செய்தது. தொடக்கம் முதலாகவே, இந்தச் சம்பவம் சர்வதேசக் கடல் எல்லையில் நடந்திருப்பதால், அதற்கான சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தலாம் என்று இத்தாலி வலியுறுத்தி வருகிறது. இந்தியா இணங்கவில்லை.
சரி, வழக்கு விசாரணையை, வெளியுறவு கருதி, விரைந்து முடித்திருக்கலாம். ஆனால் ஓராண்டு வரை, இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பதிலேயே கழிந்தது. கடைசியாக, ஜனவரி 18-ஆம் தேதி, உச்ச நீதிமன்றம் விசாரித்து, "சம்பவம் 20.5 கடல் மைல்களுக்கு அப்பால் நடைபெற்றுள்ளது. கேரள மாநில அரசு 12 கடல்மைல்களுக்கு அப்பாற்பட்ட சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க முடியாது. ஆகவே இந்திய அரசு இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க வேண்டும்' என்று கூறியது. சர்வதேச எல்லையில் சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதால், இதையேதான் இத்தாலியும் கூறி வருகிறது. சரி, உச்ச நீதிமன்றம் கூறியதைப்போல சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு ஏதாவது முயற்சி எடுத்ததா என்றால் அதுவும் இல்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தலா ரூ.1 கோடி வழங்கி இந்த விவகாரத்தை நீதிமன்றத்துக்கு வெளியே முடித்துக்கொள்ள இத்தாலி அரசு முன்வந்தது. ஆனால், கேரள உயர் நீதிமன்றம் அதை ஏற்கவில்லை. சமரசத்துக்கும் வழிவிடவில்லை. நீதிவிசாரணையும் தொடங்கவில்லை. இந்நிலையில், அவர்களைத் திரும்ப அனுப்புவதில் எந்தப் பயனும் இல்லை என்று இத்தாலி அரசு முடிவு செய்வதை நாம் குறை சொல்லிப் பயனில்லை.
இந்த வழக்கை உடனே முடித்து, தீர்ப்பு கிடைக்கச் செய்திருக்க வேண்டும். அதைப் பற்றி இந்தியா கவலையே படாமல் இருந்துவிட்டு, இப்போது இத்தாலிக்கு எச்சரிக்கை கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்? தவறு நம்மிடமும் இருக்கிறது என்பதை நாம் உணர மறுக்கிறோம். அல்லது உணர்ந்தும் மறுக்கிறோம்.
மீனவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இத்தாலியுடன் கறாராக சட்டம் பேசும் இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கையுடன் எப்படி செயல்படுகிறது என்று பார்த்தால், அரசின் போலித்தனம் தெரியும்.
ஜூலை 16-ஆம் தேதி 2012-இல் குவைத் அருகே, கடலில் நின்ற அமெரிக்க கடற்படை கப்பலை நோக்கி வந்ததாக மீன்பிடி படகு மீது சுடப்பட்டதில் ராமநாதபுரம் பெரியபட்டினத்தைச் சேர்ந்த மீனவர் சேகர் இறந்தார். எச்சரிக்கை செய்தும் அவர்கள் நெருங்கினார்கள். சுட்டோம் என்று அமெரிக்கா கூறியது. இந்தியா எதிர்ப்பே பேசவில்லை. சேகர் குடும்பத்துக்கு வெறும் ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. இந்தியா வாயே திறக்கவில்லை. அதிகத் தொகை வேண்டும் என்றும் கேட்கவில்லை. இது தொடர்பாக அரபு அமீரகத்தில் விசாரணை நடத்தப்பட்டதா, அந்த விசாரணையின் முடிவு என்ன? யார் மீது தவறு? இந்திய அரசு எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. அமெரிக்கா சொன்னதை, இந்தியா ஏற்றுக்கொண்டது.
அடுத்ததாக, நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது, இரு நாள்களுக்கு முன்பு மத்திய அரசு அளித்த பதிலில் இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது பற்றி ஒரு வரிகூட இல்லை. "கடந்த ஓராண்டில் 23 படகுகளைச் சேர்ந்த 131 மீனவர்கள் இலங்கை கடற்படையால் பிடிக்கப்பட்டு, தூதரக நடவடிக்கை மூலமாக விடுவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்' என்பதோடு முடிந்துபோகிறது. இத்தாலி மீது கடும் கோபம் கொண்டு எச்சரிக்கை விடுக்கும் மத்திய அரசும் பிரதமரும், இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது பற்றி பேசவே பயப்படுவது ஏன்?
குற்றவாளிகளைத் தப்ப விடுவதும் விசாரணையை நீர்த்துப்போக வைப்பதும் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிதல்ல. போபால் விஷவாயுக் கசிவுப் பிரச்னையில், யூனியன் கார்பைடு ஆண்டர்சனும், போஃபர்ஸ் பீரங்கி வழக்கில் குவாத்ரோச்சியும் அரசின் மறைமுக ஆதரவுடன்தான் வெளியேறினார்கள். அந்த விசாரணைகள் முடக்கப்பட்டன. இந்தப் பிரச்னையில், நீதிமன்ற அனுமதியின் பேரில் கடற்படை வீரர்கள் இத்தாலி சென்றனர். திரும்பிவர மறுக்கின்றனர். அதைச் சாக்கிட்டு, சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல் விசாரணை முடக்கப்படும் என்று நிச்சயமாக நம்பலாம்.
அமெரிக்கா மீதும், இலங்கை மீதும் ஏற்படாத கோபமும் ஆத்திரமும் இப்போது இத்தாலி மீது வருவதற்குக் காரணம் நிச்சயமாக என்ரிக்கா லெக்ஸி கப்பல் பிரச்னையல்ல. பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் சம்பந்தப்பட்ட சொகுசு ஹெலிகாப்டர் பிரச்னையாகவும் இருக்கக்கூடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.