யார் காப்பாற்றுவது?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் நா. சீனிவாசன் பதவி விலக வேண்டும் அல்லது இந்த சூதாட்டப் பிரச்னை முடியும்வரை...
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவர் நா. சீனிவாசன் பதவி விலக வேண்டும் அல்லது இந்த சூதாட்டப் பிரச்னை முடியும்வரை பதவியிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என்று அவரைச் சுற்றியுள்ளவர்களே நெருக்கடி தந்துள்ள நிலையில், அவராகவே பதவி விலகிவிடுவதுதான் அவருக்கு மரியாதை. அவர் தார்மிக அடிப்படையில் விலகப் போகிறாரா அல்லது குற்றவாளியாக விலகப் போகிறாரா என்பது அவரது விருப்பம். ஆனால், இந்தப் பிரச்னையை சாதகமாக்கி முறைகேடுகள் புரையோடிப் போயிருக்கும் கிரிக்கெட் விளையாட்டைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்பதுதான் தற்போது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்று.

பணப்பரிமாற்றம் மட்டுமே இந்த சூதாட்டத்தின் முக்கிய சான்றுகள். இந்த ஆதாரங்கள் போதுமானவை அல்ல என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாலும் வியப்பொன்றும் இல்லை. தற்போது பரபரப்பாகப் பேசப்படும் காவல்துறை விசாரணைகள், வழக்குகள் எல்லாமும் இந்தப் பிரச்னையை நீர்த்துப்போக வைப்பதற்கான வாய்ப்புகளைத்தான் அதிகரிக்கின்றன.

பி.சி.சி.ஐ. தலைவராக தான் இருந்திருந்தால் இது நடந்திருக்காது என்று மத்திய அமைச்சர் சரத் பவார் சொல்வதை, இந்த ஊழலே வெளிப்பட்டிருக்காது என்று வேண்டுமானால் புரிந்துகொள்ளலாமே தவிர, புதிய தலைவரால் மட்டுமே கிரிக்கெட் பழைய எழுச்சிநிலை பெறும் என்பதல்ல பொருள்.

கிரிக்கெட் விளையாட்டில் வீரர்கள் தேர்வு விவகாரத்திலேயே முறைகேடும் பாரபட்சமும் தொடங்கிவிடுகின்றன. இன்றைய சீர்கேட்டுக்கு அதுதான் ஊற்றுக்கண்.

வேலைவாய்ப்பு நேர்காணலில் எவ்வாறு சமரசங்கள் ஏற்படுகின்றனவோ அதேபோன்று கிரிக்கெட்டிலும் சமரசங்கள் ஏற்படத் தொடங்கி, தற்போது பணம் அல்லது கிடைக்கும் வருவாயில் கமிஷன் என்கின்ற மறைமுகப் புரிதல்கள் அடிப்படையில்தான் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அந்த அளவுக்கு நிலைமை சீர்கெட்டிருக்கிறது.

கிரிக்கெட் வீரர்களின் பாரபட்சமான தேர்வு, அந்த அணி தோல்வி அடைந்தாலும் சில வீரர்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும், சிலரைக் கேப்டனாக நீடிக்க வைப்பதிலும்கூடத் தொடர்கிறது. எல்லா அதிகாரமும் கொண்டிருக்கும் பி.சி.சி.ஐ., அதன் தலைமை மற்றும் அந்த வாரியத்தில் செல்வாக்கு பெற்ற நபர்கள் வைத்ததுதான் சட்டம், இவர்கள் தேர்வு மட்டுமே உண்மையான தேர்வாக அமையும் என்பதெல்லாம் கிரிக்கெட் உலகின் எழுதப்படாத சட்டமாக மாறிவிட்ட பிறகு, இந்த விளையாட்டின் ஆன்மா செயலிழந்துவிட்ட நிலைமை.

வீரர்களைத் தேர்வு செய்யவும், ஏலம் கேட்கவும் வல்லமை படைத்தவர்கள், செல்வாக்கு பெற்றவர்கள் விளையாட்டையே தீர்மானிக்கும் சக்தி பெற்று விட்டனர்.

இத்தகைய நபர்களைக் கொண்டு, இவர்கள் தேர்வு செய்த வீரர்களிடம் தொடர்புகொண்டு அவர்களை "ஸ்பாட் பிக்ஸிங்' "மேட்ச் பிக்ஸிங்' என எல்லா சூதாட்டங்களுக்கும் உடன்பட வைப்பதும், விளையாட்டை மட்டுமே நேசித்த ரசிகர்களைப் பந்தயம் கட்ட வைப்பதும் சூதாட்டக்காரர்களுக்கு மிக எளிதாகி விட்டிருக்கிறது.

சினிமா நட்சத்திரங்களைவிட மக்கள் மத்தியில் பிரபலமான கிரிக்கெட் கடவுள்களாக இருந்த விளையாட்டு வீரர்கள் விளம்பர மாடல்களாக மாறினார்கள். விளையாட்டில் தங்கள் திறமையைக் காட்டுவதில் அவர்கள் காட்டிய முனைப்பைவிடப் பணம் சம்பாதிப்பதில் கவனம் திரும்பியது.

இந்த விளம்பரங்களுக்கு அடிப்படை கிரிக்கெட் விளையாட்டினால் தங்களுக்குக் கிடைத்த ரசிகர்கள் என்பதையும் விளையாட்டுதான் புகழுக்குக் காரணம் என்பதையும் நினைத்துப் பார்க்கக்கூட அவர்களுக்கு நேரமில்லாத நிலைமை ஏற்பட்டது. விளையாட்டு ரசிகர்கள் போய் சினிமா நடிகைகளும் மாடல்களும் அவர்களுக்கு ரசிகைகள் ஆனார்கள். பண போதையும் புகழ் போதையும் விளையாட்டு வீரர்களின் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொண்டன.

இனியாகிலும், புதிய தேர்வு நடைமுறை அமல்படுத்தப்பட வேண்டும். இந்திய அணியில் இடம்பெற வேண்டிய வீரர்கள் யார் என்பதை, அவர்களது செயல்திறனுக்கு மதிப்பெண் கொடுத்து, பி.சி.சி.ஐ. வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். இந்த மதிப்பீட்டில் இந்தியா முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான கிரிக்கெட் சங்கங்களின் உறுப்பினர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். அப்போதுதான் விளையாட்டில் திறமை மட்டுமே முன்னிலை பெறும்.

கிரிக்கெட் வீரர்கள் எந்தப் பொருளுக்காக விளம்பரத் தூதுவர்களாக மாறினாலும், இந்திய அணியில் இடம்பெற்றுள்ள நாள்வரை, பி.சி.சி.ஐ. அனுமதி இல்லாமல் விளம்பரத்தில் ஈடுபடக் கூடாது என்பதையும், விளம்பரத்தின் தொகையில் 20 சதவிகிதம் மாவட்டக் கிரிக்கெட் சங்கங்களுக்குப் பகிர்ந்து அளித்து அதன் மூலம் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த வேண்டும் என்பதையும் உறுதி செய்ய வேண்டும். குறைந்தவிலையில் விளையாட்டுப் பொருள்கள் கிடைக்கச் செய்து இளைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

÷அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் கையிலிருந்து கிரிக்கெட் சங்கத் தலைமை பறிக்கப்பட்டு, கிரிக்கெட் மீது அக்கறையுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் தலைமையில் பி.சி.சி.ஐ. அமைந்தால்தான் அது சாத்தியமாகும். அதற்கு நமது அரசியல்வாதிகள் சம்மதிப்பார்களா, கிரிக்கெட் வீரர்களே தயாராக இருப்பார்களா என்பதே சந்தேகம் என்றால் கிரிக்கெட்டை யார் காப்பாற்றுவது?

இந்த நாடகங்களுக்கு எல்லாம் சீக்கிரத்தில் இடைவேளை வரும். அடுத்த ஊழலோ, பிரச்னையோ எழுந்தால் இது பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடும். இருப்பினும், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த விவகாரத்தில் தங்கள் கவனத்தைச் சிதறவிடாமல், கிரிக்கெட் விளையாட்டின் ஆன்மாவை மீட்டெடுக்க முயல வேண்டும். பி.சி.சி.ஐ. தலைவரை நீக்குவதால் மட்டும் கிரிக்கெட் தூய்மை அடைந்துவிடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com