இட்டாநகருக்கு ரயில்!

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள மாநிலமான அருணாசலப் பிரதேசமும் இந்திய ரயில்வேயின் வரைபடத்தில் இனிமேல் இணைகிறது.
Updated on
2 min read

இந்தியாவின் வடகிழக்கு மூலையில் உள்ள மாநிலமான அருணாசலப் பிரதேசமும் இந்திய ரயில்வேயின் வரைபடத்தில் இனிமேல் இணைகிறது. அருணாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகர் இட்டாநகருக்கு ரயில் தொடர்பு ஏற்படுத்தப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் 2008 ஜனவரியில் அளித்த வாக்குறுதி ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இதன் தொடர் விளைவாக வடகிழக்கு மாநிலங்கள் அடையப் போகும் வளர்ச்சி அபரிமிதமானதாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதே இல்லை.

அருணாசலப் பிரதேசம் தனி மாநில அந்தஸ்தைப் பெற்று 27 ஆண்டுகளாகின்றன. இதுவரை சாலை வழியாகவும், ஹெலிகாப்டர் வழியாகவும் மட்டுமே அருணாசலப் பிரதேசத்திற்குச் சென்றாக வேண்டும் என்கிற நிலைமை இருந்து வந்தது. கடந்த 7ஆம் தேதி பத்து பயணிகள் பெட்டிகளும், இரண்டு சரக்கு ஏற்றும் பெட்டிகளும் அடங்கிய ரயில் அஸ்ஸாமிலுள்ள தெக்கர்கான் ரயில் நிலையத்திலிருந்து, அருணாசலப் பிரதேச தலைநகரான இட்டாநகரின் புறநகர்ப் பகுதியான நகர்லகன் ரயில் நிலையத்திற்கு, பொதுமக்களின் கரகோஷத்துக்கிடையில் வந்து சேர்ந்தபோது, பலர் வெளிப்படையாகவே ஆனந்தக் கண்ணீர் வடித்திருக்கிறார்கள்.

அஸ்ஸாம் தலைநகர் குவாஹாட்டிக்கு அடுத்தபடியாக ரயில் தொடர்பு பெறும் வடகிழக்கு மாநிலம் அருணாசலப் பிரதேசம்தான். ஏனைய ஆறு மாநிலங்களான திரிபுரா, மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், மிசோரம், நாகாலாந்து ஆகியவையும் விரைவிலேயே ரயில் இணைப்புப் பெறும் என்று எதிர்பார்க்கலாம். வடகிழக்கு மாநிலங்கள் அனைத்துமே அஸ்ஸாமின் எல்லையைச் சுற்றி இருப்பதால், ஒன்றன் பின் ஒன்றாக ரயில் இணைப்புப் பெறுவதில் தடையேதும் இருக்க வழியில்லை. இப்போது ஏற்படுத்தப்பட்டிருக்கும் ரயில் இணைப்பின் மூலம் விரைவிலேயே தில்லியிலிருந்து குவாஹாட்டி வரை செல்லும் ராஜதானி, சதாப்தி விரைவு ரயில்கள், இட்டாநகர் வரை செல்லும் வாய்ப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அதிக அளவில் மக்களவைத் தொகுதிகள் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து இல்லாமல் இருப்பதாலோ என்னவோ, மத்திய ஆட்சியாளர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்ட பகுதிகளாகவே இந்த மாநிலங்கள் இருந்து வந்திருக்கின்றன. சுற்றிலும் மலையும், மண் சார்ந்த பூமியுமாக இருப்பதால், கடல் போக்குவரத்துக்கு வாய்ப்பே இல்லாமல் போனதுகூட, வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருந்தது.

அருணாசலப் பிரதேசம், அண்டை நாடான சீனாவுடன் ஏறத்தாழ 1,000 கி.மீ. நீளமுள்ள எல்லையை உடையது. அருணாசலப் பிரதேசத்திலிருந்து இந்தியத் தலைநகர் தில்லியை அடைவதைவிட விரைவாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கை அடைந்துவிடலாம் என்கிற நிலைமை ஏற்பட்டுவிட்டால், அந்த மாநில மக்களேகூட சீனாவுடன் இணையத் தயாராகி விடக்கூடும்.

ரயில் இணைப்பு ஏற்பட்டிருப்பதற்கு இரண்டு முக்கியமான காரணங்கள். முதலாவது காரணம், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் இணைப்பதன் மூலம்தான், அந்தப் பகுதி மக்களுக்குத் தாங்களும் இந்தியர்கள் என்கிற உணர்வை ஏற்படுத்த முடியும். இரண்டாவது, ரயில் இணைப்பின் மூலம்தான் எல்லைப் பகுதிகளில் நாம் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தி, பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

ரயில் தொடர்பு ஏற்பட்டிருப்பதன் தொடர்ச்சியாக, வடகிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். இதுவரை சர்வதேச விமான நிலையம் அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவாஹாட்டியில் மட்டுமே இருந்து வருகிறது. திரிபுரா தலைநகர் அகர்தலா மற்றும் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள விமான நிலையங்கள் நவீனப்படுத்தப்படுவதன் மூலம் விமானப் போக்குவரத்து வசதிகளும் அதிகரிக்க இருக்கிறது. அதுமட்டுமல்ல, அண்டை மாநிலமான சிக்கிம் தலைநகர் காங்டாக்கிலும் விமான நிலையம் விரிவுபடுத்தப்படுவதுகூட, வடகிழக்கு மாநிலங்களுடனான தொடர்பை அதிகரிக்கக் கூடும்.

வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவின் ஏனைய பகுதிகளுடன் ரயில், விமானப் போக்குவரத்து வசதிகளால் இணைப்பது போலவே, நிலம் சூழ்ந்த வடகிழக்கு மாநிலங்களை மியான்மரின் சிட்வே துறைமுகத்துடனும், வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடனும் இணைக்கும் முயற்சியையும் மேற்கொண்டாக வேண்டும். அப்போதுதான் வடகிழக்கு மாநிலங்களின் தொழில் வளர்ச்சி அதிகரித்து பொருளாதார முன்னேற்றமும், வேலைவாய்ப்பும் அதிகரிக்கும்.

மியான்மருடன் எல்லைப் பிரச்னையில் சுமுகமான தீர்வும், வங்கதேசத்துடன் தீஸ்தா நதிநீர் ஒப்பந்தமும் கையெழுத்தாகுமேயானால், பல பிரச்னைகள் தீரும் என்பதுடன் இந்தியா, மியான்மர், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுமே பயனடைய முடியும். இட்டாநகரை இந்திய ரயில்வேயின் வரைபடத்தில் இணைத்திருப்பதன் மூலம், அதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டிருக்கிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com