தர்மசங்கடத்தில் நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீபுக்கு எதிராகப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டிருப்பது ராணுவமாக இருக்கக்கூடும்.
Updated on
2 min read

பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீபுக்கு எதிராகப் போராட்டம் வெடித்திருக்கிறது. இந்தப் போராட்டத்தைத் தூண்டி விட்டிருப்பது ராணுவமாக இருக்கக்கூடும். குழப்பமான சூழ்நிலையைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, பிரதமர் நவாஸ் ஷெரீபைத் தனது கைப்பாவையாக்க ராணுவம் திட்டமிடுகிறது என்று தோன்றுகிறது.

கடந்த சில வாரங்களாகவே, பாகிஸ்தானின் அரசியல் நிலை சரியாக இல்லை. முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான் கான், பிரதமர் நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் என்று கோரித் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டிருக்கிறார். எந்தவொரு அரசாலும் நிறைவேற்ற முடியாத மிக நீளமான கோரிக்கைப் பட்டியலுடன் அரசுக்கு எதிராகப் போராடக் களமிறங்கி இருக்கும் கனடாவிலிருந்து தாயகம் திரும்பிய இஸ்லாமிய மதபோதகர் தாஹிர்-உல்-கத்ரியின் ஆதரவாளர்கள், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சித் தொண்டர்களுடன் இணைந்து செயல்பட முற்பட்டிருக்கிறார்கள். பிரதமர் நவாஸ் ஷெரீபைப் பதவியிலிருந்து அகற்றத் திட்டமிட்டு அனைவரும் செயல்படுவதுபோலத் தோன்றுகிறது.

தாஹீர்-உல்-கத்ரி பற்றிய பின்னணியை முதலில் கவனிக்க வேண்டும். கனடா நாட்டில் வாழ்ந்து வந்த இந்த சூஃபி தத்துவ ஆய்வாளர், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் அரசமைப்புச் சட்டத் துறைப் பேராசிரியர். இஸ்லாம் பற்றிப் பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். கடந்த டிசம்பர் 2012-இல் தாயகம் திரும்பிய தாஹிர்-உல்-கத்ரி, ராணுவத்தின் மறைமுக ஆதரவுடன் பாகிஸ்தானில் அண்ணா ஹசாரே போல ஊழலுக்கு எதிரான போராட்டத்தைத் தொடங்கினார்.

பத்து லட்சம் பேருடன் பேரணியாகத் திரள அறைகூவல் விடுத்த அவரது போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டது என்னவோ உண்மை. 2013, ஜனவரி 14 அன்று சுமார் 50,000 பேர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் முன்னால் முற்றுகைப் போராட்டம் நடத்த, அரசும் அவரது கோரிக்கைகளான தேர்தல் சீர்திருத்தம், ஆட்சியில் வெளிப்படைத்தன்மை போன்ற கோரிக்கைகளை ஏற்றுப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இப்போது கத்ரி, ஒரு மிகப்பெரிய விருப்பப் பட்டியலுடன் மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.

கடந்த நவம்பர் மாதம் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகப் பதவி ஏற்றுக் கொண்ட ரஹீல் ஷெரீப், முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷாரபின் நம்பிக்கைக்குரியவர். நவாஸ் ஷெரீபுக்கும் இவருக்கும் உறவுமில்லை, தொடர்புமில்லை. 2009-ஆம் ஆண்டு ராணுவப் புரட்சியின் மூலம் அன்றைய பிரதமர் நவாஸ் ஷெரீபை ஜெனரல் முஷாரப் பதவியிலிருந்து அகற்றத் துணை நின்றவர். நவாஸ்

ஷெரீபைத் தூக்கிலிட வேண்டும் என்று விழைந்தவர். இதெல்லாம் தெரிந்தும்கூட, மீண்டும் பிரதமரான நவாஸ் ஷெரீப், ஜெனரல் கயானி ஓய்வுபெற்றபோது, அடுத்ததாக இருந்த இரண்டு மூத்த அதிகாரிகளை ஒதுக்கிவிட்டு ரஹீல் ஷெரீபைத் தலைமைத் தளபதியாக நியமித்தார்.

நாடாளுமன்றத்தைக் கலைக்கக் கோரிய இம்ரான் கான், கத்ரி ஆகியோரின் மனுக்களை லாகூர் உயர்நீதிமன்றம் நிராகரித்து விட்டது என்றாலும்கூட, ஏறத்தாழ ஒரு லட்சம் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தைச் சூழ்ந்து கொண்டிருக்கும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் திணறுகிறார் பிரதமர் நவாஸ் ஷெரீப்.

இப்போது, பிரச்னையைக் கட்டுக்குள் கொண்டு வர பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு ராணுவத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற நிலை.

நவாஸ் ஷெரீபின் ஆட்சியொன்றும் திறமையானதாகவோ, சிறப்பானதாகவோ இல்லை. இப்போது அவர் ராணுவத்தின் துணையை நாடினால் மட்டுமே நிலைமையை எதிர்கொள்ள முடியும். ராணுவம் ஒத்துழைத்தால் அடுத்த சில நிமிடங்களில் போராட்டக்காரர்கள் கலைந்து விடுவார்கள் என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் கைப்பாவையாக செயல்படும் தாஹிர்-உல்-கத்ரி முன்புபோல உடன்பாட்டுக்கும் தயாராகி விடுவார்.

பாவம் பிரதமர் நவாஸ் ஷெரீப். ராணுவத்தின் உதவியை நாடினால், அவர் ஜெனரல் ரஹீல் ஷெரீபின் கைப்பாவையாகிவிடுவார். ராணுவம் வைத்ததுதான் சட்டமாக இருக்கும். அப்படிச் செய்யாவிட்டாலோ, நிலைமையைச் சமாளிக்க முடியாமல் பதவி விலக நேரிடும். அதுவே ராணுவ ஆட்சிக்கு வழிகோலவும் கூடும். நவாஸ் ஷெரீப் உயிருக்கு பயந்து நாட்டைவிட்டு ஓட வேண்டிய நிலைகூட ஏற்படலாம்.

எப்படிப் பார்த்தாலும் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கும் நேரம் நன்றாக இல்லை. பாகிஸ்தானுக்கும் நேரம் நன்றாக இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com