பதவிப் பித்தர்கள்!

மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தன்னைக் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொலைபேசியில் அழைத்துப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்படி விலகாவிட்டால் பதவியிலிருந்து அகற்றப்படுவேன் என்று தெரிவித்ததாகவும் உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரோஷி குற்றம் சாட்டியதுடன் நிற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் தனது ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
Updated on
2 min read

மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி தன்னைக் கடந்த ஜூலை 30ஆம் தேதி தொலைபேசியில் அழைத்துப் பதவி விலகுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அப்படி விலகாவிட்டால் பதவியிலிருந்து அகற்றப்படுவேன் என்று தெரிவித்ததாகவும் உத்தரகண்ட் ஆளுநர் அஜீஸ் குரோஷி குற்றம் சாட்டியதுடன் நிற்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் தனது ஆளுநர் பதவியைத் தக்கவைத்துக் கொள்ள வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.

முந்தைய மன்மோகன் அரசால் 2012 ஏப்ரல் 28-ஆம் தேதி உத்தரகண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்ட அஜீஸ் குரேஷியின் மனு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான நீதிபதிகள் குரியன் ஜோசப், ரோஹிஸ்டன் நாரிமன் அடங்கிய மூன்று பேர் அமர்வால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பிரச்னை, ஆளுநர், குடியரசுத் தலைவர் சம்பந்தப்பட்ட அரசியல் சட்டப்பிரிவு 156 உடன் தொடர்புடையது என்பதால், இந்த வழக்கை ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

உத்தரகண்டில் ஆளுநர் குரோஷியின் மனுவின் மீதான வாதத்தை முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் சட்ட அமைச்சர்களாக இருந்த கபில் சிபலும், சல்மான் குர்ஷித்தும் உச்சநீதிமன்றத்தில் முன் வைத்தனர். குடியரசுத் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக இருக்கும்வரை ஒருவர் ஆளுநராகப் பதவி வகிக்கலாம் என்று அரசியல் சட்டம் கூறுவதால், உள்துறைச் செயலர் இந்தப் பிரச்னையில் தலையிட்டதே தவறு என்பது அவர்கள் வாதம். உச்சநீதிமன்றம் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு அரசை பதிலளிக்கக் கோரியிருக்கிறது.

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஆளுநர்களைப் பதவி விலகச் சொல்வது என்கிற நடைமுறையை ஏற்படுத்தியதே காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான். 2004-இல் ஆட்சியைக் கைப்பற்றிய உடன் அதற்கு முன்பு பதவியில் இருந்த, வாஜ்பாயி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நியமித்திருந்த எல்லா ஆளுநர்களையும் பதவி விலக உத்தரவிட்டுத் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது நரேந்திர மோடி தலைமையிலான அரசும் முந்தைய ஆட்சியின் அரசியல் நியமனங்களை அகற்ற முற்பட்டிருக்கிறது.

பொதுவாகவே ஆட்சி மாற்றம் ஏற்படும்போது, முக்கியமான அரசியல் சட்ட நியமனங்களில் இருப்பவர்கள் தாங்களாகவே பதவி விலகி, புதிய ஆட்சியாளர்களுக்கு அவர்களது சொல்படியும், குறிப்பறிந்தும் செயல்படும் வகையிலுமான நபர்களின் நியமனங்களுக்கு வழிகோலுவது கண்ணியமான நடிவடிக்கையாகக் கருதப்படுகிறது. நரேந்திர மோடி அரசு, அடுத்த சில மாதங்களில் பதவிக் காலம் முடிவடைய இருப்பவர்களை ஆளுநர்களாகத் தொடர அனுமதித்துவிட்டு, ஏனைய ஆளுநர்களை மட்டும்தான் பதவி விலகக் கோரியது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

உத்தரப் பிரதேசம், கோவா, சத்தீஸ்கர், நாகாலாந்து, மேற்கு வங்கம் ஆகிய மாநில ஆளுநர்கள் ஏற்கெனவே பதவி விலகிவிட்டனர். கேரளம், மத்தியப் பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநில ஆளுநர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால் மோடி அரசு அவர்களைப் பதவி விலகக் கோருகிறது என்பது உண்மை. அது நியாயமும்கூட. ஆளுநர்களாக இருப்பதால் தங்களுக்கு வழக்குகளிலிருந்து விதி விலக்கு கிடைக்கும் என்பதாலா அல்லது பதவி சுகத்தை விட மனமில்லாததால் பதவி விலக மறுக்கிறார்களா என்று அவர்களைத்தான் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

குடியரசுத் தலைவர், நாடாளுமன்ற, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்றால், ஆளுநர்கள் நியமனம் அப்படிப்பட்டதல்ல. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையின் பேரில் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்கள்தான் ஆளுநர்கள். அரசியல் சட்டப் பிரிவு 74-ன்படி, குடியரசுத் தலைவர் பிரதமரின் தலைமையிலான அமைச்சரவையின் உதவியுடனும், ஆலோசானையின்படியும் நடக்கக் கடமைப்பட்டவர்.

அமைச்சரவையின் ஆலோசனைகளை மறுபரிசீலனை செய்யக் கோரலாமே தவிர, அவர்களது முடிவுக்குக் கட்டுப்பட வேண்டியவர். அதுமட்டுமல்ல, அமைச்சரவை குடியரசுத் தலைவருக்கு என்ன ஆலோசனை கூறியது என்பதை விசாரிக்கும் உரிமை நீதிமன்றத்திற்குக் கிடையாது என்று அரசியல் சட்டப் பிரிவு 74 (2) திட்டவட்டமாகக் கூறுகிறது.

ஏற்கெனவே நீதித் துறை நீதிபதிகள் நியமன மசோதாவால் அதிருப்தி அடைந்திருக்கும் நேரம். அரசுக்கும், நீதித் துறைக்கும் இடையே மோதலை அதிகரித்து அதில் குளிர்காய நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. அதற்கு அம்பாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார் உத்தரகண்டின் ஆளுநர் அஜீஸ் குரோஷி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com