ஓர் உண்மை தெரிஞ்சாகணும்...

எந்தவொரு அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் வீட்டுப் பெண்கள் எவரும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெறுவதில்லை என்றாலும், பொதுநலன் கருதி அனைவரும் இந்த விவகாரத்தை பேசத் தொடங்கினர். அரசின் முழுக் கவனமும் பச்சிளங் குழந்தைகளுக்கான பிரிவுகள் மீது கவிந்தது.
Updated on
2 min read

தருமபுரி மாவட்டத்தில் அண்மையில் நடந்த பச்சிளங் குழந்தைகள் மரணம், தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தொடர்ந்து பத்திரிகையில் இடம்பெறும் செய்தியாக மாறியது. பேறுகாலத் தறுவாயில் இருந்த தாய்மார்களுக்கு பீதியை ஏற்படுத்தியது.

எந்தவொரு அரசியல் கட்சியின் மாவட்ட நிர்வாகியின் வீட்டுப் பெண்கள் எவரும் அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெறுவதில்லை என்றாலும், பொதுநலன் கருதி அனைவரும் இந்த விவகாரத்தை பேசத் தொடங்கினர். அரசின் முழுக் கவனமும் பச்சிளங் குழந்தைகளுக்கான பிரிவுகள் மீது கவிந்தது. அதிக வசதிகளை ஏற்படுத்தத் செய்தது.

இருப்பினும், அரசும், மருத்துவத் துறையும் இந்தப் பிரச்னையை மேலும் ஆழமாகவும் நிதானமாகவும் அணுகவில்லை என்றுதான் தோன்றுகிறது. எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதில் காட்டும் அக்கறையை நிரந்தரத் தீர்வு ஏற்படுவதில் காட்டுவதில்லை. அதனால் அரசும் சரி நிதானமாகப் பிரச்னையை அணுக முடியாமல் உடனடி தீர்வை மேற்கொள்ள நேர்கிறது.

அரசு மருத்துவமனைகள், குறிப்பாக மகப்பேறு மருத்துவப் பிரிவுகள், தூய்மையில்லாமல், வசதிகள் இல்லாமல் இருப்பதோடு, மருத்துவர்களின் அலட்சியமும் ஊழியர்கள் எதிர்பார்க்கும் கையூட்டும் சேர்ந்து மிகவும் மோசமான சூழலில் இயங்குகின்றன என்பது அனைவரும் அறிந்தவொன்று. ஆனால், அவை மட்டுமே 13 பச்சிளங் குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் அல்ல என்பதையும், இந்த மரணங்களுக்கான காரணத்தை பெண்கள் கருவுற்ற காலம் முதலாகவே ஆய்வு செய்ய வேண்டும் என்பதையும் யாரும் வலியுறுத்தவில்லை.

குழந்தை இறப்பு விகிதம் இந்தியாவில் உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்த அளவை விடக் குறைவாக உள்ளது. இந்தியாவில், குழந்தை இறப்பு விகிதம் குறைவாக உள்ள மாநிலங்களில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. நிலைமை இதுவாக இருக்கும்போது, தருமபுரியில் மட்டும் ஏன் இந்த திடீர் சிசு மரணங்கள் என்று ஆழமான கவனம் செலுத்த மருத்துவத்துறை தவறிவிட்டது.

இறந்த 13 பச்சிளங் குழந்தைகளில் குறைப்பிரசவமான சிசுக்கள் ஐந்து. மற்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நோய்த் தொற்று போன்றவை இறப்புக்குக் காரணமாக அமைந்தன. இந்த 13 குழந்தைகளின் தாய்மார்களும் அவரவர் பகுதியில் மருத்துவ ஆலோசனைப் பெற்று வந்தவர்களே. இந்த 13 தாய்மார்கள் மட்டுமின்றி, இதே காலகட்டத்தில் பச்சிளங் குழந்தைகளை பல காரணங்களுக்காக மருத்துவமனைகளில் அனுமதித்த அனைத்து தாய்மார்களிடமும் - சுமார் 60 பேர் இருக்கக்கூடும் - மருத்துவத் துறை ஆய்வு நடத்த வேண்டிய கடமை இருக்கிறது.

தருமபுரி மாவட்டம் கல்வியில் மிகவும் பின்தங்கிய மாவட்டம் என்பதால் அரசுக்கு தெரியாமலேயே அங்குள்ள மக்களுக்கு, சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சோதனை அடிப்படையில் மருந்துகள் கொடுத்து, கள ஆய்வு நடத்துவதாகக் கூறப்படுகிறது. கருவுற்ற தாய்மார்களுக்கு இந்த கள ஆய்வு குறித்து எந்தத் தகவலும் தராமல் மருந்துகள் கொடுத்து, அவர்களை பின்புலத்தில் நின்று கண்காணித்திருக்கும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை. ஆகவே, இந்தத் தாய்மார்கள் உட்கொண்ட மருந்துகள் குறித்தும், ஆலோசனை பெற்ற மருத்துவமனைகள் குறித்தும் ஆய்வு நடத்தப்படுவது அவசியம்.

பேறுகாலத்தின்போது இந்தத் தாய்மார்கள் எந்த மருத்துவமனையில் ஆலோசனை பெற்றனர்? அது தனியார் மருத்துவமனையா, அரசு மருத்துவமனையா?

இவர்கள் உட்கொண்ட மருந்துகள் எவை? அந்த மருந்துகள் தரமானவையா அல்லது போலி மருந்துகளா? அல்லது பரிசோதனை அடிப்படையில் தரப்பட்ட மருந்துகளா? இந்த மருந்துகளை விற்பனை செய்த நிறுவனங்கள், தயாரித்த நிறுவனங்கள் முறையான அனுமதி பெற்றவைதானா? இந்தத் தாய்மார்களின் வயது என்ன? இளவயது திருமணம் இத்தகைய குறைப் பிரசவத்துக்கு ஒரு காரணமாக இருக்கக்கூடுமா? என ஆய்வு செய்தாக வேண்டும்.

தற்போது பச்சிளம் குழந்தைகளுக்கான பிரிவுகளில் கூடுதல் கருவிகளும் வசதிகளும் ஏற்படுத்தியிருப்பதைப் போல, தற்போது ஆலோசனை பெற்று வரும் அனைத்து தாய்மார்கள் குறித்தும் ஆவணப்பதிவை ஏற்படுத்தி, அவர்களுக்கான மருந்து விவரங்களை அறிந்து வைத்திருப்பது இன்றைய அடிப்படைத் தேவை.

இத்தகைய பதிவுகள் குறை பிரசவங்களைத் தடுக்கவும், பச்சிளம் குழந்தைகள் மரணத்தை குறைக்கவும் பெரிதும் உதவும். தருமபுரியில் தற்போது பீதி தணிந்துள்ள நிலையில், இந்த ஆய்வைக் காலதாமதத்துடன் செய்தாலும்கூட, அது நன்மையே!

தருமபுரி சிசு மரணப் பிரச்னைக்கு அரசு மருத்துவமனைகள் மட்டுமே காரணமில்லை என்பதை உலகுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமையும் கட்டாயமும் அரசுக்கு உண்டு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com