ராஜதந்திரச் சறுக்கல்!

வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றோ, திருப்புமுனை விஜயம் என்றோ வர்ணிக்க முடியாவிட்டாலும், ரஷிய அதிபர் புதினின் இந்திய அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை ஓரளவு குறைத்திருக்கிறது என்கிற அளவில் வரவேற்பிற்குரியது.
Updated on
2 min read

வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றோ, திருப்புமுனை விஜயம் என்றோ வர்ணிக்க முடியாவிட்டாலும், ரஷிய அதிபர் புதினின் இந்திய அரசுமுறைப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடுகளை ஓரளவு குறைத்திருக்கிறது என்கிற அளவில் வரவேற்பிற்குரியது. அதிபர் புதின் ரஷியாவில் பதவிக்கு வந்த பிறகு, ஆண்டுதோறும் இந்தியாவும், ரஷியாவும் சந்தித்துப் பேசுவது என்கிற நடைமுறை ஏற்படுத்தப்பட்டது. அதிபர் புதினின் இப்போதைய தில்லி விஜயத்துடன் 15ஆவது உச்சி மாநாடு நடந்து முடிந்திருக்கிறது.

இந்தியாவும், ரஷியாவும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றன. உக்ரைன் உள்நாட்டு போரைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனும், அமெரிக்காவும் ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுடன் தனது நெருக்கத்தையும், வர்த்தக உறவையும் வலுப்படுத்த வேண்டிய கட்டாயம் ரஷியாவுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதன் காரணமாகத்தான், ரஷியா சீனாவுடன் 400 பில்லியன் டாலருக்கான முப்பதாண்டு எரிவாயு ஒப்பந்தத்தையும், பாகிஸ்தானுடன் ராணுவத் தளவாட ஏற்றுமதி ஒப்பந்தத்தையும் செய்து கொண்டிருக்கிறது.

இந்தியாவைப் பொருத்தவரை, நீண்டநாள் நிரந்தர நட்பு நாடாக இருந்து வருவது ரஷியா மட்டுமே. எரிவாயு, ராணுவத் தளவாடம், அணு மின்சக்தி உற்பத்தி போன்ற பல்வேறு தேவைகளுக்காக ரஷியாவுடனான இந்தியாவின் தொடர்பு ஏனைய நாடுகளைவிட அதிகமாகவே இருந்து வந்திருக்கிறது. சமீபகாலமாக இந்த உறவில் தளர்வு ஏற்பட்டிருப்பதற்கு ரஷியாதான் மிகப்பெரிய காரணம்.

ராணுவத் தளவாட விற்பனையில் ரஷியா தனது காலக்கெடுவைக் கடைப்பிடிப்பதில்லை என்பது இந்திய ராணுவத்தின் குமுறல். அதுமட்டுமல்ல, ராணுவத் தளவாடங்களின் உதிரிப் பாகங்களைச் சரியாக வழங்காமல் இருப்பது, சர்வதேச விலையைவிட இந்தியாவுக்கு அதிக விலைக்கு விற்பது, குறித்த நேரத்தில் தளவாடங்களை வழங்காமல் இருப்பது போன்ற ரஷியாவின் போக்கால் இந்திய ராணுவம் கடுமையான அதிருப்தி அடைந்திருக்கிறது.

இந்தியா வேறு நாடுகளிடமிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டது அதனால்தான்.

இந்தச் சூழலில், ரஷியா, சீனாவுடனும், பாகிஸ்தானுடனும் நெருங்கி வருவதும், இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளுடனான தனது நெருக்கத்தை வளர்த்துக் கொள்வதும், இந்திய - ரஷிய உறவில் விரிசலை அதிகரித்திருக்கிறது. இந்த விரிசலுக்கு ரஷியாவை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. 2006-இல் இந்திய - அமெரிக்க அணு மின்சக்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும், அதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்காவிடமிருந்தும் ராணுவத் தளவாடங்கள் வாங்கத் தொடங்கியதும்கூடக் காரணம்தான்.

மோடி - புதின் சந்திப்பின்போது எதிர்பார்த்தது போலவே, அணு மின்சக்தித் தயாரிப்பில் இரண்டு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவை வலுப்படுத்துவது, கூடங்குளத்தில் மேலும் அணு உலைகளை நிறுவுவது, இந்தியாவில் 10 புதிய அணு மின் உலைகள் நிறுவுவது போன்ற ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. புதிய ராணுவ ஒப்பந்தங்கள் எதுவும் செய்யப்படவில்லை என்றாலும், பிரதமர் மோடியின், இந்தியாவை உலக உற்பத்தி மையமாக்கும் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதத்தில் அதிநவீன ஹெலிகாப்டர் தயாரிப்புத் தொழிற்சாலையை ரஷியா இந்தியாவில் நிறுவ இருக்கிறது. எரிசக்தி தொடர்பாக விவாதிக்கப்பட்டதே தவிர எந்த ஒப்பந்தமும் செய்து கொள்ளப்படவில்லை.

ரஷியாவில் சைபீரியா பகுதியில் நிறைய எண்ணெய் வளம் இருக்கிறது. இந்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அந்தக் குளிர்பிரதேசத்தில் எண்ணெய் தோண்டும் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறது. ரஷியாவுடன் எண்ணெய்க் கிணறுகளைத் தோண்டுவதும், எரிவாயு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதும் இந்திய - ரஷியக் கூட்டுறவுக்கு வலு சேர்க்கும். மருந்துத் தயாரிப்பு, உரத் தொழிற்சாலை, நிலக்கரிச் சுரங்கம் அமைத்தல், எரிவாயு உற்பத்தி என்று இரண்டு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்த பல துறைகள் காத்திருக்கின்றன.

இந்தியாவின் நம்பகமான நீண்ட நாள் நண்பன் ரஷியா. அதேபோல, ரஷியாவுக்கும் இந்தியாதான் நெடுநாள் அணுக்கத் தோழன். இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே நெருக்கம் குறைவது இரண்டு நாடுகளுக்குமே நல்லதல்ல.

இந்திய நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போது ரஷிய அதிபர் புதினின் விஜயம் அமைந்தும், அவரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்காமல் இருந்ததன் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு நழுவவிடப்பட்டிருக்கிறது, இந்திய வெளியுறவுத் துறையின் ராஜதந்திரத்திற்கு ஏற்பட்ட மிகப்பெரிய சறுக்கல் இது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com