அயல்நாடுகளில் வேலை தேடிச் செல்லும் இந்தியர்கள், அங்கே குழப்பம் ஏற்படும்போது வெளியேற முடியாமல் தவிப்பதும், சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்பதும் புதிதல்ல. இராக்கில் அரசு ராணுவத்திற்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான எல்லா முயற்சிகளையும் மத்திய வெளியுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது என்பதில் சந்தேகமில்லை. இன்னொரு நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலை அவிழ்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல.
இதுபோன்ற நெருக்கடிகள் நேரும்போது மட்டும்தான் இந்திய அரசு அயல்நாடுகளில் பணிபுரியும் சாதாரணத் தொழிலாளர்கள் பற்றியும், செவிலியர், ஆசிரியர்கள் போன்ற பணியில் ஈடுபட்டிருப்போர் பற்றியும் கவலைப்படுகிறது என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. உலகளாவிய அளவில், கார் ஓட்டுநர்கள், கட்டடத் தொழிலாளர்கள், உணவு விடுதிப் பணியாளர்கள் என்று லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களைப் பற்றி யாருமே கவலை கொள்வது இல்லை.
சமீபத்தில் நூற்றுக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் கத்தார் நாட்டில் மரணமடைந்தபோதுதான், அயல்நாடுகளில் சாதாரண வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் சூழல் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தியாவிலிருந்து வேலைக்காகச் சென்றிருக்கும் தொழிலாளர்கள் எல்லா மேற்காசிய நாடுகளிலும் மிகவும் அவலமான சூழலில்தான் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தியாவிலிருந்து வெளிநாடு போய் ஐந்தாறு ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும், நாடு திரும்பும்போது, தங்கள் குடும்பத்தின் வருங்காலத்திற்குக் கணிசமான தொகையை சேமித்துவிட முடியும் என்கிற நம்பிக்கையில் வேலை தேடிச் செல்பவர்கள்தான் அவர்கள். அவர்களுக்கு வேலை வழங்குவோர், முதலில் அவர்களது கடவுச் சீட்டை (பாஸ்போர்ட்) வாங்கி வைத்துக் கொண்டு விடுவதால், மாற்று வேலை தேடும் வாய்ப்பு அவர்களுக்கு முதலிலேயே தடுக்கப்பட்டு விடுகிறது. குறைந்த கூலி, அதிக நேர வேலை, மிகவும் மோசமான தங்கும் வசதி, போதாக்குறைக்குக் கொத்தடிமைகளை விடவும் மோசமான மரியாதை என்று அவர்கள் எதிர்கொள்ளும் அவலங்களை எழுத்தில் வடிக்க முடியாது.
குறிப்பாக, ஐக்கிய அரபுக் கூட்டமைப்பு (யு.ஏ.இ.) நாடுகளில், குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம், முறையான கழிப்பறை வசதிகள், உயிர்ப் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற எதற்குமே சட்ட நிர்ணயம் கிடையாது. வீட்டு வேலைக்குச் செல்லும் பெண்களின் நிலைமை அதைவிடக் கொடுமையானது. இதற்கெல்லாம் இந்திய அரசால் தீர்வு காண முடியாதுதான். ஆனால், அவர்களது வேலைவாய்ப்பு பாதிக்கப்படாத முறையில், அவர்களின் நலன் பேணப்படுவதற்கான முயற்சியிலாவது இந்திய அரசு ஈடுபட வேண்டாமா?
இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும், அயல்நாடுவாழ் இந்தியர்கள் பற்றி மட்டுமே கவலைப்படும் இந்திய அரசு மறந்துவிடும் அல்லது கருத்தில் கொள்ள மறுக்கும் ஒரு உண்மை இருக்கிறது.
வெளிநாடுகளில் பெரிய பதவிகளை வகிக்கும் அந்தந்த நாட்டின் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் தங்களது சேமிப்பை இந்தியாவில் முதலீடாக மட்டுமே கொண்டு வருகிறார்கள். ஆனால், வெளிநாடுகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள் தங்கள் சேமிப்பை அப்படியே இந்தியாவுக்கு அனுப்புவதுதான், நமது அன்னியச் செலாவணி கணிசமான அளவில் காணப்படுவதற்குக் காரணம். அவர்களது பாதுகாப்பில்தான் நமது பொருளாதாரத்தின் பலமே அடங்கி இருக்கிறது.
இந்தியாவைப் போலவே பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கானோர் உலகளாவிய அளவில் தொழிலாளர்களாகப் பணிபுரியச் செல்கிறார்கள். பிலிப்பைன்ஸ், சவூதி அரேபியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குறைந்தபட்ச ஊதியத்தை தனது நாட்டுத் தொழிலாளர்களுக்கு உறுதி செய்திருக்கிறது. நமக்கு இருக்கும் மனித வளத்தை முறையாகப் பயன்படுத்தினால் உலகளாவிய அளவில் பயிற்சி பெற்ற தொழிலாளர்களை இந்தியா அளிக்க முடியும். அதன் முதல் கட்டமாக, வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்கள், பணியாளர்கள் பற்றிய புள்ளிவிவரமும், அவர்கள் பற்றிய முழுமையான தகவல்களும் திரட்டப்பட்டு, அவர்களது பாதுகாப்புக்கு இந்திய அரசு முன்னுரிமை அளிக்க முன்வர வேண்டும்.
இராக்கிலும் ஏனைய வெளிநாடுகளிலும் பணிபுரியும் இந்தியத் தொழிலாளர்களின் நிலைமையை பார்க்கும்போதும் கேட்கும்போதும் பிஜி தீவில் கரும்புத்தோட்டங்களில் அல்லல் பட்ட தமிழர்களின் நிலை பற்றி மகாகவி பாரதி பாடிய பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன... நிலைமை மாறவில்லையே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருச்சூர் வெடிவிபத்து: சம்பவ இடத்தில் மேலும் உடல் பாகங்கள் கண்டெடுப்பு

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை!

நாட்டிலேயே ஒரே ஒரு இடத்தில் தயாரிக்கப்படும் தேர்தல் மை! அழிக்க முடியாதது ஏன்?

ஏப். 23 வாக்குப்பதிவு: முதல்முறை வாக்காளர் கவனத்துக்கு! - நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

