தேவை விவாதம்!

தேர்தலில் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்து அமைந்துள்ள 16ஆவது மக்களவையின் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர்.
Updated on
2 min read

தேர்தலில் பல வரலாற்றுச் சாதனைகள் படைத்து அமைந்துள்ள 16ஆவது மக்களவையின் உறுப்பினர்கள் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளனர். முதல் நாளில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு மக்களவை இடைக்காலத் தலைவர் கமல்நாத் பதவிப் பிரமாணம் செய்துவைத்துள்ளார். புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு இரண்டாம் நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெறுகிறது.

ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆளும் கட்சி தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருக்கிறது. "இந்தியாவில் இனி எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை; கூட்டணி ஆட்சிதான் தொடரும்' என்று கருதப்பட்ட நிலையில், இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது சற்றும் எதிர்பாராத திருப்பம். இந்த அமோக வெற்றிக்கு நாடு முழுவதும் வீசிய பிரதமர் நரேந்திர மோடி அலைதான் காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

இந்த மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 315 பேர் (ஏறத்தாழ மூன்றில் இரண்டு பங்கினர்) புதியவர்கள். முதலாவது மக்களவைக்குப் பிறகு, மிக அதிக எண்ணிக்கையில் புதியவர்கள் மக்களவைக்குத் தேர்வாகியுள்ளது இதுவே முதல் முறையாகும். ஆம் ஆத்மி கட்சி தவிர, பிற கட்சிகளுடன் ஒப்பிடுகையில் அதிக எண்ணிக்கையில் புதியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, அவர்களை வெற்றி பெறச் செய்தது பா.ஜ.க. என்பதால், அந்தக் கட்சியால்தான் இந்த மக்களவை இந்தத் தனிச் சிறப்பைப் பெற முடிந்தது.

இந்தப் புதிய உறுப்பினர்கள் எப்படிச் செயல்படப் போகிறார்கள் என்பதில்தான் இந்த மக்களவையின் பெருமை வரலாற்றில் நிலைத்து நிற்கும். மக்களவையின் அன்றாட அலுவல்கள் குறித்து இந்தப் புதிய உறுப்பினர்கள் அதிகமாக அறிந்திருக்க வாய்ப்பில்லை. இவர்களுக்கு அந்தந்தக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தேவையான முன்பயிற்சி அளித்து விவாதத்தில் பங்கேற்க வாய்ப்பளிக்க வேண்டும். வெறுமனே பார்வையாளர்கள் போல புதிய உறுப்பினர்கள் அவைக்கு வந்து போவதால் எந்தப் பலனும் ஏற்படாது.

1984க்குப் பிறகு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமே எந்தவொரு பிரச்னையானாலும் முறையான விவாதம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெற்றதாக சரித்திரம் இல்லை. அரசின் கொள்கை முடிவுகள், புதிய சட்டங்கள் இயற்றுவது, மக்கள் நலத் திட்டங்கள் உள்ளிட்ட எந்த விவகாரமானாலும், முறையான விவாதமின்றி கூச்சல், குழப்பத்துக்கு இடையே மசோதாக்களை நிறைவேற்றுவது என்பது வாடிக்கையாகிவிட்டது. இத்தகைய மோசமான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 16ஆவது மக்களவையின் செயல்பாடு அமைய வேண்டும் என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

இதுவிஷயத்தில் ஆளும் பா.ஜ.க. மட்டுமல்லாது, மக்களவையில் இடம் பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான், நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பெருமையை மீட்டெடுக்க முடியும்.

தற்போதைய 16ஆவது மக்களவையின் தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த சுமித்ரா மகாஜன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. மத்தியபிரதேச மாநிலத்திலிருந்து தொடர்ந்து எட்டாவது முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 71 வயதான சுமித்ரா மகாஜன், அதன் தலைவராகப் பதவியேற்கும் இரண்டாவது பெண் உறுப்பினர் என்ற சிறப்பைப் பெறுகிறார். மக்களவை நடவடிக்கைகளில் நிறைய அனுபவமுள்ள அவர், அவையைத் திறம்பட நடத்துவார் என்று நம்பலாம்.

மக்களவை அமளி ஏதுமின்றி சுமுகமாக நடைபெறுவதற்கு அவைத் தலைவருக்கு மட்டுமல்லாது, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருக்கும் முக்கியப் பொறுப்பு உள்ளது. அந்த வகையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் பொறுப்பை ஏற்றுள்ள வெங்கய்ய நாயுடு அனைத்துக் கட்சியினருடனும் இயல்பாகப் பழகக் கூடியவர்.  அவருடைய ஒருங்கிணைப்புப் பணிகளால் மக்களவை நடவடிக்கைகள் எந்த இடையூறும் இன்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. இதுவிஷயத்தில் அவருக்கு பிற கட்சிகள் அனைத்தும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மக்களவைக் கூட்டம் என்றாலே கூச்சல், குழப்பம், ஒத்திவைப்பு என்ற பிம்பம்தான் பொதுமக்கள் மத்தியில் உள்ளது. இதை உடைத்தெறிந்து, பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விவாத அரங்காக மக்களவை மாற வேண்டும். அப்படி மாறுவதில்தான் இந்த மக்களவையின் பெருமை அடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com